வெள்ளி, 31 டிசம்பர், 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்

1-1-11  எனத்துவங்கும் இவ்வருடம் அனைவருக்கும் முதல் தரமாய் அமைய வாழ்த்துக்கள். வெறுங்கையில் வாழ்த்து சொன்னா எப்படி? இந்தாங்க... பிடிங்க பூங்கொத்து.

ஒரு சாமியார் செத்து சொர்கத்துக்குப் போனாராம். சொர்க்க வாசல் வரிசையில் (அங்கயுமா?) அவருக்கு முன்னாடி நம்ம ஆட்டோ ஓட்டுனர் மாணிக்கம் நின்று இருந்தாராம். நம்ம மாணிக்கத்தை பட்டு வேட்டி, வைரமாலை தந்து சொர்கத்தில் வரவேற்றார்கள். ஆனால் சாமியாரை நூல் வேட்டி மட்டும் கொடுத்து உள்ளே போகச் சொன்னாங்களாம். கடுப்பான சாமியார், "சாதாரண ஆட்டோ ஓட்டுனருக்கு ராஜமரியாதை. அனுதினமும் கடவுளையே நினைத்துப் பாடிக்கொண்டிருந்த எனக்கு இது தானா?" என்று  சித்திரகுப்தன்கிட்ட கோவமாக் கேட்டாராம்.
நீ பாட்டுப் பாடி மக்களை தூங்க வச்ச, ஆனா இவர் வேகமா ஆட்டோ ஓட்டி கடவுளை அடிக்கடி நினைக்க வச்சார்னு சொன்னாங்களாம். இதன் மூலம் நாம தெரிஞ்சிக்க வேண்டியது என்னன்னா, யார் என்ன நிலையில் (Position) இருகிறாங்க அப்படிங்கறது முக்கியம் இல்லை என்ன பண்றாங்க (Performance) தான் முக்கியம்.

உங்கள் இலக்கைத்  தெளிவாக்கிக் கொள்ளுங்கள். அதை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறுங்கள். வெற்றி நிச்சயம்.

21 வருடங்களுக்கு முன்னர் பாட்டி வீட்ல இப்படி உட்கார்ந்து இருந்தவர்தான்....
இன்று உலகின் அதிகாரம் மிக்க நாற்காலியில் உட்கார்ந்து இருக்கார்.


இனிய நினைவுகளை
இதயத்தில் விதைத்து
இனிதே விடைபெறுகிறது
இரண்டாயிரத்துப் பத்து.

பதிவுல நட்புகளுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

ஞாயிறு, 26 டிசம்பர், 2010

பெயரில் என்ன இருக்கிறது?


ஒரு ஊர்ல, அதாவது கர்நாடக மாநிலம் கொப்பால் மாவட்டத்தில் உள்ள குனள்ளி (Gunalli) என்னும் ஊரில் இருக்கும் அத்தனை பேருக்கும் ஒரே பெயர் தான். சாதி,மதம்,தொழில் என பெயரில் எந்த வித்தியாசமும் இல்லை. செல்லப்பெயர், பட்டப்பெயர், குடும்பப்பெயர் என எதுவுமே கிடையாது. ஆண்கள் எல்லோரும் க்யானப்பா (Gyanappa) பெண்கள் எல்லோரும் க்யானவ்வா (Gyanavva) அவ்வளவுதான் வேறு பெயரே கிடையாது. குடும்பத்தில் குழப்பம் வராமலிருக்க பெரியவர்களை தோடா க்யானப்பா & தோடா க்யானவ்வா என்றும் சிறியவர்களை சிக்க க்யானப்பா & சிக்க க்யானவ்வா என்றும் அழைக்கிறார்கள்.

