Google+ Followers

வியாழன், 20 அக்டோபர், 2011

காதலால் கலக்கலாம் வா!


உன்னை 
வருடும் காற்றைக்  
கொஞ்சம் வரச்சொல்... 
உன்
வாசம் எனக்குக் 
கொஞ்சம் தரச்சொல்.

விண்மீன் தோழியிடம் 
புன்னகையைக் கொடுத்தனுப்பு.
விரல்களின் வெம்மையை 
இரவிடம் கொடுத்தனுப்பு.
இதழ்களின் குளுமையை 
முகிலிடம் தந்தனுப்பு.
நினைவுகளை மெத்தையாக்கி
நிலவிடம் தந்தனுப்பு.
திகட்டாத அன்பைத் 
தீந்தமிழிடம் சொல்லியனுப்பு.

என் 
கற்பூரக் காதலை 
அக்னியாய் அணைத்துக்கொள்.
கொஞ்சுதலில் குழந்தையாய் 
கெஞ்சுதலில் இளமையாய் 
நேசத்தில் தாய்மையாய்
முழுதாய் கிரகித்துக்கொள்.

கடலுக்குள் கலக்கும் 
நதிபோல 
காதலுக்குள் கலக்கலாம் 
வா!சனி, 15 அக்டோபர், 2011

உதயநிலா

இன்று வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் கர்வா சவுத் (KARVA CHAUTH)  கொண்டாடப்படுகிறது. திருமணமான இந்துப் பெண்கள் கணவனின் நீண்ட ஆயுள் வேண்டி நிலவு வரும் வரை விரதமிருப்பார்கள். நிலவு வந்ததும் அதை நீரிலோ, துப்பட்டா அல்லது சல்லடை வைத்தோ பார்த்து பின் கணவன் முகம் பார்ப்பார்கள். "கடவுளே என் கணவனுக்கு ஆரோக்யமான நீண்ட ஆயுள் கொடு, நான் சுமங்கலியாக (இவனைத் தனியே தவிக்கவிட்டுட்டு!) இறக்க வேண்டும்" என வேண்டிக்கொள்வார்கள்.கர்வா என்றால் மண்கலசம். சௌத் (சௌதா) என்றால் நான்கு (அதாவது கார்த்திகை மாதத்தின் பௌர்ணமியில் இருந்து நான்காவது நாள்). மண் கலசத்தில் நீரையோ அல்லது பாலையோ நிரப்பி அதில் பஞ்ச ரத்தினங்களை இட்டு தானமாகக் கொடுத்து கணவனுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளும் பண்டிகை என்று பொருள்.


 அந்த காலத்தில் வெகு தொலைவில் வாக்கப்பட்டுப் போகும் பெண்கள், ஏதாவது  பிரச்சனை என்றால் தங்கள் குடும்பத்தை உடனடியாகத் தொடர்பு கொள்ள இயலாது. அதனால் நாத்தனார் அல்லது அருகில் உள்ள குடும்பத்துப் பெண்களை சகோதரியாக ஏற்று பிரச்சனைகளை பேசிக்கொள்ளவும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்கவும் இந்தப் பண்டிகை பழங்காலத்தில் கொண்டாடப்பட்டது. இன்றோ சாமியார் மடத்தில் பூனை கட்டிய கதையாய், மருதாணி இட்டு வளையல் போட்டு புடவை கட்டும் பண்டிகையாகிப் போனது கர்வா சௌத்.கர்வா சௌத் அன்று சூரிய உதயத்தில் இருந்து நிலவு வரும் வரை தண்ணீர் கூட குடிக்காமல் பெண்கள் கணவனுக்காக விரதமிருக்கிறார்கள். முன்தினமே கை நிறைய வளையல் வாங்கிக்கொண்டு மருதாணி இட்டுக்கொள்கிறார்கள். அன்று பெரும்பாலும் முகூர்த்த புடவைகளை கட்டிக்கொண்டு தெருவில் உள்ள பெண்களெல்லாம் ஒன்றாய் கூடி பூஜை செய்கிறார்கள்.


