வெள்ளி, 31 டிசம்பர், 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்

1-1-11  எனத்துவங்கும் இவ்வருடம் அனைவருக்கும் முதல் தரமாய் அமைய வாழ்த்துக்கள். வெறுங்கையில் வாழ்த்து சொன்னா எப்படி? இந்தாங்க... பிடிங்க பூங்கொத்து.

ஒரு சாமியார் செத்து சொர்கத்துக்குப் போனாராம். சொர்க்க வாசல் வரிசையில் (அங்கயுமா?) அவருக்கு முன்னாடி நம்ம ஆட்டோ ஓட்டுனர் மாணிக்கம் நின்று இருந்தாராம். நம்ம மாணிக்கத்தை பட்டு வேட்டி, வைரமாலை தந்து சொர்கத்தில் வரவேற்றார்கள். ஆனால் சாமியாரை நூல் வேட்டி மட்டும் கொடுத்து உள்ளே போகச் சொன்னாங்களாம். கடுப்பான சாமியார், "சாதாரண ஆட்டோ ஓட்டுனருக்கு ராஜமரியாதை. அனுதினமும் கடவுளையே நினைத்துப் பாடிக்கொண்டிருந்த எனக்கு இது தானா?" என்று  சித்திரகுப்தன்கிட்ட கோவமாக் கேட்டாராம்.
நீ பாட்டுப் பாடி மக்களை தூங்க வச்ச, ஆனா இவர் வேகமா ஆட்டோ ஓட்டி கடவுளை அடிக்கடி நினைக்க வச்சார்னு சொன்னாங்களாம். இதன் மூலம் நாம தெரிஞ்சிக்க வேண்டியது என்னன்னா, யார் என்ன நிலையில் (Position) இருகிறாங்க அப்படிங்கறது முக்கியம் இல்லை என்ன பண்றாங்க (Performance) தான் முக்கியம்.

உங்கள் இலக்கைத்  தெளிவாக்கிக் கொள்ளுங்கள். அதை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறுங்கள். வெற்றி நிச்சயம்.

21 வருடங்களுக்கு முன்னர் பாட்டி வீட்ல இப்படி உட்கார்ந்து இருந்தவர்தான்....
இன்று உலகின் அதிகாரம் மிக்க நாற்காலியில் உட்கார்ந்து இருக்கார்.


இனிய நினைவுகளை
இதயத்தில் விதைத்து
இனிதே விடைபெறுகிறது
இரண்டாயிரத்துப் பத்து.

பதிவுல நட்புகளுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

பெயரில் என்ன இருக்கிறது?


ஒரு ஊர்ல, அதாவது கர்நாடக மாநிலம் கொப்பால் மாவட்டத்தில் உள்ள குனள்ளி (Gunalli) என்னும் ஊரில் இருக்கும் அத்தனை பேருக்கும் ஒரே பெயர் தான். சாதி,மதம்,தொழில் என பெயரில் எந்த வித்தியாசமும் இல்லை. செல்லப்பெயர், பட்டப்பெயர், குடும்பப்பெயர் என எதுவுமே கிடையாது. ஆண்கள் எல்லோரும் க்யானப்பா (Gyanappa) பெண்கள் எல்லோரும் க்யானவ்வா (Gyanavva) அவ்வளவுதான் வேறு பெயரே கிடையாது. குடும்பத்தில் குழப்பம் வராமலிருக்க பெரியவர்களை தோடா க்யானப்பா & தோடா க்யானவ்வா என்றும் சிறியவர்களை சிக்க க்யானப்பா & சிக்க க்யானவ்வா என்றும் அழைக்கிறார்கள்.

சுமார் 200 குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்தில் பெயரினால் என்னென்ன குழப்பங்கள் வரும் என்று ஒரு கற்பனை (இது நிஜத்திலும் நடக்கலாம்)
  1. யாரைவது நீங்க பார்க்கப்போனால் எப்படித் தேடுவீர்கள்? இங்க க்யானப்பா வீடு எங்க இருக்குன்னு கேப்பிங்களா? அப்படிக் கேட்டால் உங்களை பார்வையிலேயே எரிக்கலாம் வழிசொல்லும் க்யானப்பா.
  2. இந்த ஊர் பள்ளிக்கூடத்தில் அட்டனன்ஸ் எப்படி எடுப்பாங்க?
  3. இந்த ஊரில் போஸ்ட்மேனாக வேலை கிடைத்தால் சந்தோசப்படுவீர்களா?
  4. இங்கு போட்டிகள் நடத்தத் தேவையே இருக்காது. ஏன்னா எப்போதும் எல்லா பரிசுகளும் க்யானப்பா & க்யானம்மாவிற்கே கிடைக்கும்.
  5. வீட்டில் மகளைத் திட்டுவது போல மாமியாரைத் திட்டலாம் மருமகள்.
  6. மூத்தவர் தோடா சின்னவர் சிக்கா. அப்ப நடுவில் இருப்பவர்களை எப்படி வேறுபடுத்துவது?
  7. இந்த ஊரில் கல்யாணப் பத்திரிக்கை எப்படி இருக்கும்?
நிகழும் மங்களகரமான விக்ருதி வருடம் கார்த்திகைத் திங்கள் ஐந்தாம் நாள் சுபயோகம் கூடிய சுபதினத்தில் க்யானப்பாவின் பேரன் க்யானப்பாவின் மகன் திருநிறைச்செல்வன் க்யானப்பாவிற்கு க்யானப்பாவின் (லேட்) பேத்தி க்யானப்பாவின் மகள்  திருநிறைச்செல்வி க்யானம்மாவை இல்வாழ்க்கைத்  துணைவியாக்க பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு....

அடபோங்கப்பா. சரி இந்த பெயர் எப்படி வந்தது?
பலநூறு ஆண்டுகளுக்கு முன் க்யானேஷ்வர் என்னும் சாமியார் வாழ்ந்தாராம். அவர் இக்கிராமத்தை ஒரு பேரழிவில் இருந்து காப்பாற்றியதற்கு நன்றிசொல்லவே இப்படி பெயர் வைக்கிறார்களாம். வேறு பெயர் வைத்தால் இந்த கிராமத்திற்கு கெட்ட சக்திகளால் தீங்கு வருமென்று இன்னும் நம்புகிறார்கள் இக்கிராம மக்கள்.

இப்படி ஒரு விசயத்தில் கிராமமே ஒற்றுமையாய் இருக்கிறதே! இதே போல மரம் வளர்ப்பு, மழைநீர் சேமிப்பு, மனிதநேயம், மருத்துவ விழிப்புணர்வு போன்ற விசயங்களில் நம்மக்கள் ஒற்றுமை காட்டினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

வியாழன், 23 டிசம்பர், 2010

வானவில் மனிதர்கள்

அமுதத்தமிழ் கடலின்
அலைகளில் விளையாடும்
சிறுவன் நான்.
விரைவில் பயில்வேன்
இலக்கண நீச்சல் - பின்
விலகிப் போகும்
"செய்யுள்"  காய்ச்சல்.

