Google+ Followers

ஞாயிறு, 26 ஜூன், 2011

தீமைக்கு எதிராக தீபம் ஏற்றுங்கள்

பிஞ்சுக் குழந்தைகளை 
நெஞ்சோடு இறுக்கி 
பதுங்குக் குழிக்குள் 
தாய்கள் 
பரிதவித்த போதும்...

உரிமை கேட்டவர்களின் 
உயிர்கள் பறித்த போதும் 
பள்ளி செல்லும் மலர்கள் 
முள்வேலியில் வாடியபோதும்...

நம்மினப் பெண்களின் 
கர்ப்பப் பைக்குள் 
சிங்கள நாய்கள் 
விஷம் கலந்தபோதும்...

கண்களை மூடிக்கொண்ட 
கயவர்கள் நாம்.

ஊரையே எரிக்கையில் 
ஊமையாய் இருந்துவிட்டோம் 
இன்றேனும் 
தீபங்கள் ஏற்றி 
தீமையை எதிர்ப்போம்.


இன்று மாலை 5 மணியளவில் மெரினா கடற்கரை கண்ணகி சிலையருகே தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஓர் இடத்தில் கூடி தங்களது அஞ்சலியையும் கோபத்தையும் பதிவு செய்ய இருக்கிறார்கள்.
ஞாயிறு, 19 ஜூன், 2011

மனநல மருத்துவம்

வெறுமையைக் குடித்து 
வீங்கிய மனதில் 
சிரிப்பூசி கொண்டு 
சிறுதுளை யிட்டாய்.
கவலைக் காற்று 
கசிந்து முடிந்ததும் 
புன்னகை கொண்டு  
பூசி மெழுகினாய்.
வியாழன், 16 ஜூன், 2011

கொஞ்சும் நிலவு

கொஞ்சுமொழிக் காரியே
பிஞ்சு நிலவே
பிரியமான மகளே - உனகென்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வேண்டாம் என்பதை 
உடனே செய்கிறாய் 
வேண்டிக் கேட்பதை 
தீண்டிட மறுக்கிறாய்.

பல்துலக்கித் துப்பென்றால் 
படக்கென்று விழுங்கிடுவாய்
முகங்கழுவச் சென்றுவந்தால் 
முழுவுடம்பும் நனைத்திடுவாய்.

எண்ணெழுதும் புத்தகத்தில் 
வண்ணங்கள் தீட்டிடுவாய்.
வண்ணங்கள் தீட்டச்சொன்னால் 
எண்ணெழுத வேண்டுமென்பாய்.

முதுகில் கடித்தாலும் - நீயென்
முகத்தில் அடித்தாலும் 
வலிப்பதில்லை எனக்கது 
இனிக்கவேச் செய்கிறது.

அதிகமாய் சிலநாள் 
அடம்பிடிக்கும் உன்னை 
அடித்துவிட்டுப்  பின்னர் 
அழுதிருக்கிறேன் நான்.

தலையாட்டிப் பேசுவதே - முத் 
தமிழாக இனிக்கிறது - நீ
விளையாட்டாய் சமைப்பதுவும் 
விருந்தெனவே ருசிக்கிறது.

கொஞ்சுமொழிக் காரியே
பிஞ்சு நிலவே
பிரியமான மகளே - உனகென்
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.


சனி, 11 ஜூன், 2011

அலுவலக ஞாபகத்தில் பல்பு வாங்கும் பத்து தருணங்கள்

 லொள்ளு லொள்ளும்பாங்களே  அது இதானா?