 உதயநிலா 
அன்று 
சந்திரனைப் பார்த்த 
சல்லடைத் தட்டுவழி 
இந்திரனைப் பார்த்தாள்
ரதி - அதன்பின் 
ஒவ்வொரு நாளும் 
விடிகிறது அவனுக்கு 
உதயநிலா முகம் பார்த்து...

செவ்வாய், 11 அக்டோபர், 2011

மனசாட்சி (சவால் சிறுகதை-2011)

சூரியத் தலைவரின் ஆட்சி முடிந்து நிலாராணி ஆட்சிக்கு வந்திருந்த முன்னிரவு. நட்சத்திரங்களுக்குப் போட்டியாக தெருவெங்கும் வண்ண வண்ண விளக்குகள் மின்னின. சாலையை மறித்துச் சமைத்த மேடைமுன் அமைச்சரின் உரைகேட்க ஆவலாய்க் காத்திருந்தது காசும் 'தண்ணியும்' கொடுத்துச் சேர்த்திருந்த மக்கள் வெள்ளம். வீட்டில் பல்பு பியூஸ் போனதால் அருகில் இருக்கும் சரத்தில் இருந்து குண்டு பல்பு ஒன்றைக் கழட்டிப் போகலாமா என தொண்டன் ஒருவன் யோசித்துக் கொண்டிருந்தான். வரிசையாய்க் கார்கள் வந்து நின்றதும் எழுந்த 'வாழ்க வாழ்க' கோஷம் அவன் கவனத்தைக்  கலைத்தது. கூட்டம் கலையாமல் இருக்க மைக்கைக் கடித்து ஒப்பேத்திக் கொண்டிருந்த ஒருவன் அவசர அவசரமாய் அப்புறப்படுத்தப்பட்டான். அடுத்ததாக புரட்சிப் புயல், மங்கையர் குலம்காக்க தென் கங்கையில் வந்துதித்த வேங்கை, மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர் திரு.உத்தமன் அவர்கள் உங்களிடையே சிறப்புரை ஆற்றுவார் என வட்டச் செயலாளர் தன் கட்டைக் குரலில் கூவினார். 

வழக்கமான வசனங்களைச் சொல்லி முடித்ததும் அமைச்சர் தன் உதவியாளர் தயாரித்த உரையைத் துவங்கினார். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது குழந்தைகள்  நலத்தில், பெண்களைப் பேணுவதில், பணியாளர் உயர்வில், பழங்குடி இன மேம்பாட்டில் தமிழகம்  முன்னோடியாகத் திகழ்கிறது. ஒவ்வொரு நாளும் நேபாளத்தில் இருந்தும் வங்கதேசத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் கொல்கத்தாவிற்கும் மும்பைக்கும் கடத்தப்படுகிறார்கள். நாட்டின் தலைநகர் தில்லியில் பாருங்கள் போன மாதம் கூட குண்டு வெடித்தது. இன்னும் இன்னும் பல புள்ளி விவரங்களைச்  சொல்லி முடித்து, இதுபோன்ற எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக வைத்திருக்க அயராது பாடுபடுவேன் என்று இந்த மாமேடையில் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று முடித்தார். நிகழ்ச்சி முடிந்ததும்  தன் நீலாங்கரை பண்ணை வீட்டுக்கு ஓய்வெடுக்கக் கிளம்பினார் அமைச்சர்.

மறுநாள் காலை சமூக நலத்துறையின் அலுவலகக் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் தன் நாற்காலியில் சுழன்றபடி அமைச்சரின் உரையைப் படித்துக் கொண்டிருந்தார் குழந்தைகள் நல இயக்குனர் ராஜமாணிக்கம். ஓராண்டுக்கு முன்வரை டிபார்ட்மென்டில் இவர் முரட்டுச்சிங்கம். மிக நேர்மையானவர் என்று பல பரிசுகளையும் பாராட்டுகளையும் வாங்கியவர். அண்மையில் அமைச்சரான உத்தமனின் நட்பு கிடைத்ததும் அப்படியே மாறிப்போனார். நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் கைவைப்பது, அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதெல்லாம் அமைச்சரின் செல்வாக்கால் அன்றாடப் பணிகளானது . இவர் மூலம் வசூலாகும் தொகையில் ஒரு பெரும்பகுதியை அமைச்சரிடம் கொண்டு சேர்க்க விஷ்ணு உதவினான். இன்டர்காமில் விஷ்ணுவை அழைத்து தன்னறைக்கு வரச்சொன்னார் ராஜமாணிக்கம்.