இணையத்திரை  வானில்
இனிக்கும் நட்புகளே -நீங்களென்னை
வாழ்த்தி வளர்க்கும்
வானவில் மனிதர்கள்.

பனித்துளி கவிதைகளை
பகலவன் என்றுசொல்லி
பாராட்டி பாராட்டி
பதிவெழுத வைப்பவர்கள்.

தொடர்ந்து படிக்கும்
தொண்ணூறு பேருக்கும்
நடுநடுவே வந்து
நல்வாழ்த்து சொல்வோருக்கும்
நன்றி...நன்றி!

வெள்ளி, 17 டிசம்பர், 2010

கானம் மறந்த குயில்


சிட்டுக் குருவிகள் பல
வட்டமிட்ட இடத்தில்
கட்டிடங்கள் மட்டும்
கூட்டம் கூட்டமாய்...

இலக்கியங்கள் யாவையும்
இலைகளில் இயற்றிய இனமின்று
கிறுக்கிப் பார்க்கும் தாள்களுக்காய்
கிளைகள் பல ஒடிக்கின்றோம்.

கதவு மேசை நாற்காலி
கைத்தடி காகிதம் கட்டிலென
வெட்டும் தேவையோ தீராது
வேறென்ன செய்வது சிந்திப்போம்.

இப்படியோர் சட்டம்
இயற்றினால் என்ன ?
"இருமரம் நட்டபின்
ஒருமரம் வெட்டலாம்!"

கணிணியில் கவியெழுதிக்
கதவைத் திறந்தால்
இணையக் கம்பியில்
இருகுயில் கண்டேன்.

வனமெல்லாம் பொலிவிழந்து
பணமாகிப் போனதனால்
கட்டிடத்தில் வசிக்கிறதோ
கானம் மறந்த குயிலின்று....

சனி, 11 டிசம்பர், 2010

மீட்டாத வீணைகள்

மன-பாடம் கற்றுத்தரும்
கல்வியின்று வெறும்
மனப்பாடம் மட்டுமே
சொல்லிக் கொடுக்கிறது.

இன்றைய ராமன்களுக்கு
திரையரங்கில் மட்டுமே
தெரிகிறது ஒளிக்கற்றை.
ராமானுஜம் படிப்பதோ
பணக்கணக்கு மட்டுமே.

படிப்புத் திட்டத்தால்
பயம் வளருமளவு
சுயம் வளர்வதில்லை.

பயன்படுத்தப் படாமலேயே
பழையதாகிப் போகின்றன
இளம்ஞான வீணைகள்.

அறிவின் துணையின்றி - வெறும்
அகவையின் துணைகொண்டே
"பெரியவர்" ஆகிறோம் நாம்.

நடைமுறைக் கல்வியை
நவிலாத படிப்பே
நடைமுறையில் உள்ளது.

பாடத்திட்டங்கள் 
புத்தகச்சுமை கூட்டினவேயன்றி
புத்திக்கு சுவை காட்டவில்லை.

முக்கால் கிணறு தாண்டவே
சொல்லிக் கொடுக்கிறது
மெக்கல்லோ.

இன்று
வியாபாரிகள் மட்டுமே
கல்வித் தந்தைகளாகி
விற்பனை செய்வதால்
விறகுக் கட்டையாகிறது
வெண்கமலக்காரியின்
வீணை.

செவ்வாய், 7 டிசம்பர், 2010

கவிதைப் போட்டி

வணக்கம். இது கவிதைப் போட்டி தாங்க...ஆனா கவிதைகளுக்கு இடையேயான போட்டி. நீங்க இதுல கலந்துக்க முடியாது ஏன்னா...நீங்க தான் இதுல நடுவர்.

நேற்று என் தோழி "நான்... ஏன்...பிறந்தேன்." என்று தொடங்கும் வரிகளில் மூன்று வரி கவிதை எழுதச் சொன்னாள்.

நான் ஏன் பிறந்தேன்
பதில் தெரியவில்லை -உன்னைப்
பார்க்கும் வரை.
என்று சொன்னதற்கு, "நான்" என்று முதல் வரியும் "ஏன்" என்று இரண்டாம் வரியும் "பிறந்தேன்" என்று மூன்றாம் வரியும் தொடங்க வேண்டும் எனச் சொன்னாள்.

சரி. இப்போ போட்டி என்னவென்றால் நானும் என் நண்பர்கள் மூவரும் மேற்சொன்ன விதிகளில் கவிதை எழுதியுள்ளோம். அதில் உங்களுக்கு பிடித்த கவிதைகளை 1 , 2 , 3 , 4 என வரிசைப் படுத்தி பின்னூட்டமிடுங்கள். (உதாரணத்திற்கு 2 , 1 , 3 , 4)

நான் கருவறைத்தாண்டி வெளிவந்த தருணம்
ஏன் கைகளில் தந்தாய் கள்ளிப்பால் மரணம்
பிறந்தேன் பெண்ணாக - பிழையென்றால் யாரிங்கே காரணம்??


நானென்றால் நானில்லை நீ
ஏனென்றால் வேறில்லை காதல்
பிறந்தேன் உனக்கென இறக்க.


நான் எரிந்து கொண்டிருப்பது தெரிந்தும்
ஏன் அணைக்க மறுக்கிறாய் (நீரே)
பிறந்தேன் உனக்காக (நெருப்பாய்) என்பதாலா?

4
நான் மரித்தேனுன் பார்வையில்
ஏன் பார்த்தாய் மீண்டும்
பிறந்தேன் மறுமுறை.

நீங்க இதில் நடுவர்தான். ஆனாலும் போட்டி விதிகளுக்குட்பட்டு நீங்களும் எழுதலாமே....

