Google+ Followers

புதன், 28 ஜூலை, 2010

கிளிப்பிள்ளை

கண்ணாடியணிந்த வெண்ணிலவே
உன்னைக்
காணாமல் இருந்திருந்தால்
காதலென்பதே எனக்குத்
தெரியாமல் போயிருக்கும்.....

என்னை நீ
பார்க்காமல் இருந்திருந்தால்
நான் கவிஞன் என்பதே
கண்டுபிடிக்கப்படாமல் போயிருக்கும்.....

உன்
ஸ்பரிசம் இல்லையென்றால்
பூமியில் மிகவும் மென்மையானது
பூக்கள் என்றே நான்
பொய் சொல்லியிருப்பேன்.....

நீ போகும் பாதையில்
கற்களே கிடையாதென்று
கண்டவர்கள் சொன்னார்கள் - காரணம்
அழகியுன் பாதம்பட்டு
அவைகள் எல்லாம்
அகலிகை(கள்) ஆனதென்று
அப்புறம் தானறிந்தேன்.

சோகத்தை
றக்கச் செய்யும்
ன்னி
லாட்டரியாய் - நீ
ஜாக்பாட் அடித்த
சந்தோஷத்தில் நான்.

முதலில் நானுனக்குப்
பொருத்தமில்லையோ என
வருத்தப்பட்டேன் - பின் உன்னால்
திருத்தப்பட்டேன்.

நிலா பார்க்கையிலும்
கலா ஞாபகமே - நெஞ்சில்
உலா வருகிறது....

உன்
கண்ணொளி பட்டுத்தான்
என்
இதய இலையில்
ஒளிச்சேர்க்கை நடக்கிறது....

நீ
சிரிக்கையில் சிதறும்
சில்லரைகளால்
என் ஞாபகஉண்டியல்
நாளுக்குநாள் நிறைகிறது.

உனக்குப் பிடித்ததெல்லாம்
எனக்கும் பிடிக்கிறது.
உனக்குப் பிடிக்காததெல்லாம்
எனக்கும் பிடிக்கவில்லை.

சொல்லப்போனால்
சொல்பேச்சு
கேட்கிரவனாகிப்போனேன் நான்....

விட்டுவிடு என்றால்
விடுவதும் 
வேண்டாம் என்பதை
வெறுப்பதும்......

ஒரு வகையில் 
நான் = கிளிப்பிள்ளை.

 (டிஸ்கி: கல்லூரிக் காலத்தில் காதலில் கிறுக்கியது.)

சனி, 24 ஜூலை, 2010

குட்டிக் கவிதைகள்-2

 நிலவு
பேருந்து சன்னலில் 
ஒட்டிய ஸ்டிக்கராய்
உடன்வரும் நிலா
என்மன சன்னலில்
உன் நினைவுகளும்....


'இடைத்' தேர்தல் 
குடிநீருக்காய் சண்டையிடும்
குடிமக்கள் மத்தியில்
குடங்கள் போட்டியிடும்
உன்னிடைத் தேர்தலில்
யார் வெல்வதென்று....தனிமரத் தோப்பு
ஒரு பூ மாலையாகாது 
ஒரு துளி கடலாகாது
ஒரு இலை கிளையாகாது
ஒரு கிளை மரமாகாது
ஒரு மரம் தோப்பாகாது
ஆனால் நீ
ஒருத்தி மட்டும் எப்படி
உலகமானாய் எனக்கு......குட்டிக் கவிதைகள்-1

