ஞாயிறு, 20 டிசம்பர், 2009

புதிர்

அடுத்த வீட்டுப் பாட்டியிடம்
அவள் கணவன் பெயர்கேட்டால்
'ஏழுமலை' என்று சொல்லாமல்
வாரத்து நாட்களோட
மாலைக்கு கால் ஒடிச்சு
மனசுக்குள் சொல்லு ராசா
மன்னவரு பேர் கிடைக்கும்னு
ஏதோதோ புதிர் சொல்வாள்.

என்னவள் பெயர்
என்னவென்று கேட்டநண்பா
பாட்டியிடம் ஸ்டைல் வாங்கி
பால்நிலவின் பெயர் சொன்னேன்
படித்துப் பார்த்து
பதில் சொல் பார்ப்போம்.

கஜினி ராசா
பதினேழாம் முறை
படையெடுத்து வந்தப்போ
கொள்ளையடிச்ச கோவில்பேரில்
முதலிரண்டு லிபிஎடுத்து
கிலோ ஆட்டின்
இரு கொம்பொடித்தால்
கிடைக்கின்ற பெயரைச்சேர்

நான்விரும்பும் தேவதையின்
நாலெழுத்து பெயர்கிடைக்கும்.


(கண்டுபுடிங்க பார்க்கலாம் )

ஞாயிறு, 8 நவம்பர், 2009

குட்டிக் கவிதைகள்-1

கால்களுக்குக் கீழே
நகர்கின்ற பூமி
பேருந்தில் ஓட்டை.
(ஆனந்த விகடனில் பிரசுரமான என் முதல் கவிதை)


காயம்
காயம் பட்ட எனக்கு
உதிரம் வரும் முன்னே
உன்னில்  எப்படி
கண்ணீர்?




நட்சத்திரம்
பருக்களை கிள்ளி
நீ
பறக்கவிட்டதெப்படி ?

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

உயிரெழுத்து

அன்னையர் தினத்தில் பிறந்தவளே - என்
ஆசை வானில் பரப்பவளே
இம்சை வரங்கள் பல தினமும்
ஈந்தருள் எனக்கு புரிபவளே
உள்ளமெல்லாம் உள்ளவளே - எனை
ஊக்குவிக்கும் நல்லவளே
எட்டும் வெற்றி யாதிலுமே
ஏணியாக இருப்பவளே
ஐயமின்றி சொல்கின்றேன்
ஒவ்வொரு நொடியும் உன்பெயரே
ஓயாது ஒலிக்கும் என் மனதில்......

நீ

நான்
தேடிச்சுற்றிய
பத்தாம் கிரகம்
ஓடித்திரிந்த
ஒன்பதாம் திசை
பாடி மகிழ்ந்த
எட்டாம் ஸ்வரம்
கூடி ருசித்த
ஏழாம் சுவை
என் அணுவிலும் கலந்த
ஆறாம் பூதம்
ஆசையாய் நான் படித்த
ஐந்தாம் வேதம்
நல்லதையே சொல்லும்
நான்காம் காலம்
நல்வழி காட்டிய
மூன்றாம் விழி
என்னை வளர்த்த
இரண்டம் தாய்
எல்லாம் ஆகிய
ஒரே மனைவி




வியாழன், 15 அக்டோபர், 2009

வணக்கம்

நேசமிகு நெஞ்சங்களே,
வணக்கம். இது பிரபஞ்சத்தை சிறு பேனாவில் அடைக்கும் கனவுக்காரனின் வலைப்பூ. எவர் மனதும் புண்படாமல் நான் எண்ணுவதை எழுதுகிறேன்.
தீராத தமிழ் காதலுடன்,
கலாநேசன்.

Quote

Followers