சனி, 26 மார்ச், 2011

மஞ்சள் துண்டும் பச்சை இலைகளும்

தமிழக சட்டசபைத் தேர்தலில் போட்டியிட  வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். மஞ்சள் துண்டும் பச்சை இலைகளும் அரசியல் வியாபாரத்தில் சிலபல கட்சிகளை வாங்கி தங்களுக்கு பலம் சேர்த்துக்  களம் இறங்குகின்றன. அனுதினமும் புதிய புதிய இலவச அறிவிப்புகள் காற்றில் வந்து நம் நெஞ்சை நனைக்கின்றன. எந்த அரசும் இலவசங்களைத் தரக்கூடாது என்று சட்டம் இயற்ற முடியாதா? பாரதி கேட்ட காணி நிலம் போல, இரண்டு ஏக்கர் நிலம், அப்புறம் ஒரு வீடு, அதில் தொலைகாட்சி, மிக்சி, கிரைண்டர், சாப்பாட்டு அரிசி, சைக்கிள், லேப்டாப், மாடுகள்  எல்லாமே இலவசமாகக் கொடுத்தால் ஏழைத் தமிழன் எதைத்தான் உழைத்து சம்பாதிப்பான்.  நான் கோடி ரூபாய் கொள்ளையடிக்கப் போகிறேன் அதில்  பத்து ரூபாய் உங்களுக்குப் பிரித்துத் தருகிறேன் "தயவுசெய்து" எனக்கு ஓட்டுப் போடுங்கள் என்று ஒப்பந்தம் போடுவதாகவே இலவச அறிவிப்புகள் இருக்கிறது. வழக்கத்திற்கு அதிகமாக பணமும் பரிசுப் பொருட்களும் பிடிபடுகிறது. 

தனிமனிதத் தாக்குதல்களுக்கும் குறைவில்லை.  தனது  வீட்டில் விஜயகாந்தின் ஆட்கள் கல்லெரிந்ததாகவும் அந்தக் கோபத்தில் பேச வந்துள்ளதாகவும் திருவாரூரில் சொன்ன நடிகர் வடிவேல் அவன் இவன் என்ற  ஏக வசனத்தில் பேசத்துவங்கினார். 
"நீ முதலமைச்சர்னா நான் பிரதமர். நீ பிரதமர்னா நான்  ஜனாதிபதி. நீ கருப்பு எம்.ஜி.ஆர் னா நான் கருப்பு நேரு"
"தண்ணில ஆடற கப்பலை சமாளிக்கறவந்தான் கேப்டன். எப்பவும் தண்ணில ஆடறவன் கேப்டனில்லை"  

நிற்க. (அட உங்களைச் சொல்லலைங்க நீங்க உட்காருங்க. நான் என்னைச் சொன்னேன். இது அரசியல் பதிவில்லைங்க அறிவியல் பகிர்வு. ஆனாலும் இந்தத் தலைப்பை வைத்தவுடன் எண்ணியது ஒன்று எழுதுவது ஒன்றாகிப் போனது. சரி விசயத்திற்கு வருவோம்.)

நாம் சற்றும் எதிர்பார்க்காத சில சமையலறைப் பொருட்கள் நமக்கு மருந்தாகக்கூடிய சாத்தியமிருக்கிறது. தமிழ் சினிமா புற்று நோய் வந்தவர்கள் பிழைக்க முடியாது என்ற "விழிப்புணர்வை" ஏற்ப்படுத்திய பின்னரும் காலங்காலமாய் நாம் சமையலறையில் பயன்படுத்தும் மஞ்சள் பொடி கழுத்து, தலை புற்று நோய்களுக்கு மருந்தென்று சொன்னால் நம்புவீர்களா? ஏன்டி ஆக்சிடண்ட்ஸ் (Anti oxidants), ஆஸ்பிரின்  நிறைந்துள்ள பச்சைத் தேயிலைச்சாறு சில வகையான புற்று நோயை குணப்படுத்தும் என்றால் ஆச்சர்யப்படுவீர்கள் அல்லவா?