பின்னூட்டக்கவிதைகள்  

நான் வாழ்ந்ததும்
ஏன் வீழ்ந்ததும் கூட
பிறந்தேன் உனக்காக என்பதாலே! (பாலா)

நான் விடியல் எனத்தெரிந்தும்
ஏன் விழிமூடிக் கிடக்கிறாய்
பிறந்தேன் மீண்டும் இறப்பேன் என்பதாலா?  (பாலா)

நான் நீயானேன்
ஏனென்றால்
பிறந்தேன் அதுக்காகத்தானே! (அன்புடன் மல்லிகா)

நான் உனக்குள் உறைந்தேன்
ஏன் எனக்குள் கலந்தாய்
பிறந்தேன் உனக்காவென்றா! (அன்புடன் மல்லிகா)

நான் நானாக இருக்க,
ஏன் நீ மட்டும் வேறாகப்
பிறந்தேன் (பிறந்து ஏன்) பழி தீர்க்கிறாய்.? (G M பாலசுப்ரமணியம்)

நான் தமிழனென்றேன்
ஏன் திருப்பிக்கொண்டாய்
பிறந்தேன் ஈழத்தில் என்றா ? (சிவகுமாரன்)

நான் நலமில்லை
ஏனென்று நீ கேட்காததால்..
பிறந்தேனோ நீ புறக்கணிக்கவே...(தேனம்மை லெக்ஷ்மணன்)

நான் ஏங்குகிறேன்
ஏன் தாமரையாய்
பிறந்தேன் நீரின்றி,(என நினைந்து). (காளிதாஸ்)

நான்,நான் என்ற மனம்
ஏன்,ஏன்,எனக் கேட்க
பிறந்தேன் ஞானியாய்,பிறக்கும் போதே. (காளிதாஸ்)\

நான் என்ற கர்வம் ஒழித்து
ஏன் என்று சிந்திக்க
பிறந்தேன் இவ்வுலகிலே...(ராஜி)

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

செயற்கைச் சிறுநீரகம்

இதுவரை டையலசிஸ் செய்யும் இயந்திரத்தைத் தான் நாம் செயற்கைச் சிறுநீரகம் என்று அழைத்துக் கொண்டிருந்தோம். உண்மையிலேயே உடலில் பொருத்தக் கூடிய செயற்கைச் சிறுநீரகத்தை இந்திய வம்சாவழியைச் சேர்ந்த (!) அமெரிக்கவாழ் ஆராய்ச்சியாளர் சுவோ ராய் (Shuvo Roy ) கண்டுபிடித்துள்ளார். முதல் கட்ட சோதனையில் வெற்றிபெற்றுள்ள இச்சாதனம் மனித உடல் ஆராய்சிகள் (Clinical Trials ) முடிந்து இன்னும் ஐந்து ஆண்டுகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கிடைக்கக்கூடும்.


ஒரு காப்பிக் கோப்பை அளவுள்ள இச்சாதனம் ரத்தத்தைச் சுத்திகரிப்பதோடு மட்டுமல்லாமல் ரத்த அழுத்தத்தை சீராக்கவும் வைட்டமின் டி உற்பத்தி செய்யவும் கூட பயன்படுமாம்.

இந்த சாதனம் இரு பகுதிகள் கொண்டது. சிறுசிறு துளைகளுள்ள சிலிக்கான் வடிகட்டிகளால் ஆன முதல் பகுதி நச்சுப் பொருட்களை ரத்தத்திலிருந்து பிரிக்க உதவும். மனித செல்களால் ஆன இரண்டாம் பகுதி ரத்தத்தில் உள்ள உப்பு, சர்க்கரை மற்றும் நீரின் அளவை சீராக்கும்.

இந்தியாவில் வருடத்திற்கு ஒன்றரை லட்சம் பேர் சிறுநீரகக் கோளாறால் அவதியுறுகிறார்கள். அதி சுமார் 3500 பேருக்கு மட்டுமே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிகிறது. 6000 - 10000 பேர் டயலசிஸ் செய்து கொள்கிறார்கள். மீதமுள்ளவர்களுக்கு சரியான சிகிச்சை கிடைப்பதில்லை. இந்த சாதனம் நடைமுறைக்கு வந்தால் மிகப் பயனுள்ளதாய் இருக்கும். தமிழ் சினிமாக்களில் சொல்வது போல நிச்சயம் இது ஒரு மெடிகல் miracle.

செவ்வாய், 30 நவம்பர், 2010

மணநாள்

உலகிலேயே அழகான வீடு
உலகிலேயே அழகான நகரம்
உலகிலேயே அழகான பாலம்
உலகிலேயே அழகான நீர்வீழ்ச்சி
 உலகிலேயே அழகான குழந்தை
உலகிலேயே அழகான கண்கள்
உலகிலேயே அழகான செடி
 
இப்படி உலகின் மிகச்சிறந்த பல விஷயங்கள் இருப்பது போல இன்று என் வாழ்வில் மிக அழகான நாள். அதாவது என் காதலி மனைவியான நாள்.

 நீ 
நான்
தேடிச்சுற்றிய
பத்தாம் கிரகம்
ஓடித்திரிந்த
ஒன்பதாம் திசை
பாடி மகிழ்ந்த
எட்டாம் ஸ்வரம்
கூடி ருசித்த
ஏழாம் சுவை
என் அணுவிலும் கலந்த
ஆறாம் பூதம்
ஆசையாய் நான் படித்த
ஐந்தாம் வேதம்
நல்லதையே சொல்லும்
நான்காம் காலம்
நல்வழி காட்டிய
மூன்றாம் விழி
என்னை வளர்த்த
இரண்டம் தாய்
எல்லாம் ஆகிய
ஒரே மனைவி.

புதன், 24 நவம்பர், 2010

ஒற்றை விரல் ஓவியம்


பேருந்துப் பயணத்தில்
பின்புறம் திரும்பி
பேசுவதுபோல் ஒன்று...

புத்தகக் குழந்தைகளை
மார்பில் தாங்கியபடி
புன்னகைப்பது போல் ஒன்று...

அலுவல் நிமித்தமாய் - நான்
அயலூர் செல்கையில்
கையசைப்பது போல் ஒன்று...

சமையலறைக் கரப்பைபார்த்து
அலறித்துடித்து நீ
அஞ்சுவதுபோல் ஒன்று...

கடைத்தெரு போயெனை
காய்கறி வாங்கச்சொல்லி
கெஞ்சுவதுபோல் ஒன்று...

பிறக்காதக் குழந்தையின்
பிஞ்சுவிரல் பிடித்து 
கொஞ்சுவதுபோல் ஒன்று...

இப்படி நீ
புன்னகைப்பது...பூப்பறிப்பது...
வெட்கப்படுவது... வேடிக்கை பார்ப்பது...
முட்கள் குத்தியது...முகப்பரு வந்ததென
ஒவ்வொரு நிகழ்வையும்
ஓவியமாய் வரைந்தேன்.

பின்னொருநாள்
தூரிகை எல்லாம்
தோற்றுப்போனது -நீ
தொட்டுத்தொட்டு வரைந்த
ஒற்றை விரல் ஓவியத்தில்...

வெள்ளி, 19 நவம்பர், 2010

கானல் நேசம்


காதற்கணவா
நான் கொண்ட
காதல் கனவா.....

