ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

சிங்கமில்லாக் காடு


செங்கோல் வாங்கிய சிங்கமொன்று
ஜெயமாய்க் காட்டை ஆண்டது
மறுமுறை ஆட்சியைப் பிடித்தபின்னும்
மர்மமாய் அதுவும் மாண்டது
உடனிருந்த கள்ள நரியொன்றின்
உள்ளத்தில் ஆசையோ மூண்டது
புசிக்கலாம் இந்தக் காட்டையென்றே
புதிய வேடம் பூண்டது!
வேரில் ஊற்றிய வெந்நீராய்
வெடுக்கெனப் பதவியைப் பறித்ததனால்
திடுக்கிட்டுத் திருந்திய ஓநாயோ
தியான நாடகம் போட்டது!
ஊரில் உள்ள உத்தமர்கள்
ஒன்றாய்ச் சேர்ந்திட வேண்டுமென
தேரில் தன்னை ஏற்றிடவே
திருடர்கள் துணையைக் கேட்டது!
அத்தை மறைந்த நல்வாய்ப்பில்
தத்தை ஒன்றும் கிளையமர்ந்து
விழியில் தீபம் ஏற்றியே
வித்தைக் காட்டத் தொடங்கியது!
நத்தை வேகத்தில் நகர்ந்தவொரு
சொத்தை வாங்கிய வழக்கினது
திருத்தி எழுதிய தீர்ப்பாலே
நரியின் கனவோ முடங்கியது!
காட்டைக் காக்கத் தேர்ந்தெடுத்த
அடிமை விலங்குகள் ஓரிடத்தில்
அவரவர் வேலையை மறந்துவிட்டு
அடைபட்டுக் கிடந்து வியர்த்தனவே!
காசை வாங்கி வாக்களித்த
கானகத்து உயிர்களெல்லாம்
ஆசை வெறுத்த மனத்துடனே
அடுத்தடுத்த நாடகம் பார்த்தனவே!
#கலாநேசன் சரவணன்
14-Feb-2017

வெள்ளி, 13 ஜனவரி, 2017

உடையாத நீர்க்குமிழி

உள்ளத்தில் ஒரு 
உடையாத நீர்க்குமிழி
உருண்டு கிடந்தென்னை 
உயிர்ப்பித்து வைக்கிறது.

பத்தாவது முடிச்சபின்னும் 
படிக்கத்தான் வேணுமின்னு
விடுதிச்செலவுக்கு எங்கப்பன்
விதை நெல்லை விக்கையிலும்

பொட்டல் காட்டில் என்கூடப் 
பொழைக்க முடியாதுன்னு
பார்த்துவச்சப் பொண்ணு ஒண்ணு 
பட்டணம் போகையிலும்

சேத்துவச்சச் சிறுவாடு 
செல்லாமப் போனதுன்னு
மாத்திவர நான்போயி
வரிசையில நிக்கையிலும்

உடையப் பார்த்தந்த 
உயிர்க்குமிழி - ஆனாலும்
நட்டப்பயிர் காஞ்சதனால் 
நாண்டுகிட்ட எங்கப்பன்
பட்டக் கடனடைக்கப் 
பாதுகாத்து வச்சிருக்கன்
வட்டக்குமிழி அது என்னை 
வாழச் சபிக்கிறது!



குறிப்பு: இந்தக் கவிதை "படைப்பு" குழுமம்  நடத்திய  கங்கா புத்திரன் நினைவு பரிசுப் போட்டிக்கென எழுதப்பட்டு  பாடலாசிரியர் சினேகன் அவர்களால் மூன்றாம் பரிசுக்கென  தேர்வு செய்யப்பட்டது . 

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

நதிக்கரை ஞாபகங்கள்


மணல்மெத்தை ஆடிய
செருப்பில்லாக் கால்கள்
வெருந்தரை தொடுதலே
அரிதாகிப் போனது.

பச்சைப் புல்வெளி
பருகிய கண்கள்
சாலைகளின் சந்திப்பில்
பச்சைக் கலைகிறது.

குவித்தமணலில் குச்சியொளித்து
கிச்சுக்கிச்சுத் தாம்பூலம்
ஆடிய விரல்களின்று
மிட்டாய்க் கரடிகளை தேடுகிறது.

அட்டைப் பூச்சிகளை
ரயிலென ரசித்தவன்
ரயில்களைப்  பூச்சிகளாக்கி
அடிக்கடிப் பறக்கிறேன்.

ஆனாலும்
இக்கட்டடக்காட்டில்
என் கையிலாடும்
தொடுதிரை நாணல்வழி
எட்டிப் பார்க்கிறது
நதிக்ரை ஞாபகங்கள்!

செவ்வாய், 3 ஜனவரி, 2017

வணக்கம் நண்பர்களே,

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

மூன்றாண்டுகளுக்குப் பிறகு வலைத்தளத்தில் எழுத முயற்சிக்கிறேன்.

தமிழ்மணம், இன்ட்லி இன்னும் பிற சொந்தங்களுக்கெல்லாம் சொல்லுங்க..

நான் வந்துட்டேன்னு...

திரும்ப வந்துட்டேன்னு....