சுமார் 200 குடும்பங்கள் வசிக்கும் இக்கிராமத்தில் பெயரினால் என்னென்ன குழப்பங்கள் வரும் என்று ஒரு கற்பனை (இது நிஜத்திலும் நடக்கலாம்)
  1. யாரைவது நீங்க பார்க்கப்போனால் எப்படித் தேடுவீர்கள்? இங்க க்யானப்பா வீடு எங்க இருக்குன்னு கேப்பிங்களா? அப்படிக் கேட்டால் உங்களை பார்வையிலேயே எரிக்கலாம் வழிசொல்லும் க்யானப்பா.
  2. இந்த ஊர் பள்ளிக்கூடத்தில் அட்டனன்ஸ் எப்படி எடுப்பாங்க?
  3. இந்த ஊரில் போஸ்ட்மேனாக வேலை கிடைத்தால் சந்தோசப்படுவீர்களா?
  4. இங்கு போட்டிகள் நடத்தத் தேவையே இருக்காது. ஏன்னா எப்போதும் எல்லா பரிசுகளும் க்யானப்பா & க்யானம்மாவிற்கே கிடைக்கும்.
  5. வீட்டில் மகளைத் திட்டுவது போல மாமியாரைத் திட்டலாம் மருமகள்.
  6. மூத்தவர் தோடா சின்னவர் சிக்கா. அப்ப நடுவில் இருப்பவர்களை எப்படி வேறுபடுத்துவது?
  7. இந்த ஊரில் கல்யாணப் பத்திரிக்கை எப்படி இருக்கும்?
நிகழும் மங்களகரமான விக்ருதி வருடம் கார்த்திகைத் திங்கள் ஐந்தாம் நாள் சுபயோகம் கூடிய சுபதினத்தில் க்யானப்பாவின் பேரன் க்யானப்பாவின் மகன் திருநிறைச்செல்வன் க்யானப்பாவிற்கு க்யானப்பாவின் (லேட்) பேத்தி க்யானப்பாவின் மகள்  திருநிறைச்செல்வி க்யானம்மாவை இல்வாழ்க்கைத்  துணைவியாக்க பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு....

அடபோங்கப்பா. சரி இந்த பெயர் எப்படி வந்தது?
பலநூறு ஆண்டுகளுக்கு முன் க்யானேஷ்வர் என்னும் சாமியார் வாழ்ந்தாராம். அவர் இக்கிராமத்தை ஒரு பேரழிவில் இருந்து காப்பாற்றியதற்கு நன்றிசொல்லவே இப்படி பெயர் வைக்கிறார்களாம். வேறு பெயர் வைத்தால் இந்த கிராமத்திற்கு கெட்ட சக்திகளால் தீங்கு வருமென்று இன்னும் நம்புகிறார்கள் இக்கிராம மக்கள்.

இப்படி ஒரு விசயத்தில் கிராமமே ஒற்றுமையாய் இருக்கிறதே! இதே போல மரம் வளர்ப்பு, மழைநீர் சேமிப்பு, மனிதநேயம், மருத்துவ விழிப்புணர்வு போன்ற விசயங்களில் நம்மக்கள் ஒற்றுமை காட்டினால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

வியாழன், 23 டிசம்பர், 2010

வானவில் மனிதர்கள்

அமுதத்தமிழ் கடலின்
அலைகளில் விளையாடும்
சிறுவன் நான்.
விரைவில் பயில்வேன்
இலக்கண நீச்சல் - பின்
விலகிப் போகும்
"செய்யுள்"  காய்ச்சல்.

இணையத்திரை  வானில்
இனிக்கும் நட்புகளே -நீங்களென்னை
வாழ்த்தி வளர்க்கும்
வானவில் மனிதர்கள்.

பனித்துளி கவிதைகளை
பகலவன் என்றுசொல்லி
பாராட்டி பாராட்டி
பதிவெழுத வைப்பவர்கள்.

தொடர்ந்து படிக்கும்
தொண்ணூறு பேருக்கும்
நடுநடுவே வந்து
நல்வாழ்த்து சொல்வோருக்கும்
நன்றி...நன்றி!

வெள்ளி, 17 டிசம்பர், 2010

கானம் மறந்த குயில்


சிட்டுக் குருவிகள் பல
வட்டமிட்ட இடத்தில்
கட்டிடங்கள் மட்டும்
கூட்டம் கூட்டமாய்...

இலக்கியங்கள் யாவையும்
இலைகளில் இயற்றிய இனமின்று
கிறுக்கிப் பார்க்கும் தாள்களுக்காய்
கிளைகள் பல ஒடிக்கின்றோம்.

கதவு மேசை நாற்காலி
கைத்தடி காகிதம் கட்டிலென
வெட்டும் தேவையோ தீராது
வேறென்ன செய்வது சிந்திப்போம்.

இப்படியோர் சட்டம்
இயற்றினால் என்ன ?
"இருமரம் நட்டபின்
ஒருமரம் வெட்டலாம்!"

