Google+ Followers

ஞாயிறு, 24 ஏப்ரல், 2011

மனப்பெண்


கல்லூரிக் காலத்தில்
காதலிக்கும் யோகமில்லை
அலுவலகம் வந்தபின்
அமையுமென்றும் நினைக்கவில்லை!

உண்டு குடித்து உறங்கி
ஊர்சுற்றித் திரிந்தபோதும் 
கண்டுகொள்ளவேயில்லை என்னுள்
காதல் விதை உறங்கியதை!

உன்புன்னகை சிந்திய 
பொன்னொளி பட்டதும்
உறங்கிய விதையது
உயிர்பெற்றது விருட்சமாய்!

எப்படிச் சொல்வதென்று
எண்ணித் தவிக்கையில்
தேவதை நீயே
தித்திக்கும் வரம்தந்தாய்!

வாகனத்தில் உடனமர்ந்து
வருவதற்கே தயங்கியவள்
வாழ்க்கை முழுவதுமே
உடன்வர சமதித்தாய்!

நீயென் மூச்சுக்காற்றில்
ஊதிய பந்து
முதல்முதல் பாடிய
காவடிச் சிந்து!

மழைத்துளி தீண்டலில்
மணக்கின்ற பூமியாய்
மனதுக்குள் மலர்வெடிக்க
மகிழ்ந்தேன் நான்!

இன்று
மனப்பெண்ணே
என்னருகில்
மணப்பெண்ணாய்.....

வியாழன், 14 ஏப்ரல், 2011

கவிதைப் போட்டி

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக அரசியல் பதிவெழுதி நிறையபேர் களைத்துப் போயிருப்பீர்கள். உங்களுக்கு ஒரு ஜாலி சவால். கீழே உள்ள இந்தப் புகைப்படத்துக்குப் பொருத்தமாக கவிதை எழுதுங்களேன்....


அனைவருக்கும் சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

பெயர்


பெயர் ஒவ்வொரு மனிதனையும் தனித்துவமாக்கும் தனி அடையாளம். அத்தனை மனிதர்களுக்கும் மிகப்பிடித்த ஒற்றை வார்த்தை அவரவர் பெயராகத்தான் இருக்கும். ஆதி காலத்தில் எலேய் என்று கூப்பிட்டால் எல்லோரும் திரும்பி இருக்கக் கூடும். அதைத் தொடர்ந்த சிந்தனையின் செயல் வடிவமே பெயர் இடுதல். சுய அடையாளம் சுட்டுவதற்காய் சுடர்விட்ட பெயர் பின்னாளில் சாதி, தொழில், குடும்பம் போன்ற கூடா நட்பால் 'பேர்' கெட்டுப்போனது. தமிழ் நாட்டில் பகுத்தறிவு முழக்கங்களும் திராவிட இயக்கமும் பெயர் சீரமைப்பில் பெரும்பங்கு ஆற்றியுள்ளன. என் தாத்தாவின் பெயருடன் இருந்த சாதியை என் பெயரில் இருந்து நீக்கிய பெரியாருக்கு நன்றி!
மனிதர்கள் மட்டுமல்ல டால்பின்களும் பெயர்சொல்லி அழைத்துக் கொள்வதாக  ஆய்வுகள் நிருபித்துள்ளன. ஒவ்வொரு டால்பினையும் விளிக்க  தனித்தனி விசிலை பயன்படுத்துகிறதாம் டால்பின்கள்.

சரவணன்.
பங்குனி உத்திரத்தன்று பிறந்ததால் அம்மா எனக்கு சரவணன் என பெயர் வைத்தார்கள். நான் முன்னொரு பதிவில் சொன்னதுபோல ச.ஆ.பெரமனூரில் உள்ள ஊ.ஒ.து.பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்த நாளில் இருந்தே என்னுடன் சில சரவணன்கள் எப்போதும் இருப்பார்கள். எங்களை வேறுபடுத்துவதற்காக பட்டப்பெயர்கள் வைக்கப்படும். உதாரணத்திற்கு முதுநிலை மருந்தாக்கியல் படிக்கையில் என் வகுப்பில் என்னைவிட கருப்பாய் ஒரு சரவணன் இருந்ததால் அவர் 'கருப்பு' சரவணன். சாலமன் பாப்பையாவை  சந்திக்கும்  போது வைரமுத்துவுக்கு இரண்டு விஷயங்கள் மகிழ்ச்சி தருமாம். ஒன்று சிரிக்க வைக்கும் பேச்சு. இரண்டாவது அவருடன் இருக்கும் போது தான் தான் கருப்பில்லை என்ற எண்ணம் தோன்றுமாம்.

நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது நடந்த ஓர் சம்பவம். அப்போது பள்ளிக்கு நேரெதிரே எங்கள் மளிகைக் கடை இருந்தது. பக்கத்துக் கடை ஜெயராம் அண்ணனின் டீக்கடை. மாலையில் ஒவ்வொரு ஆசிரியரும் அவர் வகுப்பில் இருந்து யாரையாவது அனுப்பி டீ வாங்கி வரச் சொல்வார்கள். அதற்கு எங்களிடையே போட்டி நடக்கும். அப்படித் தான் அன்றும் பிரேமா டீச்சர், சரவணா டீ வாங்கி வா என்று சொல்லி முடிப்பதற்குள் வகுப்பிலிரிந்து நான் எழுந்து ஓடினேன். ஏனென்றால் எங்கள் வகுப்பில் மூன்று சரவணன்கள் இருந்தோம். வேகமாய் ஓடினேன். சாலையைக் கடந்து எதிர்புறம் உள்ள டீக்கடை மட்டுமே என் குறியாய் இருந்ததால் சாலையில் வந்த டிராக்டரை கவனிக்கவில்லை. நேரே டிராக்டரின் பெரிய பின் சக்கரத்தில் மோதி தேங்கியிருந்த மழை நீரில் விழுந்தேன். அப்பா கடையில் மடித்துக் கொண்டிருந்த பொட்டலத்தை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்தார். திராக்கரை ஓட்டி வந்த்தவரும் தெரிந்தவர். 'அண்ணா நான் பிரேக் மேல ஏறி நின்னேன் அப்பாவும் என்னால ஒன்னும் பண்ண முடியல' என்று சொல்லி என் அப்பாவின் கைப்பிடித்து அழுதார் அவர். இவன்தான் கண்முன் தெரியாம ஓடி வந்தான் உன்மேல் ஒரு தவறும் இல்லை என்று அவரை சமாதானப்படுத்தி அனுப்பினர் என் அப்பா. மாலை மொத்த வகுப்பும் என்னைப் பார்க்க வந்தது. அதன் பிறகு இனிசியலோடு சேர்த்து தான் பெயர் சொல்வார் எங்கள்  ஆசிரியை. இப்படி சின்ன வயசில் இருந்தே நான்  தான் பள்ளிக்கூடத்தில் முதல் மாணவன். ஸ்கூல் விட்டதும் வீட்டுக்கு வருவதில்....

அப்புறம் கல்லூரி நாட்களில் சத்யப்ரியன் என்ற பெயரில் கவிதைகள் எழுதினேன். ஆனந்த விகடனில் என் முதல் கவிதை என் மனைவியின் பெயரில் வந்தது. அதன் பிறகு வலைப்பூ துவங்கிய நாளில் இருந்து  கலாநேசனானேன். ஆனந்த விகடனில் பிரசுரமான கவிதை:

கால்களுக்குக் கீழே
நகர்கின்ற பூமி
பேருந்தில் ஓட்டை.


குறிப்பு: இந்த தொடர்பதிவை எழுத அழைத்த நண்பர் கோபிக்கு நன்றி. இவ்வளவு "சீக்கிரமாய்" எழுதியதற்கு மன்னிக்கவும்.


வெள்ளி, 1 ஏப்ரல், 2011

புதிய பார்வை (சிறுகதை)


