சனி, 26 பிப்ரவரி, 2011

மத்திய அரசு தடை செய்துள்ள மருந்துகள்

10.02.2011 அன்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை  அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி  கீழ்காணும் மருந்துகள் இந்தியாவில் உற்பத்தி செய்வதற்கும் விற்பனை செய்வதற்கும் உடனடியாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
  1. Nimesulide formulations for human use in children below 12 years.
  2. Cisapride and its formulations for human use.
  3. Phenylpropanolamine and its formulations for human use.
  4. Human Placental Extracts and its formulations for human use.
  5. Sibutramine and its formulations for human use.
  6. R-Sibutramine and its formulations for human use.

இவற்றில் பெரும்பாலான மருந்துகள் மற்ற நாடுகளில் பல வருடங்களுக்கு முன்னரே தடை செய்யப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு நிமுசுலைட்.  இது வலி நிவாரணியாகவும் சில சமயங்களில் காய்ச்சலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்கா (USFDA ), கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலிய நாடுகள்  இதை விற்க அனுமதியே அளிக்கவில்லை. ஈரல் குறைபாடு ஏற்படுவது உறுதியானதும் இந்த மருந்தைக் கண்டுபிடித்த ச்விசர்லாந்திலேயே குழந்தைகளுக்கு இம்மருந்து தடை செய்யப்பட்டது.  பங்களாதேசில் கூட 2005 லேயே இம்மருந்து தடைசெய்யப்பட்டது. 
 
மத்திய அரசின் அறிவிப்பு  இங்கே  

.

புதன், 23 பிப்ரவரி, 2011

மனப்பெண்

கல்லூரிக் காலத்தில்
காதலிக்கும் யோகமில்லை
அலுவலகம் வந்தபின்
அமையுமென்றும் நினைக்கவில்லை!

உண்டு குடித்து உறங்கி
ஊர்சுற்றித் திரிந்தபோதும் 
கண்டுகொள்ளவேயில்லை என்னுள்
காதல் விதை உறங்கியதை!

உன்புன்னகை சிந்திய 
பொன்னொளி பட்டதும்
உறங்கிய விதையது
உயிர்பெற்றது விருட்சமாய்!

எப்படிச் சொல்வதென்று
எண்ணித் தவிக்கையில்
தேவதை நீயே
தித்திக்கும் வரம்தந்தாய்!

வாகனத்தில் உடனமர்ந்து
வருவதற்கே தயங்கியவள்
வாழ்க்கை முழுவதுமே
உடன்வர சமதித்தாய்!

நீயென் மூச்சுக்காற்றில்
ஊதிய பந்து
முதல்முதல் பாடிய
காவடிச் சிந்து!

மழைத்துளி தீண்டலில்
மணக்கின்ற பூமியாய்
மனதுக்குள் மலர்வெடிக்க
மகிழ்ந்தேன் நான்!

இன்று
மனப்பெண்ணே
என்னருகில்
மணப்பெண்ணாய்........

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

கனவு

வானவில் தானெடுத்து 
வளையல்கள்  செய்தலின்று
வழக்கமாகியது எனக்கு!

மனதே உன்னுடன் நான் 
மகிழ்ச்சியாய் குடித்தனம் 
மணல்வீட்டில் நடத்துகிறேன்!

காண்கின்ற காட்சியெல்லாம் 
கண்ணே உன் முகம்காட்டி 
களிப்புறச் செய்யுதடி!

எழுதலாம் என்று 
எடுக்கின்ற தாளிலெல்லாம் 
உன்பெயர் மட்டுமெழுதி
உலகையே மறக்கின்றேன்!

இவையெல்லாம் இங்கு
இனிதே நடக்கிறது 
எவரும் வந்து
என்னை எழுப்பாதவரை.....

(1999)

திங்கள், 14 பிப்ரவரி, 2011

ஐவகை நிலமும் அவளே!

குறிஞ்சி மலர் பூத்து 
குலுங்கிச் சிரித்தாலும் - உன் 
முல்லை மலர்ப் பாதத்தின் 
எல்லையைச் சேர்ந்தாலே பெருமை.
மருத வயல் நெல்சமைத்து 
நெய்விட்டு நீ வறுத்த 
நெய்தல் நிலமீன் தந்தால்
பொய்யில்லை அது அமிர்தம்.
உன்காலடி படுமிடம் சோலை 
படாத இடமோ பாவமது பாலை.