Yes...I am back


உங்கள்
கலாநேசன்

ஞாயிறு, 7 ஜூலை, 2013

செவ்வாய், 1 ஜனவரி, 2013

அசைபோடுவோம்


 
இந்தியா செவ்வாய் கிரகத்திற்கு (மங்கல்யான்)  செயற்கைக்கோள்  அனுப்பப்போகும்  இருபத்தொன்றாம் நூற்றாண்டின் பதிமூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாம் 2012-ல் இந்தியாவில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை அசைபோடுவோமா...
  • இந்தியா பாகிஸ்தான் இடையேயான அணு ஆயுத விபரப்பகிர்வு 
  • 42 சதவீத இந்தியக் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்தில்லை HUNGaMa அறிக்கை 
  • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடத்தியது தொடர்பான ஊழல் வழக்கில் சுரேஷ் கல்மாடிக்கு ஜாமீன் 
  • ராஜாவால் வழங்கப்பட்ட 122 2G  அலைகற்றை உரிமங்கள் உச்சநீதி மன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
  • கர்நாடக சட்டமன்றத்தில் சூடான விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் போது கைப்பேசியில் ஆபாசப்படம் பார்த்துக்கொண்டிருந்த மூன்று பிஜேபி அமைச்சர்கள் பிடிபட்டனர்.
  • இந்திய ரயில்வே பட்ஜெட்டை வழங்கிய ரயில்வே அமைச்சர் தினேஷ்  திரிவேதி நான்கே நாட்களில் ராஜினாமா செய்தார் 
  • ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவத்தின் போர்விதி மீறல்கள் தொடர்பாக இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது  
  • சென்னை மற்றும் கல்கத்தாவில் நிலநடுக்கம் 
  • சச்சின் டெண்டுல்கர், நடிகை ரேகா , சமூக சேவகியும் தொழிலதிபருமான அணு அகா ஆகிய மூவரும் ராஜ்யசபா உறுப்பினர்களாக ஜனாதிபதி பிரதிபா பாட்டிலால் பரிந்துரைக்கப்பட்டனர். 
  • சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ்  பால் மேனன் 12 நாட்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.  
  • முப்பது வருடங்களாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுர்ஜீத் சிங் இந்திய திரும்பினார் 
  • பிரணாப் முகர்ஜி இந்தியாவின் 13வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • வடகிழக்கு மாநில மக்கள் பெங்களூருவில் தாக்கப்படப் போவதாக கிளம்பிய குருஞ்செய்திப் புரளியால் ஆயிரக்கணக்கானோர் பெங்களூருவில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்குப் பயணித்தனர் 
  • 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின் போது உயிருடன் பிடிக்கப்பட்ட ஒரே தீவிரவாதியான அஜ்மல் கசாப்  தூக்கிலிடப்பட்டான்.
  • தில்லி பேருந்தில் கூட்டான பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிய 23 வயது மருத்துவ மாணவி 13 நாட்கள் உயிருக்காக போராடி சிங்கப்பூர் மருத்துவமனையில் இறந்தாள்.
வாடும் பயிரைக் கண்டு வாடிச் சாகும் விவசாயி, விக்கிரம்மதித்தன் கதையாய்த் தொடரும் மீனவ படுகொலை, அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்கள், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு கூடாது என்ற எதிர்ப்புக் குரல்களுக்கிடையே வந்துநிற்கும் வால்மார்ட், மக்களைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் சாதிக் கலவரங்கள், நாட்கள் செல்லச் செல்ல நகைச்சுவையாகிப் போன தொடர் மின்வெட்டு .....இன்னும் இன்னும் நல்லது கெட்டதுகள் நடந்துகொண்டேயிருக்க 21.12.2012 அன்று அழிந்து   போகாமல் புதிய நம்பிக்கையோடு பூத்துக் குலுங்கும் பூமியைப் போற்றி புத்தாண்டைத் துவங்குவோம்.

அனைவருக்கும் எனதினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


 

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

நட்பு


வானத்துத் தாரகையொன்று
வந்திறங்கி என்னிடம்
ஆயிரம்கோடி ரூபாய்
ஆருயிர் நட்பு
எது வேண்டும் கேள் என்றது!
நான்
ஆயிரம் கோடி என்றேன்....
ஆருயிர் நட்பாய் தான்
நீயிருக்கிறாயே!



அனைவருக்கும் நண்பர்கள்தின நல்வாழ்த்துக்கள்

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

சகோதரத் திருவிழா

இன்று ரக் ஷா பந்தன். வட இந்தியப் பண்டிகைகளில் என்னைக் கவர்ந்தது. அதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்தால் காப்பு-கட்டு அதாவது உறவுகளின் பாதுகாப்பு முடிச்சு.

இந்நாளில் பெண்கள் குங்குமம், அரிசி, ராக்கி கயிறு மற்றும் இனிப்புகளை கடவுள் முன் வைத்து வழிபடுவர். பின்னர் அரிசியையும் குங்குமத்தையும் தன் சகோதரன் தலையில் தூவி, ராக்கியை மணிக்கட்டில் கட்டி ஆசி வழங்குவர்/வாங்குவர். இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் சொல்வர். அதை ஏற்றுக்கொண்ட சகோதரன் அவளுக்கு பதில் பரிசு கொடுத்து, உன் எல்லா சுக துக்கங்களிலும் உனக்கு உறுதுணையாய் இருப்பேன், உன்பக்கம் நிற்பேன் என உறுதியளிப்பான்.

பொதுவாக எல்லாப் பண்டிகைகளுமே குடும்ப உறவுகளை வலுப்படுத்தவே திட்டமிடப்படுள்ளது. ஒன்றாயிருப்பதின் சுகத்தை உணரச் செய்யவே பண்டிகைகள்.