நான் ஒரு தகவல் தொழில்நுட்பப் பொறியாளன். சொந்த ஊர் லால்குடிக்கு அருகில் உள்ள கூகூர். இப்போது சென்னையில் பணிபுரிகிறேன். இரண்டு நாள் விடுமுறையில் ஊருக்குப் போவதற்காக இரண்டு மாதங்கள் முன்னரே குழுத் தலைவர், திட்டத் தலைவர் அப்புறம் ஒரு பெருந்தலைவர் என மூணு பேரிடம் அனுமதி வாங்கினேன். அப்படி இருந்தும் இன்று மாலை பல்லவனைப் பிடிக்கப் போகும் என்னிடம் முக்கிய வேலையோன்றைக் கொடுத்து முடித்துவிட்டுப் போ என்றார்கள். ஏன் தான் இந்தத் தனியார் நிறுவனங்களில் விடுமுறையில் செல்லும் போதெல்லாம் நாம் வேலையை விட்டே போவதுபோல் நடத்துகிறார்களோ தெரியவில்லை. எரிச்சலுடன் அவசர அவசரமாய் கொடுத்த வேலையை முடித்துவிட்டு ஷேர் ஆட்டோ பிடித்து சோழிங்கநல்லூர் வந்தேன். மழை வரும்போல் இருந்தது. நெடுந்தவத்திற்குப் பிறகு நிறைய கும்பலுடன் T51 வந்தது. நெரிசலில் நசுங்கி நின்று கொண்டே வந்த என்னை கிழக்குத் தாம்பரத்தில் துப்பியது பேருந்து.

பேருந்து நிறுத்தத்தில் இருந்து ரயில் நிலையத்தின் ஆறாவது நடைமேடைக்கு ஓடினேன். என் குழுத்தலைவனை மீண்டுமொருமுறை ஆங்கில  கெட்டவார்த்தையில் திட்டிக் கொண்டே மூச்சு வாங்கி முடிக்கையில் பல்லவன் வந்தது. முன் பதிவு செய்திருந்த என் சன்னலோர இருக்கையில் அமர்ந்ததும் நிம்மதியாய் உணர்ந்தேன். பக்கத்துக்கு இருக்கை காலியாக இருந்தது. எதிரே சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞனும் அருகில் அவன் தந்தையும் இருந்தனர். எதிர் இருக்கை இளைஞனின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தேன். என்னைப் பார்த்து சிரித்தான். பின் இன்று தான் முதன்முதலாய் ரயிலைப் பார்ப்பது போல அங்குலம் அங்குலாமாய் பார்வையில் விழுங்கினான்.

சிறிது நேரம் கழித்து அப்பா இங்கே பாருங்கள் வீடு கடைகளெல்லாம் பின்னால் போகுதென்றான். அவன் அப்பாவோ "ஆமாப்பா" என்று சிரித்தார். என்னடா இது சின்னபுள்ளத்தனமா இருக்கே என்று நானும் சிரித்துக் கொண்டேன். சிறிது நேரத்தில் சிலிசிலுவென காற்று அடித்தது. அப்பா காற்றைக்கூடப்  பார்க்க முடியுமா, அங்கே பாருங்கள் மரங்களின் தலைகலைக்கிறது என்றான். அவன் அப்பாவோ "ஆமாப்பா" என்று சிரித்தார். இன்னும் கொஞ்ச நேரம் கழித்து அங்கே பாருங்கள் ஏரி என்றான், அதோ பாருங்கள் குருவி என்றான், இதோ பாருங்கள் பூக்கள் என்றான். அவன் அப்பாவோ வழக்கம்போல "ஆமாப்பா" என்றார். நானோ எனக்கு மட்டும் கேட்குமாறு 35007 என்றேன்.

இவனுக்கு எப்படியும் 25 - 30 வயதிருக்கும். அப்புறம் ஏன் இப்படி பைத்தியக் காரன் போல நடந்து கொள்கிறான் என்று நினைத்து கொண்டிருக்கையில் மெதுவாய் தூர  ஆரம்பித்தது. உடனே அவன் கைகளை சன்னலுக்கு வெளியே நீட்டி உள்ளங்கையில் சிறுதுளி பிடித்து அப்பா மழை என்றான். அவர் ஆமாம்பா சொல்வதற்குள் அடக்க முடியாமல் கேட்டே விட்டேன். உங்க பையன ஒரு நல்ல டாக்டர்கிட்ட காட்டலாமே என்றேன். அவரோ கோபப்படாமல் பொறுமையாய் சொன்னார். ஆமாம்பா...டாக்டர்கிட்ட காட்டிட்டுத்தான் வந்தேன். என் மகனுக்கு சிறுவதில் போன பார்வை நீண்ட சிகிச்சைக்குப் பின்னர் இன்று தான் மீண்டும் கிடைத்தது என்றார்.


Quote

Followers