ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

தப்புத் தப்பாய் ஒரு தப்பு

மனதின் ஆசையை நான் 
மறைத்து வைத்தது தப்பா?
உன்னலம் கருதி எனை 
ஒளித்து வைத்தது தப்பா?
மனதைத் தந்தவுடன் நான் 
மறுத்துப் பேசியது தப்பா?
மனதிற்கு நல்லது நம் 
மாறாத நட்பென்றது தப்பா?
உன்னுடன் நான் பேசியதில் 
ஒரு வார்த்தை ஏதேனும் தப்பா?

நெஞ்சைக் கீறிவிட்டு நீயே 
பஞ்சால் துடைத்து மருந்திட்டாய்.
ஒருகையால்  வில் கொடுத்து 
மறுகையால் நாண் அறுத்தாய்.
மலர்கின்ற பூக்களை நீ 
கிள்ளிவிட்டுக் கட்டுகின்றாய்.
நட்பென்ற கண்ணாடிக் கிண்ணமதை
நழுவவிட்டு ஒட்டுகின்றாய்.

மனதில் குழப்பத்துடன் - நான்
மதிலேறத் தயாரில்லை.
காதல் கசாயம் குடிக்கக்
காய்ச்சல் இல்லை நமக்கு.
நமக்கிடையில் உள்ளது 
நட்பு மட்டுமென்று 
நம்பினால் - நீ
கரத்தைக் கொடு -அன்றில் 
மறந்து விடு.

02.08.1999
11.45 am.

Quote

Followers