பெங்களூருவில் உள்ள மசும்தர் ஷா கான்செர் சென்டர் (MSCC), 220 வாய்ப்புற்று நோய்கொண்ட மனிதர்களுக்கு மஞ்சள் கொடுத்து மருத்துவ ஆராய்ச்சி செய்துள்ளது. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் ஒருசில வாரங்களில் வெளியிடப்படும். மஞ்சளும் சில வகையான தேயிலைச் சாறுகளும் புற்று நோய் மருத்துவத்தில் பயன்படுத்துவதை இந்த ஆராய்ச்சி உறுதி செய்யும்.

  • வாழ்க்கைமுறையும் உணவுப் பழக்கமுமே 85 சதவீத புற்று நோய்களுக்குக் காரணம். 
  • 95 சதவீத வாய்ப்புற்று நோய்களுக்கு புகையிலையே காரணம்.
  • வாழ்க்கை முறை மாற்றத்தாலும் உணவுக் கட்டுப்பாட்டாலும் பெரும்பாலான மார்பகப் புற்றுநோய்களை தடுக்க முடியும். கொழுப்பு குறைவான உணவுடன் காய்கறியும் பழங்களும் சேர்த்துக்கொள்ளும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயின் வாய்ப்புகள் மிகக் குறைவு.
  • புகையும் மதுவும் புற்று நோய்க்கான வெற்றிக் கூட்டணி. புகைப் பழக்கத்தோடு ஒருவர் மதுவும் அருந்தினால் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் எட்டு மடங்கு அதிகரிக்கும்.




ஞாயிறு, 20 மார்ச், 2011

பிச்காரி


இன்று ஆரியர்கள் அனைவரும் கொண்டாடும் ஹோலி திருவிழா. ஹோலி என்றதும் என் நினைவுக்கு வருவது வண்ணப்பொடி, எண்ணெய், கிரீஸ், மை, முட்டை, தக்காளி, பெயின்ட் என கலந்துகட்டி சீனியர்களுடன் ஹோலி விளையாடிய கல்லூரி முதலாமாண்டு ஹோலிதினம் தான். நான் அதற்கு முன்பின் அப்படி கொண்டாடியதேயில்லை. ஹோலி என்றால் நெருப்பு என்று பொருள். இன்றோ வெறும் வண்ணங்கள் மட்டும் நினைவில் நின்று இத்திருவிழாவின் எண்ணம் மெல்ல மறைகிறது. சரி, ஹோலியின் புராணக் கதை காண்போமா?
 
இப்போ நான் சொல்லப்போகும் புராணக்கதை உங்களில் பலருக்குத் தெரிந்திருக்கும். தசாவதாரம் படத்தில் கூட வருகிறது. (இது கமல் நடித்த தசாவதாரம் இல்லைங்க). ஹிரன்யஹஷிபு நெடுந்தவம் புரிந்து பிரம்மாவிடம் ஒரு அரிய வரம் பெற்றான். அதன்படி அவனை மனிதனோ மிருகமோ, பகலிலோ இரவிலோ, மண்ணிலோ விண்ணிலோ, வீட்டிலோ வெளியிலோ  கொல்ல முடியாது. மூவுலகையும் ஆள முடிவெடுத்த ஆவான் ஏராளமான கொடுமைகள் செய்தான். அனைவரும் இனி கடவுளை வணங்குவதை நிறுத்திவிட்டு தன்னை வணங்குமாறு கட்டளையிட்டான். உலகமே பயத்தில் நடுங்கிய போதும் அவன் மகன் பிரகலாதன் மட்டும் நாராயணனை வணங்கினான். பிரகலாதனை பலவகையில் பயமுறுத்தியும் அவன் கடவுளை வணங்குவதை நிறுத்தவேயில்லை. தந்தையே மகனைக் கொல்ல முடிவெடுத்தான். விஷம் கொடுத்தான், பாம்புகளுடன் அறையிலடைத்தான், பட்டினி கிடக்கச் செய்தான், யானைகளை விட்டு மிதிக்க வைத்தான். எதுவும் பிரகலாதனை ஒன்றும் செய்யவில்லை. பிறகு அவன் தங்கை ஹோலிகாவிடம் (நோட் பண்ணுங்கப்பா..நோட் பண்ணுங்க...ஹோலிகா) பிரகலாதனைக்  கொல்லுமாறு கட்டளையிட்டான் ஹிரன்யகஷிபு. ஹோலிகாவோ நெருப்பில் எரியாத வரம்* வாங்கியிருந்தாள். பிரகலாதனை மடியில் வைத்துக்கொண்டு நெருப்பிடச் சொன்னாள். பிரகலாதனுக்கு ஒன்றுமே ஆகவில்லை ஆனால் ஹோலிகா சாம்பலானாள். (* conditions apply : தனியே எரிந்தால் மட்டுமே நெருப்பு ஒன்றும் செய்யாது.) அப்புறம் நாராயணன் நரசிம்ம அவதாரம் (பாதி மனிதன் பாதி சிங்கம்) எடுத்து வந்து ஒரு மாலைப்பொழுதில் அவன் அரண்மனையின் வாசற்படியில் வைத்து வயிற்றைக் கிழித்து கொன்றதுதான் உங்களுக்குத் தெரியுமே! ஹோலிகா என்னும் அரக்கி நெருப்பில் எரிந்ததை கொண்டாடுவதே ஹோலி (நரகாசுரன் தலை வெடித்த தீபாவளி போல்).