விஷ்ணு இதே துறையின் கணக்கெடுப்புப் பிரிவில் வேலை பார்ப்பவன். விஷ்ணுவும் ஆரம்பத்தில் ராஜமாணிக்கம் போல் நல்லவனாகத்தான்  இருந்தான். சில நேரங்களில் சக அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை போலீசில் கூட போட்டுக் கொடுத்திருக்கிறான். எல்லோரும் நல்லவர்களே, தவறு செய்யத் தகுந்த தருணம் கிடைக்கும் வரை. சில ஆயிரங்கள் மட்டுமே சம்பளம் வாங்கும் ஒருவனை பணத்தால் அடித்தால் அவன் ஊழலுக்குத் துணைபோகத்தானே செய்வான். கொள்கைப் பிடிப்போடு நேர்மையான வாழ்க்கை ஒருசிலருக்கே வாய்க்கிறது. அமைச்சரின் பார்வைக்கு அலுவலகக் கோப்புகளை அனுப்புவதாகச் சொல்லி விஷ்ணு மூலமே 'பெட்டி' அனுப்பத் துவங்கினார் ராஜமாணிக்கம். அதில் லஞ்சப் பணம் இருப்பது தெரியாமல் இருக்க விஷ்ணு என்ன பிஞ்சுக் குழந்தையா? பின்னர் இவனையும் கொஞ்சம் கவனிக்கத் துவங்கினார் ராஜமாணிக்கம். பிறகென்ன அடுத்தவர் செய்யும் தவறைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் போலீசில் சொன்ன உளவாளியே மெல்ல மெல்ல களவாணி ஆனான்.

அறைக்கதவை தட்டி உத்தரவு பெற்று உள்ளே நுழைந்தான் விஷ்ணு. வா விஷ்ணு, இதுவரை கொஞ்சம் கொஞ்சமாய் மட்டுமே காசுபார்த்த நமக்கு ஒரு பெரிய அமௌன்ட் கிடைக்கப் போகிறது. அடுத்த வாரம் மும்பையில் இருந்து சரக்கு வருகிறது. எல்லாச் சரக்கையும் பத்திரமாய் கொல்கத்தா அனுப்பினால் நம் வேலை முடிந்தது. பேசியபடி மொத்தத் தொகையும் நாளைக்கே நம் கைக்கு வந்துவிடும். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், சமீப காலமாக உள்ளிருந்தே காவல் துறைக்கு யாரோ தகவல் தருகிறார்கள். அதனால் நீயும் போலிசுக்குத்  தகவல் சொல்லிடு. அதாவது தவறான தகவல் சொல்லி காவல் துறையின் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டால் நம் வேலை மிகச் சுலபமாக முடிந்துவிடும். இரண்டு நாட்களுக்கு எனக்கு போன், மெசேஜ் எதுவும் பண்ணாதே! தவறான தகவலை போலிசுக்கு அனுப்பியதும், ஒரு துண்டுக் காகிதத்தில்  எழுதி எனக்கு வரும் கடிதங்களோடு வைத்திடு என்று  பேசிக்கொண்டே போனார். சரி சார், மும்பையில் இருந்து என்ன சரக்கு வருகிறது என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதிலில் அதிர்ந்தான் விஷ்ணு. 

