ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

குளிர் விட்டுப் போனதே!

ஊசிக்காற்றை ஊதி
உள்ளத்தை வெகுவாய்ச் 
சுடுங்குளிர்.

நாலிரண்டு வாரங்கள்
நகரைப் பனியாக்கும் 
நெடுங்குளிர்.

அடுத்தவர் மூச்சு 
ஆவியாய் நம்மேல் 
படுங்குளிர்.

இடைகாட்டும் விதமாய் 
உடைகட்டும் மங்கையரை 
இழுத்துப் போர்த்தி 
விடுங்குளிர்.

காதல் செடியை 
மனதில் மிகுதியாய் 
நடுங்குளிர்.

கம்பளியின்றித் 
தூக்கம் தாராக் 
கடுங்குளிர்.

வீடில்லா ஏழைகளை 
வீதியில் சாகடிக்கும் 
கொடுங்குளிர்.

கலவையாய்  உணர்வெழுப்பிக்
கலைந்து போனபின்னும் 
எழுதாக் கவிதையை 
என்னுள் விதைத்து 
நெஞ்சைத் 
தொடுங்குளிர்... 

Quote

Followers