புதன், 21 ஜூலை, 2010

கூட்டாஞ்சோறு 21.07.2010

பிஞ்சு மனதில் நஞ்சு 
இரண்டு வாரங்களுக்கு முன்பு மதர் தெரசா பள்ளியின் (பிரீத் விகார், கிழக்கு தில்லி) இரண்டாவது மாடியில் இருந்து கீழே குதித்து ஆறாம் வகுப்பு மாணவன் ஒருவன் தற்கொலைக்கு முயன்றான். அதற்குக் கரணம் கேட்கையில், 'ஆசிரியை B.சுதா என்னை அனைத்து மாணவர்கள் முன்னிலையிலும் அறைந்து அவமானப்படுத்திவிட்டார்' என்றான். டீச்சர் அடித்ததற்குக் காரணம் அவன் தினமும் வகுப்புக்குத் தாமதமாய் வருவது. தினமும் தாமதமாகக் காரணம் அவன் ஒரு இசைப் போட்டிக்காய் பயிற்சிக்குச் செல்வது. ஆசிரியை அடித்தது தவறு தான் என்றாலும் நாம் யோசிக்க வேண்டியது, சிறு அவமானத்தை/வலியைக் கூட தாங்க முடியாத அளவுக்கு பிள்ளைகளை செல்லமாக வளர்க்கிறோமா? அடி வாங்கியதும் ஓடிப் போய் குதிக்கும் அளவுக்குத் தான் நம் செல்லக் குழந்தைகளின் உள்ளத் திடம் உள்ளதோ? பிஞ்சு மனதில் நஞ்சைக் கலந்தது யார், நாம் தானோ?

ரூபாய்க்கு குறியீடு 
இதுவரை அமெரிக்க டாலர் ($), ஆங்கிலேய பவுண்ட் (£), ஜப்பானிய யென்(¥) மற்றும்  யூரோ (€) ஆகிய நான்கு காசுகளுக்கு மட்டுமே குறியீடு இருந்தது. இந்திய வருவாய்த் துறை மார்ச் 2009ல்  ரூபாய்க்கான குறியீட்டை உருவாக்கும் போட்டியை நடத்தியது. அதன் முடிவுகள் கடந்த வியாழனன்று வெளியாகியது.இந்த குறியீடு இனி அனைத்துக் கணிப்பொறிகளிலும், கைப்பேசியிலும், இனி அச்சிடப்படும் ரூபாய் நோட்டுக்களிலும் இடம்பெறும். இந்திய ரூபாய்க்கான இந்த குறியீட்டை வடிவமைத்து வரலாற்றில்  இடம்பிடித்தவர் ஒரு தமிழன். தர்மலிங்கம் உதய குமார். சென்னையைச் சேர்ந்த இவர் மும்பை IITல் முனைவர் பட்டம் முடித்துள்ளார்.

இந்தியில் ர எழுதி நடுவில் ஒரு கோடு போட்டது போலத் தோன்றும் இந்தக் குறியீடு ரோமானிய R  மற்றும் இந்திய தேவாங்கிரியின் கலவை என்று சொல்கிறார்கள். தேசியக் கொடியை மனதில் வைத்து இதை உருவாக்கியதாகச் சொல்கிறார் உதயா. (மேலிரண்டு கோடுகளுக்கும் இரு வண்ணம் இடையே இடைவெளி வெள்ளை). கடந்த வெள்ளியன்றே கவ்ஹாத்தியில் விரிவுரையாளராகச் சேரவேண்டிய இவர் திடீர் புகழ் வெளிச்சத்தால் இன்னும் மும்பையில் இருந்து கிளம்ப முடியவில்லை. வாழ்த்துக்கள் உதயா.

தெய்வக்குழந்தை 
பள்ளி ஆசிரியை ஹேமாவதிக்கும் வருவாய்துறை அதிகாரி கிசோர் குமாருக்கும் ஜூலை எட்டாம் தேதி ஹைதையில் பிறந்த பெண் குழந்தைதான் இந்தியாவிலேயே மிக இளம் வயதில் உடல் தானம் செய்தவள். பிறவிக் கோளாறுடன் பிறந்து நான்கு நாளில் மூளைச் சாவடைந்த இக்குழந்தையின் இதய வால்வுகளும், கண்களும் பாதுகாக்கப் பட்டுள்ளன. இதயக் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இது போன்ற இயற்கை ரத்தக் குழாய்கள் நிச்சயம் பயனளிக்கும் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள். நான்கு நாட்களே உயிரோடிருந்த இக்குழந்தை குறைந்தது நாலு பேருக்கு தன் இதய வால்வுகளால் வாழ்வு கொடுக்கிறது. நாம்?