சுமார் ஆறாயிரம் (?) வருடங்களாய் அதாவது சிந்து சமவெளியில் ஆரியர்கள் தோன்றியதில் இருந்து இப்பண்டிகை கொண்டாடப்படுவதாகச் சொல்கிறார்கள். ரக்சா பந்தன் பற்றிய சில சுவாரஸ்ய நிகழ்வுகளை/செய்திகளைப் பார்ப்போம்.

ரோக்சனா (கி.மு.326)
அலெக்சாண்டர் (அவரே தாங்க தி கிரேட்) கி.மு.326 ல் இந்தியாவை ஆக்கிரமித்தார். அவரின் இந்திய மனைவி ரோக்சனா. பஞ்சாபை ஆண்ட போரு மன்னன் அலெக்சாண்டரை தோற்கடிக்கும் தருவாயில் ரோக்சனா கட்டிய ராக்கியை பார்த்து விட்டுவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் கிரேக்கத்தில் இருந்து இந்தியா மிக தூரம் என்பதாலும், நம்பிக்கையான ஒரு ஆள் இந்தியாவில் தேவை என்றும், போருவின் போர்த்திறம் கண்டு வியந்தும் அலெக்சாண்டர் போருவை நண்பனாக்கிக் கொண்டார் என்று வரலாறு சொல்கிறது.

ராணி கர்ணாவதி (கி.பி.1527)

பாபருக்கு எதிரான போரில் தன் கணவர் ராணா சங்கரம் சிங் (ராஜஸ்தானத்தில் ஒரு மாகாணத்தின் ராஜா) மாண்டதை அடுத்து தன் மகன் விக்ரம்ஜீத்தை அரசனாக்கினார். அவன் சரிவர ஆட்சி செய்யாததால் தானே ஆட்சிப் பொறுப்பேற்றார். அச்சமயம் குஜராத்தின் சுல்தான் பகதூர் ஷா படையெடுத்து வந்ததால் அவர்களைச் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே முகாலயப் பேரரசர் ஹுமாயுனுக்கு உதவி வேண்டி ராக்கி ஒன்றை கர்ணாவதி அனுப்பினார். ராக்கியை ஏற்றுக்கொண்டு தன் தங்கைக்காக படைகளை அனுப்பினார் ஹுமாயுன்.



ரக்சா பந்தனுடன் தொடர்புடைய சில புராண/இதிகாச கதைகளும் உண்டு.

லட்சுமி /பெ மகாவிஷ்ணு

மகாபலி என்னும் மன்னன் தன் மீது தீவிர பக்தியில் இருந்ததால் அவனைக்காக்க திருமால் பூலோகம் வந்தார். திரும்பவும் வைகுண்டம் அழைத்துச் செல்ல லட்சுமி ஏழை பிராமணப் பெண்ணாய் வேடமிட்டு வந்து மகாபலிக்கு ராக்கி கட்டியதாக ஒரு கதை உண்டு.

திரௌபதி

சிசுபாலனை வதைக்கும் போரில் கிருஷ்ணர் விரலில் காயம் ஏற்பட்டதாம். அப்போது திரௌபதி தன் சேலையைக் கிழித்து கிருஷ்ணரின் விரலில் கட்டினார். அதைத்தான் கௌரவர் அவையில் துகிலுரிக்கும் போது சேலையாய் கொடுத்தார் கிருஷ்ணர்.


பாசமலர்களுக்கென் நேசமிகு வாழ்த்துக்கள்.

புனேவில் தொடர் குண்டு வெடிப்பு


நேற்றிரவு ஏழரை மணியில் இருந்து ஏழே முக்காலுக்குள் மகாராஷ்டிர மாநிலம் புனே நகரில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் நான்கு இடங்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. முதல் குண்டு மக்கள் நடமாட்டம் மிகுந்த J M சாலையில் உள்ள பாலகந்தர்வ் தியேட்டர் அருகில் வெடித்தது. நேற்று மத்திய உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்ட முன்னாள் மின்துறை மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே ஒரு விருது வழங்கும் விழாவிற்காக இங்கு வரவிருந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது குண்டு மெக் டொனால்ட்ஸ் கடையின் குப்பைத்தொட்டியிலும் மூன்றாவது தேனா வங்கியின் கிளையருகிலும் நான்காவது கர்வரே பாலம் அருகிலும் வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் இருவர் காயமடைந்தனர். உயிரிழப்பு ஏதுமில்லை. இந்த குண்டுகள் அனைத்தும் குறைந்த சக்தி கொண்ட பென்சில்-செல் டெட்டனேட்டர்களால் செய்யப்பட்டவை. ஐந்தாவது குண்டு செயலிழக்கப் பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் பதினேழு உயிர்களை காவு வாங்கிய ஜெர்மன் பேக்கரி குண்டு வெடிப்புச் சம்பவமும் இதே புனே நகரில் நடந்தது நினைவுகொள்ளத்தக்கது.
      

சனி, 5 மே, 2012

ஒற்றை விரல் ஓவியம்


பேருந்துப் பயணத்தில்
பின்புறம் திரும்பி
பேசுவதுபோல் ஒன்று...

புத்தகக் குழந்தைகளை
மார்பில் தாங்கியபடி
புன்னகைப்பது போல் ஒன்று...

அலுவல் நிமித்தமாய் - நான்
அயலூர் செல்கையில்
கையசைப்பது போல் ஒன்று...

சமையலறைக் கரப்பைபார்த்து
அலறித்துடித்து நீ
அஞ்சுவதுபோல் ஒன்று...