  1. காலையில் எழுந்ததும் உங்க தங்கமணி கடைக்குப் போகச் சொல்வாங்க. பர்சை எடுத்து பாக்கெட்டில் வைத்தபின் பழக்க தோஷத்தில் ID கார்ட எடுத்து கழுத்துல மாட்டுவீங்களே!    
  2. ஒருநாளும் இல்லாத திருநாளா ஹோட்டலுக்குக் குடும்பத்தோடு சாப்பிடச் செல்வீர்கள். சாப்பிட்டு முடித்ததும் அலுவலக பழக்கத்தில் தட்டை கையிலெடுத்துக் கொண்டு கை கழுவப் போவீர்கள்!
  3. அப்படிப் போகையில் தங்கமணி முறைத்து தவறைச் சுட்டியதும் தட்டை டேபிளில் வைத்துவிட்டு கை கழுவப் போவீர்கள். அங்கு போய் அலுவலக ஞாபகத்தில் கையை நீட்டிக் கொண்டு காத்திருப்பீர்கள்....தானே தண்ணீர் வருமென்று!
  4. ரொம்ப நாள் கழித்து உங்க நண்பர் தொலைபெசியிருப்பார். ஊர் கதை உலகக் கதையெல்லாம் அடித்துவிட்டு போனை வைக்கும் போது பழக்க தோஷத்தில் 'ஓகே பை பை, ஏதாவது பிரச்சனைனா திரும்பக் கூப்பிடறேன்' என்பீர்கள்!
  5. நாள் முழுதும் அவசரம் அவசரம்னே பேசிக்கேட்ட பழக்கத்தில் வீட்டில் சாப்பிடும் போது உங்க மனைவியிடம் அர்ஜென்ட்டா ஒரு தோசை கொடு என்பீர்கள். வெந்தா தான் தர முடியும் ரொம்ப அவசரம்னா தோசைய நேரடியா தட்ல தான் வார்க்கனும்னு சொல்வாங்களே!
  6. உங்க பிறந்த நாளுக்கோ அல்லது கல்யாண நாளுக்கோ உங்க பாஸ் வாழ்த்து அனுப்புவார். அதை படிக்காமலே பழக்க தோஷத்தில் உங்களுக்கு கீழே வேலை செய்பவருக்கு "please review & discuss " என்று பார்வார்ட் செய்வீர்கள்!
  7. கைப்பேசியில் SMS எதையோ டெலீட் செய்துவிட்டு அவுட்லுக் ஞாபகத்தில் செல்போனில் "deleted items " தேடுவீர்கள்!
  8. வேக வேகமாய் வீட்டுக்கு வந்து சாவியை எடுத்து பூட்டைத் திறக்காமல் கதவு திறக்க கார்டை நீட்டுவீர்களே!  (இதை யாரும் பார்கவில்லை என்றாலும் சுயமாய்க் கொடுக்கும் சூப்பர் பல்பு இது.)
  9. ரொம்ப நாளைக்குப் பிறகு சினிமாவுக்குப் போயிருப்பீங்க. இடைவேளையின் போது உங்க மனைவி டைம் என்னங்கன்னு கேட்பாங்க. அதுக்கு நீங்களோ கடிகாரம் பார்க்காமல் திரையின் வலது புறம் கீழ் மூலையைப்  பார்ப்பீர்கள்! 
  10. ரொம்ப நாள் யோசிச்சு இந்த மாதிரி ஒரு ஐடியா க்ளிக்காகும். சரி ஒரு பதிவ தேத்தலாம்னு ஜிமெயில் லாகின் செய்வீர்கள். பாஸ்வார்ட் இன்வாலிட் என்று வரும். அப்ப தான் தெரியும் நீங்க போட்டது ஆபீஸ்  USER ID என்று!
இந்தப் பத்தில் ஐந்து உங்களுக்கு நடந்திருந்தால்....அட நீங்க நம்மாளு!


செவ்வாய், 7 ஜூன், 2011

யானையும் நானும்-1


அம்புலியைத் துடைத்தெறியும் தும்பிக்கை படித்துவிட்டு என் மனைவி, 'கவிதைக்குப் பொய் அழகுதான் அதுக்காக இப்படியெல்லாம் சொல்லக்கூடாது' என்றாள். யானை எவ்வளவு புத்திசாலி தெரியுமா... ஒற்றுமையையும் பாச உணர்ச்சியும் அதனிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். எப்போதும் கூட்டமாய் வாழும் யானைகள், ஒரு யானை இறக்கும் தருவாயில் இருந்தால் அதைச் சுற்றி நின்று கண்ணீர் விடும். இறந்தபின் அதைப் புதைத்த பின்னரே அந்த இடத்திலிருந்து நகருமென்றாள்.