தன்னறைக்குத் திரும்பிய விஷ்ணு கவலையோடு யோசனையில் ஆழ்ந்தான். அடுத்தவாரம் மும்பையில் இருந்து வருவதாய்ச் சொன்ன சரக்கு விளையாட்டுப் பொருட்களோ, வெடிமருந்தோ, கஞ்சா அபினோ , கடத்தல் பொருட்களோ அல்ல. உயிருள்ள ஜீவன்கள். நேபாளத்தில் இருந்து கடத்திவரப்பட்ட அப்பாவி இளம்பெண்கள். தாதர் எக்ஸ்பிரஸில் வரும் அவர்களை சென்னையில் தங்க வைத்து ஹௌரா எக்ஸ்பிரஸில் கொல்கத்தா அனுப்புவது இவர்கள் வேலை. அங்கிருந்து அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடிமைகளாக விற்பனை செய்யப்படுவர். அரசியல் அதிகார செல்வாக்குடன் மிகப்பெரிய நெட்வொர்க்கே இதற்குப்பின் செயல்படுகிறது. இவர்கள் அனைவரும் திருமணம், வசதியான வாழ்க்கை என ஆசை காட்டி நேபாளத்தில் இருந்து கடத்திவரப்பட்டவர்கள். ஒருசிலரை அறுபதாயிரம் ரூபாய்க்குப் பெற்றோரே விற்ற கொடுமையும் நடந்திருக்கிறது. சென்னை வருபவர்கள் ஒரு தனியார் அநாதை விடுதியில் தங்கவைக்கப்படுவர். ஒருசிலர் அமைச்சரின் பண்ணை வீட்டுக்கும் அனுப்பப்படுவர். மும்பையில் இருந்து நேரடியாக கொல்கத்தா கொண்டு செல்வதில் சில தடங்கல் ஏற்பட்டதால் இந்த மாற்று ஏற்பாடு. ராஜமாணிக்கத்துடன் சேர்ந்து சிறுசிறு தவறுகள் செய்திருந்த போதும் இத்தனை பேர் வாழ்க்கையைச் சீரழிப்பதில் விஷ்ணுவுக்கு உடன்பாடு இல்லை. நீண்ட யோசனைக்குப் பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய் கணினியில் சில வாசகங்களை டைப் செய்து பிரிண்ட் எடுத்தான். கூடவே மேலும் கீழும் சில வெள்ளைத்தாள்களைச்  சேர்த்துப் பையில் போட்டுக்கொண்டான். 'பொறி' என்று கோகுலுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினான் விஷ்ணு.

விஷ்ணு வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக தான் பிரின்ட் செய்து கொண்டுவந்திருந்த பேப்பரை எடுத்து டீப்பாயில் வைத்தபடி கீதா இங்கிருந்த ஸ்கேல் எங்கே என மனைவியிடம் வினவினான். என்னங்க பரீட்சை ஏதேனும் எழுதப்போறீங்களா  வந்ததும் வராததுமா ஸ்கேல் கேக்குறீங்க என்றபடி ஸ்டீல் ஸ்கேலோடு வந்தாள் கீதா. தான் டைப் செய்திருந்ததை இரு பகுதிகளாக் கிழித்தான். பிறகு கவர் ஏதும் வாங்காமல் வந்துவிட்டதை உணர்ந்தவனாய், கீதா கடைக்குப் போயிட்டு வரேன் கதவை சாத்திக்கோ என்றபடி வீட்டிலிருந்து வெளியேறினான்.

கோகுல்நாத்  நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்தது போல ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. முன்பு அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதை முன்கூட்டியே விஷ்ணு போட்டுக் கொடுத்ததும் கோகுலுக்குத்தான். போனதடவை இருவரும் பேசிவைத்துக்கொண்ட சங்கேத வார்த்தை தான் பொறி. அதன் பிறகு விஷ்ணுவே ராஜமாணிக்கத்தின் பொறியில் மாட்டிக்கொண்டதால் கோகுலுக்கு தகவல் ஏதும் அனுப்பப்படவில்லை. வெகுநாட்களுக்குப் பிறகு விஷ்ணுவிடம் இருந்து மெசேஜ் வந்த போது கோகுல் வேறோர் வேலையாய் விஷ்ணுவின் வீடிருக்கும் பகுதியில் தான் இருந்தார். அந்த வேலை முடிந்ததும் விஷ்ணுவின் வீட்டிற்குக் கிளம்பினார்.

