Google+ Followers

ஞாயிறு, 31 ஜூலை, 2011

பறந்துகொண்டேயிருப்பேன்-அப்துல் கலாம்

கடந்த வெள்ளி அன்று தில்லி தமிழ்ச் சங்கத்தில் வடக்கு வாசல் நடத்திய "சுப்புடு நினைவில் ஒரு இசைப் பயணம் மற்றும் வடக்கு வாசல் பதிப்பக நூல்கள் வெளியீட்டு விழா"வுக்குச் சென்றிருந்தேன். அந்நிகழ்வில் தில்லிவாழ் தமிழ்ப்பதிவர், மொழிபெயர்ப்பாளர், ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியை சுசீலா அம்மாவின் தேவந்தி என்னும் சிறுகதைத் தொகுப்பு வெளியிடப் பட்டது. நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றியவர் திரு.அப்துல் கலாம் அவர்கள். தேன்தமிழ் கலந்து அவர் ஆற்றிய உரையிலிருந்து சில தித்திக்கும் துளிகள்....

சுப்புடு தர்பார் என்னும் தலைப்பில் சுப்புடு சார் எழுதிய புத்தகங்களை சில ஆண்டுகளுக்கு முன் படித்தேன். பர்மாவில் இருந்து அகதியாய் நடந்தே இந்தியா  வந்தது பற்றியும் சுதந்திர போராட்டத்தின் உச்ச கட்டத்தில் தில்லியில் நாடகங்கள் நடத்தியது பற்றியும் அதில் எழுதியிருந்தார். அதைப் படித்ததும் சுப்புடு சாரை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்தேன். அங்குள்ள மொகல் கார்டன் நந்தவனத்தில் நெடுநேரம் செலவிட்டார். இயற்கை அழகுகளை ரசித்தார். ரோஜா மலர்களை வெகுநேரம், சுமார் ஒருமணி நேரம் வருடிக் கொண்டிருந்தார். அப்போது அதன் அர்த்தம் எனக்குத் தெரியவில்லை. பல நாட்கள், பல மாதங்கள், பல ஆண்டுகள் கடந்த பின்னர் 18 -01 - 2005 ல் எனக்கு சுப்புடு சாரிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், நான் தொண்ணூரை  நெருங்கி விட்டேன் நெற்றியில் திருநீறு பூசி தென்திசைப் பயணம் செல்ல நேரம் வந்துவிட்டது. ஒருவேளை நான் மரணம் எய்தினால் எனக்கு மொகல் கார்டனில் இருந்து ஒற்றை ரோஜா தருவீர்களா? என்று எழுதியிருந்தார். பின்னொருநாள் நள்ளிரவில் துக்க செய்தி கேட்டதும் உடனே சென்று ரோஜாமலர்களைப் பறித்து வந்து சுப்புடு சாருக்கு அஞ்சலி செலுத்தினேன்.

நீ நீயாக இரு...
இளைய நண்பர்களே... இளைய மனம் கொண்டோரே...வீட்டிலே மின்சார பல்பைக் கண்டதும் தாமஸ் ஆல்வா எடிசன் நம் நினைவுக்கு வருகிறார். வானில் சாத்தமிட்டு சீறிப் பாயும் ஆகாய விமானங்களைப் பார்க்கையில் ரைட் சகோதரர்கள் மனதில் வருகிறார்கள். தொலைபேசி / கைப்பேசிப் பார்க்கையில் கிரகாம்பெல் மனதிற்கு அருகாமையில் வருகிறார். கடல் நிறம் ஏன் நீலமாக இருக்கிறது என்ற கேள்வி வருகையில் லண்டனில் இருந்து கல்கத்தாவுக்கு கப்பல்வழிப் பயணம் செய்தபோது இந்திய விஞ்ஞானி நிறப்பிரிகை பற்றி கண்டறிந்த ராமன் விளைவு நினைவுக்கு வருகிறது. அகிம்சா தர்மம் என்ற கத்தியில்லா ரத்தமில்லா ஆயுதத்தைக் கொண்டு உலகுக்கே புதுப் படம் நடத்தினார் காந்தி. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மை பெற்றவர்கள். இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தப் பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.

