Google+ Followers

செவ்வாய், 31 மே, 2011

அம்புலியைத் துடைத்தெறியும் தும்பிக்கை

நண்பர் LK தனது கவிச்சோலை வலைப்பூவில் ஒரு கவிதைப்போட்டி அறிவித்திருக்கிறார். கீழுள்ள முத்தொள்ளாயிரப் பாடலுக்கு புதுக்கவிதை எழுதுவது தான் போட்டி.

பாடல்
வீறுசால் மன்னர் விரிதாம வெண்குடையைப்
பாற எறிந்த பரிசயத்தால்-தேறாது
செங்கண்மாக் கோதை சினவெங் களியானை
திங்கள்மேல் நீட்டுந்தன் கை.

கவிதை 1
வீரனாம் சேரனை
        வெல்லவரும் பகைவர்தேரை
வீதியில் சாய்ப்பதும்
         வெறிகொண்டு மிதிப்பதுமே
வேலையெனக் கொண்டதோர்
         வெற்றி யானை.
விண்ணிலே மின்னிய
         வெண்ணிலா கண்டதும் 
அங்கோர் தேர்க்குடை
         அசைகிறதே என்றெண்ணி
தும்பிக்கை நீட்டியே
          துடைத்தெரியப் பார்த்ததாம்!

இது போட்டிக்கான என் கவிதை  நீங்களும் எழுத வேண்டுமா?
மேலதிக விவரங்களுக்கு இங்கே செல்லவும்....

 கவிதை 2

வீரம் செறிந்த சேரமன்னனை
    அம்பாரியில் அமர்த்தியே
வீறுநடை போடும் வெற்றி
    வேழத்தின் துதிக்கைக்கு
செற்றார்தம் தேரினையும்,
    வெண்கொற்றக் குடையினையும்
வீழ்த்துவதே வழக்கம்...
 
வழக்கமான பழக்கத்தினால்
    வான்மதியும் வேற்றரசன்
தேர்க்குடையாய்த் தெரிந்திட
    அக்கணமே அம்புலியைத்
துவம்சம் செய்திட - தம்
    துதிக்கையைச் சுழற்றியதே
        சூறாவளியாய்..!

சனி, 28 மே, 2011

விசில் போடு!


IPL கிரிக்கெட் திருவிழாவில் இறுதிப்போட்டி இன்னும் இரண்டு மணி நேரத்தில் துவங்கப்போகிறது. விளையாட்டை விட வியாபாரமே இதில் முக்கிய பங்கு வகித்தபோதிலும் இளம் வீரர்களுக்கான களம் என்பதாலும் இருபது ஓவர்கள் மட்டுமே என்பதாலும் எனக்குப் பிடிக்கிறது. ஒவ்வொரு வருடமும் வீரர்களை ஏலத்தில் எடுப்பதால் யார் யார் எந்த அணியில் விளையாடுகிறார்கள் என்று விளங்கிக் கொள்ளும் முன்னரே ஒரு மாதம் ஓடிவிடுகிறது. அப்படித்தான் இம்முறையும் கடந்த ஏழு வாரங்களாக தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் IPL போட்டிகளைப் பார்த்து வருகிறேன்.

இன்று நடக்கும் இறுதிப் போட்டியில் சென்னையும் பெங்களூருவும் மோதுகின்றன.  கடந்த நான்கு வருடங்களாக நடக்கும் இப்போட்டித் தொடரில் அனைத்துத் தொடர்களிலும் அரையிறுதிக்குத் தகுதிபெற்ற ஒரே அணி சென்னை மட்டுமே.
  • இரண்டாயிரத்தெட்டாம் ஆண்டு நடந்த முதல் IPL தொடரின் இறுதிப் போட்டியில் கடைசி பந்தில் ராஜஸ்தான்   அணியிடம் தோற்று கோப்பையைக் கோட்டை விட்டது.
  • இரண்டாம் தொடரில் அரையிறுதிப் போட்டியில் பெங்களூருவிடம் தோற்று வெளியேறியது.
  • சென்ற வருடம் முதல் போட்டியில் அப்போதைய நடப்புச் சாம்பியனான ஹைத்ரபாத்துடன் தோல்வியில் துவங்கிய சென்னை இறுதிப் போட்டியில் மும்பையை 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று கோப்பையைக் கைப்பற்றியது.
  • நான்காம் தொடரின் சூப்பர் இன்னிங்க்சில் முதல் போட்டியில் பெங்களூருவை வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

மூன்றாவது முறையாக இறுதிப்போட்டியில் விளையாடும் சென்னை வெல்ல நல்வாழ்த்துக்கள்.