அரிதாய்ச் சந்தித்து
அன்பைப் பகிர்கையில்
குறிஞ்சியாய் மலர்ந்தது
நெருங்கி வந்து
நேசம் வளர்க்கையில்
ஆனதேன் நெருஞ்சியாய்...

தாலிகட்டிய புண்ணியத்திற்காய்
தாம்பத்யம் நடத்துகிறாய் - உறவு
வேலிவிட்டு வெளியேறி
வேடிக்கைப் பார்க்கின்றாய்.



உன்னிடம் வேண்டுவது
புன்னகைக்குப் புன்னகையல்ல
அழுகையில் ஆறுதல்.

கீறலைக் கவனித்து
விரைவில் சரிசெய்தால்
விரிசல் என்பதற்கு
வேலை இருக்காது.

கடந்ததை மறந்திடுவோம்
காதல்சொல் மறுமுறை.
கடைத்தெரு செல்கையிலும்
கைகோர்த்து நட...

கைப்பேசித் திரையில் - இந்தக்
காதலியின் படம்வை
பொய்ப்பேசித் தவிர்க்காமல்
புதுப்படம் கூட்டிசெல்....

உற்று நோக்கு
உள்ளுணர் வுணர்
உனைப்பற்றி நான்
எண்ணுவது பிழையென
எண்ணும்படிச் செய்.

வாழ்க்கைச் செடிக்கு
காதல் நீர்தெளிப்போம் - பின்
வளரும் அது
வசந்தகால விருட்சமாய்.

இப்படி
உள்ளத்து ஆசையோ
காதல் தேசம்
உண்மையில் கிடைத்ததோ
கானல் நேசம்.


காதற்கணவா
நீயே சொல்.
நான் கொண்ட
காதல் கனவா.......

ஞாயிறு, 14 நவம்பர், 2010

மூன்றாம் தாய்

திங்களன் றுதித்த
திங்கள் - நீயெங்கள்
வாழ்வின் சர்க்கரைப்
பொங்கல்.

குடும்பத்திற்குக் கிடைத்த
குலதெய்வ அருள்.
"குழலினிது" குறளுக்கு
அருஞ்சொற் பொருள்.

பசுந்தளிரே  உன்சிரிப்பில்
பயணக் களைப்பும்
பணிச்சுமை அலுப்பும்
பறந்தோடிப் போகிறது.

முன்பெலாம்
என்னவள் கதைசொல்லி
உனை தூங்கவைத்தாள்.
இப்போதெலாம்
நீ கதைசொல்லி
எனை தூங்க வைக்கிறாய்
ஆதலில் நீயென்
மூன்றாம் தாய்.

வியாழன், 4 நவம்பர், 2010

அயலூர் வாழ்க்கை

தலைக்கு எண்ணெய்வைத்துக்
குளிப்பாட்டத் தாயுமில்லை.
இலைக்கு வகைவகையாய்
இனிப்போடு விருந்துமில்லை.

சித்திரைத் தேரிழுக்கச்
செல்லவும் இயலவில்லை.
புதுத்திரைப் படம்பார்க்க
அரங்குகள் எதுவுமில்லை.

பூசணிப்பூ கோலமில்லை
பூப்போட்ட தாவணியில்லை
மாசம் ஒருதடவை
மல்லூர்போக முடிவதில்லை.

தலைமுடி கோதும்
படிக்கட்டுப் பயணமில்லை
இலைமறை காயாய்
இனிக்கப்பேச யாருமில்லை.

புதுத்துணி எடுத்துடுத்த
பொங்கல்வைத்துக் கொண்டாட
எங்களூர் சாமிகோவில்
இந்தூரில் ஏதுமில்லை.

குதித்தோடி விளையாட
கொய்யா மரமுமில்லை
செருப்பின்றி நான்நடக்க
வரப்புகள் ஏதுமில்லை.

மேலிருந்து நான்குதிக்க
மேற்காட்டுக் கிணறுமில்லை
பென்சில்பிடித்து எழுதவைத்த
பெரமனூர் டீச்சரில்லை.

ஒற்றையடிப் பாதையில்லை
உட்காரப் பாறையில்லை.
கற்றைவிழிப் பெண்ணைப்பார்த்து
கண்ணடிக்கும் நண்பனில்லை.

கயிறுகட்டி ஊஞ்சலாட
புளியமரம் ஏதுமில்லை
வைரமுத்து நான்படிக்க
புத்தகமும் கிடைப்பதில்லை.

இல்லை...இல்லை
இல்லை...இல்லை

செழிப்பாய் வாழ்வதற்கு
சேமிப்பு உயர்ந்தாலும் 
அலுப்பாய்த் தானிருக்கு
அயலூர் வாழ்க்கை.

புதன், 27 அக்டோபர், 2010

கர்வா சவுத்

நேற்று வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் கர்வா சவுத் (KARVA CHAUTH)  கொண்டாடப்பட்டது. திருமணமான இந்துப் பெண்கள் கணவனின் நீண்ட ஆயுள் வேண்டி நேற்று நிலவு வரும் வரை விரதமிருந்தார்கள் . நிலவு வந்ததும் அதை நீரிலோ, துப்பட்டா அல்லது சல்லடை வைத்தோ பார்த்து பின் கணவன் முகம் பார்ப்பார்கள். "கடவுளே என் கணவனுக்கு ஆரோக்யமான நீண்ட ஆயுள் கொடு, நான் சுமங்கலியாக (இவனைத் தனியே தவிக்கவிட்டுட்டு!) இறக்க வேண்டும்" என வேண்டிக்கொள்வார்கள்.



கர்வா என்றால் மண்கலசம். சௌத் (சௌதா) என்றால் நான்கு( அதாவது கார்த்திகை மாதத்தின் பௌர்ணமியில் இருந்து நான்காவது நாள் ). மண் கலசத்தில் நீரையோ அல்லது பாலையோ நிரப்பி அதில் பஞ்ச ரத்தினங்களை இட்டு தானமாகக் கொடுத்து கணவனுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளும் பண்டிகை என்று பொருள்.


 அந்த காலத்தில் வெகு தொலைவில் வாக்கப்பட்டுப் போகும் பெண்கள், ஏதாவது  பிரச்சனை என்றால் தங்கள் குடும்பத்தை உடனடியாகத் தொடர்பு கொள்ள இயலாது. அதனால் நாத்தனார் அல்லது அருகில் உள்ள குடும்பத்துப் பெண்களை சகோதரியாக ஏற்று பிரச்சனைகளை பேசிக்கொள்ளவும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்கவும் இந்தப் பண்டிகை பழங்காலத்தில் கொண்டாடப்பட்டது. இன்றோ சாமியார் மடத்தில் பூனை கட்டிய கதையாய், மருதாணி இட்டு வளையல் போட்டு புடவை கட்டும் பண்டிகையாகிப் போனது கர்வா சௌத்.