நல்ல  புத்தகங்கள்
நல்ல கற்பனை சக்தியை வளர்க்கும்.
நல்ல கற்பனைச் சக்தி 
நல்ல சிந்திக்கும் திறனை வளர்க்கும் 
நல்ல சிந்தனை 
சிறந்த அறிவைக் கொடுக்கும் 
சிறந்த அறிவு 
நம்மை மேம்பட வைக்கும்.

இன்று வடக்கு வாசல் பதிப்பகத்தார் ஐந்து அருமையான புத்தகங்களை வெளியிடுகின்றனர். 

சிந்தனைச் சிதறல்கள் - ய.சு.ராஜன் 
விருட்சங்களாகும் சிருவிதைகள் - சி.டி.சனத்குமார் 
சனிமூலை - ராகவன்  தம்பி 
வடக்குவாசல் நேர்காணல்கள் - ராகவன் தம்பி 
தேவந்தி - எம்.ஏ.சுசீலா 

(தேவந்தி சிறுகதைத் தொகுப்பை திரு. அப்துல் கலாம் அய்யா வெளியிட சுசீலா அம்மாவின் மகள் மீனு பிரமோதும், நண்பர் பதிவர் விட்டலனும் பெற்றுக்கொள்கிறார்கள்)

ஒவொரு நூலில் இருந்தும் மேற்கோள் காட்டி வாழ்த்திக் கொண்டே வந்தவர். இறுதியாய் தேவந்தி என்னும் அருமையான சிறுகதைத் தொகுப்பு... தேவந்தி சிலபதிகாரக் கண்ணகியின் தோழி (சரி தானேம்மா என்கிறார் சுசீலா அம்மாவைப் பார்த்து). சாத்திரம் அன்று...சதி! என்னும் கதையில் இருந்து, "சரயு நீரைக் கண்களில் ஒற்றித் தலையில் தெளித்தபடி... ஆற்றில் இறங்கி, அதன் ஆழத்தில் அமிழ்ந்தபடி போய்க்கொண்டே இருக்கிறான் ராமன். எங்கோ தொடுவானத்தில் சமநீதி என்னும் உதயத்தின் விடியல் மெல்லியதொரு கீற்றாய் தெரிகிறது" என்ற வரிகளைப் பாராட்டினார். 

முத்தாய்ப்பாய் ஒரு கவிதை சொல்லி அகிருந்த அனைவரையும் கூடவே சொல்லச் சொன்னார். 

நான் பிறந்தேன் 
அரும்பெரும் சக்தியுடன்...
நான் பிறந்தேன் 
நற்பண்புகளுடன்...
நான் பிறந்தேன் 
கனவுடன்...
வளர்ந்தேன் 
நல்ல எண்ணங்களுடன்... 
நான் பிறந்தேன்
உயர் எண்ணங்களை
செயல்படுத்த... 
நான் பிறந்தேன் 
ஆராய்ச்சி உள்ளத்துடன்...
நான் பிறந்தேன் 
ஆகாய உச்சியில் பறக்க...
நான் பூமியில் 
ஒருபோதும் தவழ மாட்டேன்.
தவழவே மாட்டேன்.
ஆகாய உச்சிதான் 
என் லட்சியம் 
பறப்பேன் வானில் 
பறந்துகொண்டேயிருப்பேன்....


வியாழன், 28 ஜூலை, 2011

இன்னும் கொஞ்சம்...

 நிலவு
பேருந்து சன்னலில் 
ஒட்டிய ஸ்டிக்கராய்
உடன்வரும் நிலா
என்மன சன்னலில்
உன் நினைவுகளும்....தனிமரத்தோப்பு
ஒரு பூ மாலையாகாது 
ஒரு துளி கடலாகாது
ஒரு இலை கிளையாகாது
ஒரு கிளை மரமாகாது
ஒரு மரம் தோப்பாகாது
ஆனால் நீ
ஒருத்தி மட்டும் எப்படி
உலகமானாய் எனக்கு......


