Google+ Followers

புதன், 30 ஜூன், 2010

கூட்டாஞ்சோறு 30.06.2010

வணக்கம். அவியல், குவியல், கொத்துபரோட்டா போன்ற எண்ணச் சிதரல்களுக்கான குறிசொல் வரிசையில் இதோ என்னுடையது கூட்டாஞ்சோறு (சின்ன புள்ளத் தனமா இருக்கோ?). நிறைய பதங்களை யோசித்துப் பார்த்தபின் இதுவே எனக்குப் பிடித்திருக்கிறது. வேறேதும் உங்களுக்குத் தோன்றினால் பகிருங்கள். பரிசளிப்பேன். இல்லை இல்லை பரீசலிப்பேன். (நாங்கல்லாம் இலவசமா கொடுப்பதையே காசு கொடுத்து வாங்கற ஆளு, என்கிட்டே இருந்து பரிசா?). சரி சரி, பொங்கலாமா....

1 . ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே....(ஆட்டோகிராப் ), ஒவ்வொரு பற்களிலும் சிரித்தேன் (பாய்ஸ்) இந்த பாடல் வரிகளில் இலக்கணப் பிழை இருப்பதாக எனக்குள் இருக்கும் நக்கீரன் சொல்றாரு. அது 'ஒவ்வொரு பூவுமே, ஒவ்வொரு பல்லிலும்' ன்னு தானே இருக்கணும். பின்ன ஏன் அப்படி எழுதினார்கள். யாராவாது விளக்குங்கள். (மேல 'நாங்கல்லாம்' னு  இருக்கறது நானெல்லாம்னு தானே இருக்கணும். தன் தவறைத் தானே கண்டறிந்த தானைத் தலைவன் ...........)

2. கடந்த பதினேழாம் தேதி, டில்லியில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் ஒரு செல்போனை சுட்டுட்டாங்க. (ஒண்ணு தானா??). சுட்டவனுக்குத் தெரியாது, சிறப்புப் பாதுகாப்புப் படையில் இருந்து அத சீகிரமாக் கண்டுபிடிச்சி வீட்டுக்கே வருவாகன்னு..! ஏன்னா அந்த செல்போனுக்குச் சொந்தக்காரர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் (வருங்காலப் பிரதமர்?) ராகுல் காந்தி. ஞாயிற்றுக் கிழமை போனை பறிமுதல் செய்து ராகுலிடம் ஒப்படைத்தனர், கேஸே போடாமல்..

3. எந்த ஒரு கலந்துரையாடலின் போதும் மற்றவர் கருத்துக்கு மதிப்பு கொடுத்து கேளுங்கள். பின் யோசித்து முடிவெடுங்கள். எந்த விசயத்தையும் ஒரே கோணத்தில் பார்ப்பது சரியல்ல. கீழே உள்ளது தவளை என நாம் வாதிடலாம். அதுவே வேறோர் கோணத்தில் (உண்மையில்) குதிரையாகக் கூட இருக்கக் கூடும்.


                                                   ரோட்டேட்டு.....
 இன்னும் பொங்குவோம்...........

ஞாயிறு, 27 ஜூன், 2010

எனக்கே எனக்காய்...

இரண்டாயிரமாம் ஆண்டு. ஏப்ரலில் ஒருநாள். சூரிய வாத்தியார் பகலைச் சொல்லிக்கொடுத்து போனபின்பு பூமி தன் இரவு வகுப்பெடுக்கும் நிலவு டீச்சருக்காய் காத்திருந்த முன்னிரவு. அப்போது நான் உதகையில் உள்ள ஒரு மருந்தாக்கியல் கல்லூரி மாணவன். ரோட்டரேக்ட் க்ளபின் சந்திப்பிற்காக நாங்கள் உதகையில் உள்ள ஓர் உய்தர விடுதியொன்றில் குழுமியிருந்தோம். (Hotel Monarch)

வைரமுத்துவும் அங்கு வந்திருப்பதாக காற்றில் கசிந்த செய்தி கேட்டு அறை எண் விசாரித்தோம். அந்த புத்திசாலி வரவேற்பாளர்(!) அறை என்னைச் சொல்லிவிட்டு அனுமதி இல்லை என்றாள். நானும் நண்பர்கள் இருவரும் திருட்டுத்தனமாய் மேலே வந்து அறைக்கதவைத் தட்டினோம்.

ஒல்லியாய்  ஓர் உருவம் கதவைத் திறந்தது. நாங்கள் இங்குள்ள மருந்தாக்கியல் கல்லூரி மாணவர்கள். திரு வைரமுத்துவை சந்திக்க வேண்டுமேன்றோம். வாருங்கள் உள்ளே என்றார். அறையில் மொத்தம் மூவர் இருந்தனர். பார்த்தவுடன் தெரித்தது அங்கோர் பாடல் உருவாகிக் கொண்டிருப்பது.