கர்வா சௌத் அன்று சூரிய உதயத்தில் இருந்து நிலவு வரும் வரை தண்ணீர் கூட குடிக்காமல் பெண்கள் கணவனுக்காக விரதமிருக்கிறார்கள். முன்தினமே கை நிறைய வளையல் வாங்கிக்கொண்டு மருதாணி இட்டுக்கொள்கிறார்கள். அன்று பெரும்பாலும் முகூர்த்த புடவைகளை கட்டிக்கொண்டு தெருவில் உள்ள பெண்களெல்லாம் ஒன்றாய் கூடி பூஜை செய்கிறார்கள்.
 உதயநிலா 
அன்று 
சந்திரனைப் பார்த்த 
சல்லடைத் தட்டுவழி 
இந்திரனைப் பார்த்தாள்
ரதி - அதன்பின் 
ஒவ்வொரு நாளும் 
விடிகிறது அவனுக்கு 
உதயநிலா முகம் பார்த்து...

ஞாயிறு, 24 அக்டோபர், 2010

ABCD காதல்

முஸ்கி: இந்த கவிதை சுமார் 10 வருடங்களுக்கு முன் ஓர் மாதநாவலின் அட்டையில் படித்தது.
A ன்னுடைய  இதயத்தில்
B ம்பமாய் பதிந்தவளே - உன்
C ங்காரக் கூந்தலிலே
D சம்பர் பூ சிரிக்குதடி!
E ப்போது மட்டுமல்ல உன்னை
F ப்போது நினைத்தாலும்
G ல்லென்று மனம் குளிருதடி!
H ச்சமாய் விழும் உன்பேச்சில்
I ம்புலனும் நிறைவு கொள்ளுதடி!
Ji ல்லென்ற பார்வை மூலம்
K லி செய்யும் விழியிரண்டும் 
L ல்லையில்லா இன்பமடி!
M ம்முடைய பேச்சும் 
N ன்னுடைய மூச்சும்
O ன்றாய் உன் நினைவைத் தூண்டுதடி.
P ரியமாய்ப் பேச வார்த்தைகள் 
Q வில் நிற்குதே 
S எனச் சொல்லடி!
T குடிக்கையிலும் 
U ன் நினைவு.
V ளையாடப் போனாலும் உன்நினைவு.
We ல்கம் எனச்சொல்லும் மருத்துவமனை போய்
X ரே எடுத்தாலும் உன் நினைவு.
Y யாரமாய் நிற்கும் ஓவியமே 
Z ட்டென்று எனக்குச் சம்மதம் சொல்லடி...

டிஸ்கி: இந்தக் கவிதைக்கு புகைப்படம் தேடுகையில் இது கிடைத்தது.

ஞாயிறு, 17 அக்டோபர், 2010

இப்படித்தான் நீயும்

இப்படித்தான் நீயும் ...
வேறோர் குழந்தையுடன்
விளையாடிக் கொஞ்சினால்
ஓடிவந்தெனைக் கட்டிக்கொள்கிறாள்
செல்ல மகள்.
இப்படித்தான் நீயும்
அன்றோர் நாள்
காதலைச் சொன்னாய்
குழந்தை மனதோடு........


இன்னும் கொஞ்சம்...

ஒவ்வொரு தேர்வு
எழுதி முடித்ததும்
உள்ளுக்குள் தோன்றும்
இன்னும் கொஞ்சம்
நல்லா படிச்சிருக்கலாம்.
ஒவ்வொரு முறை
சந்தித்துப் பிரிகையிலும்
உள்ளுக்குள் தோன்றும்
இன்னும் கொஞ்சம்
உன்னோடு பேசியிருக்கலாம்....

ஞாயிறு, 10 அக்டோபர், 2010

அமுதான தேன் விஷமாவதேன்?

பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத்தேன் எனநான் நினைத்தேன்
அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன்.
கொடித்தேன் இது எங்கள் குடித்தேன் என
ஒரு படி தேன் பார்வையில் குடித்தேன்
துளிதேன் சிந்தாமல் களித்தேன் - ஒரு
துளிதேன் சிந்தாமல் களித்தேன்
கைகளில் அணைத்தேன் அழகினை ரசித்தேன்.


அடடா.... சொல்ல வந்தத விட்டுட்டு பாடல் வரிகள் போயிட்டே இருக்கே....தேனில் ஊறிய கவியரசரின் தித்திக்கும் வரிகள். (அப்பாடா திரும்பவும் பதிவுக்கு வந்தாச்சு.)



தேன். காலங்காலமாக நம் வாழ்க்கையில் அங்கம் வகிக்கிறது. தேனைப் பற்றிய குறிப்பு ரிக் வேதத்திலேயே உள்ளது. உணவாய் மருந்தாய் அன்றாட வாழ்வில் நாம் தேனைப் பயன்படுத்துகிறோம். என்னது....தேனின் பயன்கள் என்னவா? பங்காளிகிட்ட கேளுங்க. (என்னது பங்காளி யாரா?).


தேன் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும், நுண்ணுயிர் தாக்குதலில் இருந்து காப்பாற்றும் அப்படின்னு நினைத்து அடிக்கடி தேன் உண்பவரா நீங்கள். உங்களுக்குத்தான் இப்பதிவு.



தேசிய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (CSE ) தில்லியில் அதிகமாய் விற்பனையாகும் 12 கம்பெனிகளின் தேன்களை ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் நோக்கம் தேனில் கலந்துள்ள வேதிப்பொருட்களை கண்டறிவது. இதுவரை நாம் இயற்கையான சுத்தமான தேன் என்று விளம்பரத்தைப் பார்த்து நம்பிக் கொண்டிருந்த அத்தனைத் தேனிலும் (Hitkari தேனைத் தவிர) ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆன்டிபயாடிக் என்ற வகையைச் சேர்ந்த நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகள் கலந்துள்ளன. ஆக்சிடெட்ராசைக்ளின், க்லோராம்பிநிக்கால், அமாக்சிசிலின், சிப்ரோப்லோக்சசின், எரித்ரோமய்சின் மற்றும் என்றோப்லோக்சசின் ஆகிய மருந்துகள் தேனில் கலந்துள்ளன.