வேறோர் குழந்தையுடன்
விளையாடிக் கொஞ்சினால்
ஓடிவந்தெனைக் கட்டிக்கொள்கிறாள்
செல்ல மகள்.
இப்படித்தான் நீயும்
அன்றோர் நாள்
காதலைச் சொன்னாய்
குழந்தை மனதோடு........ஒவ்வொரு தேர்வு
எழுதி முடித்ததும்
உள்ளுக்குள் தோன்றும்
இன்னும் கொஞ்சம்
நல்லா படிச்சிருக்கலாம்.
ஒவ்வொரு முறை
சந்தித்துப் பிரிகையிலும்
உள்ளுக்குள் தோன்றும்
இன்னும் கொஞ்சம்
உன்னோடு பேசியிருக்கலாம்....

புதன், 20 ஜூலை, 2011

விளக்கம்

அண்மையில் திரு பாலசுப்ரமணியம் அவர்கள் இரு பாடல்களை பதிவிட்டு அதற்கான விளக்கம் கேட்டிருந்தார். இணையத்தில் தேடியதில் எனக்கு கிடைத்த விவரங்களை இங்கே பதிவிடுகிறேன்.

திருவெழுக்கூற்றிருக்கை
கவித்திறனில் ஆசுகவி, மதுரகவி, சித்திரக்கவி மற்றும் விஸ்தாரக்கவி என்று நான்கு பிரிவுகள் உண்டாம். இவற்றில் சித்திரக்கவி என்பது ஒரு உருவம் தோன்றுமாறு கவி அமைப்பதாகும். திருவெழுக்கூற்றிருக்கை என்பது சித்திரக்கவியில் அடங்கும். இதில் சக்ரபந்தம், பத்மபந்தம், நாகபந்தம், ரதபந்தம் முதலான வகைகள் உண்டு. ரதபந்தம் என்பது தேரின் உருவத்தை கட்டங்களில் கொண்டுவந்து, அந்த கட்டங்களுக்குள் எண்கள் இட்டு, அந்த எண்ணிக்கை பாசுரத்தின் சொற்களாக அமையும்படிச் செய்வதாகும். திருமங்கையாழ்வார், அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் இன்னும் பலர் திருவெழுக்கூற்றிருக்கை அருளியுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு
http://namperumal.wordpress.com/2008/12/11/
http://namperumal.files.wordpress.com/2008/12/thiruvezhu1.படப்

இரண்டாம் பாடல் பன்னிரு திருமுறைகளில் முதலாம் திருமுறையில் உள்ளது.
பாடல் எண் : 1 பண் : வியாழக்குறிஞ்சி
ஓருரு வாயினை மானாங் காரத்
தீரியல் பாயொரு விண்முதல் பூதலம்
ஒன்றிய விருசுட ரும்பர்கள் பிறவும்
படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை
இருவரோ டொருவ னாகி நின்றனை 5.
ஓரா னீழ லொண்கழ லிரண்டும்
முப்பொழு தேத்திய நால்வர்க் கொளிநெறி
காட்டினை நாட்ட மூன்றாகக் கோட்டினை
இருநதி யரவமோ டொருமதி சூடினை
ஒருதா ளீரயின் மூவிலைச் சூலம் 10
நாற்கான் மான்மறி யைந்தலை யரவம்
ஏந்தினை காய்ந்த நால்வாய் மும்மதத்
திருகோட் டொருகரி யீடழித் துரித்தனை
ஒருதனு விருகால் வளைய வாங்கி
முப்புரத் தோடு நானில மஞ்சக் 15
கொன்று தலத்துற வவுணரை யறுத்தனை
ஐம்புல னாலா மந்தக் கரணம்
முக்குண மிருவளி யொருங்கிய வானோர்
ஏத்த நின்றனை யொருங்கிய மனத்தோ
டிருபிறப் போர்ந்து முப்பொழுது குறைமுடித்து 20
நான்மறை யோதி யைவகை வேள்வி
அமைத்தா றங்க முதலெழுத் தோதி
வரன்முறை பயின்றெழு வான்றனை வளர்க்கும்
பிரமபுரம் பேணினை
அறுபத முரலும் வேணுபுரம் விரும்பினை 25
இகலிய மைந்துணர் புகலி யமர்ந்தனை
பொங்குநாற் கடல்சூழ் வெங்குரு விளங்கினை
பாணிமூ வுலகும் புதையமேன் மிதந்த
தோணிபுரத் துறைந்தனை தொலையா விருநிதி
வாய்ந்த பூந்தரா யேய்ந்தனை 30
வரபுர மொன்றுணர் சிரபுரத் துறைந்தனை
ஒருமலை யெடுத்த விருதிற லரக்கன்
விறல்கெடுத் தருளினை புறவம் புரிந்தனை
முந்நீர்த் துயின்றோ னான்முக னறியாப்
பண்பொடு நின்றனை சண்பை யமர்ந்தனை 35
ஐயுறு மமணரு மறுவகைத் தேரரும்
ஊழியு முணராக் காழி யமர்ந்தனை
எச்சனே ழிசையோன் கொச்சையை மெச்சினை
ஆறு பதமு மைந்தமர் கல்வியும்
மறைமுத னான்கும் 40
மூன்று காலமுந் தோன்ற நின்றனை
இருமையி னொருமையு மொருமையின் பெருமையும்
மறுவிலா மறையோர்
கழுமல முதுபதிக் கவுணியன் கட்டுரை
கழுமல முதுபதிக் கவுணிய னறியும் 45
அனைய தன்மையை யாதலி னின்னை
நினைய வல்லவ ரில்லைநீ ணிலத்தே.
 
