Google+ Followers

செவ்வாய், 30 நவம்பர், 2010

மணநாள்

உலகிலேயே அழகான வீடு
உலகிலேயே அழகான நகரம்
உலகிலேயே அழகான பாலம்
உலகிலேயே அழகான நீர்வீழ்ச்சி
 உலகிலேயே அழகான குழந்தை
உலகிலேயே அழகான கண்கள்
உலகிலேயே அழகான செடி
 
இப்படி உலகின் மிகச்சிறந்த பல விஷயங்கள் இருப்பது போல இன்று என் வாழ்வில் மிக அழகான நாள். அதாவது என் காதலி மனைவியான நாள்.

 நீ 
நான்
தேடிச்சுற்றிய
பத்தாம் கிரகம்
ஓடித்திரிந்த
ஒன்பதாம் திசை
பாடி மகிழ்ந்த
எட்டாம் ஸ்வரம்
கூடி ருசித்த
ஏழாம் சுவை
என் அணுவிலும் கலந்த
ஆறாம் பூதம்
ஆசையாய் நான் படித்த
ஐந்தாம் வேதம்
நல்லதையே சொல்லும்
நான்காம் காலம்
நல்வழி காட்டிய
மூன்றாம் விழி
என்னை வளர்த்த
இரண்டம் தாய்
எல்லாம் ஆகிய
ஒரே மனைவி.

புதன், 24 நவம்பர், 2010

ஒற்றை விரல் ஓவியம்


பேருந்துப் பயணத்தில்
பின்புறம் திரும்பி
பேசுவதுபோல் ஒன்று...

புத்தகக் குழந்தைகளை
மார்பில் தாங்கியபடி
புன்னகைப்பது போல் ஒன்று...

அலுவல் நிமித்தமாய் - நான்
அயலூர் செல்கையில்
கையசைப்பது போல் ஒன்று...

சமையலறைக் கரப்பைபார்த்து
அலறித்துடித்து நீ
அஞ்சுவதுபோல் ஒன்று...

கடைத்தெரு போயெனை
காய்கறி வாங்கச்சொல்லி
கெஞ்சுவதுபோல் ஒன்று...

பிறக்காதக் குழந்தையின்
பிஞ்சுவிரல் பிடித்து 
கொஞ்சுவதுபோல் ஒன்று...

இப்படி நீ
புன்னகைப்பது...பூப்பறிப்பது...
வெட்கப்படுவது... வேடிக்கை பார்ப்பது...
முட்கள் குத்தியது...முகப்பரு வந்ததென
ஒவ்வொரு நிகழ்வையும்
ஓவியமாய் வரைந்தேன்.

பின்னொருநாள்
தூரிகை எல்லாம்
தோற்றுப்போனது -நீ
தொட்டுத்தொட்டு வரைந்த
ஒற்றை விரல் ஓவியத்தில்...

வெள்ளி, 19 நவம்பர், 2010

கானல் நேசம்


காதற்கணவா
நான் கொண்ட
காதல் கனவா.....

அரிதாய்ச் சந்தித்து
அன்பைப் பகிர்கையில்
குறிஞ்சியாய் மலர்ந்தது
நெருங்கி வந்து
நேசம் வளர்க்கையில்
ஆனதேன் நெருஞ்சியாய்...

தாலிகட்டிய புண்ணியத்திற்காய்
தாம்பத்யம் நடத்துகிறாய் - உறவு
வேலிவிட்டு வெளியேறி
வேடிக்கைப் பார்க்கின்றாய்.உன்னிடம் வேண்டுவது
புன்னகைக்குப் புன்னகையல்ல
அழுகையில் ஆறுதல்.

கீறலைக் கவனித்து
விரைவில் சரிசெய்தால்
விரிசல் என்பதற்கு
வேலை இருக்காது.