இவையெல்லாம் மருந்துகள் தானே சாப்பிட்டா உடம்புக்கு நல்லதுதானேன்னு கேக்றீங்களா?
தேவை இல்லாத போது மருந்து உட்கொண்டால் நம் உடல் அந்த மருந்துக்கு பழகிடும். அப்புறம் நோய் வரும் போது அந்த மருந்தால் குணமடையாது. அது மட்டுமல்லாமல் அடிக்கடி உட்கொள்ளும் மருந்துகளால் பக்க விளைவுகளும் வரும். உதாரணத்திற்கு நீங்கள் உண்ணும் தேனிலோ/உணவிலோ ஆக்சிடெட்ராசைக்ளின் தொடர்ந்து இருந்தால் இரத்த சம்பந்தமான நோய்கள் வரும். ஈரல் பாதிப்படையும்.



அது சரி. இந்த மருந்துகளெல்லாம் எப்படி தேனில் கலந்தன?
1965-ல் பஞ்சாப் விவசாயப் பல்கலைகழகம் இத்தாலியில் இருந்து கொண்டுவந்த புதிய வகைத் தேனீக்களை அறிமுகம் செய்தது. இந்திய தட்பவெட்பம் ஒத்துவராமல் அடிக்கடி அவை நோய்வாய்ப்பட்டதால் தேனீ வளர்ப்பவர்கள் அதற்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகளும் அதிக உற்பத்திக்காக ஆக்சிடெட்ராசைக்கிலினும் தெளிக்க ஆரமித்தனர். நாளடைவில் மருந்து தெளிப்பது கட்டாயமாகிவிட்டது. 
சீப்பாய்க் கிடைக்கிறதென்று சீனாவில் இருந்து இறக்குமதி செய்யாமல் சிறு வியாபாரிகளிடம் இருந்து தேனை வாங்குவதால் தான் Hitkari தேனில் மருந்துகள் எதுவும் இல்லையாம்.



தேனுக்கென்று தரக் கட்டுப்பாடுகள் கிடையாதா?
இருக்கு....ஆனா இல்ல. அதாவது இந்தியாவில் விற்கப்படும் தேனுக்கென்று சில அடிப்படைச் சோதனைகள் மட்டுமே உள்ளது. (அதாவது சக்கரை எவ்வளவு இருக்கு? ஈரப்பதம் எவ்வளவு இருக்கு?). அதே சமயம் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் தேனுக்கென்று தனியே கடுமையான தரக்கட்டுப்பாட்டு சோதனைகள் உள்ளன. (ஆன்டிபயாடிக் கலப்பட சோதனை உட்பட). இதைப் பயன்படுத்தி வெளிநாட்டுக்கு மட்டும் சுத்தமானத் தேனை அனுப்பிவிட்டு கலப்படத் தேனை இந்தியாவில் விற்கிறார்கள்.
ஆஸ்திரேலியா மற்றும் சுவிசில் இருந்து இந்தியாவிற்கு இறக்குமதியாகும் தேனிலும் இதே நிலைதான். அதே சமயம் அவர்கள் நாட்டில் அதே கம்பனிகள் விற்கும் தேன் தரமானது.

 சரி கடையில் கிடைக்கும் எல்லா வகைத் தேனிலும் மருந்து கலந்துள்ளதே... இப்போ என்ன செய்யலாம்? 
  1. பாலுடன் கலந்து குடித்து பயில்வானாகிறேன், சுடுதண்ணியில் கலந்து குடித்து சுள்ளானாகிறேன் என தினமும் தேன் குடிப்பதைத் தவிருங்கள்.
  2. விளம்பரங்களைப் பார்த்து இது இயற்கையானது, சுத்தமானது குழந்தைகள் வளர கட்டாயம் தேவை என்று நம்பி குழந்தைகளுக்கு தினமும் தேன் கொடுக்காதீர்கள். அது அவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கலாம்.
  3. 'மாலையில்  சந்தித்தேன்  மையலில்  சிந்தித்தேன்   காதலர் தீண்டும் போது கைகளை   மன்னித்தேன்' - இது போன்ற பாடல்கள் கேட்டு செவிவழி மட்டும் தேனருந்தலாம்.                                                                                                           

வியாழன், 23 செப்டம்பர், 2010

காமினி இருக்க பயமேன் (சவால் சிறுகதை)

காமினி ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். சிறு வயதிலிருந்தே பரத்-சுசீலா, வைஜெயந்தி-நரேன்,விவேக்-ரூபலா என படித்து வளர்ந்த ஆர்வத்தில் டிடெக்டிவ் ஏஜென்சி நடத்தும் பரந்தாமனிடம் வேலைக்கு சேர்ந்தாள். அங்கு உடன் பணிபுரியும் தீபக்கும் இருக்கிறான், காமினி அவனைக் காதலிக்கிறாள் என்பதெல்லாம் நமக்கும் இந்தக் கதைக்கும் தேவை இல்லாத விஷயங்கள்.

வேறொரு கேஸ் விசயமாய் உளவு பார்க்கப் போன இடத்தில் இருவர் பேசிக்கொண்டதை மறைந்திருந்து கேட்டதின் மூலம் காமினிக்கு வைரத்தின் மேட்டர் தெரிய வந்தது. இதை எப்படியாவது தடுத்தாக வேண்டும் என்று அவள் எண்ணிக் கொண்டிருக்கையில் தலையில் அடி விழுந்தது. சுதாரித்து எழுந்து ஓடத் துவங்கினாள். இருவர் துரத்தும் காலடி ஓசை இன்னும் வேகமாய் ஓடத்தூண்டியது. 'தலையில் அடிபட்டும் ஓடுகிறாய்,உனக்கொண்ணும் ஆகல...கமான் காமினி' என தனக்குத் தானே தைரியம் சொல்லி அருகிலுள்ள மருத்துவமனையை அடைந்தாள்.

அடி ஒன்றும் பலமில்லை. சிறு வீக்கம் தான். வீஸிங் இருப்பதால் நெபுலைசர் கொடுத்திருக்கேன். ECG மானிட்டர் பண்ணனும். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு கிளம்பலாம் என்று டாக்டர் சொன்னது எதுவுமே காமினி காதில் போட்டுக்கொள்ளவில்லை. மனது முழுதும் வைரத்தின் நினைப்பே ஆக்கிரமித்திருந்தது. எப்படியாவது வைரத்தை காப்பாற்ற வேண்டுமென முடிவெடுத்தாள்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு , வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.உடனே ஐந்தாவது மாடி, ஆறாவது மாடி என கற்பனை செய்யவேண்டாம். வாசல் வழி சென்றால் துரத்தி வந்தவர்கள் காத்திருக்கலாம் என்பதால் ஜன்னல் வழி வெளியேறினாள். பின் வாசல் வழி வெளியேறி அருகில் உள்ள சந்து வழியே மருத்துவமனைக்கு முன்புறம் வந்து நோட்டமிட்டாள். போலிஸ் ஜீப் ஒன்று நின்றிருந்தது. மெல்ல அதை நோக்கி நடந்தாள்.