கடைத்தெரு போயெனை
காய்கறி வாங்கச்சொல்லி
கெஞ்சுவதுபோல் ஒன்று...

பிறக்காதக் குழந்தையின்
பிஞ்சுவிரல் பிடித்து 
கொஞ்சுவதுபோல் ஒன்று...

இப்படி நீ
புன்னகைப்பது...பூப்பறிப்பது...
வெட்கப்படுவது... வேடிக்கை பார்ப்பது...
முட்கள் குத்தியது...முகப்பரு வந்ததென
ஒவ்வொரு நிகழ்வையும்
ஓவியமாய் வரைந்தேன்.

பின்னொருநாள்
தூரிகை எல்லாம்
தோற்றுப்போனது -நீ
தொட்டுத்தொட்டு வரைந்த
ஒற்றை விரல் ஓவியத்தில்.....


ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

குளிர் விட்டுப் போனதே!

ஊசிக்காற்றை ஊதி
உள்ளத்தை வெகுவாய்ச் 
சுடுங்குளிர்.

நாலிரண்டு வாரங்கள்
நகரைப் பனியாக்கும் 
நெடுங்குளிர்.

அடுத்தவர் மூச்சு 
ஆவியாய் நம்மேல் 
படுங்குளிர்.

இடைகாட்டும் விதமாய் 
உடைகட்டும் மங்கையரை 
இழுத்துப் போர்த்தி 
விடுங்குளிர்.

காதல் செடியை 
மனதில் மிகுதியாய் 
நடுங்குளிர்.

கம்பளியின்றித் 
தூக்கம் தாராக் 
கடுங்குளிர்.

வீடில்லா ஏழைகளை 
வீதியில் சாகடிக்கும் 
கொடுங்குளிர்.

கலவையாய்  உணர்வெழுப்பிக்
கலைந்து போனபின்னும் 
எழுதாக் கவிதையை 
என்னுள் விதைத்து 
நெஞ்சைத் 
தொடுங்குளிர்... 

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


 
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்




அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்

 

ஞாயிறு, 18 டிசம்பர், 2011

உங்களுக்குக் கொலைவெறி பிடிச்சிருக்கா?

வலை நட்புகளுக்கு வணக்கம். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி.

வொய் திஸ் கொலவெறி கொலவெறி கொலவெறிடி?  என்ற தனுஷின் பாடல் தான் இப்போது உலகம் முழுவதும் ஹிட். பாடல் யு டியூபில் வெளியான ஒரு மாதத்தில் சுமார் இரண்டரை கோடி ஹிட்ஸ் பெற்றுள்ளது. (இன்று காலை ஏழு மணியளவில்   24531657 ஹிட்ஸ். இதைப் பதிவிடும் நான்கு மணியளவில் 24,722,004 ஹிட்ஸ்). சுமார் எழுபதாயிரத்துக்கும் அதிகமானோர் முகப்புத்தகத்தில் இந்தப் பாடலைப் பகிர்ந்துள்ளனர். BBC செய்திகளில் இப்பாடலைப் பற்றி செய்தி வெளியிட்டதோடு BBC ரேடியோவில் இப்பாடலையும் ஒலிபரப்பினார்கள். அமெரிக்காவின் TIME இதழில் இப்பாடலைப் பற்றி எழுதுகிறார்கள். (Nonsensical, Semi-English Music Video Goes Viral in India. The song's lyrics are practically gibberish, but India can't stop listening.). வட இந்திய செய்தித் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒரு தமிழ் சினிமாப் பாடலை விளம்பரப் படுத்துவதோடு "கொலைவெறிக்கு" அருஞ்சொற்பொருள் சொல்லி அசத்துகிறார்கள். அதெல்லாம் விடுங்க... சுமார் இரண்டு மாதங்களாய் பதிவேதும் எழுதாத நான் கடந்த இரண்டு வாரங்களாய் இப்பாடலைப் பற்றியோர் பதிவெழுத முயற்சி செய்துகொண்டிருந்தேன். அப்படி என்னதான் இருக்கிறது இந்தப்பாட்டில்... 

இணையதளத்தில் வைரஸாய் இப்பாடல் பரவ தனுஷ் சொல்லும் காரணங்கள் என்ன?
  1. அதிஷ்டம்.
  2. பாட்டில் கொலைவெறியைத் தவிர வேறெங்கும் தமிழ் இல்லை. அதனால் வழக்கமான தமிழ்ப் பாடல்களுக்கான மொழித்தடை இதிலில்லை.
  3. Its funny !
  4. எளிமையான பாடல். யார் வேண்டுமானாலும் பாடலாம்.
  5. பாடலின் சூழல். அதாவது பொண்ணுங்களால ஏமாறும் பசங்களின் பாடல். அதாவது ஒவ்வொரு பையனுக்கும் இந்தப் பாட்டோடு தொடர்பிருக்கு. (அப்போ உங்களையும் பொண்ணுங்க ஏமாத்தி இருக்காங்களா என்ற உடனடி கேள்விக்கு, "ஆமாம் ஒருமுறை" என்பது தனுஷின் பதில்.
கேட்டவுடன் நெஞ்சில் ஒட்டிக்கொள்ளும் மெட்டாக இருந்த போதும் இது இந்த அளவுக்கு ஹிட்டாக அதிஷ்டத்தையும் சேர்த்து அமிதாப் பச்சன், சோனி வீடியோ, ரஜினி என இன்னும் சில காரணங்கள் இருக்கின்றன.

