ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

சிங்கமில்லாக் காடு


செங்கோல் வாங்கிய சிங்கமொன்று
ஜெயமாய்க் காட்டை ஆண்டது
மறுமுறை ஆட்சியைப் பிடித்தபின்னும்
மர்மமாய் அதுவும் மாண்டது
உடனிருந்த கள்ள நரியொன்றின்
உள்ளத்தில் ஆசையோ மூண்டது
புசிக்கலாம் இந்தக் காட்டையென்றே
புதிய வேடம் பூண்டது!
வேரில் ஊற்றிய வெந்நீராய்
வெடுக்கெனப் பதவியைப் பறித்ததனால்
திடுக்கிட்டுத் திருந்திய ஓநாயோ
தியான நாடகம் போட்டது!
ஊரில் உள்ள உத்தமர்கள்
ஒன்றாய்ச் சேர்ந்திட வேண்டுமென
தேரில் தன்னை ஏற்றிடவே
திருடர்கள் துணையைக் கேட்டது!
அத்தை மறைந்த நல்வாய்ப்பில்
தத்தை ஒன்றும் கிளையமர்ந்து
விழியில் தீபம் ஏற்றியே
வித்தைக் காட்டத் தொடங்கியது!
நத்தை வேகத்தில் நகர்ந்தவொரு
சொத்தை வாங்கிய வழக்கினது
திருத்தி எழுதிய தீர்ப்பாலே
நரியின் கனவோ முடங்கியது!
காட்டைக் காக்கத் தேர்ந்தெடுத்த
அடிமை விலங்குகள் ஓரிடத்தில்
அவரவர் வேலையை மறந்துவிட்டு
அடைபட்டுக் கிடந்து வியர்த்தனவே!
காசை வாங்கி வாக்களித்த
கானகத்து உயிர்களெல்லாம்
ஆசை வெறுத்த மனத்துடனே
அடுத்தடுத்த நாடகம் பார்த்தனவே!
#கலாநேசன் சரவணன்
14-Feb-2017

Quote

Followers