ஹோலிக்கு முன்தினம் பழைய மரக்கட்டைகள், சருகுகளை வைத்து தீமூட்டி சுற்றி வந்து வணங்குகிறார்கள். வசந்தகாலத்தை வரவேற்கும் விதமாக மலர்களின் சாயங்களையும் செடிகொடிச்சாருகளையும் பூசி மகிழ்ந்த பழக்கமே இன்று கண்மூடித்தனமாய் கலரடிக்கும் ஹோலியானது.



என் மகள் இரண்டு வாரம் முன்னர் அப்பா பிச்காரி வேண்டுமென்றாள். அபியும் நானும் பார்த்து ஏதோ உளருகிறாள் என்று நினைத்தேன். பிறகு தங்கமணி சொல்லித்தான் தெரியும் பிச்காரி என்றால் தண்ணீர்த் துப்பாக்கி. ஒன்று வாங்கிக் கொடுத்தேன். எங்கள் வீடு இரண்டாம் தளத்தில் என்பதால் பால்கனியில் நின்று கொண்டு வருவோர் போவோர் மீதெல்லாம் தண்ணி அடிக்கிறாள் இரண்டரை வயது இளவரசி. யாராவது உன்னைத் திட்டுவாங்கடா என்றேன். யாராவது திட்டினா "புரா மத் மானோ...ஏ ஹோலி ஹை!"ன்னு சொல்லணுமாம் ( கோவிச்சுக்காதீங்க...இது ஹோலி)

அப்புறம் முக்கியமான ஒன்றைச் சொல்லாமல் இந்தப் பதிவு முடியாதுங்க. அது குஜ்ஜியா. சமோசாக்குள்ள பூர்ணம் வைத்த மாதிரியான ஒரு இனிப்பு. ரொம்ப நல்லாருக்குங்க. இது தான் ஹோலி ஸ்பெசல் ஸ்வீட்.


ஹோலி கொண்டாடும் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.





வெள்ளி, 18 மார்ச், 2011

மனதைப்பிழிந்த காதல் கதை!


ஒரு அழகான கிராமம். அந்தக் கிராமத்தின் தலைவருக்கு ஒரு பெண் இருந்தாள். அவளைப்போல் ஓர் அழகியை யாரும் பார்த்ததும் இல்லை. கேட்டதும் இல்லை. அவள் பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு ஏழை வாலிபனைக் காதலித்து வந்தாள். இது தெரிந்ததும் மொத்தக் கிராமமும் அந்தக் காதலை எதிர்த்தது. இதனால் வேறு வழி தெரியாமல்  ஊரை விட்டு ஓட திட்டமிட்டனர். திட்டமிட்டபடி ஒரு நாள் ஊரை விட்டு ஓடிவிட்டனர். கிராமமே சேர்ந்து தேடியும் அவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பிறகு அந்தக் காதலை ஏற்றுக்கொள்வதாக செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்தனர். அதைப் பார்த்த காதல் ஜோடி உடனே ஊர் திரும்பியது. மகிழ்ந்த கிராம மக்கள் மிக பிரமாண்டமான முறையில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கத் திட்டமிட்டனர்.