ஜீப்பில் இருந்தது சிவா. காவல் துறையில் உள்ள ஒரு கறுப்பாடு. சில கேஸ் விசயங்களை அவனிடம் இருந்து கேட்டுப் பெற்றதால் அவனை நல்லவனென்றே நம்பிக்கொண்டிருக்கிறாள் காமினி. அவனிடம் வைரம் பற்றிய விவரங்களைச் சொல்லி உடன் வருமாறு அழைத்தாள். நானே உன்னை அங்கு கூட்டிப் போகத்தான் காத்திருக்கிறேன் என மனதில் நினைத்தபடி ஜீப்பை ஸ்டார்ட் செய்தான் சிவா.

இவர்கள் இருவரும் அந்த வீட்டினுள் நுழைந்ததும் அந்த இருவரும் தப்பியோட முயலாமல் அப்படியே நின்றனர். 'இந்தக் கடத்தல் அடிக்கடி நடக்குது என் உதவியோடத்தான்' என்று சிரித்தபடி சொன்ன சிவா தன் துப்பாக்கியை எடுத்தான். நீ வந்துட்டுப் போனதுமே எனக்கு தகவல் சொல்லிட்டாங்க. எப்படியும் நீ வருவேன்னு தான் ஹாஸ்பிட்டல் பக்கத்துலையே காத்திருந்தேன்.“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா. சாரி சிவா, எனக்கு வேறவழி தெரியுது அதோபார் என வாசலைப் பார்த்து புன்னகைத்தாள் காமினி.

உன்னை பாக்கறத்துக்கு முன்னாடியே பரந்தாமன் சார் மூலமா நான் கமிஷ்னருக்கு தகவல் சொல்லிட்டேன். ஆனாலும் தாமதித்தால் இவர்கள் வைரத்தை ஏதேனும் செய்துவிடுவார்கள் என பயந்து தான் உன்னை துணைக்கு அழைத்தேன். ஆனாலும் உங்கள் மூணு பேருக்கு ஒரு வேன் அதிகம் தான் என்றாள்.

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.
காமினி இருக்க பயமேன் என சொல்லி காலண்டர் முருகனாய் சிரித்தாள் காமினி.

இப்படி குழந்தைகளை கடத்தி, ஊனமாக்கி, பிச்சை எடுக்க வைக்கும் கும்பலுக்கு காவல் துறையை சேர்ந்த ஒருவரே உடந்தையாய் இருந்ததை சொல்ல நான் வெட்கப்படுகிறேன். இந்த நேரத்தில் துணிவுடன் செயல்பட்ட காமினிக்கு என் பாராட்டுக்களைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன் என பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார் கமிஷ்னர். ஆம். வைரம் ஓர் ஏழைச் சிறுவன். ஏழைகளுக்கு தங்கமும், வைரமும், முத்தும், பவளமும் பெயரில் மட்டும் தானே இருக்கும்.

வியாழன், 16 செப்டம்பர், 2010

பறவை


மற்றவர்முன் நீ
பாடும் போதும்
மற்றவரை நீ
பாராட்டும் போதும்
குயில்.

அடுத்தவர் உன்புகழ்   
'பாடும்' போதும்
அவர்கள் உன்னை
பாராட்டும் போதும் நீ
பால்மட்டும்  பருகும்
அன்னம்.

முடிவெடுக்கும்  சில
முக்கிய நிமிடங்களில்
நிச்சயம் நீ
கிளி.

என்னிடம் நீ
பொய்யாகச் சண்டையிட்டு
மெய்யாக சமாதானம் செய்வாயே
அப்போது நீ
புறா.

இப்படி
பலமுறை நீ
பறவையானாய்.....

நானோ
உன்னைப் புரிந்துகொள்ளும்
உன்னத முயற்சியில்
என்றும் என்றென்றும்
பீனிக்ஸ் பறவையாய்......



பீனிக்ஸ் தெரியாதோர் இந்த பின்குறிப்பைப் படிக்கவும்:
சூரியனைத் தொடுவதே பீனிக்சின் லட்சியம். அதன் முயற்சியில்  ஒவ்வொரு முறையும் தன் சிறகுகளை அகல விரித்து உயரே.........உயரே பறக்கும். குறிப்பிட்ட உயரத்தில் சூரியனின் சூடு தாங்காமல் உடல் கருகி மண்ணில் விழும். சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்தெழும். மீண்டும் தன் லட்சியத்தை நோக்கி உயரே பறக்கும்.

வெள்ளி, 10 செப்டம்பர், 2010

கூட்டாஞ்சோறு 10.09.10

 பெரிய பெயர் பெற்றவர்.....
 உலகிலேயே மிக நீளமான ஆறு எதுன்னு கேட்டா நீங்க அமேசான்னு சரியாவோ இல்ல நைல்னு தப்பாவோ சொல்லிடுவீங்க. உலகிலேயே நீளமான பேர் யாரோடதுன்னு கேட்டா சொல்ல முடியுமா?

Adolph Blaine Charles David Earl Frederick Gerald Hubert Irvin John Kenneth Lloyd Martin Nero Oliver Paul Quincy Randolph Sherman Thomas Uncas Victor William Xerxes Yancy Zeus Wolfe­schlegelstein­hausenberger­dorffvoraltern­waren­gewissenhaft­schaferswessen­schafewaren­wohlgepflege­und­sorgfaltigkeit­beschutzen­von­angreifen­durch­ihrraubgierigfeinde­welche­voraltern­zwolftausend­jahres­vorandieerscheinen­wander­ersteer­dem­enschderraumschiff­gebrauchlicht­als­sein­ursprung­von­kraftgestart­sein­lange­fahrt­hinzwischen­sternartigraum­auf­der­suchenach­diestern­welche­gehabt­bewohnbar­planeten­kreise­drehen­sich­und­wohin­der­neurasse­von­verstandigmen­schlichkeit­konnte­fortplanzen­und­sicher­freuen­anlebens­langlich­freude­und­ruhe­mit­nicht­ein­furcht­vor­angreifen­von­anderer­intelligent­geschopfs­von­hinzwischen­sternartigraumen, Senior
 
இப்போ நீங்க படிச்சதுதான் (நெசமா படிச்சிங்களா?) உலகிலேயே நீளமான மனிதப்பெயர். மொத்தம் 746 எழுத்துக்கள் (நல்லா பாருங்க A B C D ன்னு துவங்கி Z வரைப்போய் அப்பவும் அடங்காம ஆறு வரி சேத்துருக்காங்க) இவர செல்லமா Wolfe­schlegelstein­hausenberger­dorff ன்னு கூப்பிடலாமாம்.