கணிணியில் கவியெழுதிக்
கதவைத் திறந்தால்
இணையக் கம்பியில்
இருகுயில் கண்டேன்.

வனமெல்லாம் பொலிவிழந்து
பணமாகிப் போனதனால்
கட்டிடத்தில் வசிக்கிறதோ
கானம் மறந்த குயிலின்று....

சனி, 11 டிசம்பர், 2010

மீட்டாத வீணைகள்

மன-பாடம் கற்றுத்தரும்
கல்வியின்று வெறும்
மனப்பாடம் மட்டுமே
சொல்லிக் கொடுக்கிறது.

இன்றைய ராமன்களுக்கு
திரையரங்கில் மட்டுமே
தெரிகிறது ஒளிக்கற்றை.
ராமானுஜம் படிப்பதோ
பணக்கணக்கு மட்டுமே.

படிப்புத் திட்டத்தால்
பயம் வளருமளவு
சுயம் வளர்வதில்லை.

பயன்படுத்தப் படாமலேயே
பழையதாகிப் போகின்றன
இளம்ஞான வீணைகள்.

அறிவின் துணையின்றி - வெறும்
அகவையின் துணைகொண்டே
"பெரியவர்" ஆகிறோம் நாம்.

நடைமுறைக் கல்வியை
நவிலாத படிப்பே
நடைமுறையில் உள்ளது.

பாடத்திட்டங்கள் 
புத்தகச்சுமை கூட்டினவேயன்றி
புத்திக்கு சுவை காட்டவில்லை.

முக்கால் கிணறு தாண்டவே
சொல்லிக் கொடுக்கிறது
மெக்கல்லோ.

இன்று
வியாபாரிகள் மட்டுமே
கல்வித் தந்தைகளாகி
விற்பனை செய்வதால்
விறகுக் கட்டையாகிறது
வெண்கமலக்காரியின்
வீணை.

செவ்வாய், 7 டிசம்பர், 2010

கவிதைப் போட்டி

வணக்கம். இது கவிதைப் போட்டி தாங்க...ஆனா கவிதைகளுக்கு இடையேயான போட்டி. நீங்க இதுல கலந்துக்க முடியாது ஏன்னா...நீங்க தான் இதுல நடுவர்.

நேற்று என் தோழி "நான்... ஏன்...பிறந்தேன்." என்று தொடங்கும் வரிகளில் மூன்று வரி கவிதை எழுதச் சொன்னாள்.

நான் ஏன் பிறந்தேன்
பதில் தெரியவில்லை -உன்னைப்
பார்க்கும் வரை.
என்று சொன்னதற்கு, "நான்" என்று முதல் வரியும் "ஏன்" என்று இரண்டாம் வரியும் "பிறந்தேன்" என்று மூன்றாம் வரியும் தொடங்க வேண்டும் எனச் சொன்னாள்.

சரி. இப்போ போட்டி என்னவென்றால் நானும் என் நண்பர்கள் மூவரும் மேற்சொன்ன விதிகளில் கவிதை எழுதியுள்ளோம். அதில் உங்களுக்கு பிடித்த கவிதைகளை 1 , 2 , 3 , 4 என வரிசைப் படுத்தி பின்னூட்டமிடுங்கள். (உதாரணத்திற்கு 2 , 1 , 3 , 4)

நான் கருவறைத்தாண்டி வெளிவந்த தருணம்
ஏன் கைகளில் தந்தாய் கள்ளிப்பால் மரணம்
பிறந்தேன் பெண்ணாக - பிழையென்றால் யாரிங்கே காரணம்??


நானென்றால் நானில்லை நீ
ஏனென்றால் வேறில்லை காதல்
பிறந்தேன் உனக்கென இறக்க.


நான் எரிந்து கொண்டிருப்பது தெரிந்தும்
ஏன் அணைக்க மறுக்கிறாய் (நீரே)
பிறந்தேன் உனக்காக (நெருப்பாய்) என்பதாலா?

4
நான் மரித்தேனுன் பார்வையில்
ஏன் பார்த்தாய் மீண்டும்
பிறந்தேன் மறுமுறை.

நீங்க இதில் நடுவர்தான். ஆனாலும் போட்டி விதிகளுக்குட்பட்டு நீங்களும் எழுதலாமே....