திருமண ஆடைகள் வாங்க கடைக்குச் சென்று திரும்பிவரும் வழியில் அவர்கள் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானது. அந்தக் காதலன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்தான். (இது  அந்தத் தலைவரின் வேலையான்னு நீங்க யோசிக்க வேண்டாம்). விபத்தன்று அவன் அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த சட்டையை அவன் நினைவாக அந்தப்பெண் வைத்திருந்தாள். ஒரு நாள் அவள் கனவில் ஒரு தேவதை வந்து அந்தச்  சட்டையை துவைத்து விடவேண்டுமென்றும் இல்லை  என்றால் குடும்பத்துக்கே பெரும் இழப்பு நேரிடும் என்றும் சொன்னது. அவள் அதை கண்டுகொள்ளவேயில்லை.
 
சில நாள் கழித்து அதே தேவதை அவள் அம்மாவின் கனவிலும் வந்து அந்தச் சட்டையை துவைத்துவிடச் சொன்னது. ஆனால் அவர்கள் அதை சட்டை செய்யவேயில்லை. பின் ஒருநாள் அதே தேவதை அவள் தந்தையின் கனவிலும் வந்து எச்சரித்ததும் அவர்களுக்கு அதன் விபரீதம் புரிந்தது. உடனே அந்தச் சட்டையை துவைத்தாள். ஆனாலும் ரத்தக் கறை போகவேயில்லை. மீண்டும் தேவதை அவள் கனவில் வந்து எச்சரித்தது. எப்படி முயன்றும் அந்தக் கறை போகவேயில்லை.

அடுத்த நாள் காலை யாரோ அவர்கள் வீட்டுக் கதவை தட்டினர். அவள் சென்று கதவைத் திறந்தாள். என்ன ஆச்சர்யம், கனவில் வரும் தேவதை நின்றிருந்தது. முகம் வெளிறிப்போய் இருந்தது. அவளைப் பார்த்து  கோபமாய்ச் சொன்னது. லூசாடி நீ! எத்தனை முறை சொல்றது? சர்ப் எக்செல் போடு கறை போயிடும்!!!

புதன், 16 மார்ச், 2011

உயிர் குடிக்கும் கடல்


முதல் உயிர் முளைத்த 
மூப்பிலா ஆழியே!
இன்னல்பல தந்து -நீ 
இன்னும் நெடுநாள் வாழியே!

அலையாய் பொங்கிவந்து 
கொலைசெய்து விளக்குகிறாய்
நிலையாமைத் தத்துவத்தை -நீ 
உள்ளொன்று வைத்துப் 
புறமொன்று காட்டும் 
கள்ளத்தனம் கற்றாயோ 
கபடமாடும் மனிதரிடம்....

பிள்ளைக்கறி கடித்து பெருந்தாயே 
பிணந்தின்னும் பருந்தானாய்!
திட்டமிட்டு செதுக்கிய நாட்டை 
எட்டடிகள் நகர்த்தி வைத்தாய்!
நீரை வெளியேற்ற 
வெட்டிய குழிகளில் 
ஊரை வெளியேற்றி 
ஊழ்வினை ஆற்றினாய்!

வீடுடைக்கும் நிலம் 
உயிர்குடிக்கும் நீர்
ஊரழிக்கும் நெருப்பு 
கதிர்வீச்சு பரப்பும் காற்று 
கரும்புகை படிந்த ஆகாயம்.
அட 
அழைப்பது சரிதானோ 
பஞ்சபூதங்களென்று....











திங்கள், 14 மார்ச், 2011

மனதின் வார்ப்பு

கல்லூரி வாழ்க்கைக்குள்
காலெடுத்து வைக்கும்வரை
நட்புக்கும் எனக்கும்
நாலாம் பொருத்தம்தான்.

வகுப்பு துவங்கியதும்
வாரம் சில சென்றபின்பு
வளாகத்தில் நிகழ்ந்ததுநம்
முதல் சந்திப்பு.

மனதில் குழப்பத்துடன்
சரிஎது தவறெதுவென
சரிவரத் தெரியாமல்
மாணவர்க் கூட்டத்தில்
தனிமையில் நான் வாட
துணைக்கரம் நீட்டிய
தோழி நீ.

காணாமல் போனஎனை
கண்டெடுத்துத் தந்தவள் நீ.
எனக்கு எதெல்லாம்
நன்றாக வருமென்று
நீ சொல்லித்தான்
எனக்கேத்  தெரியவரும்.

வகுப்பறைக்குள் அமர்ந்து
வாதிட்ட நிமிடங்களும்
நடந்து பேசி சிரித்த
நல்ல நினைவுகளும்
என்னுள் நிலைத்திருக்கும்
நானுள்ள வரையில்...

