Google+ Followers

செவ்வாய், 11 அக்டோபர், 2011

மனசாட்சி (சவால் சிறுகதை-2011)

சூரியத் தலைவரின் ஆட்சி முடிந்து நிலாராணி ஆட்சிக்கு வந்திருந்த முன்னிரவு. நட்சத்திரங்களுக்குப் போட்டியாக தெருவெங்கும் வண்ண வண்ண விளக்குகள் மின்னின. சாலையை மறித்துச் சமைத்த மேடைமுன் அமைச்சரின் உரைகேட்க ஆவலாய்க் காத்திருந்தது காசும் 'தண்ணியும்' கொடுத்துச் சேர்த்திருந்த மக்கள் வெள்ளம். வீட்டில் பல்பு பியூஸ் போனதால் அருகில் இருக்கும் சரத்தில் இருந்து குண்டு பல்பு ஒன்றைக் கழட்டிப் போகலாமா என தொண்டன் ஒருவன் யோசித்துக் கொண்டிருந்தான். வரிசையாய்க் கார்கள் வந்து நின்றதும் எழுந்த 'வாழ்க வாழ்க' கோஷம் அவன் கவனத்தைக்  கலைத்தது. கூட்டம் கலையாமல் இருக்க மைக்கைக் கடித்து ஒப்பேத்திக் கொண்டிருந்த ஒருவன் அவசர அவசரமாய் அப்புறப்படுத்தப்பட்டான். அடுத்ததாக புரட்சிப் புயல், மங்கையர் குலம்காக்க தென் கங்கையில் வந்துதித்த வேங்கை, மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர் திரு.உத்தமன் அவர்கள் உங்களிடையே சிறப்புரை ஆற்றுவார் என வட்டச் செயலாளர் தன் கட்டைக் குரலில் கூவினார். 

வழக்கமான வசனங்களைச் சொல்லி முடித்ததும் அமைச்சர் தன் உதவியாளர் தயாரித்த உரையைத் துவங்கினார். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது குழந்தைகள்  நலத்தில், பெண்களைப் பேணுவதில், பணியாளர் உயர்வில், பழங்குடி இன மேம்பாட்டில் தமிழகம்  முன்னோடியாகத் திகழ்கிறது. ஒவ்வொரு நாளும் நேபாளத்தில் இருந்தும் வங்கதேசத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் கொல்கத்தாவிற்கும் மும்பைக்கும் கடத்தப்படுகிறார்கள். நாட்டின் தலைநகர் தில்லியில் பாருங்கள் போன மாதம் கூட குண்டு வெடித்தது. இன்னும் இன்னும் பல புள்ளி விவரங்களைச்  சொல்லி முடித்து, இதுபோன்ற எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக வைத்திருக்க அயராது பாடுபடுவேன் என்று இந்த மாமேடையில் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று முடித்தார். நிகழ்ச்சி முடிந்ததும்  தன் நீலாங்கரை பண்ணை வீட்டுக்கு ஓய்வெடுக்கக் கிளம்பினார் அமைச்சர்.

மறுநாள் காலை சமூக நலத்துறையின் அலுவலகக் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் தன் நாற்காலியில் சுழன்றபடி அமைச்சரின் உரையைப் படித்துக் கொண்டிருந்தார் குழந்தைகள் நல இயக்குனர் ராஜமாணிக்கம். ஓராண்டுக்கு முன்வரை டிபார்ட்மென்டில் இவர் முரட்டுச்சிங்கம். மிக நேர்மையானவர் என்று பல பரிசுகளையும் பாராட்டுகளையும் வாங்கியவர். அண்மையில் அமைச்சரான உத்தமனின் நட்பு கிடைத்ததும் அப்படியே மாறிப்போனார். நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் கைவைப்பது, அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதெல்லாம் அமைச்சரின் செல்வாக்கால் அன்றாடப் பணிகளானது . இவர் மூலம் வசூலாகும் தொகையில் ஒரு பெரும்பகுதியை அமைச்சரிடம் கொண்டு சேர்க்க விஷ்ணு உதவினான். இன்டர்காமில் விஷ்ணுவை அழைத்து தன்னறைக்கு வரச்சொன்னார் ராஜமாணிக்கம்.