சின்னத்தாய்கள்
இனி திருமணம் ஆகாமல் கருவுறும் பெண்களுக்கும் பள்ளி(?) மற்றும் கல்லூரிகளில் தேவையான அளவு விடுமுறை அளிக்க வேண்டும் என்று உச்ச நீத்மன்றம் ஒரு தீர்ப்பில் சொல்லி உள்ளது. அப்பெண் திருமணம் ஆனவரா இல்லையா என்று பார்பதைவிட தாயாகப் போகிறவள் என்றே பார்க்கும் இப்புதிய பார்வை சரியே!
ராமநாதபுரத்தில் போன மாதம் பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளிச் சிறுமி ஒருத்தி வகுப்பு இடைவேளையில் கழிவறை சென்று குழந்தை பெற்று அங்கேயே விட்டுவிட்டு மீண்டும் வகுப்புக்குள் வந்தமர்ந்தாளாம். அப்பெண் மனது யாருக்கும் சொல்லமுடியாமல் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும்? அவள் கருவுற்றிருந்தது பள்ளியில் யாருக்கும் தெரியவில்லை, சரி. வீட்டில் உள்ளவகளுக்குக் கூடவா?

தத்துவம் 
உங்களைப் பற்றி உயர்வாகவோ தாழ்வாகவோ பேசாதீர்கள். உயர்வாகப் பேசினால் ஒருத்தனும் நம்ப மாட்டான். தாழ்வாகப் பேசினால் அதைவிட மட்டமாக நினைப்பார்கள்.

ஞாயிறு, 18 ஜூலை, 2010

காலமாற்றம்


அன்றோ நீ
வருவோர் போவோர்க்கெல்லாம்
வலக்கரம் நீட்டினாய்.
மருதாணி சிவப்புபார்த்து
மகிழந்தவர் சொல்வர்
"அவருக்கு உன்மேல்
அவ்வளவு பாசமென்று".
இதைக் கேட்கவே நீ
மீண்டும் மீண்டும் 
வருவோர் போவோர்கெல்லாம்
வலக்கரம் நீட்டினாய்.

இன்றோ
அயலூர் வந்திந்த
அடர் கட்டிடக்காட்டின் 
அவசர வாழ்கையில்
உனக்கு
மருதாணி இடவும் நேரமில்லை
மனதோடு பேசவும் நேரமில்லை.

செவ்வாய், 13 ஜூலை, 2010

என்ன வேண்டும் நீ எனக்கு?

என்ன வேண்டும்
நீ எனக்கு?

ஐயிரண்டு மாதங்கள்
அவள் கருவின்
பையிருந்து வந்ததனால்
அம்மா.

பசியின்றி வளரவைத்து
படிக்கவைத்து ஆளாக்கி
பார்த்துப் பார்த்து வளர்த்ததினால்
அப்பா.

ஓராண்டு கழித்துவந்து
ஒன்றாக உண்டுறங்கி
சண்டையிட்டு மகிழ்ந்ததினால்
சகோதரன்.

ஆனால்
என்ன வேண்டும் நீ எனக்கு?பள்ளிசெல்லும் வயதில்
என் மனக்குளத்தில்
நீ எறிந்த கல்
இன்னும் குமிழிகளை
விட்டுக் கொண்டேயிருக்கிறது
கவிதைகளாய்....

உன்னிடம் தான்
கருப்பு வைரமாய்
கனலும் எண்ணங்களை
வெண்முத்துக் கவிதைகளாய்
வெளியிடக் கற்றேன்.