அமிதாப் பச்சன்: பாடல் வெளியான முதல் வாரத்திலேயே அமிதாப் அதைப் பற்றி ட்விட்டரில் எழுதினார். ("Just heard #Kolaveri after much talk on it ... its so original and catchy ..congrats Dhanush and Aishwarya(Rajni's daughter) .. love").("how cool is Kolaveri di!!! slamming it LOUD! well done Dhanush and Aishwarya. big up guys!"). மேலும் அதைப் பற்றியோர் பேட்டியிலும் குறிப்பிட்டார். இது வட இந்தியர்கள் இப்பாடலைக் கவனிக்க உதவியது. (எங்கள் அலுவலகத்தில் சிலர் அமிதாப் பச்சனுக்குப் பிடித்தது என்பதாலேயே கைப்பேசியின் காலர் டியூனாக வைத்திருக்கிறார்கள்.)

தில்லியிலும் நான் செல்லும் இடங்களிலெல்லாம் இப்பாடலைக் கேட்க முடிகிறது. நேற்று எங்கள் அலுவலக பிக்னிக்கிலும்  இசைக்கப்பட்ட முதல் பாடல் இதுதான். இப்படி அங்கிங்கெனாதபடி எங்கும் பரவியுள்ள இந்தப் பாட்டை உங்களுக்குப் பிடிக்கவில்லையா...

சிறுவன் நவீன் (பாடகர் சோனு நிகத்தின் மகன்) பாடுவதைக் கேளுங்கள் உங்களுக்கு மிகப்பிடிக்கும்.  இது டாப் சாங்கோ, பாப் சாங்கோ இல்லை. ஆனால் சூப் சாங். சூப்பர் சாங்.....வாழ்த்துக்கள் அனிருத்.

சனி, 12 நவம்பர், 2011

புகைப்பிடிக்க புதிய விதிகள்

இந்திய சுகாதரத்துறை அமைச்சகம் அண்மையில் திரைப்படம் மற்றும்  தொலைக்காட்சி நிகழ்சிகளில் புகைப்பிடிக்கும் காட்சிகளுக்கென புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகள் வரும் திங்கட்கிழமை (14 - 11  - 2011 ) முதல் படமாக்கப்படும் அனைத்துக் காட்சிகளுக்கும் பொருந்தும். 
  • வழக்கமாக புகைப்பிடிக்கும் காட்சிகளில் திரையின் கீழ் "புகைப்பிடித்தல் உடல்நலத்திற்கு கேடு" என்ற வரிகள் போடுவார்கள். அதனோடு சேர்த்து கதாநாயகனே புகைப்பிடித்தலின் தீங்கைப் பற்றி உங்களோடு குறைந்தது  20 நொடிகள் பேசுவார். இந்தக்காட்சி இருமுறை (படத்தின் துவக்கத்திலும் படத்தின் நடுவிலும்) காட்டப்படும். (நல்ல பஞ்ச் டயலாக் யோசிக்கலாம்!)
  • புகைப்படத்தின் துவக்கத்திலும் நடுவிலும் குறைந்தது 30 நொடிகள் புகைப்ப்டிதலின் தீமையைப்பற்றிய விளம்பரம் காட்டப்படவேண்டும்.
  • சிகரெட் மற்றும் புகையிலைப் பொருட்களின் கம்பெனிப் பெயர்கள் (Brand Name)  காண்பிக்கக் கூடாது. 
  • தணிக்கைக் குழுவில் சுகாதாரத்துறையில் இருந்தும் ஒருவர் பங்கேற்பார். புகைப்பிடிக்கும் காட்சியின் அவசியத்தை விளக்கிச் சான்றிதல் பெற வேண்டும்.

 புகைப் பழக்கம் நுரையீரலைப் பாதிக்கும் என்பதும் அதன்பின் நுரையீரல் புற்று நோய் வரும் என்பதும் அனைவரும் அறிந்ததே. நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு அதன் பின்னர் 5 வருடங்களுக்கு மேல் உயிர் வாழ்பவர்கள் வெறும் 14 சதவீதம் மட்டுமே (மற்ற புற்று நோய்களுக்கு சராசரியாக 52  சதவீதம்) என்பதை நினைவில் கொள்க.


புகைப்பழக்கத்தால் புற்றுநோய் வர நீங்கள் புகைப்பிடிக்கத்தேவையில்லை. புகைப்பிடிப்பவரின் நண்பனாகவோ மனைவியாகவோ குடும்பத்தில் ஒருவராகவோ புகைக்கும் போது அருகில் இருந்தாலே போதும். (Passive Smoking ).


வியாழன், 20 அக்டோபர், 2011

காதலால் கலக்கலாம் வா!


உன்னை 
வருடும் காற்றைக்  
கொஞ்சம் வரச்சொல்... 
உன்
வாசம் எனக்குக் 
கொஞ்சம் தரச்சொல்.

விண்மீன் தோழியிடம் 
புன்னகையைக் கொடுத்தனுப்பு.
விரல்களின் வெம்மையை 
இரவிடம் கொடுத்தனுப்பு.
இதழ்களின் குளுமையை 
முகிலிடம் தந்தனுப்பு.
நினைவுகளை மெத்தையாக்கி
நிலவிடம் தந்தனுப்பு.
திகட்டாத அன்பைத் 
தீந்தமிழிடம் சொல்லியனுப்பு.

என் 
கற்பூரக் காதலை 
அக்னியாய் அணைத்துக்கொள்.
கொஞ்சுதலில் குழந்தையாய் 
கெஞ்சுதலில் இளமையாய் 
நேசத்தில் தாய்மையாய்
முழுதாய் கிரகித்துக்கொள்.