விஷ்ணு இதே துறையின் கணக்கெடுப்புப் பிரிவில் வேலை பார்ப்பவன். விஷ்ணுவும் ஆரம்பத்தில் ராஜமாணிக்கம் போல் நல்லவனாகத்தான்  இருந்தான். சில நேரங்களில் சக அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை போலீசில் கூட போட்டுக் கொடுத்திருக்கிறான். எல்லோரும் நல்லவர்களே, தவறு செய்யத் தகுந்த தருணம் கிடைக்கும் வரை. சில ஆயிரங்கள் மட்டுமே சம்பளம் வாங்கும் ஒருவனை பணத்தால் அடித்தால் அவன் ஊழலுக்குத் துணைபோகத்தானே செய்வான். கொள்கைப் பிடிப்போடு நேர்மையான வாழ்க்கை ஒருசிலருக்கே வாய்க்கிறது. அமைச்சரின் பார்வைக்கு அலுவலகக் கோப்புகளை அனுப்புவதாகச் சொல்லி விஷ்ணு மூலமே 'பெட்டி' அனுப்பத் துவங்கினார் ராஜமாணிக்கம். அதில் லஞ்சப் பணம் இருப்பது தெரியாமல் இருக்க விஷ்ணு என்ன பிஞ்சுக் குழந்தையா? பின்னர் இவனையும் கொஞ்சம் கவனிக்கத் துவங்கினார் ராஜமாணிக்கம். பிறகென்ன அடுத்தவர் செய்யும் தவறைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் போலீசில் சொன்ன உளவாளியே மெல்ல மெல்ல களவாணி ஆனான்.

அறைக்கதவை தட்டி உத்தரவு பெற்று உள்ளே நுழைந்தான் விஷ்ணு. வா விஷ்ணு, இதுவரை கொஞ்சம் கொஞ்சமாய் மட்டுமே காசுபார்த்த நமக்கு ஒரு பெரிய அமௌன்ட் கிடைக்கப் போகிறது. அடுத்த வாரம் மும்பையில் இருந்து சரக்கு வருகிறது. எல்லாச் சரக்கையும் பத்திரமாய் கொல்கத்தா அனுப்பினால் நம் வேலை முடிந்தது. பேசியபடி மொத்தத் தொகையும் நாளைக்கே நம் கைக்கு வந்துவிடும். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், சமீப காலமாக உள்ளிருந்தே காவல் துறைக்கு யாரோ தகவல் தருகிறார்கள். அதனால் நீயும் போலிசுக்குத்  தகவல் சொல்லிடு. அதாவது தவறான தகவல் சொல்லி காவல் துறையின் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டால் நம் வேலை மிகச் சுலபமாக முடிந்துவிடும். இரண்டு நாட்களுக்கு எனக்கு போன், மெசேஜ் எதுவும் பண்ணாதே! தவறான தகவலை போலிசுக்கு அனுப்பியதும், ஒரு துண்டுக் காகிதத்தில்  எழுதி எனக்கு வரும் கடிதங்களோடு வைத்திடு என்று  பேசிக்கொண்டே போனார். சரி சார், மும்பையில் இருந்து என்ன சரக்கு வருகிறது என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதிலில் அதிர்ந்தான் விஷ்ணு. 