நீதான்
வகுப்புக்குள் எனக்கோர்
வாசகர் பேரவை
வாங்கித் தந்தாய்.

நான்
கவிதை எழுதக்
காரணமாயிருக்கும்
முக்கிய மூவரில்
நீங்களும் ஒருவர்.

என்னதான் நான்
சுயமாய் எழுதினாலும்
ஏதோ ஓர்வரியில்
நீவந்து சிரிக்கிறாய்.

அதனால்தான் - இன்று
வாழ்த்துச் சொல்வதற்கு
வாசகனைத் தாண்டியதொரு
நெருக்கமிருக்கிறது எனக்கு.

கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

இப்படிக்கு
குரு துரோணர்
கிராமத்தில் வாழும்
உங்கள் ஏகலைவன்
கலாநேசன்.

செவ்வாய், 6 ஜூலை, 2010

சொல்வரந்தருவாய்...

என்னுயிர்த் தோழியின் திருமணத்திற்காய் தில்லியில் இருந்து திருச்சி சென்ற என்னால் அவள் திருமணத்திற்குச் செல்ல இயலவில்லை. அதனால் கோபம் கொண்ட அந்த குழந்தை மனதுக்காரி ஒன்றரை வருடமாய் என்னோடு பேசுவதில்லை. அவளுக்காய் ஓர் கவிதை...

நட்புக்கு உயிர்தந்த
என்னுயிர்த் தோழிக்கு
நல்மண வாழ்த்துக்கள்.

வரவில்லை நாங்களென
வருந்தாதே - நீயுன்
கண்நிறைந்த காதலரைக்
கைப்பிடிக்கும் தருணம்காண
காத்திருந்தேன்.

முதன்முதலாய்
தியானா பங்குபெறும்
திருமணம் இதுவென்றே
நானும் நினைத்திருந்தேன்
நடைமேடைக் கனவுகண்டேன்.

இடையில் காலத்தால்
தடைவந்து தாக்கியதும் - என்
பாதிஉயிர் மகளைப்
பார்த்துக் கொண்டதையும்
மீதிஉயிர் ஓடிவந்துன்
மெட்டிஒலி கேட்டதையும்
உணர்ந்தாயா நீ?

சரி சரி.
விளக்கங்கள் மட்டும் சொல்ல- இது
விடுமுறைக் கடிதம் அல்ல.

சுயநலக்காரனெனக்கு
சொல்வரம் நல்காய் - அறிவுச்
சுடர்மிகு எந்தேவி.

பதினெட்டு மாதங்களாய்
பதிலேதும் பேசாமல் - நீ
வாய்ப்பூட்டு போட்டு
வைத்திருக்கும் கைப்பேசி
மௌனத்தவம் கலைத்து
மனதோடு பேச
வாய்ப்பூட்டு.

தோழியே மீண்டும் நீ
தொடர்பு எல்லைக்குள் வா!

என்
உளறல்களைக் கவிதைகளாய்
மொழிபெயர்த்தச் செவிகளுக்காய்
காத்திருக்கின்றன நான்
வாங்கிவைத்த தோடுகளும்
வார்த்தைப் பூக்களும்......

சனி, 3 ஜூலை, 2010

புதுசா வந்திருக்கு பூச்சி ஜோசியம்

கிளி ஜோசியம், எலி ஜோசியம், பல்லி ஜோசியம், பாம்பு ஜோசியம் இன்னும் இன்னும் எத்தனையோ ஜோசியங்கள் மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் புதிதாய் வந்திருப்பது பூச்சி ஜோசியம்.

உலகக் கால்பந்துத் திருவிழா கலைகட்டி இப்போது காலிறுதிச் சுற்றுகள் நடைபெறுகிறது. உலகிலேயே அதிக மக்களால் பார்க்கப்படும் ஒரு விளையாட்டில் இப்படி ஒரு கேலிக் கூத்தா என எண்ண வைக்கிறது சமீபத்திய நிகழ்வுகள்.