படபடப்பு, பிரமிப்பு, உற்சாகம் என எல்லாம் சேர்ந்த ஒரு கலவை என்னை உந்தித் தள்ளியது. நான் வைரமுத்துவின் காலில் விழுந்து ஆசி வாங்கினேன். நண்பர்கள் இருவரும் அப்படியே செய்தனர். பின் வைரமுத்து அங்கிருந்த இருவரையும் அறிமுகப் படுத்தினார். இவர் (கதவைத் திறந்தவர்) கண்ணெதிரே தோன்றினாள் என்ற வெற்றிப் பட இயக்குனர் ரவிச்சந்திரன். இவர் இளம் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் என்றார்.

சில நிமிட உரையாடளுக்குப்பின் எங்களுக்கு உரைத்தது கையெழுத்து வாங்கக்கூட எங்களிடம் காகிதம் இல்லையென்று. உடனே வைரமுத்து தான் பாட்டெழுதிக் கொண்டிருந்த தாளுக்கு அடுத்த தாளில் மூவருக்கும் சேர்த்து மூன்று கையொப்பமிட்டுக் கொடுத்தார்.

அறைக்கு வைத்தும் முதல் வேலையாய் அத்தாளை மின்விளக்கின் மிக அருகில் வைத்து பாட்டிற்காய் எழுதிய வரி பதிந்துள்ளதா என பார்த்தேன். உற்று நோக்கி ஒவ்வொரு எழுத்தாய் கோர்த்தபின் என்னுள் உற்சாகம் கரைபுரண்டது. வைரமுத்துவின் வரிகள் இசையோடு சேர்ந்து உலகறியும் முன்னர் எனக்கே என்னகெனக் குதித்தேன்.
அதிலிருந்த வரிகள்

" இருக்கும் கவிஞர்கள்
 இம்சை போதும்
 என்னையும் கவிஞன் ஆக்காதே...."
(பாடல்: குல்மொகர் மலரே..., படம்: மஜ்னு )

பின்பந்த ஒற்றைத் தாளை மூன்றாக்கிப் பங்கிட்டுக் கொண்டோம். இதோ என்பங்கு கீழே....

புதன், 16 ஜூன், 2010

பஞ்சாபில் பயங்கரம்

போபாலில் 3787 பேர் இறந்து போய் 26 வருடம் கழித்து அங்கு நடந்தது விபத்தா? வினையா? என்று தீர்ப்புக்கு எதிராய் போர்க்கொடி தூக்கும் நல்லவர்களே!
இதோ உங்கள் கண்முன்னே செத்துக்கொண்டிருக்கும் உயிர்களைப் பற்றியும் கொஞ்சம் சிந்தியுங்கள்.

பஞ்சாபில் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் முடிகளில் நடத்திய ஆய்வில் அளவுக்கதிகமான யுரேனியம் அவர்கள் உடலில் கலந்திருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இங்குள்ள மால்வா பகுதி வேதிப்பொருட்கள், கதிரியக்கம், உயிர் நச்சு என முக்கியமான மூன்று வழிகளிலும் மாசடைந்துள்ளது.

பஞ்சாபில் மூன்று மாவட்டங்களின் குடிநீரில் அளவுக்கு அதிகமான நைட்ரஜென் கலந்திருக்கிறது. இதை குடிப்பவர்களுக்கு புற்றுநோயும், பிறக்கும் குழந்தைகளுக்கு பிறவிக் குறைபாடும் வரும் வாய்ப்புகள் அதிகம். இது நிச்சயமாய் இங்குள்ள தொழிற்சாலை கழிவுகளாலும், விவசாய நிலத்தில் அளவுக்கு அதிகமாய் யூரியா பயன்படுத்துவதாலும் தான்.

இங்கு முதலமைச்சரின் மாவட்டத்தில் மட்டும் இதுவரை 1074 பேர் புற்று நோயால் இறந்து போயுள்ளனர் (1991-2009). இன்னும் 668  பேரின் நிலமை கவலைக்கிடம். அனுதினமும் 1144 லிட்டர் கழிவு நீர் சட்லட்ஜ் ஆற்றில் கலக்கிறதாம்.


மீண்டும் கேட்கிறேன்,
போபாலில் 3787 பேர் இறந்து போய் 28 வருடம் கழித்து அங்கு நடந்தது விபத்தா? வினையா? என்று தீர்ப்புக்கு எதிராய் போர்க்கொடி தூக்கும் நல்லவர்களே!
இதோ உங்கள் கண்முன்னே செத்துக்கொண்டிருக்கும் உயிர்களைப் பற்றியும் கொஞ்சம் சிந்தியுங்கள்.
இதற்கு என்ன செய்யப் போகிறோம் நண்பர்களே!