பின்னூட்டக்கவிதைகள்  

நான் வாழ்ந்ததும்
ஏன் வீழ்ந்ததும் கூட
பிறந்தேன் உனக்காக என்பதாலே! (பாலா)

நான் விடியல் எனத்தெரிந்தும்
ஏன் விழிமூடிக் கிடக்கிறாய்
பிறந்தேன் மீண்டும் இறப்பேன் என்பதாலா?  (பாலா)

நான் நீயானேன்
ஏனென்றால்
பிறந்தேன் அதுக்காகத்தானே! (அன்புடன் மல்லிகா)

நான் உனக்குள் உறைந்தேன்
ஏன் எனக்குள் கலந்தாய்
பிறந்தேன் உனக்காவென்றா! (அன்புடன் மல்லிகா)

நான் நானாக இருக்க,
ஏன் நீ மட்டும் வேறாகப்
பிறந்தேன் (பிறந்து ஏன்) பழி தீர்க்கிறாய்.? (G M பாலசுப்ரமணியம்)

நான் தமிழனென்றேன்
ஏன் திருப்பிக்கொண்டாய்
பிறந்தேன் ஈழத்தில் என்றா ? (சிவகுமாரன்)

நான் நலமில்லை
ஏனென்று நீ கேட்காததால்..
பிறந்தேனோ நீ புறக்கணிக்கவே...(தேனம்மை லெக்ஷ்மணன்)

நான் ஏங்குகிறேன்
ஏன் தாமரையாய்
பிறந்தேன் நீரின்றி,(என நினைந்து). (காளிதாஸ்)

நான்,நான் என்ற மனம்
ஏன்,ஏன்,எனக் கேட்க
பிறந்தேன் ஞானியாய்,பிறக்கும் போதே. (காளிதாஸ்)\

நான் என்ற கர்வம் ஒழித்து
ஏன் என்று சிந்திக்க
பிறந்தேன் இவ்வுலகிலே...(ராஜி)

ஞாயிறு, 5 டிசம்பர், 2010

செயற்கைச் சிறுநீரகம்

இதுவரை டையலசிஸ் செய்யும் இயந்திரத்தைத் தான் நாம் செயற்கைச் சிறுநீரகம் என்று அழைத்துக் கொண்டிருந்தோம். உண்மையிலேயே உடலில் பொருத்தக் கூடிய செயற்கைச் சிறுநீரகத்தை இந்திய வம்சாவழியைச் சேர்ந்த (!) அமெரிக்கவாழ் ஆராய்ச்சியாளர் சுவோ ராய் (Shuvo Roy ) கண்டுபிடித்துள்ளார். முதல் கட்ட சோதனையில் வெற்றிபெற்றுள்ள இச்சாதனம் மனித உடல் ஆராய்சிகள் (Clinical Trials ) முடிந்து இன்னும் ஐந்து ஆண்டுகளில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கிடைக்கக்கூடும்.


ஒரு காப்பிக் கோப்பை அளவுள்ள இச்சாதனம் ரத்தத்தைச் சுத்திகரிப்பதோடு மட்டுமல்லாமல் ரத்த அழுத்தத்தை சீராக்கவும் வைட்டமின் டி உற்பத்தி செய்யவும் கூட பயன்படுமாம்.

இந்த சாதனம் இரு பகுதிகள் கொண்டது. சிறுசிறு துளைகளுள்ள சிலிக்கான் வடிகட்டிகளால் ஆன முதல் பகுதி நச்சுப் பொருட்களை ரத்தத்திலிருந்து பிரிக்க உதவும். மனித செல்களால் ஆன இரண்டாம் பகுதி ரத்தத்தில் உள்ள உப்பு, சர்க்கரை மற்றும் நீரின் அளவை சீராக்கும்.

இந்தியாவில் வருடத்திற்கு ஒன்றரை லட்சம் பேர் சிறுநீரகக் கோளாறால் அவதியுறுகிறார்கள். அதி சுமார் 3500 பேருக்கு மட்டுமே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிகிறது. 6000 - 10000 பேர் டயலசிஸ் செய்து கொள்கிறார்கள். மீதமுள்ளவர்களுக்கு சரியான சிகிச்சை கிடைப்பதில்லை. இந்த சாதனம் நடைமுறைக்கு வந்தால் மிகப் பயனுள்ளதாய் இருக்கும். தமிழ் சினிமாக்களில் சொல்வது போல நிச்சயம் இது ஒரு மெடிகல் miracle.

Quote

Followers