நீங்கள் மேலே பார்க்கும் இந்த நீர்வாழ் எட்டுக்கால் பூச்சி ஆக்டோபஸ் வகையைச் சேர்ந்தது. இதன் பெயர் ஆரக்ல் (எ) பால். இங்கிலாந்தில் பிறந்த இந்த இரண்டு வயது பூச்சி தான் ஜெர்மனியில் இப்போது VIP . இது ஜெர்மனி விளையாடும் எல்லா போட்டிகளின் வெற்றி தோல்விகளையும் நாலு நாள் முன்னரே நச்சென்று சொல்லி விடுகிறதாம்.

எப்படின்னா, ஒரு தொட்டியில் இரண்டு கண்ணாடிக் கோப்பைகளை வைத்து இரண்டிலும் ஒவ்வொரு துண்டு மாமிசத்தை வைத்து மூடி விடுகிறார்கள். இரண்டு கண்ணாடிக் கோப்பைக்கு வெளியிலும் இரு நாட்டின் கொடியிருக்கும். பிறகந்த தொட்டிக்குள் ஆச்டோபசை விடும் போது அது எந்த தொட்டில் உள்ள மாமிசத்தை உண்கிறதோ அந்த நாடு ஜெயிக்கும். சிம்பிள்.

இதுவரை ஜெர்மனி விளையாண்ட நான்கு போட்டிகளின் முடிவையும் மிகச் சரியாய் சொல்லிவிட்டதிந்த பூச்சி. முதலிரண்டில் ஜெர்மனி ஜெயிக்கும் என்றது. ஜெயித்தது. மூன்றாவதில் செரிபியாவுடன் தோற்கும் என்றது. ஜெர்மனி தோற்றது. நான்காவதுப்  போட்டியில் உடனே ஓடிப்போய் ஜெர்மானிக் குடுவையில் கரி தின்றதால் எளிதாய் இங்கிலாந்து தோற்றது, 4-1 என்ற கோல் கணக்கில். இந்த போட்டியில் நடுவர்களே பூச்சியின் பேச்சைத் தான் கேட்டார்கள் என்பது கூடுதல் சுவாரசியம்.இன்று நடக்கும் அர்ஜென்டினாவுடனான காலிறுதிப் போட்டியிலும் ஜெர்மனியே ஜெயிக்குமாம். பூச்சி சொல்லிடுச்சி நாமெல்லாம் மேட்சே பார்க்க வேண்டாம். அதுவும் 45 நிமிடம் யோசித்துச் சொன்னதால் ஜெர்மன் வீரர்கள் கவலையாய் உள்ளனர். ஏனென்று கேட்டால், இங்கிலாந்துப் போட்டியின் முடிவை பூச்சி உடனே சொல்லிவிட்டதால் எளிதாய் வென்றார்கள். இப்போது 45 நிமிடம் யோசித்துச் சொன்னதால் மிகவும் போராடியே ஜெயிக்க வேண்டியிருக்குமாம்.எனக்கு சில சந்தேகங்கள்
1) ஆக்டோபசுக்கு வயிறார உணவிட்டால் அது ஒரு துண்டு கறிக்காக ஓடி வருமா?
2) வெற்றி தோல்வியின்றி முடியும் போட்டிகளை எப்படிச் சொல்லும்? (இரண்டிலும் பாதி பாதி சப்பிடுமோ!)
3) இதை எல்லாம் விட முக்கியமாய், ஒற்றைப் பந்தின் பின்னால் ஒன்றரை மணி நேரம் ஓடி ஓடி வெற்றிக்காய் போராடும் வீரர்களிடம் நீ தோற்றுப் போவாய் என நாலு நாள்  முன்னரே சொல்லுவது நியாயமா?

நல்லாத்தான் பூச்சி காட்றாங்கப்பா.

Quote

Followers