தன்னறைக்குத் திரும்பிய விஷ்ணு கவலையோடு யோசனையில் ஆழ்ந்தான். அடுத்தவாரம் மும்பையில் இருந்து வருவதாய்ச் சொன்ன சரக்கு விளையாட்டுப் பொருட்களோ, வெடிமருந்தோ, கஞ்சா அபினோ , கடத்தல் பொருட்களோ அல்ல. உயிருள்ள ஜீவன்கள். நேபாளத்தில் இருந்து கடத்திவரப்பட்ட அப்பாவி இளம்பெண்கள். தாதர் எக்ஸ்பிரஸில் வரும் அவர்களை சென்னையில் தங்க வைத்து ஹௌரா எக்ஸ்பிரஸில் கொல்கத்தா அனுப்புவது இவர்கள் வேலை. அங்கிருந்து அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடிமைகளாக விற்பனை செய்யப்படுவர். அரசியல் அதிகார செல்வாக்குடன் மிகப்பெரிய நெட்வொர்க்கே இதற்குப்பின் செயல்படுகிறது. இவர்கள் அனைவரும் திருமணம், வசதியான வாழ்க்கை என ஆசை காட்டி நேபாளத்தில் இருந்து கடத்திவரப்பட்டவர்கள். ஒருசிலரை அறுபதாயிரம் ரூபாய்க்குப் பெற்றோரே விற்ற கொடுமையும் நடந்திருக்கிறது. சென்னை வருபவர்கள் ஒரு தனியார் அநாதை விடுதியில் தங்கவைக்கப்படுவர். ஒருசிலர் அமைச்சரின் பண்ணை வீட்டுக்கும் அனுப்பப்படுவர். மும்பையில் இருந்து நேரடியாக கொல்கத்தா கொண்டு செல்வதில் சில தடங்கல் ஏற்பட்டதால் இந்த மாற்று ஏற்பாடு. ராஜமாணிக்கத்துடன் சேர்ந்து சிறுசிறு தவறுகள் செய்திருந்த போதும் இத்தனை பேர் வாழ்க்கையைச் சீரழிப்பதில் விஷ்ணுவுக்கு உடன்பாடு இல்லை. நீண்ட யோசனைக்குப் பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய் கணினியில் சில வாசகங்களை டைப் செய்து பிரிண்ட் எடுத்தான். கூடவே மேலும் கீழும் சில வெள்ளைத்தாள்களைச்  சேர்த்துப் பையில் போட்டுக்கொண்டான். 'பொறி' என்று கோகுலுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினான் விஷ்ணு.

விஷ்ணு வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக தான் பிரின்ட் செய்து கொண்டுவந்திருந்த பேப்பரை எடுத்து டீப்பாயில் வைத்தபடி கீதா இங்கிருந்த ஸ்கேல் எங்கே என மனைவியிடம் வினவினான். என்னங்க பரீட்சை ஏதேனும் எழுதப்போறீங்களா  வந்ததும் வராததுமா ஸ்கேல் கேக்குறீங்க என்றபடி ஸ்டீல் ஸ்கேலோடு வந்தாள் கீதா. தான் டைப் செய்திருந்ததை இரு பகுதிகளாக் கிழித்தான். பிறகு கவர் ஏதும் வாங்காமல் வந்துவிட்டதை உணர்ந்தவனாய், கீதா கடைக்குப் போயிட்டு வரேன் கதவை சாத்திக்கோ என்றபடி வீட்டிலிருந்து வெளியேறினான்.

கோகுல்நாத்  நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்தது போல ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. முன்பு அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதை முன்கூட்டியே விஷ்ணு போட்டுக் கொடுத்ததும் கோகுலுக்குத்தான். போனதடவை இருவரும் பேசிவைத்துக்கொண்ட சங்கேத வார்த்தை தான் பொறி. அதன் பிறகு விஷ்ணுவே ராஜமாணிக்கத்தின் பொறியில் மாட்டிக்கொண்டதால் கோகுலுக்கு தகவல் ஏதும் அனுப்பப்படவில்லை. வெகுநாட்களுக்குப் பிறகு விஷ்ணுவிடம் இருந்து மெசேஜ் வந்த போது கோகுல் வேறோர் வேலையாய் விஷ்ணுவின் வீடிருக்கும் பகுதியில் தான் இருந்தார். அந்த வேலை முடிந்ததும் விஷ்ணுவின் வீட்டிற்குக் கிளம்பினார்.