UPDATE: 58 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி.
புதன், 25 மே, 2011

கழுதைக் கணக்கு


சமன்பாடு 1
மனிதன் = சாப்பாடு + தூக்கம் + உழைப்பு + மகிழ்ச்சி 
கழுதை = சாப்பாடு + தூக்கம்
ஆகவே 
மனிதன் = கழுதை + உழைப்பு + மகிழ்ச்சி 
அதாவது 
மனிதன் - மகிழ்ச்சி = கழுதை + உழைப்பு

தீர்வு: மகிழ்ச்சியாக வாழத்தெரியாத மனிதன் உழைக்கும் கழுதை. 

சமன்பாடு 2
ஆண் = சாப்பாடு + தூக்கம் + பொருள் ஈட்டுவது  
கழுதை = சாப்பாடு + தூக்கம்
ஆகவே 
ஆண் = கழுதை +  பொருள் ஈட்டுவது
அதாவது 
ஆண் -  பொருள் ஈட்டுவது = கழுதை 

தீர்வு: சம்பாதிக்காத ஆண் கழுதை.

சமன்பாடு 3
பெண் = சாப்பாடு + தூக்கம் + செலவு   
கழுதை = சாப்பாடு + தூக்கம்
ஆகவே 
பெண் = கழுதை + செலவு 
அதாவது 
பெண் -  செலவு = கழுதை 

தீர்வு: செலவு செய்யாத பெண் கழுதை.

சமன்பாடு இரண்டு மற்றும் மூன்றின் படி
சம்பாதிக்காத ஆண் = செலவு செய்யாத பெண் 
அதாவது 
பெண் கழுதையாகாமல் இருக்க ஆண் சம்பாதிக்கிறான்.
ஆண் கழுதையாகாமல் இருக்க பெண் செலவு செய்கிறாள்.

ஆண் + பெண் = கழுதை + வருமானம் + கழுதை + செலவு 

முடிவு : ஆணும் பெண்ணும் சேர்ந்து சம்பாதித்து செலவு செய்யும் இரு கழுதைகள்.

இந்த மொக்கைப் பதிவை படித்துவிட்டு என்னை திட்ட நினைப்பவர்கள் இதை எனக்கு ஆங்கிலத்தில் மின்னஞ்சல் செய்த கழுதையை திட்டுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.


ஞாயிறு, 22 மே, 2011

சிக்ஸர் அடித்தார் வைரமுத்து


கவிஞர் வைரமுத்து திரைப்பாடலாசிரியராக ஆறாவது முறை தேசிய விருது பெறுகிறார். முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால் படங்களைத் தொடர்ந்து தென்மேற்குப்  பருவக்காற்று படத்திற்காக இவ்விருதைப் பெறுகிறார். அவரை வாழ்த்தி மகிழும் இந்த இனிய தருணத்தில் எனக்கு மிகப் பிடித்த அவர் கவிதைகளில் ஒன்று உங்களுக்காக...

உன்னைப் பார்த்து உலகம் குறைக்கும் 
தன்னம்பிக்கை தளர விடாதே 
இரட்டைப் பேச்சுப் பேசும் உலகம் 
மிரட்டும் தம்பி மிரண்டு விடாதே

ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு 
உலகின் வாயில் இரட்டை நாக்கு 
எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லாம் 
உனக்குச் சொல்கிறேன் உள்ளத்தில் எழுது

இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன் 
இலக்கியம் இல்லை லேகியம் என்றது 
திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தேன் 
பரிமே லழகரை வரச்சொல் என்றது 

குறுந்தொகை கம்பன் கொட்டி  முழக்கினேன் 
குண்டுச் சட்டியில் குதிரை என்றது 
எலியட் நெருடா எல்லாம் சொன்னேன் 
திறமை எல்லாம் திருடிய தென்றது 

