வெள்ளி, 13 ஜனவரி, 2017

உடையாத நீர்க்குமிழி

உள்ளத்தில் ஒரு 
உடையாத நீர்க்குமிழி
உருண்டு கிடந்தென்னை 
உயிர்ப்பித்து வைக்கிறது.

பத்தாவது முடிச்சபின்னும் 
படிக்கத்தான் வேணுமின்னு
விடுதிச்செலவுக்கு எங்கப்பன்
விதை நெல்லை விக்கையிலும்

பொட்டல் காட்டில் என்கூடப் 
பொழைக்க முடியாதுன்னு
பார்த்துவச்சப் பொண்ணு ஒண்ணு 
பட்டணம் போகையிலும்

சேத்துவச்சச் சிறுவாடு 
செல்லாமப் போனதுன்னு
மாத்திவர நான்போயி
வரிசையில நிக்கையிலும்

உடையப் பார்த்தந்த 
உயிர்க்குமிழி - ஆனாலும்
நட்டப்பயிர் காஞ்சதனால் 
நாண்டுகிட்ட எங்கப்பன்
பட்டக் கடனடைக்கப் 
பாதுகாத்து வச்சிருக்கன்
வட்டக்குமிழி அது என்னை 
வாழச் சபிக்கிறது!



குறிப்பு: இந்தக் கவிதை "படைப்பு" குழுமம்  நடத்திய  கங்கா புத்திரன் நினைவு பரிசுப் போட்டிக்கென எழுதப்பட்டு  பாடலாசிரியர் சினேகன் அவர்களால் மூன்றாம் பரிசுக்கென  தேர்வு செய்யப்பட்டது . 

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

நதிக்கரை ஞாபகங்கள்


மணல்மெத்தை ஆடிய
செருப்பில்லாக் கால்கள்
வெருந்தரை தொடுதலே
அரிதாகிப் போனது.

பச்சைப் புல்வெளி
பருகிய கண்கள்
சாலைகளின் சந்திப்பில்
பச்சைக் கலைகிறது.

குவித்தமணலில் குச்சியொளித்து
கிச்சுக்கிச்சுத் தாம்பூலம்
ஆடிய விரல்களின்று
மிட்டாய்க் கரடிகளை தேடுகிறது.

அட்டைப் பூச்சிகளை
ரயிலென ரசித்தவன்
ரயில்களைப்  பூச்சிகளாக்கி
அடிக்கடிப் பறக்கிறேன்.

ஆனாலும்
இக்கட்டடக்காட்டில்
என் கையிலாடும்
தொடுதிரை நாணல்வழி
எட்டிப் பார்க்கிறது
நதிக்ரை ஞாபகங்கள்!

செவ்வாய், 3 ஜனவரி, 2017

வணக்கம் நண்பர்களே,

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

மூன்றாண்டுகளுக்குப் பிறகு வலைத்தளத்தில் எழுத முயற்சிக்கிறேன்.

தமிழ்மணம், இன்ட்லி இன்னும் பிற சொந்தங்களுக்கெல்லாம் சொல்லுங்க..

நான் வந்துட்டேன்னு...

திரும்ப வந்துட்டேன்னு....

Yes...I am back


உங்கள்
கலாநேசன்

Quote

Followers