கடைக்குச் சென்றிருந்த விஷ்ணுவை எதிர்பார்த்துக் கதவைத் திறந்த கீதா கோகுலைப் பார்த்ததும் குழம்பினாள். நான் காவல்துறை அதிகாரி கோகுல்நாத், விஷ்ணு இல்லையா என்று கேட்டார். அவர் பக்கத்துலதான் கடைக்குப் போயிருக்கார், உட்காருங்கள் குடிக்க ஏதேனும் எடுத்து வருகிறேன் என்றபடி சமையலறைக்குச் சென்றாள் கீதா. சுவர்க்கடிகாரம், டிவி என்று நோட்டம்விட்டுக்கொண்டிருந்த கோகுல் டீப்பாயின் மேலிருந்த காகிதங்களைப் பார்த்தார்.

"Sir, எஸ்.பி.கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்.  கவலை வேண்டாம் - விஷ்ணு" என்று ஒன்றிலும் "Mr  . கோகுல்- S W H2 6F  இதுதான் குறியீடு. கவனம் - விஷ்ணு" என்று மற்றொன்றிலும் இருந்தது. இது என்ன குறியீடு என்று யோசித்துக் கொண்டிருக்கையில் கோகுலின் கைப்பேசி சிணுங்கியது. சார் நான் விஷ்ணு பேசறேன் ஞாபகம் இருக்குங்களா? உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்றான். போனை கட் பண்ணிட்டு உன் வீட்டுக்கு வா பேசலாம் என்றார் கோகுல்.

விஷ்ணு வந்ததும், சமூக நலத்துறை (Social Welfare) அலுவலகத்தின் ஆறாவது மாடியில் இருக்கும் H2 பிளாக்கில் என்ன நடக்கப்போகிறது எனக்கேட்டார் கோகுல். எவ்வளவு எளிதாய் தன் குறியீட்டைப் புரிந்து கொண்டார் என வியந்த விஷ்ணு எல்லாவற்றையும் விளக்கமாகச் சொன்னான். கவனமாய் விஷ்ணு சொல்வதை முழுவதும் கேட்ட கோகுல்நாத், நாளை ராஜமாணிக்கத்தை நிச்சயம் கைது செய்யப் போவதில்லை என்றார். அதைக்கேட்டு அதிர்ந்த விஷ்ணுவின் முகபாவத்தை ரசித்தபடி தொடர்ந்தார். நாளை கைது செய்தால் ராஜமாணிக்கத்தைத் தவிர அமைச்சர் உட்பட அத்தனை பேரும்  தப்பி விடுவார்கள். அவர்கள் திட்டமிட்டபடி அப்படியே தொடரட்டும். நீ ராஜமாணிக்கத்திற்கு டைப் செய்துள்ள வாசகத்தில் "தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்" என்பதை "தவறான தகவலைக் கொடுத்துவிட்டேன்" என்று மாற்றி நாளை காலை அவருக்கு அனுப்பிவிடு. ராஜமாணிக்கத்தின் கைக்குப் பணம் வந்தபின் எனக்கு ஒரு மிஸ்டு கால் கொடு. நீ தவறாகக் கொடுத்தத் தகவலை உறுதிசெய்ய நான்காவது மாடிக்கு நாலு போலீசை அனுப்புகிறேன். பிறகு என்னவெல்லாம்  செய்யவேண்டும் என்பதை விளக்கிச் சொல்லிவிட்டுக் கிளம்பினார் கோகுல்.

அடுத்த வாரத்தில் ஒருநாள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த தாதர் எக்ஸ்பிரஸில், மும்பையில் இருந்து கடத்தி வரப்பட்ட இருபது பெண்கள் போலீசாரால் மீட்கப்பட்டனர். இன்னும் சில வாரங்கள் கழித்து அமைச்சரின் தொடர்பு அறியப்பட்டதும் இவ்வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. ராஜமாணிக்கம், உத்தமன் இன்னும் பல முக்கியப் புள்ளிகள் ஒருநாள் அதிகாலையில் கைது செய்யப்பட்டனர். நாடெங்கும் நீதியின் நம்பிக்கைக் கீற்றுகளை விதைத்தபடி அடிவானில் உதித்தான் ஆரஞ்சுச் சூரியன்.