எளிய தோற்றமே இயல்பென இருந்தேன் 
வடுக பட்டி வழியுது என்றது 
அழகாய் நானும் ஆடைகள் கொண்டேன் 
கழுதைக்  கெதற்குக் கண்மை என்றது 

மேடையில் கால்மேல் காலிட் டமர்ந்தேன் 
படித்த திமிர்தான் பணிவில்லை என்றது 
மூத்தவர் வந்ததும் முதலில் எழுந்தேன் 
கவிஞன் நல்ல "காக்கா" என்றது 

உயர்ந்தோர் பெருமை உவந்து புகழ்ந்தேன் 
காதில் பூ வைக்கிறான் கவனம் என்றது 
விரல்நகத் தளவு விமர்சனம் செய்தேன் 
அரிவாள் எடுக்கிறான் ஆபத்து என்றது 

மற்றவர் சூழ்ச்சியால் மண்ணில் விழுந்தேன் 
புத்தி கொழுத்தவன் புதைந்தான் என்றது 
 மூச்சுப் பிடித்து முட்டி முளைத்தேன் 
தந்திரக் காரன் தள்ளிநில் என்றது 

பகையைக் கண்டு பைய நகர்ந்தேன் 
பயந்துவிட்டான் பாவம் என்றது 
மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன் 
விளங்கி விட்டதா மிருகம் என்றது 

பணத்தில் பொருளில் பற்றற் றிருந்தேன் 
வறுமையின் விந்தில் பிறந்தவன் என்றது 
என்னைத் தேய்த்து மண்டபம் கட்டினேன் 
புலவன் இல்லை பூர்ஷ்வா என்றது 

சொந்த ஊரில் துளிநிலம் இல்லை 
இவனா மண்ணின் மைந்தன் என்றது 
தென்னை மரங்கள் தேடி வாங்கினேன் 
பண்ணையார் ஆனான் பாவலன் என்றது 

கயவர் கேட்டால் காசு  மறுத்தேன் 
கறக்க முடியாக் கஞ்சன் என்றது 
உண்மை இருந்தால் உறுபொருள் கொடுத்தேன் 
உதறித் திரியும் ஊதாரி என்றது 

மங்கைய ரிடையே மௌனம் காத்தேன் 
கவிஞன் என்ற கர்வம் என்றது 
பெண்கள் சிலருடன் பேசத் தொடங்கினேன் 
கண்களைக் கவனி காமம் என்றது 

விருதுகள் கழுத்தில் வீழக் கண்டேன் 
குருட்டு அதிஷ்டம் கூடிய தென்றது 
மீண்டும் மீண்டும் விருதுகள் கொண்டேன் 
டெல்லியில் யாரையோ தெரியும் என்றது 

திசைகள் தோறும் தேதி கொடுத்தேன் 
அய்யோ புகழுக் கலைகிறான் என்றது 
நேரக் குறைவு நிறுத்திக் கொண்டேன் 
கணக்குப் பார்க்கிறான் கவிஞன் என்றது 

அப்படி இருந்தால் அதுவும் தப்பு 
இப்படி இருந்தால் இதுவும் தப்பு 
கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம் 
தன்நிழல் பார்த்துத் தானே குறைக்கும் 

உலகின் வாயைத் தைத்திடு; அல்லது 
இரண்டு செவிகளை இருக்க மூடிடு 
உலகின் வாயைத் தைப்பது கடினம் 
உந்தன் செவிகளை மூடுதல் சுலபம்
வியாழன், 19 மே, 2011

நலம்பெற வாழ்த்துக்கள் ரஜினி


தனது அடுத்த படமான ராணாவின் முதல் நாள் படப்பிடிப்பின் பொது மூச்சுத்தினரலால் அவதிப்பட்ட ரஜினிகாந்த் ஏப்ரல் 25 ம் தேதி சென்னை இசபெல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிலநாள் சிகிச்சைக்குப் பின் மீண்டும் திரைப்படப் பணிகளை தொடர்ந்தார். 

மே 13ம் தேதி உடல்நலக் குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிமோனியா மற்றும் வயிற்றுக் கோளாறால் அவதிப்பட்ட ரஜினிக்கு நுரையீரல் தொற்றுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறுநீரக செயல்பாடுகள் குறைந்துள்ள நிலையில் மருத்துவர்கள் டயாலசிஸ் கொடுத்துள்ளனர். 