கடைக்குச் சென்றிருந்த விஷ்ணுவை எதிர்பார்த்துக் கதவைத் திறந்த கீதா கோகுலைப் பார்த்ததும் குழம்பினாள். நான் காவல்துறை அதிகாரி கோகுல்நாத், விஷ்ணு இல்லையா என்று கேட்டார். அவர் பக்கத்துலதான் கடைக்குப் போயிருக்கார், உட்காருங்கள் குடிக்க ஏதேனும் எடுத்து வருகிறேன் என்றபடி சமையலறைக்குச் சென்றாள் கீதா. சுவர்க்கடிகாரம், டிவி என்று நோட்டம்விட்டுக்கொண்டிருந்த கோகுல் டீப்பாயின் மேலிருந்த காகிதங்களைப் பார்த்தார்.

"Sir, எஸ்.பி.கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்.  கவலை வேண்டாம் - விஷ்ணு" என்று ஒன்றிலும் "Mr  . கோகுல்- S W H2 6F  இதுதான் குறியீடு. கவனம் - விஷ்ணு" என்று மற்றொன்றிலும் இருந்தது. இது என்ன குறியீடு என்று யோசித்துக் கொண்டிருக்கையில் கோகுலின் கைப்பேசி சிணுங்கியது. சார் நான் விஷ்ணு பேசறேன் ஞாபகம் இருக்குங்களா? உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்றான். போனை கட் பண்ணிட்டு உன் வீட்டுக்கு வா பேசலாம் என்றார் கோகுல்.

விஷ்ணு வந்ததும், சமூக நலத்துறை (Social Welfare) அலுவலகத்தின் ஆறாவது மாடியில் இருக்கும் H2 பிளாக்கில் என்ன நடக்கப்போகிறது எனக்கேட்டார் கோகுல். எவ்வளவு எளிதாய் தன் குறியீட்டைப் புரிந்து கொண்டார் என வியந்த விஷ்ணு எல்லாவற்றையும் விளக்கமாகச் சொன்னான். கவனமாய் விஷ்ணு சொல்வதை முழுவதும் கேட்ட கோகுல்நாத், நாளை ராஜமாணிக்கத்தை நிச்சயம் கைது செய்யப் போவதில்லை என்றார். அதைக்கேட்டு அதிர்ந்த விஷ்ணுவின் முகபாவத்தை ரசித்தபடி தொடர்ந்தார். நாளை கைது செய்தால் ராஜமாணிக்கத்தைத் தவிர அமைச்சர் உட்பட அத்தனை பேரும்  தப்பி விடுவார்கள். அவர்கள் திட்டமிட்டபடி அப்படியே தொடரட்டும். நீ ராஜமாணிக்கத்திற்கு டைப் செய்துள்ள வாசகத்தில் "தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்" என்பதை "தவறான தகவலைக் கொடுத்துவிட்டேன்" என்று மாற்றி நாளை காலை அவருக்கு அனுப்பிவிடு. ராஜமாணிக்கத்தின் கைக்குப் பணம் வந்தபின் எனக்கு ஒரு மிஸ்டு கால் கொடு. நீ தவறாகக் கொடுத்தத் தகவலை உறுதிசெய்ய நான்காவது மாடிக்கு நாலு போலீசை அனுப்புகிறேன். பிறகு என்னவெல்லாம்  செய்யவேண்டும் என்பதை விளக்கிச் சொல்லிவிட்டுக் கிளம்பினார் கோகுல்.

அடுத்த வாரத்தில் ஒருநாள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த தாதர் எக்ஸ்பிரஸில், மும்பையில் இருந்து கடத்தி வரப்பட்ட இருபது பெண்கள் போலீசாரால் மீட்கப்பட்டனர். இன்னும் சில வாரங்கள் கழித்து அமைச்சரின் தொடர்பு அறியப்பட்டதும் இவ்வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. ராஜமாணிக்கம், உத்தமன் இன்னும் பல முக்கியப் புள்ளிகள் ஒருநாள் அதிகாலையில் கைது செய்யப்பட்டனர். நாடெங்கும் நீதியின் நம்பிக்கைக் கீற்றுகளை விதைத்தபடி அடிவானில் உதித்தான் ஆரஞ்சுச் சூரியன்.