குறிப்பு: இது பரிசல் + ஆதியுடன் 'யுடான்ஸ்' இணைந்து வழங்கும் சவால் சிறுகதைப் போட்டிக்கான சிறுகதை. யுடான்சில் நீங்கள் அளிக்கும் வாக்குகளுக்கு முடிவைத் தேர்வதில் 10  % பங்குண்டு. எனவே இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால் கீழே உள்ள யு டான்ஸ் பட்டனில் உள்ள லைக்கைக் க்ளிக்கி தவறாமல் வாக்களிக்கவும். நன்றி.



33 comments:

வெங்கட் நாகராஜ் சொன்னது…

சவால் சிறுகதைக்கு எழுதிய கதை நன்றாக இருக்கிறது சரவணன்....

வெற்றி பெற வாழ்த்துகள்....

கார்த்திக் பாலா சொன்னது…

கதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்.

சே.குமார் சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துகள்.

அரவிந்த் குமார்.பா சொன்னது…

வெறும் இரண்டு வார்த்தைகளில் கதை அருமை என்று கதைக்க எனக்கு விருப்பமில்லை.. வரிவரியாக உங்கள் எழுத்து நடையை ரசித்தேன்.. இதுவரை இதே போட்டிக்கான நான் வாசித்த கதைகளில் இருந்த செயற்கைத்தனம் இதில் துளியளவும் இல்லை..களமும் பொருத்தமாய் இருந்தது..சவாலைப் பயன்படுத்திய விதமும் சிறப்பாக இருந்தது.. நீங்கள் வெற்றிபெற உளமார வாழ்த்துகிறேன்..
- அன்புடன் அரவிந்த்குமார்.பா

கோவை2தில்லி சொன்னது…

கதை நன்றாக இருக்கிறது. வெற்றி பெற வாழ்த்துகள்.

கோவை2தில்லி சொன்னது…

இன்றைய வலைச்சரத்தில் ”இது எங்க ஏரியா, உள்ள வாங்க!”

உங்கள் வலைப்பக்கம் பற்றி எழுதி இருக்கிறேன். முடிந்தபோது வந்து பாருங்கள்.

நட்புடன்

ஆதி வெங்கட்.

புலவர் சா இராமாநுசம் சொன்னது…

அன்பு நண்பரே!
இன்று தான் முதல் முதலில் தங்கள்
பதிவைப் படித்தேன்
இது வரை அறியாமல் இருந்ததிற்கு மிகவும் வருந்துகிறேன்
அர்த்த முள்ள அடுக்கு நடை
தங்குத் தடையின்றி செல்லும் தமிழ்
நீரோடை கருத்துப் பொங்கி வரும்
புதுப் புனல்!

அருமை அன்பரே அருமை!

புலவர் சா இராமாநுசம்

Ramani சொன்னது…

நல்ல விறுவிறுப்பான கதை
வாழ்த்துக்கள்
த.ம 5

சத்ரியன் சொன்னது…

”பொறி” - வெற்றி பெற வாழ்த்துக்கள் கலாநேசன்.

கலாநேசன் சொன்னது…

@ வெங்கட் நாகராஜ் : நன்றி நண்பரே..

கலாநேசன் சொன்னது…

@ கார்த்திக் பாலா : மிக்க நன்றி.உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

கலாநேசன் சொன்னது…

@ சே.குமார் : மிக்க நன்றி

கலாநேசன் சொன்னது…

@ அரவிந்த் குமார்.பா : உங்கள் டானிக் வார்த்தைகளைப் படித்ததும் மிக மகிழ்ந்தேன். மிக்க நன்றி.