பொழிப்புரை :
சொரூப நிலையில் விளங்கும் பரசிவம் ஆகிய நீ உனது இச்சையால் ஐந்தொழில்களை நிகழ்த்த வேண்டி எடுத்துக் கொண்ட ஓருருவமாகிய திருமேனியை உடையை ஆயினை,

உன் சக்தியைக் கொண்டு அவ் ஐந்தொழில்களை நடத்தும் திருவுளக்குறிப்போடு சத்தி சிவம் என்னும் இரு உருவாயினை,

விண் முதலிய பூதங்களையும் சந்திர சூரியர்களையும் தேவர்கள் மக்கள் முதலியோரையும் படைத்துக் காத்து அழிக்க அயன் அரி அரன் என்னும் மும்மூர்த்திகள் ஆயினை,

பிரமன் திருமால் ஆகிய இருவரையும் வலத்திலும் இடத்திலும் அடக்கி ஏக மூர்த்தியாக நின்றாய்,

ஒப்பற்ற கல்லால மரநிழலில் உனது இரண்டு திருவடிகளை முப்பொழுதும் ஏத்திய சனகர், சனந்தனர் முதலிய நால்வர்க்கு ஒளி நெறியைக் காட்டினாய்,

சூரியன் சந்திரன் அக்கினி ஆகியோரை மூன்று கண்களாகக் கொண்டு உலகை விழுங்கிய பேரிருளை ஓட்டினாய்,

கங்கையையும் பாம்பையும் பிறைமதியையும் முடிமிசைச் சூடினாய்,

ஒரு தாளையும் ஈருகின்ற கூர்மையையும் முத்தலைகளையும் உடைய சூலத்தையும் நான்கு கால்களையும் உடைய மான் கன்று, ஐந்து தலை அரவம் ஆகியவற்றையும் ஏந்தினாய்,

சினந்து வந்த, தொங்கும் வாயையும் இரு கோடுகளையும் கொண்ட ஒப்பற்ற யானையை அதன் வலி குன்றுமாறு அழித்து அதன் தோலை உரித்துப் போர்த்தாய்,

ஒப்பற்ற வில்லின் இருதலையும் வளையுமாறு செய்து கணை தொடுத்து முப்புரத்தசுரர்களை இவ்வுலகம் அஞ்சுமாறு கொன்று தரையில் அவர்கள் இறந்து கிடக்குமாறு அழித்தாய்.
ஐம்புலன்கள் நான்கு அந்தக் கரணங்கள், முக்குணங்கள் இரு வாயுக்கள் ஆகியவற்றை ஒடுக்கியவர்களாய தேவர்கள் ஏத்த நின்றாய்,