அன்று முழுவதும் எனக்கு யானை நினைவாகவே இருந்தது. சிறுவயது முதலே எனக்கு யானை என்றால் மிகப்பிடிக்கும். யாரவது என்னிடம் மிகப்பிடித்த விலங்கு எதுவென்று கேட்டால் யானை என்றே சொல்லியிருக்கிறேன். என் பள்ளி நாட்களில் எந்த வனவிலங்கு சரணாலயத்திற்கும் சென்றதில்லை. திருவிழாவிலும் சர்கசிலும் யானை பார்க்கையில் என்னை மறந்திருக்கிறேன். நெற்றியில் பெரிய நாமத்துடன் தெருக்களை சுற்றிவரும் பெருமாள் கோவில் யானையிடம் சில்லறை கொடுத்தால் துதிக்கையை தலையில் வைத்து ஆசீர்வதிக்கும். அதுவே தலையில் துதிக்கையை வைத்து அழுத்துவது போலிருக்கும். அதனிடம் ஆசீர்வாதம் வாங்குவதை அடுத்த நாள் பள்ளியில் பெருமை பேசிக்கொள்வோம். ஆசீர்வத்திப்பதே தலையில் அடிப்பது போலிருக்கிறதே...அடித்தால் என்ன ஆகுமென்று சொல்லிச் சிரித்த நாட்கள் இன்னும் நினைவில் உள்ளது.

காடுகளில் சுதந்திரமாய் வாழவேண்டிய யானைகளை  இப்படி கட்டிப்போட்டு வீடுகளில் பிச்சை எடுக்க வைக்கிறார்களே என்று தோன்றினாலும் சர்கஸ் யானைகளைப் பார்க்கையில் கோவில் யானைகள் நிலையே தேவலாம் என்று தோன்றும். சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் போஸ் மைதானத்தில் ஒவ்வொரு வருடமும் "பாம்பே சர்கஸ்" போடுவார்கள். பலமுறை கேட்டபின் எங்களை ஒருமுறை அழைத்துச்சென்றார் அப்பா. அங்கு யானை பந்து விளையாடியதையும் சைக்கிள் ஓட்டியதையும் பார்த்துவந்து நண்பர்களிடம் ஒரு வாரம் பெருமை பேசியதுண்டு.

ஆனாலும் யானை பார்த்தல் என்னும் என் "யானைப்பசிக்கு" சோளப்பொரியே கிடைத்தது. கோவில் யானைகளைப் பார்க்கையில் நாமும் அதன் கூடவே சென்றிடலாம் என்று கூடத் தோன்றியதுண்டு. இப்படி நான் நேரில் பார்த்த யானைகளே மனதோடு நெருக்கமாய் இருந்தன. சினிமாவில் பார்த்த யானைகளுடன் சிநேகம் கொள்ளவில்லை என் மனது. பழைய தேவர் பிலிம்ஸ் படங்கள் கூடப் பரவாயில்லை. நம்கால ராமநாராயணன் படங்கள் யானைகளை அசிங்கப் படுத்துவதாகவே உணர்கிறேன்.

அம்புலிமாமாவில் இருந்து ஆனந்த விகடன் வரை யானை பற்றிய எந்த செய்தியையும் கதையையும் என் பள்ளி நாட்களில் தவறவிட்டதில்லை. எந்த ஒரு விசயத்தையும் முழுதாய்ப் புரிந்து கொள்ளாதவர்களிடம் கண்ணிலாதவர் யானையைத் தடவிப் பார்த்து உணர்ந்த கதையே இன்றும் சொல்லப்படுகிறது. என்றோ படித்த குட்டிக்கவிதை. மதத்தைப் பற்றி பேசும் யாரும் இந்த வரிகளை மேற்கோள் காட்டாமல் பேசுவதில்லை.