(1999)

அனைவருக்கும் காதலர்தின நல்வாழ்த்துக்கள்





வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

பாரதியை பார்க்கப் போயிருந்தேன்-3

பாரதியை பார்க்கப் போயிருந்தேன்-1


பாரதியை பார்க்கப் போயிருந்தேன்-2


பாரதி பிறந்த எட்டயபுர வீட்டில் சுமார் இரண்டரை மணி நேரம் இருந்தேன். அங்கு என்னையும் சில கொசுக்களையும் தவிர வேறு உயிர்களே இல்லை. ஒரு மாபெரும் கவிஞனின் வீட்டை அரசுடமையாக்கினால் மட்டும் போதுமா? அதைப் பராமரிக்க வேண்டாமா? என்ற கேள்வி என்னுள் எழுந்தது. பாரதியின் கையெழுத்துப் பிரதிகள் வெகுசிலவே இருந்தன. ஒரு சமீபக் காலக் கவிஞனிடம் இருந்து நாம் பாதுகாத்து வைத்திருப்பது இவ்வளவுதானா என்றே தோன்றியது. பாரதியின் கையெழுத்துக்களையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சுவற்றில் பாரதியின் குடும்ப வரைபடம் வைத்திருந்தார்கள். அதைப் பார்க்கையில் மங்காத்தா படத்திற்கு பாட்டெழுதும் பாரதியின் எள்ளுப்பேரன் நிரஞ்சன் வரை இதில் சேர்க்கலாமே என்று தோன்றியது. பாரதி காணி நிலம் கேட்டது உங்கள் எல்லோருக்கும் தெரியும். அவரின் வேண்டுதலைப் பாருங்கள்.


சுதந்திரத் தீ சுடர்விட்டு எறிந்த காலத்திலும் தாய்நாட்டுப் பற்றோடு தமிழ்ப் பாசத்தையும் வளர்க்கச் சொன்னவன்  பாரதி. இதோ ஒரு சங்கற்பங்கள் அவரின் கையெழுத்தில்...


இயன்ற வரை தமிழே பேசுவேன், தமிழே எழுதுவேன்.
சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன்.
எப்பொழுதும் பராசக்தி - முழு உலகின் முதற்பொருள் -அதனையே
தியானம் செய்துகொண்டிருக்க முயல்வேன்.
அதனைக் குறித்தே ஓயாமல் எழுதிக் கொண்டிருக்க விரும்புவேன்.

இப்படிச் சாகும் வரை தமிழைத் தன் சுவாசமாய்க் கொண்டவன் பாரதி. பாரதி போன்ற நன்னிலத்தில் தானே வளரும் தவவலிமை கொண்டது தமிழ். யாரும் தங்கள் தோட்டத்தில் நட்டு வளர்க்கத் தேவையில்லை. நாங்கள் தான் இலக்கியம் படைத்து தமிழை வளர்க்கிறோம் என்று யாரேனும் சொன்னாலோ, இவர்தான் முத்தமிழை மொத்தமாய் குத்தகைக்கு எடுத்து பாதுகாக்கிறார் என்று எச்சில் ஒழுக யாரையேனும் புகழ்ந்தாலோ நீங்கள் நிச்சயம் சிரிப்பீர்கள் தானே!

வழிப்போக்கர் ஒருவரின் துணையோடு நான் எடுத்துக்கொண்ட புகைப்படம்.

சீரிய கவியே
புயலாய்ச்
சீறிய கவியே!
உன் சிலைக்கு முன்னால்
சில சின்னக் கேள்விகள்.

உன்
ஆணைகளில் எது இங்கே
அமலுக்கு வந்தது?

பிறநாட்டுச் சாத்திரங்கள்
பெயர்த்தோமா?
இறவாத தமிழ்நூல்கள்
இயற்றினோமா?

படைப்பிலக்கியம் தானே
ஒரு
சுத்தமான மொழியின்
சுவாசம்.

இங்கே
கிலோ கணக்கில்
தமிழ் வளர்க்கும்
எழுத்தாளர்களை
என்ன சொல்ல?

விற்பனைச் சந்தையின்
வியாபார அவசரத்தில்
எழுத்துக்களுக்கு இங்கே
ஆடை அணிவிக்கவும்
அவகாசமில்லை.

அச்சு எந்திரம்
இங்கே
வாசகனை உருவாக்கியது
குடிமகனை....?
(வைரமுத்துவின் கவிராஜன் கதையிலிருந்து)




சனி, 5 பிப்ரவரி, 2011

பாரதியை பார்க்கப் போயிருந்தேன்-2



பாரதியார் பரலி சு நெல்லையப்பருக்கு எழுதிய கடிதம்.
புதுச்சேரி 
19 -12 -1915

எனதருமைத் தம்பியாகிய ஸ்ரீ நெல்லையப்ப பிள்ளையை பராசக்தி நன்கு காத்திடுக.

தம்பி - மாதத்துக்கு மாதம், நாளுக்கு நாள் நினதறிவு மலர்ச்சி பெற்று வருவதைக் காண்கிறேன். நினது உள்ளக் கமலத்திலே பேரறிவாகிய உள்ஞாயிற்றின் கதிர்கள் விரைவிலே பல்கி நினக்கு நல்லின்பம் உண்டாகுமேன்றே கருதுகிறேன்.

நெஞ்சம் இளகி விரிவெய்த விரிவெய்த அறிவிலே சுடர் ஏறுகிறது. நம்மிலும் மெலியோருக்கு நாம் இரங்கி அவர்களை நமக்கு நிகராகச் செய்துவிட வேண்டுமென்று பாடுபடுதலே நாம் வலிமை பெறுவதற்கு வழியாகும். வேறு வழியில்லை.