பிஞ்சிலேயே பழுத்தது 
இந்தோனேசியாவில் ஒரு சிறுவன் இல்லை இல்லை ஒரு குழந்தை 18 மாதத்தில் இருந்தே சிகரெட் குடிக்கிறதாம். இரண்டு வயதாகும் ஆர்டி ரிசால் (Ardi Rizal ) இப்போது ஒரு நாளைக்கு 40 சிகரெட் குடிக்குமளவுக்கு புகைப்பழக்கத்துக்கு அடிமை ஆகி இருக்கிறான். இப்போது சிகரெட் தர மறுத்தால் சுவற்றில் முட்டிக்கொள்ளும் அளவுக்கு சாருக்கு கோவம் வருகிறதாம். என்ன கொடும சார் இது....

 


நொறுக்ஸ் 
  • இனி உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகளில் இரு அணிகளும் கோல் போடாமல் இருந்தாலோ அல்லது சமநிலையில் இருந்தாலோ கூடுதல் நேரம் ஒதுக்கப்படாது. நேரடியாக பெனால்டி கிக் தான்.
  • இன்றைய ரமலான் நோன்புக்கும் நாளைய விநாயகர் சதுர்த்திக்கும் வாழ்த்துக்கள். கலைஞர் தொலைக்காட்சியில் நாளை விநாயகர் சதுர்த்தி இல்லையாம் விடுமுறைதின சிறப்பு நிகழ்சிகளாம் (நாத்திகம்??)
  • காமன்வெல்த் போட்டி வரலாற்றிலேயே அதிக செலவு செய்தது நாம்தான். முதலில் 617.5 கோடி என்றார்கள், அப்புறம் 1895.3 கோடி அப்புறம் 7000 கோடி என்றார்கள். இப்போதைய நிலவரப்படி 65500 கோடி செலவாகுமாம். காமன்வெல்த் போட்டி 2014 ல் நடத்தப்போகும் ஸ்காட்லான்ட் திட்டமிட்டுள்ளது மொத்தமே 3749 கோடிகள்.
  • இன்னும் 23 நாட்களே மீதமுள்ள நிலையில் போட்டிக்கான 24 செயல்திட்டங்களில் 16 மட்டுமே நிறைவடைந்துள்ளது. அதே சமயம் 2014ல் போட்டிகள் நடக்கப்போகும் ஒரு அரங்கைப்பாருங்கள். என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்....?

 குத்திக் காட்டியது தமிழ் 
(இந்தக் கவிதையை மின்னஞ்சலில் படித்ததும் நறுக்கென மனதில் தைத்தது)

தாத்தாவின் மூக்குக் கண்ணாடி
தவறி விழும்முன் சொன்னேன்
SORRY தாத்தா என்று...

கழுத்துவரை போர்த்திவிடும்
கருணைமிகு தாய்க்கு
தூக்கத்திலும் சொன்னேன்
THANKSமா என்று...

நாளை பிறந்தநாள்
நண்பனுக்கு எழுதினேன்
HAPPY BIRTH DAY என்று...

கோவிலில் பார்த்த
சிநேகிதியின் கணவனுக்கு
அவன் சொல்லும்முன் முந்திக்கொண்டு
HAI என்றேன்...

கடற்கரை மணலில் என்னவள்
கைபிடித்து எழுதினேன்
I  LOVE YOU என்று...

வீட்டிற்குச் செல்கையில்
காலில் முள் குத்தியது
அலறினேன்
"அம்மா" என்று.....

ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

ஆசிரியப்பா


'அ'னா சொல்லித்தந்த
முதல்வகுப்பு ஆசிரியை.
தொடையில் ஊசிபோட்ட
நாலாம்வகுப்பு ராமசாமி.

பேனா பரிசளித்து
பெரிதும் ஊக்குவித்த
வரலாறு - சரஸ்வதி.

எழுதிக்கொடுத்து என்னை
தமிழ்ச்சங்கத்தில் பேசவைத்த
வெங்கட்ட ராசன்.

பொதுத்தேர்வுக் கணிதத்தில்
நூற்றுக்கு நூறு
வாங்கவைத்த நடேசன்.

தேர்வரைக்குள் வந்து
தாவரவியலா? விலங்கியலா?
எது முதலில்
எழுதுகிறேன் எனப்பார்த்து
போட்டிப்பாசம் காட்டிய
உயிரியல் சகோதரிகள்.

வேதியியலோடு சேர்த்து
தேசியம் கற்பித்த
பதாமி.

ஆய்வுப்பாதையில் என்
ஆர்வத்தைத் தூண்டிய
ரவிசங்கர்.

இப்படி
ஆசிரியர்தினத்தில்
நினைத்து மகிழ
நெஞ்சார்ந்த நன்றி சொல்ல
நிறையபேர் இருந்தும்..........

'ஷூ எங்கே எனக்கேட்டு
மரஸ்கேலில் அடித்த
ஜோதிவித்யாலயா டீச்சர்'
நீங்கள்தான் என்
நினைவிலதிகம் வருகிறீர்கள்.

உங்களால்தான்
தமிழ்வழிக் கல்விக்கு
தடம்மாறினேன் நான்.
உங்களுக்கென் தனிவணக்கம்.

வியாழன், 2 செப்டம்பர், 2010

சென்னைப்பட்டினம்

மெட்ராச சுத்திக்காட்டப் போறேன்
மெரினாவில் சுண்டல் வாங்கித் தாரேன்...
ட்ரியோனா ட்ரியோ ட்ரியோ ட்ரியோனா ட்ரியா.....

அட  டெல்லில இருந்துட்டு நீ எங்களுக்கு சென்னைய சுத்திக் காட்டுறயான்னு நீங்க கேக்குறது எனக்கு கேக்குது. நான் இப்போ சுத்திக் காட்டப்போறது  நாம இப்போ பாத்துட்டு இருக்குற சென்னை இல்லைங்க. நாம யாரும் பார்த்திராத சென்னை. சரி சரி , இந்த பில்ட் அப் போதும். யாராவது கொசுவர்த்தி சுத்துங்கப்பா. 170 வருஷம் பின்னோக்கிப் போலாம்... 

 மெரினா பீச்
 மவுன்ட் ரோடு 
 மைலாப்பூர்
 பாரிஸ்  கார்னர் 
 சென்ட்ரல்
 எக்மோர் 
 ஆம்புலன்ஸ் 
 கார் ஷோ ரூம் 
 கொத்தவால்சாவடி
  நூலகம் 
 தாஜ் ஹோட்டல் 
 பல்பொருள் அங்காடி (ஷாப்பிங் மால்)
 இன்னாபா போட்டோலாம் ஷோக்கா கீதா? 




Quote

Blog Archive

Followers