Google+ Followers

புதன், 28 செப்டம்பர், 2011

நாய்க்கடி நாள் வாழ்த்துக்கள்

இன்று உலக ராபிஸ்(Rabies) தினம். நண்பர்கள் தினம், மகளிர் தினம், அப்பாக்கள் தினம், அன்னையர் தினம், நாத்தனார் தினம், கொழுந்தியா தினமெல்லாம் கொண்டாட ஆரம்பித்துவிட்ட நாம் நாய்க்கடி தினம் பற்றியும் ஒரு சில தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுவதில் தவறில்லை தானே!

ராபிஸ் என்பது வைரஸ் தாக்குதலுக்கு உண்டான நாயிடாமிருந்து மனிதனுக்குப் பரவும் கொடுமையான நோய். கடிபட்ட இடத்திலிருந்து வைரஸ் நரம்பு மண்டலம் வழியாக மூளையைத் தாக்கும். இதற்கு ஒரு சில வாரங்கள் கூட ஆகலாம். ராபிஸ் வைரஸ் மூளையை அடையும் முன் தடுக்காவிட்டால் நிச்சயம் மரணம் தான். எனவே நாய்க்கடித்த உடன் செய்யவேண்டியவை என்னவென்று பார்க்கலாம்.

  1. கடிபட்ட இடத்தை நிறைய தண்ணீர் விட்டு குறைந்தது பத்து நிமிடமேனும் நன்றாகக் கழுவ வேண்டும்.
  2. டெட்டால் அல்லது சோப்புத் தண்ணீரைத் தெளிக்கலாம். ஆனால் கடிபட்ட இடத்தை மூடக் கூடாது.
  3. அருகில் உள்ள மருத்துவரிடம் சென்று ராபிஸ் நோய்க்கான தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும்.

வியாழன், 8 செப்டம்பர், 2011

தில்லியில் நிலநடுக்கம்

நேற்று நள்ளிரவு 11.28 மணியளவில் தில்லியில் வலுவான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவான இந்த நிலஅதிர்வால் சேதங்கள் எதுவும் அறியப்படவில்லை. எங்கள் அடுக்ககத்தில் இருந்து அனைவரும் வீட்டிலிருந்து வெளியே வந்து குட் நைட் சொல்லிக்கொண்டு தூங்கப்போனோம். ஆனாலும் தில்லி நிலநடுக்க வரைபடத்தில் zone -4 இருப்பதால் நிலநடுக்க வாய்ப்புகள் அதிகம்.

தில்லி உயர்நீதி மன்ற வாயிலில் குண்டு வெடிப்பில் 11 இறந்த அதே நாளில் நிலநடுக்கமும் வந்து தலைநகர மக்களை அதிர்சிக்குள்ளாக்கியது.

திங்கள், 5 செப்டம்பர், 2011

ஆசிரியப்பா


'அ'னா சொல்லித்தந்த
முதல்வகுப்பு ஆசிரியை.
தொடையில் ஊசிபோட்ட
நாலாம்வகுப்பு ராமசாமி. 

பேனா பரிசளித்து
பெரிதும் ஊக்குவித்த
வரலாறு - சரஸ்வதி.

எழுதிக்கொடுத்து என்னை
தமிழ்ச்சங்கத்தில் பேசவைத்த
வெங்கட்ட ராசன்.

பொதுத்தேர்வுக் கணிதத்தில்
நூற்றுக்கு நூறு
வாங்கவைத்த நடேசன்.

தேர்வறைக்குள் வந்து
தாவரவியலா? விலங்கியலா?
எது முதலில்
எழுதுகிறேன் எனப்பார்த்து
போட்டிப்பாசம் காட்டிய
உயிரியல் சகோதரிகள்.

வேதியியலோடு சேர்த்து
தேசியம் கற்பித்த
பதாமி.

ஆய்வுப்பாதையில் என்
ஆர்வத்தைத் தூண்டிய
ரவிசங்கர்.

இப்படி
ஆசிரியர்தினத்தில்
நினைத்து மகிழ
நெஞ்சார்ந்த நன்றி சொல்ல
நிறையபேர் இருந்தும்..........

'ஷூ எங்கே எனக்கேட்டு
மரஸ்கேலில் அடித்த
ஜோதிவித்யாலயா டீச்சர்'
நீங்கள்தான் என்
நினைவிலதிகம் வருகிறீர்கள்.

உங்களால்தான்
தமிழ்வழிக் கல்விக்கு
தடம்மாறினேன் நான்.
உங்களுக்கென் தனிவணக்கம்.

வியாழன், 1 செப்டம்பர், 2011

விநாயகர் சதுர்த்தி


 குள்ளக் குள்ளனே 
குண்டு வயிற்றோனே
வெள்ளிக் கொம்பனே 
விநாயக மூர்த்தியே
 உனை வணங்குகிறேன்!


எங்கோ படித்த ஒரு கவிதை....


கடவுள் இல்லையென்று 
கவிதை எழுதச்சொன்னார்கள்.
பிள்ளையார் சுழியிட்டு 
பிறகு துவங்கினேன் நான்!

அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள்! 

Quote

Followers