கடலுக்குள் கலக்கும் 
நதிபோல 
காதலுக்குள் கலக்கலாம் 
வா!



சனி, 15 அக்டோபர், 2011

உதயநிலா

இன்று வடக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் கர்வா சவுத் (KARVA CHAUTH)  கொண்டாடப்படுகிறது. திருமணமான இந்துப் பெண்கள் கணவனின் நீண்ட ஆயுள் வேண்டி நிலவு வரும் வரை விரதமிருப்பார்கள். நிலவு வந்ததும் அதை நீரிலோ, துப்பட்டா அல்லது சல்லடை வைத்தோ பார்த்து பின் கணவன் முகம் பார்ப்பார்கள். "கடவுளே என் கணவனுக்கு ஆரோக்யமான நீண்ட ஆயுள் கொடு, நான் சுமங்கலியாக (இவனைத் தனியே தவிக்கவிட்டுட்டு!) இறக்க வேண்டும்" என வேண்டிக்கொள்வார்கள்.



கர்வா என்றால் மண்கலசம். சௌத் (சௌதா) என்றால் நான்கு (அதாவது கார்த்திகை மாதத்தின் பௌர்ணமியில் இருந்து நான்காவது நாள்). மண் கலசத்தில் நீரையோ அல்லது பாலையோ நிரப்பி அதில் பஞ்ச ரத்தினங்களை இட்டு தானமாகக் கொடுத்து கணவனுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளும் பண்டிகை என்று பொருள்.


 அந்த காலத்தில் வெகு தொலைவில் வாக்கப்பட்டுப் போகும் பெண்கள், ஏதாவது  பிரச்சனை என்றால் தங்கள் குடும்பத்தை உடனடியாகத் தொடர்பு கொள்ள இயலாது. அதனால் நாத்தனார் அல்லது அருகில் உள்ள குடும்பத்துப் பெண்களை சகோதரியாக ஏற்று பிரச்சனைகளை பேசிக்கொள்ளவும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாக இருக்கவும் இந்தப் பண்டிகை பழங்காலத்தில் கொண்டாடப்பட்டது. இன்றோ சாமியார் மடத்தில் பூனை கட்டிய கதையாய், மருதாணி இட்டு வளையல் போட்டு புடவை கட்டும் பண்டிகையாகிப் போனது கர்வா சௌத்.



கர்வா சௌத் அன்று சூரிய உதயத்தில் இருந்து நிலவு வரும் வரை தண்ணீர் கூட குடிக்காமல் பெண்கள் கணவனுக்காக விரதமிருக்கிறார்கள். முன்தினமே கை நிறைய வளையல் வாங்கிக்கொண்டு மருதாணி இட்டுக்கொள்கிறார்கள். அன்று பெரும்பாலும் முகூர்த்த புடவைகளை கட்டிக்கொண்டு தெருவில் உள்ள பெண்களெல்லாம் ஒன்றாய் கூடி பூஜை செய்கிறார்கள்.


 உதயநிலா 
அன்று 
சந்திரனைப் பார்த்த 
சல்லடைத் தட்டுவழி 
இந்திரனைப் பார்த்தாள்
ரதி - அதன்பின் 
ஒவ்வொரு நாளும் 
விடிகிறது அவனுக்கு 
உதயநிலா முகம் பார்த்து...

செவ்வாய், 11 அக்டோபர், 2011

மனசாட்சி (சவால் சிறுகதை-2011)

சூரியத் தலைவரின் ஆட்சி முடிந்து நிலாராணி ஆட்சிக்கு வந்திருந்த முன்னிரவு. நட்சத்திரங்களுக்குப் போட்டியாக தெருவெங்கும் வண்ண வண்ண விளக்குகள் மின்னின. சாலையை மறித்துச் சமைத்த மேடைமுன் அமைச்சரின் உரைகேட்க ஆவலாய்க் காத்திருந்தது காசும் 'தண்ணியும்' கொடுத்துச் சேர்த்திருந்த மக்கள் வெள்ளம். வீட்டில் பல்பு பியூஸ் போனதால் அருகில் இருக்கும் சரத்தில் இருந்து குண்டு பல்பு ஒன்றைக் கழட்டிப் போகலாமா என தொண்டன் ஒருவன் யோசித்துக் கொண்டிருந்தான். வரிசையாய்க் கார்கள் வந்து நின்றதும் எழுந்த 'வாழ்க வாழ்க' கோஷம் அவன் கவனத்தைக்  கலைத்தது. கூட்டம் கலையாமல் இருக்க மைக்கைக் கடித்து ஒப்பேத்திக் கொண்டிருந்த ஒருவன் அவசர அவசரமாய் அப்புறப்படுத்தப்பட்டான். அடுத்ததாக புரட்சிப் புயல், மங்கையர் குலம்காக்க தென் கங்கையில் வந்துதித்த வேங்கை, மாண்புமிகு சமூக நலத்துறை அமைச்சர் திரு.உத்தமன் அவர்கள் உங்களிடையே சிறப்புரை ஆற்றுவார் என வட்டச் செயலாளர் தன் கட்டைக் குரலில் கூவினார். 