யானைக்கு வெறியினால்
பிடிப்பது மதம்
மனிதனுக்கு மதத்தால்
பிடிப்பது வெறி.

வைரமுத்துவின் விலங்கு கவிதையிலிருந்து சில வரிகள்...
விலங்குகள் நம்மினும் 
மானமுள்ளவை

யானையின் காலில் 
யானை விழுந்ததாய்
தகவல் இல்லை 

பூனைக்கு எலிகள் 
பல்லக்கு சுமந்ததில்லை 

கரடிக்கு மான்கள் 
கால்பிடித்து விட்டதில்லை

ஒன்று 
சுதந்திரத்தின் வானம் 
இல்லை 
மரணத்தின் பள்ளம் 
இடைப்பட்ட வாழ்க்கை 
விலங்குக்கில்லை.

யானையைப் பற்றிய பதிவு சிறியதாய் இருக்கக் கூடாதல்லவா....அதனால் அடுத்த பதிவிலும் தும்பிக்கை நினைவுகள் தொடரும். ஞாயிறு, 5 ஜூன், 2011

பாபா ராம்தேவ் நள்ளிரவில் அப்புறப்படுத்தப்பட்டார்


கறுப்புப் பணம் மற்றும் ஊழலுக்கு எதிரான உண்ணாவிரதத்தை நேற்று துவங்கிய யோகா குரு பாபா ராம்தேவ் நேற்று நள்ளிரவே ராம்லீலா  கார்டனில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டார். சுமார் ஒரு மணியளவில் உண்ணாவிரத மேடையில் தூங்கிக் கொண்டிருந்த ராம்தேவை எழுப்பி அவரை வேறு இடத்திற்குக் கொண்டுசெல்லப் போவதாக போலீசார் சொன்னதும், யாரும் வன்முறையில் ஈடுபடவேண்டாம் என்று மைக்கில் சொல்லிவிட்டு மேடையில் இருந்து குதித்து கூட்டத்துக்குள் புகுந்தார் ராம்தேவ்.

கூட்டத்தின் நடுவிலும் இதையே சொன்ன ராம்தேவ் மீண்டும் மேடைக்கு வந்ததும் அவரின் ஆதரவாளர்கள் அவரைச் சுற்றி மனிதச் சங்கிலி அமைத்தார்கள். கற்களையும் தீயணைப்புக் கருவிகளையும் கொண்டு ஆதரவாளர்கள் போலீசாரைத் தாக்க முயன்றனர். நிலமை மோசமடைவதை உணர்ந்த போலீசார் கண்ணீர்புகைக் குண்டுகளை வீசியும் தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர். பாபா ராம்தேவ் கைது செய்யப்படவில்லை வேறு இடத்திற்கு மாற்றப் பட்டிருக்கிறார் என்று போலிஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. ஹரித்துவார் அழைத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என்றும் யூகங்கள் உலவினாலும் அவர் எங்கிருக்கிறார் என்ற அதிகாப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

இச்சம்பவத்தில் போலிசாரின் தடியடியில் காயமடைந்த சும்மார் முப்பதுபேர் அருகிலுள்ள லோக் நாயக் ஜெய்ப்ரகாஷ் (LNJP) மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்நிலையில் பாபா ராம்தேவின் பக்தைகள் சுமார் இருபத்தைந்து பேர் மூத்த போலீஸ் அதிகாரியான கூடுதல் DCP டி கே குப்தாவைச் சூழ்ந்தனர். சீருடையைக் கிழிக்க முயன்ற அவர்களிடம் சில மெடல்களை இழந்து தப்பினார் DCP.