வெள்ளைத் தாளாய்
இருண்ட என் மனதில்
கள்ளி நீதான்
கவிதை எழுதினாய்.

செதுக்குவதாய் நினைத்து
சிலசமயம் நீஎன்னை
சிதைத்தும் இருக்கிறாய் - நாம்
மணிக்கணக்கில் பெசியதுமுண்டு
மாதக்கணக்கில் பேசாமலிருந்ததும் உண்டு
ஆனாலும்
நட்பென்ற  சொல்லை
யார் சொன்னாலும்
உன்முகம் எனது
உள்மனதிரையில்
ஒளிர்கிறதே........

மனதின் வார்ப்பாய்.


என்னுயிர்த்தோழி தேவிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

சனி, 12 மார்ச், 2011

முடிவு!

என் கவிதைகள் 
எங்கு தொடங்கி 
எதில் முடியும்?

சில கவிதைகள் 
என்றும் தொடரும் 
உன் நினைவுகள் போல....

கேள்வியால் துவங்கி 
கேள்வியால் முடியலாம் 
உன் பார்வைகள்  போல....

பாதியில்கூட நின்றுபோகலாம் 
உன்வருகையை எதிர்பார்த்து 
நான் ஏமாறுவது போல....

முற்றுப்புள்ளியால் அரிதாய் 
முழுமை பெறுகிறது 
உன் புன்னகை போல....

ஆச்சர்யக்குறியிலும் முடியலாம் 
திடீர்முத்தமிட்டு நீயென்னை
திக்குமுக்காடச் செய்தால்....

ஆனாலும் பாரடி 
அதிகக் கவிதைகள் முடிவதில்லை 
உன் மௌனத்தைப் போல....





செவ்வாய், 8 மார்ச், 2011

தாய்மை


மண்ணில் மகளாக 
மலர்ந்த போதும் - இந்த 
மகிழ்வில்லை எனக்கு....

மாதாவின் மார்பில் 
இதழ்வைத்த போதும் - இந்த 
இதமில்லை எனக்கு....

தமையனின் தோளில்
தங்கையான போதும் - இந்த 
தவிப்பில்லை எனக்கு....

இனிய தலைவனோடு 
இல்லறம் புகுந்தபோதும் - இந்த 
சிலிர்ப்பில்லை எனக்கு....

எந்தன் மணிவயிற்றில் 
உந்தன் உயிர்ச்சத்தம் 
உருவாகி விட்டதை 
உணர்ந்த நொடிமுதலே - இத்தனை
உவகையும் எனக்கு....

நூறாவது மகளிர்தின நல்வாழ்த்துக்கள்!



ஞாயிறு, 6 மார்ச், 2011

கவிஞன்

என்
தள்ளாத வயதிலும்
அந்த 
தமிழ்க்கவியைக்
காணச்சென்றேன்.
என்னைக் கண்டதும் 
எழுந்துவந்து 
கட்டிக்கொண்டான்.
அப்புறம் அறிந்தேன் 
தப்புத் தப்பாய் 
தமிழ் எழுதி - நான் 
தண்டித்த மாணவன் 
அவனென்று...

'கவிஞனாக எப்படி?'
 என்றேன்.
"காதலிக்கிறேன் ஐயா"
என்றான்.

சனி, 5 மார்ச், 2011

வரி விளையாட்டு


இந்தப் படத்தில் இருப்பது யார்?
மகேஷ் பூபதியும் அவரின் முதல் மனைவி ஸ்வேதா ஜெய்சங்கரும்னு சரியாச் சொன்னவங்களுக்கு வாழ்த்துக்கள்.
மகேஷ் பூபதி- பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் வென்ற முதல் இந்தியன். இன்னும் ஏராளமான டென்னிஸ் போட்டிகளில் பெரும்பாலும் இரட்டையர் பிரிவில் கலக்கியவர். 2001 ம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ வாங்கியவர். முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு போனமாதம் (16 .02 .2011 ) லாரா தாத்தாவை மணந்தார். அப்புறம் முதல் மனைவியும் அடுத்த சில நாட்களிலேயே (20 .02 .2011 ) சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர்  ரகு கைலாசை மணந்தார்.  (அட நான் சொல்ல வந்ததை விட்டு பதிவு வேறு எங்கேயோ போகுதே!)


