சனி, 5 மே, 2012

ஒற்றை விரல் ஓவியம்


பேருந்துப் பயணத்தில்
பின்புறம் திரும்பி
பேசுவதுபோல் ஒன்று...

புத்தகக் குழந்தைகளை
மார்பில் தாங்கியபடி
புன்னகைப்பது போல் ஒன்று...

அலுவல் நிமித்தமாய் - நான்
அயலூர் செல்கையில்
கையசைப்பது போல் ஒன்று...

சமையலறைக் கரப்பைபார்த்து
அலறித்துடித்து நீ
அஞ்சுவதுபோல் ஒன்று...

கடைத்தெரு போயெனை
காய்கறி வாங்கச்சொல்லி
கெஞ்சுவதுபோல் ஒன்று...

பிறக்காதக் குழந்தையின்
பிஞ்சுவிரல் பிடித்து 
கொஞ்சுவதுபோல் ஒன்று...

இப்படி நீ
புன்னகைப்பது...பூப்பறிப்பது...
வெட்கப்படுவது... வேடிக்கை பார்ப்பது...
முட்கள் குத்தியது...முகப்பரு வந்ததென
ஒவ்வொரு நிகழ்வையும்
ஓவியமாய் வரைந்தேன்.

பின்னொருநாள்
தூரிகை எல்லாம்
தோற்றுப்போனது -நீ
தொட்டுத்தொட்டு வரைந்த
ஒற்றை விரல் ஓவியத்தில்.....


Quote

Followers