குறிப்பு: இது பரிசல் + ஆதியுடன் 'யுடான்ஸ்' இணைந்து வழங்கும் சவால் சிறுகதைப் போட்டிக்கான சிறுகதை. யுடான்சில் நீங்கள் அளிக்கும் வாக்குகளுக்கு முடிவைத் தேர்வதில் 10  % பங்குண்டு. எனவே இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால் கீழே உள்ள யு டான்ஸ் பட்டனில் உள்ள லைக்கைக் க்ளிக்கி தவறாமல் வாக்களிக்கவும். நன்றி.ஞாயிறு, 2 அக்டோபர், 2011

உயிரின் விலை 27 ரூபாய்


ரிஷி என்ற மனநிலை சரியில்லாத அண்ணனுக்கும் கணேஷ் என்ற உடல் ஊனமுற்ற அண்ணனுக்கும் ஒரே தம்பியான 22 வயது உமேஷ் குமார் பாண்டே மானேசர் - குர்கான் நெடுஞ்சாலையில் உள்ள ஓர் சுங்கச்சாவடியில் நான்கு மாதத்திற்கு முன்னர் பணியில் சேர்ந்தான். செப்டெம்பர் 22 நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் வழக்கம் போல டோல் பூத்தில் பணம் வசூலித்துக் கொண்டிருந்தான். டோல் பூத் விதிகளின் படி அருகில் இருபது கிலோமீட்டர் சுற்றுவட்டத்தில் உள்ள கிராமங்களின் வாகனகளுக்கு சுங்கவரி கிடையாது.

வெள்ளை நிற போலீரோவில் விஜய்வீர் யாதவ் (28) டோல் பூத்திற்கு வந்த போது  உமேஷ் 27  ரூபாய்க் கட்டணம் கேட்டான். அதை மறுத்த விஜய் தான் அருகில் உள்ள ஓர் கிராமத்திலிருந்து வருவதாகச் சொன்னான். விதிப்படி வண்டியின் ஒரிஜினல் RC காண்பித்தால் சுங்கவரி கட்டத் தேவையில்லை. விஜயிடம் RC எதுவும் இல்லை வெறும் ஓட்டுனர் உரிமம் மட்டுமே வைத்திருந்தான். இருந்த போதும் விஜய் மிரட்டியதால் உமேஷ் கேட்டைத் திறந்துவிட்டு போகும்படிச் சொன்னான். அதன் பின்னரும் சும்மா போகாமல் உமேஷை சுட்டுவிட்டுச் சென்றான் அப்பாவி. கழுத்தில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தான் உமேஷ். இந்த வீடியோவைப் பாருங்கள்.
 
கேட் திறந்தே இருந்ததால் பின்னிருந்த ஐந்தாறு வாகனங்களும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி டோல் செலுத்தாமல் வேகமாய் வெளியேறின... உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த உமேஷை விட்டுவிட்டு. பின்னொரு ட்ரக்காரர் கவனித்து தகவல் சொல்லி மருத்துவமனை கொண்டுசெல்லும் முன் உயிர்விட்டான் உமேஷ். நியாயமாய் 27 ரூபாய்க் கட்டணம் செலுத்தச் சொன்னதற்காக கொலைசெய்யப்பட்ட கொடுமையை என்னவென்று சொல்வது. உமேஷின் மறைவால் மூன்றே மாதத்திற்கு முன் உமேஷை மணந்தவளும் உமேஷின் சம்பளத்தை மட்டுமே நம்பி உயிர்வாழ்ந்த நால்வரும் (வயதான பெற்றோர்கள் மற்றும் இரு அண்ணன்கள்) மீளாத்துயரில் வாடுகின்றனர். அவர்களுக்கு ஆறுதல் சொல்ல நம்மிடம் வார்த்தைகளில்லை. இந்தக் குடும்பத்திற்கு உதவ முன்வருவோர் கீழ்காணும் முகவரிக்கு காசோலை அனுப்பலாம். (நன்றி: NDTV)

Ramrati Pandey
Account Number: 30496591243
State Bank of India
Birha, Bijhauli, Hanumana,
Rewa, Madhya Pradesh
India
Pin Code: 486335

மேலும் விவரங்களுக்கு NDTV ன் இந்த லிங்கைப் பார்க்கவும்.

Quote

Followers