கடந்த ஒரு வார காலமாகவே ராம்லீலா கார்டனில் உண்ணாவிரதத்திற்கென  சுமார் பதினெட்டு கோடி செலவில் தடபுடலான ஏற்பாடுகள் நடைபெற்றன. இரண்டரை லட்சம் சதுரடிக்கு சுமார் முப்பது அடி உயர நீர்புகா குடில்கள், 780 மின்விசிறிகள், 100 கூலர்கள், 7 பெருந்திரைத் தொலைக்காட்சிகள், 100 CCTV காமராக்கள் இதில் அடங்கும். இந்த மைதானத்தின் வாடகை மட்டுமே சுமார் மூன்று லட்சம். அது மட்டுமன்றி சுமார் 500 குடிநீர்க் கலன்கள் (ஒவ்வொன்றும் பதினாறு லட்சம் ரூபாய்கள்) மற்றும் 1300 கழிவறைகள், ஆம்புலன்ஸ் ஏற்பாடுகள், ஆளுயர பேனர்கள் என களை கட்டியது ராம்லீலா மைதானம்.


அரசும் உண்ணாவிரதத்தைத் தடுக்க தம்மாலான ஏற்பாடுகளைச் செய்து வந்தது. போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்ததுமே பிரதமர் மன்மோகன்சிங்  ராம்தேவிற்கு கடிதம் எழுதினார். அதில் ராம்தேவின் யோசனைகளை அரசு வரவேற்பதாகவும், அவருடன் இணைந்து ஆவன செய்வதாகவும், போராட்டத்தைக் கைவிடவேண்டுமென்றும் எழுதினார். அதை ராம்தேவ் ஏற்காததால் கட்சியின் மூத்தத் தலைவர்களை அவசராமாகக் கூட்டி ஆலோசித்தார் பிரதமர். உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தும் பொறுப்பு நிதித்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் கொடுக்கப்பட்டது.

புதன் மாலை ராம்தேவ் தில்லி வருவதை அறிந்ததும் அவரை வரவேற்க மூன்று மத்திய அமைச்சர்கள் அனுப்பப்பட்டனர். மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபில், பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால், சுற்றுலாத் துறை அமைச்சர் சுபோத் காந்த் சகாயுடன் அமைச்சரவைச் செயலர் கே.எம்.சந்திரசேகரும் இந்திராகாந்தி விமான நிலையத்தில் பாபா ராம்தேவைக் காத்திருந்து வரவேற்றனர். அந்தப் பேச்சுவார்த்தையும் பயனளிக்காததால் பிரணாப் முகர்ஜி மீண்டும் பேசினார். அதன் பிறகும் ராம்தேவ் உண்ணாவிரதப் போராட்டத்தில் உறுதியாக இருந்தார்.


அன்னா ஹசாரேவும் தனது ஆதரவைத் தெரிவித்ததோடு இன்று உண்ணாவிரத மேடைக்கு வருவதாக அறிவித்திருந்தார். சுமார் 32 லட்சம் பேர் தங்களை இந்தப் போராட்டத்திற்குப் பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியானதும் அரசு தரப்பில் இருந்து கறுப்புப் பணத்திற்கு எதிராக சட்டம் செய்யக் குழு அமைக்கப்ப் போவதாக உறுதிமொழியுடன் ராம்தேவிற்கு நேற்றிரவு கடிதம் அனுப்பப்பட்டது. கறுப்புப் பணத்தை நாட்டுடைமையாக்குதல், ஊழல் செய்வோருக்கு கடுமையான தண்டனை இந்த இரண்டைத் தவிர ராம்தேவின் 99 சதவீதக் கோரிக்கைகளை அரசு ஏற்பதாகச் சொல்லப்பட்டது. ஆகவே உண்ணாவிரதத்தை முடித்துவிட்டு தில்லியில் இருந்து வெளியேறுமாறும் அரசு தரப்பில் இருந்து அறிவுறுத்தப்பட்டது. அதையும் ஏற்காத ராம்தேவ், தனது கோரிக்கைகள் முழுவதும் ஏற்றுக்கொள்ளப்படும் வரை போராட்டம் தொடரும் என உறுதியாக இருந்ததால் அரசு தரப்பில் இருந்து இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Quote

Followers