வழக்கமான வசனங்களைச் சொல்லி முடித்ததும் அமைச்சர் தன் உதவியாளர் தயாரித்த உரையைத் துவங்கினார். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும் போது குழந்தைகள்  நலத்தில், பெண்களைப் பேணுவதில், பணியாளர் உயர்வில், பழங்குடி இன மேம்பாட்டில் தமிழகம்  முன்னோடியாகத் திகழ்கிறது. ஒவ்வொரு நாளும் நேபாளத்தில் இருந்தும் வங்கதேசத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பெண்களும், குழந்தைகளும் கொல்கத்தாவிற்கும் மும்பைக்கும் கடத்தப்படுகிறார்கள். நாட்டின் தலைநகர் தில்லியில் பாருங்கள் போன மாதம் கூட குண்டு வெடித்தது. இன்னும் இன்னும் பல புள்ளி விவரங்களைச்  சொல்லி முடித்து, இதுபோன்ற எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தமிழ்நாட்டை அமைதிப் பூங்காவாக வைத்திருக்க அயராது பாடுபடுவேன் என்று இந்த மாமேடையில் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று முடித்தார். நிகழ்ச்சி முடிந்ததும்  தன் நீலாங்கரை பண்ணை வீட்டுக்கு ஓய்வெடுக்கக் கிளம்பினார் அமைச்சர்.

மறுநாள் காலை சமூக நலத்துறையின் அலுவலகக் கட்டிடத்தின் ஆறாவது மாடியில் தன் நாற்காலியில் சுழன்றபடி அமைச்சரின் உரையைப் படித்துக் கொண்டிருந்தார் குழந்தைகள் நல இயக்குனர் ராஜமாணிக்கம். ஓராண்டுக்கு முன்வரை டிபார்ட்மென்டில் இவர் முரட்டுச்சிங்கம். மிக நேர்மையானவர் என்று பல பரிசுகளையும் பாராட்டுகளையும் வாங்கியவர். அண்மையில் அமைச்சரான உத்தமனின் நட்பு கிடைத்ததும் அப்படியே மாறிப்போனார். நலத்திட்டங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியில் கைவைப்பது, அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதெல்லாம் அமைச்சரின் செல்வாக்கால் அன்றாடப் பணிகளானது . இவர் மூலம் வசூலாகும் தொகையில் ஒரு பெரும்பகுதியை அமைச்சரிடம் கொண்டு சேர்க்க விஷ்ணு உதவினான். இன்டர்காமில் விஷ்ணுவை அழைத்து தன்னறைக்கு வரச்சொன்னார் ராஜமாணிக்கம்.

விஷ்ணு இதே துறையின் கணக்கெடுப்புப் பிரிவில் வேலை பார்ப்பவன். விஷ்ணுவும் ஆரம்பத்தில் ராஜமாணிக்கம் போல் நல்லவனாகத்தான்  இருந்தான். சில நேரங்களில் சக அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதை போலீசில் கூட போட்டுக் கொடுத்திருக்கிறான். எல்லோரும் நல்லவர்களே, தவறு செய்யத் தகுந்த தருணம் கிடைக்கும் வரை. சில ஆயிரங்கள் மட்டுமே சம்பளம் வாங்கும் ஒருவனை பணத்தால் அடித்தால் அவன் ஊழலுக்குத் துணைபோகத்தானே செய்வான். கொள்கைப் பிடிப்போடு நேர்மையான வாழ்க்கை ஒருசிலருக்கே வாய்க்கிறது. அமைச்சரின் பார்வைக்கு அலுவலகக் கோப்புகளை அனுப்புவதாகச் சொல்லி விஷ்ணு மூலமே 'பெட்டி' அனுப்பத் துவங்கினார் ராஜமாணிக்கம். அதில் லஞ்சப் பணம் இருப்பது தெரியாமல் இருக்க விஷ்ணு என்ன பிஞ்சுக் குழந்தையா? பின்னர் இவனையும் கொஞ்சம் கவனிக்கத் துவங்கினார் ராஜமாணிக்கம். பிறகென்ன அடுத்தவர் செய்யும் தவறைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் போலீசில் சொன்ன உளவாளியே மெல்ல மெல்ல களவாணி ஆனான்.

அறைக்கதவை தட்டி உத்தரவு பெற்று உள்ளே நுழைந்தான் விஷ்ணு. வா விஷ்ணு, இதுவரை கொஞ்சம் கொஞ்சமாய் மட்டுமே காசுபார்த்த நமக்கு ஒரு பெரிய அமௌன்ட் கிடைக்கப் போகிறது. அடுத்த வாரம் மும்பையில் இருந்து சரக்கு வருகிறது. எல்லாச் சரக்கையும் பத்திரமாய் கொல்கத்தா அனுப்பினால் நம் வேலை முடிந்தது. பேசியபடி மொத்தத் தொகையும் நாளைக்கே நம் கைக்கு வந்துவிடும். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம், சமீப காலமாக உள்ளிருந்தே காவல் துறைக்கு யாரோ தகவல் தருகிறார்கள். அதனால் நீயும் போலிசுக்குத்  தகவல் சொல்லிடு. அதாவது தவறான தகவல் சொல்லி காவல் துறையின் கவனத்தைத் திசைதிருப்பிவிட்டால் நம் வேலை மிகச் சுலபமாக முடிந்துவிடும். இரண்டு நாட்களுக்கு எனக்கு போன், மெசேஜ் எதுவும் பண்ணாதே! தவறான தகவலை போலிசுக்கு அனுப்பியதும், ஒரு துண்டுக் காகிதத்தில்  எழுதி எனக்கு வரும் கடிதங்களோடு வைத்திடு என்று  பேசிக்கொண்டே போனார். சரி சார், மும்பையில் இருந்து என்ன சரக்கு வருகிறது என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதிலில் அதிர்ந்தான் விஷ்ணு. 