சுபத்ரா சொன்னது…

வெற்றி பெற வாழ்த்துகள் கலாநேசன்!

ஸாதிகா சொன்னது…

விறுப்பாக கதையை கொண்டு சென்று இருக்கின்றீர்கள் அருமை.

கலாநேசன் சொன்னது…

@ கோவை2தில்லி : வாழ்த்துக்கும் வலைச்சர அறிமுகத்துக்கும் நன்றி!

கலாநேசன் சொன்னது…

@ புலவர் சா இராமாநுசம் : அய்யா, நாம் ஏற்கனவே 'பழகியிருக்கிறோம்'. தேன்தமிழ் வாழ்த்துக்கு நன்றி!

கலாநேசன் சொன்னது…

@ Ramani :மிக்க நன்றி.

கலாநேசன் சொன்னது…

@ சத்ரியன் : மிக்க நன்றி.

ponraj ramu சொன்னது…

/சமூக நலத்துறை (Social Welfare) அலுவலகத்தின் ஆறாவது மாடியில் இருக்கும் H2 பிளாக்கில் என்ன நடக்கப்போகிறது எனக்கேட்டார் கோகுல்/

அருமையாக குறியீட்டை பயன்படுத்தியிருக்கிறீர்கள்!நல்ல கதை!ஓட்டு போட்டாகிற்று!வெற்றிபெற வாழ்த்துக்கள்!!

கலாநேசன் சொன்னது…

@ சுபத்ரா : மிக்க நன்றி

கலாநேசன் சொன்னது…

@ ஸாதிகா : மிக்க நன்றி

கலாநேசன் சொன்னது…

@ ponraj ramu : மிக்க நன்றி.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கதை ஓக்கே, உரையாடல் பகுதியை தனித்தனி வரிகளாக போடவும்

Madhavan Srinivasagopalan சொன்னது…

ஒக்கே.. வாழ்த்துக்கள்

--- உங்களுடன் எனது இந்தக் கதை மூலம் போட்டி போடும் வலை-நண்பன்

நம்பிக்கைபாண்டியன் சொன்னது…

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்!
(சூரியத் தலைவரின் ஆட்சி முடிந்து ...........என தொண்டன் ஒருவன் யோசித்துக் கொண்டிருந்தான்)((((வட்டச் செயலாளர் தன் கட்டைக் குரலில் கூவினார்)) (( உளவாளியே மெல்ல மெல்ல களவாணி ஆனான்.)))


பல இடங்களில் வார்த்தைகளை பயன்படுத்திய விதம் மிக அருமை வெற்றிபெற வாழ்த்துக்கள்

middleclassmadhavi சொன்னது…

கதை மிகவும் நன்றாக உள்ளது, வாழ்த்துக்கள்!

வெண் புரவி சொன்னது…

கதை நல்லா இருக்கு. வித்தியாசமாக சிந்தித்து இருக்கிறீர்கள்.
வாழ்த்துகள்.
அப்படியே என்னோட கதையையும் படிச்சுடுங்க..
http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html

கலாநேசன் சொன்னது…

@ சி.பி.செந்தில்குமார் : பயனுள்ள கருத்துக்கு மிக்க நன்றி. அடுத்த கதை எழுதும் போது கவனத்தில் கொள்கிறேன்.

கலாநேசன் சொன்னது…

@ Madhavan Srinivasagopalan : நன்றி. உங்கள் கதை படித்தேன். வாழ்த்துக்கள்.

கலாநேசன் சொன்னது…

@ நம்பிக்கைபாண்டியன் : மிக்க நன்றி.

கலாநேசன் சொன்னது…

@ middleclassmadhavi : மிக்க நன்றி.

கலாநேசன் சொன்னது…

@ வெண் புரவி : மிக்க நன்றி. உங்க கதை படித்தேன். நகைச்சுவையான நடை பிடித்தது. எழுத்துப் பிழைகளை சரிசெய்யுங்கள்.

Quote

Followers