ஹா! உனக்கு ஹிந்தி, மராட்டி முதலிய வடநாட்டு பாஷைகள் தெரிந்திருந்து, அந்த பாஷையின் பத்திரிக்கைகள் என்ன அற்புதமான புதுமை பெற்றுள்ளன என்பதை நேரிடத் தெரிந்துகொள்ள முடியுமானால் - தமிழ்நாட்டிற்கு எத்தனை நன்மை உண்டாகும்! தமிழ், தமிழ், தமிழ் - என்று எப்போதும் தமிழை வளர்ப்பதே கடமையாகக் கொள்க. ஆனால் புதிய புதிய செய்தி, புதிய புதிய யோசனை, புதிய புதிய உண்மை, புதிய புதிய இன்பம் தமிழில் கூடிக்கொண்டே இருக்கவேண்டும்.

தம்பி, நான் ஏது செய்வேனடா! தமிழைவிட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் போது எனக்கு வருத்தமுண்டாகிறது. தமிழனைவிட மற்றொரு ஜாதியார் அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பதில் எனக்கு ஸம்மதமில்லை. தமிழச்சியைக் காட்டிலும் மற்றொரு ஜாதிக்காரி அழகாயிருப்பதைக் கண்டால் என் மணம் புண்படுகிறது.

தம்பி, உள்ளமே உலகம். ஏறு! ஏறு! ஏறு! மேலே! மேலே! மேலே!நிற்கும் நிலையிலிருந்து கீழே விழாதபடி கயிறுகள் கட்டிவைத்துக் கொண்டு பிழைக்க முயற்சிபண்ணும் பழங்காலத்து மூடர்களைக் கண்டு குடல் குலுங்கச் சிறி. உனக்குச் சிறகுகள் தோன்றுக. பறந்து போ,மேலே, மேலே, மேலே!

தம்பி, தமிழ்நாடு வாழ்க என்றெழுது. தமிழ் நாட்டில் நோய்கள் தீர்க என்றெழுது. தமிழ்நாட்டில் வீதி தோறும் தமிழ் பள்ளிக்கூடங்கள் மலிக என்றெழுது. அந்தத் தமிழ் பள்ளிக்கூடங்களில் நவீன கலைகளெல்லாம் பயிற்சி பெற்று வளர்க என்றெழுது. தமிழ்நாட்டில் ஒரே ஜாதிதான் உண்டு. அதன் பெயர் தமிழ்ஜாதி. அது ஆர்ய ஜாதி என்ற குடும்பத்திலே தலைக்குழந்தை என்றெழுது. ஆணும் பெண்ணும் ஒருவரின் இரண்டு நிலைகள் என்றெழுது! அவை ஒன்றிலொன்று தாழ்வில்லை என்றெழுது. பெண்ணைத் தாழ்மை செய்தோன் கண்ணைக் குத்திக் கொண்டான் என்றெழுது. பெண்ணை அடைத்தவன் கண்ணை அடைத்தான் என்றெழுது. 

தொழில்கள், தொழில்கள், தொழில்கள் என்று கூவு. தப்பாக வேதம் சொல்பவனைக் காட்டிலும் நன்றாகச் சிதைப்பவன் மேற்குலத்தானென்று கூவு. வியாபாரம் வளர்க, யந்திரங்கள் பெருகுக. முயற்சிகள் ஓங்குக. ஸங்கீதம், சிற்பம், யந்திர நூல், பூமிநூல், வான நூல், இயற்கை நூலின் ஆயிரம் கிளைகள் இவை தமிழ்நாட்டிலே மலிந்திடுக எண்டு முழங்கிடு. சக்தி, சக்தி, சக்தி என்று பாடு. தம்பி- நீ வாழ்க.

உனது கடிதம் கிடைத்தது. குழந்தைக்கு உடம்பு செம்மையில்லாமல் இருந்தபடியால் உடனே "ஜவாப்" எழுத முடியவில்லை. குழந்தை புதிய உயிர் கொண்டது. இன்று உன் விலாஸத்துக்கு "நாட்டுப் பாடல்கள்" அனுப்புகிறேன். அவற்றைப் பகுதி பகுதியாக உனது பத்திரிக்கையிலும் ஞான பானுவிலும் ப்ரசுரம் செய்திடுக. "புதுமைப்பெண்" என்றொரு பாட்டு அனுப்புகிறேன். அதைத் தவறாமல் உடனே அச்சிட்டு அதன் கருத்தை விளக்கி எழுதுக. எங்கேனும் எப்படியேனும் பணாம் கண்டுபிடித்து ஒரு நண்பன் பெயரால் எமக்கு அனுப்புக. தம்பி - உனக்கேனடா இது கடமையென்று தோன்றவில்லை? நீ வாழ்க.

உனதண்ணன்
பாரதி.






Quote

Followers