ஒருமித்த மனத்தோடு, இரு பிறப்பினையும் உணர்ந்து முச்சந்திகளிலும் செய்யத்தக்க கடன்களை ஆற்றி நான்மறைகளை ஓதி ஐவகை வேள்விகளையும் செய்து ஆறு அங்கங்களையும் ஓதி, பிரணவத்தை உச்சரித்து தேவர்களுக்கு அவி கொடுத்து மழை பெய்விக்கும் அந்தணர் வாழும் பிரமபுரத்தை விரும்பினாய், ஆறுகால்களை உடைய வண்டுகள் இசைபாடும் பொழில் சூழ்ந்த வேணுபுரத்தை விரும்பினாய்,

தேவர்கள் புகலிடம் என்று கருதி வாழ்ந்த புகலியை விரும்பினாய். நீர் மிகுந்த கடல் சூழ்ந்த வெங்குரு என்னும் தலத்தை விரும்பினாய்.

மூவுலகும் நீரில் அழுந்தவும் தான் அழுந்தாது மிதந்த தோணிபுரத்தில் தங்கினாய்.

வழங்கக் குறையாத செல்வவளம் மிக்க பூந்தராயில் எழுந்தருளினாய்.
வரந்தருவதான சிரபுரத்தில் உறைந்தாய்,

ஒப்பற்ற கயிலை மலையைப் பெயர்த்த பெருந்திறல் படைத்த இராவணனின் வலிமையை அழித்தாய்.

புறவம் என்னும் தலத்தை விரும்பினாய்,

கடலிடைத் துயிலும் திருமால் நான்முகன் ஆகியோர் அறிய முடியாத பண்பினை உடையாய்.

சண்பையை விரும்பினாய்.

ஐயுறும் சமணரும் அறுவகையான பிரிவுகளை உடையபுத்தரும் ஊழிக்காலம் வரை உணராது வாழ்நாளைப் பாழ் போக்கக் காழிப்பதியில் எழுந்தருளியுள்ளாய்.

வேள்வி செய்வோனாகிய ஏழிசையோன் வழிபட்ட கொச்சை வயத்தை விரும்பி வாழ்கின்றாய்,

ஆறு பதங்கள், ஐந்து வகைக் கல்வி, நால் வேதம், மூன்று, காலம், ஆகியன தோன்ற நிற்கும் மூர்த்தியாயினாய்,

சத்தி சிவம் ஆகிய இரண்டும் ஓருருவமாய் விளங்கும் தன்மையையும் இவ்விரண்டு நிலையில் சிவமாய் ஒன்றாய் இலங்கும் தன்மையையும் உணர்ந்த குற்றமற்ற அந்தணாளர் வாழும் கழுமலம் என்னும் பழம்பதியில் தோன்றிய கவுணியன்குடித் தோன்றலாகிய ஞானசம்பந்தன் கட்டுரையை விரும்பிப் பிரமன் மண்டையோட்டில் உண்ணும் பெருமானே அறிவான். அத்தன்மையை உடைய நின்னை உள்ளவாறு அறிவார், நீண்ட இவ்வுலகிடை இனிப்பிறத்தல் இலர். 

நன்றி: http://www.thevaaram.org/

ஞாயிறு, 3 ஜூலை, 2011

அப்படியும் இப்படியும்...

நீயென்னை முத்தமிட்டும் 
எழுப்பியிருக்கிறாய் 
காது கிழிய 
சத்தமிட்டும் 
எழுப்பியிருக்கிறாய்!

என் கன்னங்கள் 
வெட்கத்திலும் சிவந்திருக்கிறது.
சிலநாள் அறைவாங்கி 
வீங்கியும் சிவந்திருக்கிறது!

உன் பார்வைகள் 
என்னைத் 
தொட்டும் சிரித்ததுண்டு 
சுட்டும் எரித்ததுண்டு!

உன் ஸ்பரிசத்தில் 
பூக்கள் சிலநாளும்
பூச்சிகள் சிலநாளும் 
நினைவுக்கு வந்ததுண்டு!

உன் சொற்களென்
மனக்காயத்தை
குணமாக்கியதுமுண்டு இன்னும் 
ரணமாக்கியதுமுண்டு!

அத்தனை முரண்களையும் 
அமைதியாய் ஏற்கிறேன் 
அம்மா என்றழைக்கும் 
அன்பு மகனுக்காக.....


Quote

Followers