திங்கட்கிழமை திரு பிரணாப் முகர்ஜி வாசித்த பட்ஜெட்டில் நமக்கு ஏதேனும் சலுகை இருக்கிறதா என் சல்லடை போட்டுத் தேடிக்கொண்டிருப்பவரா  நீங்கள்? அப்போ உங்களுக்குத் தான் இந்தப் பதிவு. 

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை 
என்நோற்றான் கொல் எனும் சொல்.

இப்படி ஒரு பையன் மகனாகப் பிறப்பதற்கு அவன்தந்தை என்ன புண்ணியம் செய்தானோ என ஏங்கும் படியான ஒரு ஒப்பந்தத்தில் தந்தையும் மகனும் 10.06.1994 ல் கையெழுத்து போட்டனர். அந்த ஒப்பந்தத்தின்படி உணவு, உடை, உறைவிடம், டென்னிஸ் பயிற்சி மற்றும் டிப்ஸ் என தந்தை செலவழித்த 28.5 லட்சத்தை தான் சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்த நாளிலிருந்து பத்து வருடங்களுக்குள் திருப்பித் தருவதாக எழுதினர். இது தந்தைக்குத் தான் அளிக்கும் குருதட்சணை என்றும் அதற்கு வரிவிலக்கு அளிக்குமாறும் முறையிட்டார் பூபதி. வருமான வரித்துறையும், கர்னாடக உயர்நீதி மன்றமும் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை  25.10.2010 அன்று விசாரித்த தலைமை நீதிபதி SH கபாடியா, நீதிபதிகள் KS ராதாக்ருஷ்ணன் மற்றும் ச்வத்தந்த குமார் அடங்கிய பென்ச் ஐந்தே நிமிடங்களில் தள்ளுபடி செய்தது. அதை தள்ளுபடி செய்ததற்கான காரணங்கள்....

மகனுக்கு நல்ல புத்தி சொல்லி அவன் சுயமாய் சம்பாதிக்கும் வரை அவனைக் காப்பது தந்தையின் கடமை. இந்த நீதிமன்றம் இதுபோல் ஒரு வழக்கை இதற்குமுன் பார்த்ததில்லை.

1989 ல் இருந்து 1994 வரையான காலத்தில் டென்னிஸ் விளையாட்டில் சிறந்து விளங்கிய போதும், இந்த ஒப்பந்தம் 1994 ல் செய்தது வரி விலக்கை மட்டுமே நோக்கமாகக் கொண்டது என்பதை தெளிவாக்குகிறது.

(பய புள்ள டென்னிஸ் கோர்ட்ல மட்டுமல்ல சுப்ரீம் கோர்ட்லயும் நல்லாத்தான் விளையாண்டிருக்கு)






செவ்வாய், 1 மார்ச், 2011

மறுபடியும் மகளானேன்!

வட்டநிலா வானில் 
வந்தவுடன் போனதுபோல்  
மொட்டு மலரொன்று 
முகம்காட்டி மறைந்ததுபோல் 
கட்டுக்கரும்பது கைக் 
கிட்டியதும் கசந்ததுபோல் 
தொட்டில் நெடுங்கனவே 
தொலைதூரம் ஏன்போனாய்?

கட்டிய கயவனவன் 
கைவிட்டுப் போனபின் 
ஒட்டி உறவாட 
ஒற்றையுயிர் நீயிருப்பாய் 
கெட்டுப் போகவில்லை 
வாழ்வென்றே நினைத்திருந்தேன் 
பட்டுமலர் உனையிறைவன்
படைத்ததுமேன் பறித்துக்கொண்டான்?

விழியாரப் பார்க்கவில்லை 
விரல்பிடித்து நடக்கவில்லை 
விளையாடிச் சிரிக்கவில்லை 
விடியலென வந்தவனே 
விட்டிலாகி ஏன் மறைந்தாய்?

பிறந்தவுடன் இறந்துவிட்டப் 
பிள்ளைக்குநான் தாயுமில்லை 
ஏமாற்றிய கணவனுக்கு 
இன்றுநான் மனைவியில்லை 
வாடுமென் அம்மாவுக்கு 
வருத்தந்தரும் மகளானேன்.....

Quote

Blog Archive

Followers