சனி, 12 ஜூன், 2010

பாப்பா பாட்டு

உலக வலைப்பூ வரலாற்றில் முதல் முறையாக என் செல்ல மகள் தியானாவுடன்  ஒரு தித்திக்கும் உரையாடல்.


நான்: உங்க பேர் என்ன?
அவள் : தியானா (நீ தான பேர் வச்ச. அதயேன் திரும்பத் திரும்ப நீயே கேக்குற. யாராவது தெரியாதவங்க கேட்டா பரவால...)


நான்: அப்பா பேர் என்ன?
அவள் : ணன்
நான்: அம்மா பேர் என்ன?
அவள் : டோமா

நான்: என்ன பாட்டு பிடிக்கும் ?
அவள் : குவா குவா வாத்து
              அம்மா இங்கே வா வா
              வர்றான் வர்றான் பூச்சாண்டி
              clap your hands
              chubby cheeks
              டாடி மம்மி
              old mc donald
              துஷ்யந்தா
              கியாம் கியாம் குருவி 
            ............................
நான்: போதும் போதும். பாட்டு லிஸ்ட் சொல்லி சோர்ந்து போயிருப்பீங்க. என்ன குடிகிறீங்க. வெறும் பாலா? சாக்லேட் பாலா(Horlicks)?
அவள் : வெறும் சாக்லேட்!!!

நான் : சரி ஒரு கதை சொல்லுங்க.
அவள் : மம் மம் பாட்டி (அவளோட அம்மாவோட அம்மா ) வடைஐ சுட்டாங்களா, அப்ப காக்கா வந்து ஒரு வடைய தூக்கிட்டு போயி ட்ரீ மேல உக்காந்துகிச்சாம். அப்போ ஒரு fox  வந்து காக்கா காக்கா நீ ரொம்ப அழகா இருக்க, ஒரு பாட்டு பாடுன்னு சொன்னுச்சாம். காக்கா கா கான்னு பாடும் போது வடை டம்முன்னு கீழ விழுந்துச்சாம். அத FOX மம் மம்னு சாப்டுசாம். அப்போ அந்த காக்கா சொன்னுச்சாம் வட போச்சே!

தியானாவுக்கு வரும் புதன் கிழமை இரண்டாவது பிறந்த நாள்.

(அவளுக்கு பிடித்த பாடல்களின் லிங்க் கொடுத்துள்ளேன். நேரமிருப்பின் உங்கள் குழந்தைக்கு காட்டுங்கள்)

ஞாயிறு, 6 ஜூன், 2010

மணசாட்சி

ஆத்தோர மணல்அள்ளி
அழகழகா வீடுகட்டி
கண்ணுக்கு மைபோட்டு
கல்லக்கா தோடுபோட்டு
கூழாங்கல் அடுப்புமேல
கூட்டாஞ்சோறு ஆக்குனதும்
பாட்டெழுதி பாடினதும்
பைங்கிளிக்கு நெனப்பிருக்கா?

மணல குவிச்சி வச்சி
மரக்குச்சி ஒளிச்சி வச்சி
கிச்சு கிச்சு தாம்பூலம்
ஆடுனது நெனப்பிருக்கா?

விளையாடப் போகயில
வேகவச்ச வேர்க்கடல
வீட்டுக்குத் தெரியாம
கொண்டாந்து குடுக்கையில
என்கையில் உள்ள பங்கும்
நீ பிடுங்கித் தின்னாயே
மலர்விழியே மறந்தாயோ!

பரிட்சை நேரத்தில்
பக்கத்தில் நீயமர்ந்து
பார்த்தெழுதி பார்த்தெழுதி
பரிசுமிட்டாய் வாங்கியது
எனக்குள்ளே இனிக்கிறதே
உனக்குள்ளும் இருக்கிறதா?

குத்தாத முள் ஒடச்சி
கத்தால செடியெல்லாம்
அத்தான் என்பேர் எழுதிய
முத்தான பிஞ்சு விரல்
எனக்கின்று எட்டாத தூரத்தில்...

உன்விரல புடிச்சுக்கிட்டு
உலகத்த சுத்தோணும்
உனக்காகத்தான் மாமோய்
உசுரையே கொடுக்கோணும்
என்றெல்லாம் சொன்னவளே

எப்படி நீ சம்மதித்தாய்
என் மனதை எரிதத்தீ
உன் மணத்தில் சாட்சி சொல்ல.....

Quote

Followers