இந்நிலையில் நேற்று நள்ளிரவு சிறப்பு வார்டில் இருந்து ராமச்சந்திரா மருத்துவமனையின்  ICU வுக்கு ரஜினி மாற்றப்பட்டுள்ளார். சிகிச்சைகள் தொடர்வதாகவும் நுரையீரல் தொற்று சரியானதும் அவருடைய சிறுநீரகங்கள் மீண்டும் இயல்பாய் செயல்படத் துவங்குமென்றும் அதன் பிறகு டயாலசிஸ் தேவைப்படாது என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உண்மை நிலை இப்படி இருக்கையில் விசமிகள் பலர் தவறான தகவல்களைப் பரப்புகின்றனர். ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். 
சனி, 14 மே, 2011

நீயின்றி அமையாது உலகு

உன்னில் துவங்கி
உன்னில் முடிகிறது
உலகம் எனக்கு.

உனக்கென காத்திருக்கும்
நிமிடங்கள் வருடமென
நிச்சயம் சொல்லமாட்டேன்.
நீயில்லா நிமிடங்கள்
எப்படிக் கடந்தால்
எனக்கென்ன?
என் கவனமெல்லாம்
என்னோடு நீயிருக்கும்
நிமிடங்கள் பற்றியது.
கண்கள் சந்திக்கும்
அந்தக்
கற்கண்டு நிமிடத்தில்
கடிகார முட்களுக்கு
காலுடைய வேண்டுகிறேன்.

உன்னில் துவங்கி
உன்னில் முடியட்டும் 
உலகம் எனக்கு....

வைகறைப் பனி
அரைத்தூக்க முத்தம்.

கதிரவ தரிசனம்
கண்விழித்துப் பார்க்கிறாய்.

காற்றிலசையும் இலைகள்
தலைகோதும் விரல்கள்.

காதற் பறவைகள்
கைகோர்த்த நினைவுகள்.

உரைக்கும் வெயில்
உணர்ச்சிவச சுடுசொல்.

ஊமைவெயில் மேகம்
உன்னுடைய பொய்க்கோபம்.

மாலையும் அந்தியும்
மயக்கும் உரையாடலூடல்.

வெண்ணிலா
விளக்கணைத்தபின்  நீ.

உன்னில் துவங்கி
உன்னில் முடியும்
உலகம் எனக்கு...
புதன், 11 மே, 2011

புர்ஜ் காலிபாவில் தற்கொலை

புர்ஜ் காலிபா (Burj Khalifa) 160 மாடிகள் கொண்ட உலகிலேயே உயரமான இந்தக் கட்டிடம் துபாயில் உள்ளது (2717 அடிகள்). 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நான்காம் தேதி திறந்துவைக்கப்பட்ட இதில் 19 வது தளத்தில் இருந்து 108 வது தளம் வரை குடியிருப்புகள். அதற்கு மேலே 37 தளங்களில் அலுவலகங்கள் இயங்குகின்றன. உலகிலேயே உயரமான மசூதி இந்தக் கட்டிடத்தின் 158வது தளத்தில் உள்ளது.

இந்தக் கட்டிடத்தின் 147 வது தளத்தில் இருந்து சுமார் முப்பது வயது மதிக்கத்தக்க வாலிபர் நேற்று காலை சுமார் ஒன்பது மணியளவில் வெளியே குதித்து தற்கொலை செய்துகொண்டார். 147  வது தளத்தில் இருந்து குதித்த இவர் மற்ற தளங்களில் மோதி 108  வது  தளத்தின் பால்கனியில் விழுந்து உயிர்விட்டார். 147 வது தளத்தில் சன்னல்களோ பால்கனியோ இல்லை என்பதால் இவர் AC வைத்திருந்த துவாரத்திலிருந்து குதித்தார் என நம்பப்படுகிறது.

இந்த சோக நிகழ்வை உறுதி செய்துள்ள போலீசார் இறந்தவர் யாரென்ற விவரம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். விடுமுறை கிடைக்காத இந்திய வாலிபர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.