கடந்ததை மறந்திடுவோம்
காதல்சொல் மறுமுறை.
கடைத்தெரு செல்கையிலும்
கைகோர்த்து நட...

கைப்பேசித் திரையில் - இந்தக்
காதலியின் படம்வை
பொய்ப்பேசித் தவிர்க்காமல்
புதுப்படம் கூட்டிசெல்....

உற்று நோக்கு
உள்ளுணர் வுணர்
உனைப்பற்றி நான்
எண்ணுவது பிழையென
எண்ணும்படிச் செய்.

வாழ்க்கைச் செடிக்கு
காதல் நீர்தெளிப்போம் - பின்
வளரும் அது
வசந்தகால விருட்சமாய்.

இப்படி
உள்ளத்து ஆசையோ
காதல் தேசம்
உண்மையில் கிடைத்ததோ
கானல் நேசம்.


காதற்கணவா
நீயே சொல்.
நான் கொண்ட
காதல் கனவா.......

ஞாயிறு, 14 நவம்பர், 2010

மூன்றாம் தாய்

திங்களன் றுதித்த
திங்கள் - நீயெங்கள்
வாழ்வின் சர்க்கரைப்
பொங்கல்.

குடும்பத்திற்குக் கிடைத்த
குலதெய்வ அருள்.
"குழலினிது" குறளுக்கு
அருஞ்சொற் பொருள்.

பசுந்தளிரே  உன்சிரிப்பில்
பயணக் களைப்பும்
பணிச்சுமை அலுப்பும்
பறந்தோடிப் போகிறது.

முன்பெலாம்
என்னவள் கதைசொல்லி
உனை தூங்கவைத்தாள்.
இப்போதெலாம்
நீ கதைசொல்லி
எனை தூங்க வைக்கிறாய்
ஆதலில் நீயென்
மூன்றாம் தாய்.

வியாழன், 4 நவம்பர், 2010

அயலூர் வாழ்க்கை

தலைக்கு எண்ணெய்வைத்துக்
குளிப்பாட்டத் தாயுமில்லை.
இலைக்கு வகைவகையாய்
இனிப்போடு விருந்துமில்லை.

சித்திரைத் தேரிழுக்கச்
செல்லவும் இயலவில்லை.
புதுத்திரைப் படம்பார்க்க
அரங்குகள் எதுவுமில்லை.

பூசணிப்பூ கோலமில்லை
பூப்போட்ட தாவணியில்லை
மாசம் ஒருதடவை
மல்லூர்போக முடிவதில்லை.

தலைமுடி கோதும்
படிக்கட்டுப் பயணமில்லை
இலைமறை காயாய்
இனிக்கப்பேச யாருமில்லை.

புதுத்துணி எடுத்துடுத்த
பொங்கல்வைத்துக் கொண்டாட
எங்களூர் சாமிகோவில்
இந்தூரில் ஏதுமில்லை.

குதித்தோடி விளையாட
கொய்யா மரமுமில்லை
செருப்பின்றி நான்நடக்க
வரப்புகள் ஏதுமில்லை.

மேலிருந்து நான்குதிக்க
மேற்காட்டுக் கிணறுமில்லை
பென்சில்பிடித்து எழுதவைத்த
பெரமனூர் டீச்சரில்லை.

ஒற்றையடிப் பாதையில்லை
உட்காரப் பாறையில்லை.
கற்றைவிழிப் பெண்ணைப்பார்த்து
கண்ணடிக்கும் நண்பனில்லை.

கயிறுகட்டி ஊஞ்சலாட
புளியமரம் ஏதுமில்லை
வைரமுத்து நான்படிக்க
புத்தகமும் கிடைப்பதில்லை.

இல்லை...இல்லை
இல்லை...இல்லை

செழிப்பாய் வாழ்வதற்கு
சேமிப்பு உயர்ந்தாலும் 
அலுப்பாய்த் தானிருக்கு
அயலூர் வாழ்க்கை.

Quote

Followers