12.05.2011
இறந்தவர் சிவகங்கையைச் சேர்ந்த ஆதிராமன் கிருஷ்ணன் என்ற 38 வயது தமிழர் என்றும் அராப்டெக் (Arabtec ) என்னும் கட்டுமான நிறுவனத்தில் கிளீனராக பணியாற்றி வந்த இவரின் சூப்ரவைசர் பலமுறை கேட்டும் விடுமுறை கொடுக்காததால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டதாகவும்  செய்திகள் வெளியாகியுள்ளது.ஞாயிறு, 8 மே, 2011

அம்மா

முதல்மாத சம்பளத்தில் 
பட்டுப்புடவை - உன் 
முகம் மலர 
கீதைப் புத்தகம்.
கழுத்து கனக்க
தங்கப் பதக்கம்- என் 
சாம்ராஜ்யத்தில் 
தலைமைப் பீடம்.
உனக்கு 
எவ்வளவு செய்தாலும் 
பாக்கி இருக்கிறதே....
பத்து மாத வாடகையும் 
பால்கணக்கும்.


புதன், 4 மே, 2011

கோபம் கொப்பளிக்கும் தலைப்புகள்

Osama bin Mohammed bin Awad bin Laden. அரேபிய மொழியை பின்னிருந்து படிக்க வேண்டும் என்பதால் இந்தப் பெயரின் அர்த்தம் லேடனின் மகன் அவாத். அவாதின் மகன் முகமது. முகமதுவின் மகன் ஒசாமா என்று பொருள்படும். ஆகவே அவரை பின்லேடன் என்று சொல்வதை விட ஒசாமா என்று சொல்வதே சரி. 
சௌதி அரேபியாவில் அரச குடும்பத்திற்கு நெருக்கமான பணக்கார வியாபாரியின் பத்தாவது மனைவிக்கு மகனாகப் பிறந்தார் ஒசாமா. கல்லூரிப் படிப்பை முடித்தபின் ஒசாமா அப்துல்லா ஆஜாமுடன் சேர்ந்து ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியனின் ஆக்கிரமிப்பை எதிர்த்துப் போராடினார். பின்னர் அமெரிக்க ஜனாதிபதிகள் கார்ட்டரும் ரீகனும் அமெரிக்க மத்திய உளவுத்துறை மூலம் பணமும், பயிற்சியும், ஆயதங்களும் கொடுத்து வளர்த்தனர். அல்கொய்தா என்னும் அமைப்பை நிறுவி தீவிரவாத செயல்களில் ஈடுபட்டார். 2001 ல் செப்டெம்பர் 11 அன்று நியுயார்க்கில் நடத்திய விமான தாக்குதலில் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். அன்றிலிருந்து  பத்து வருடம் தேடி நேற்று முன்தினம் பாகிஸ்தானில் ராணுவ மையத்திற்கு மிக அருகில் அபாத்தாபாத்தில் உள்ள வீட்டில் வைத்து அமெரிக்க உளவுத்துறையும் சிறப்பு கடற்படையும் இணைந்து கொன்றனர். ஒசாமாவுக்கு நான்கு மனைவிகளும் சுமார் 12 முதல் 24 குழந்தைகளும் இருக்கலாம் என  நம்பப்படுகிறது.
ஒசாமா தங்கியிருந்த வீட்டின் மீது ஹெலிகாப்டர் மூலமாகவும் தரை வழியும்  சுமார் நாற்பது நிமிடங்கள் நடைபெற்ற தாக்குதலை ஒபாமாவும் ஹிலாரி கிளிண்டனும் நேரடியாகப் பார்த்தனராம். மூன்று மாடி வீட்டை சுற்றி 18 அடி உயர மதில் சுவரும் அதன் மேல் மின் கம்பிகள் அமைத்து மிக பாதுகாப்பாக பதுங்கியிருந்த ஒசாமா இந்த தாக்குதலை சற்றும் எதிர்பார்க்கவில்லை. கையில்  ஆயுதம் ஏதும் இல்லாமல் இருந்த ஒசாமாவை மனைவி மனித கேடயமாகி காக்க முயன்றாராம். பாதுகாப்பாய் தங்க இடம் கொடுத்துவிட்டு மனித குலத்துக்கே பெரும் அச்சுறுத்தலாய் இருந்த ஒசாமாவை கொள்ள உதவியதாக பாகிஸ்தான் சொல்கிறது. 

திங்களன்று அமெரிக்காவின் செய்தித்தாள்களில் வந்த தலைப்புகளைப் பாருங்கள்.  
 

Quote

Followers