தன்னறைக்குத் திரும்பிய விஷ்ணு கவலையோடு யோசனையில் ஆழ்ந்தான். அடுத்தவாரம் மும்பையில் இருந்து வருவதாய்ச் சொன்ன சரக்கு விளையாட்டுப் பொருட்களோ, வெடிமருந்தோ, கஞ்சா அபினோ , கடத்தல் பொருட்களோ அல்ல. உயிருள்ள ஜீவன்கள். நேபாளத்தில் இருந்து கடத்திவரப்பட்ட அப்பாவி இளம்பெண்கள். தாதர் எக்ஸ்பிரஸில் வரும் அவர்களை சென்னையில் தங்க வைத்து ஹௌரா எக்ஸ்பிரஸில் கொல்கத்தா அனுப்புவது இவர்கள் வேலை. அங்கிருந்து அவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அடிமைகளாக விற்பனை செய்யப்படுவர். அரசியல் அதிகார செல்வாக்குடன் மிகப்பெரிய நெட்வொர்க்கே இதற்குப்பின் செயல்படுகிறது. இவர்கள் அனைவரும் திருமணம், வசதியான வாழ்க்கை என ஆசை காட்டி நேபாளத்தில் இருந்து கடத்திவரப்பட்டவர்கள். ஒருசிலரை அறுபதாயிரம் ரூபாய்க்குப் பெற்றோரே விற்ற கொடுமையும் நடந்திருக்கிறது. சென்னை வருபவர்கள் ஒரு தனியார் அநாதை விடுதியில் தங்கவைக்கப்படுவர். ஒருசிலர் அமைச்சரின் பண்ணை வீட்டுக்கும் அனுப்பப்படுவர். மும்பையில் இருந்து நேரடியாக கொல்கத்தா கொண்டு செல்வதில் சில தடங்கல் ஏற்பட்டதால் இந்த மாற்று ஏற்பாடு. ராஜமாணிக்கத்துடன் சேர்ந்து சிறுசிறு தவறுகள் செய்திருந்த போதும் இத்தனை பேர் வாழ்க்கையைச் சீரழிப்பதில் விஷ்ணுவுக்கு உடன்பாடு இல்லை. நீண்ட யோசனைக்குப் பின் ஒரு முடிவுக்கு வந்தவனாய் கணினியில் சில வாசகங்களை டைப் செய்து பிரிண்ட் எடுத்தான். கூடவே மேலும் கீழும் சில வெள்ளைத்தாள்களைச்  சேர்த்துப் பையில் போட்டுக்கொண்டான். 'பொறி' என்று கோகுலுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு வீட்டுக்குக் கிளம்பினான் விஷ்ணு.

விஷ்ணு வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக தான் பிரின்ட் செய்து கொண்டுவந்திருந்த பேப்பரை எடுத்து டீப்பாயில் வைத்தபடி கீதா இங்கிருந்த ஸ்கேல் எங்கே என மனைவியிடம் வினவினான். என்னங்க பரீட்சை ஏதேனும் எழுதப்போறீங்களா  வந்ததும் வராததுமா ஸ்கேல் கேக்குறீங்க என்றபடி ஸ்டீல் ஸ்கேலோடு வந்தாள் கீதா. தான் டைப் செய்திருந்ததை இரு பகுதிகளாக் கிழித்தான். பிறகு கவர் ஏதும் வாங்காமல் வந்துவிட்டதை உணர்ந்தவனாய், கீதா கடைக்குப் போயிட்டு வரேன் கதவை சாத்திக்கோ என்றபடி வீட்டிலிருந்து வெளியேறினான்.

கோகுல்நாத்  நீங்கள் எல்லோரும் எதிர்பார்த்தது போல ஒரு நேர்மையான காவல்துறை அதிகாரி. முன்பு அலுவலகத்தில் லஞ்சம் வாங்கப்படுவதை முன்கூட்டியே விஷ்ணு போட்டுக் கொடுத்ததும் கோகுலுக்குத்தான். போனதடவை இருவரும் பேசிவைத்துக்கொண்ட சங்கேத வார்த்தை தான் பொறி. அதன் பிறகு விஷ்ணுவே ராஜமாணிக்கத்தின் பொறியில் மாட்டிக்கொண்டதால் கோகுலுக்கு தகவல் ஏதும் அனுப்பப்படவில்லை. வெகுநாட்களுக்குப் பிறகு விஷ்ணுவிடம் இருந்து மெசேஜ் வந்த போது கோகுல் வேறோர் வேலையாய் விஷ்ணுவின் வீடிருக்கும் பகுதியில் தான் இருந்தார். அந்த வேலை முடிந்ததும் விஷ்ணுவின் வீட்டிற்குக் கிளம்பினார்.

கடைக்குச் சென்றிருந்த விஷ்ணுவை எதிர்பார்த்துக் கதவைத் திறந்த கீதா கோகுலைப் பார்த்ததும் குழம்பினாள். நான் காவல்துறை அதிகாரி கோகுல்நாத், விஷ்ணு இல்லையா என்று கேட்டார். அவர் பக்கத்துலதான் கடைக்குப் போயிருக்கார், உட்காருங்கள் குடிக்க ஏதேனும் எடுத்து வருகிறேன் என்றபடி சமையலறைக்குச் சென்றாள் கீதா. சுவர்க்கடிகாரம், டிவி என்று நோட்டம்விட்டுக்கொண்டிருந்த கோகுல் டீப்பாயின் மேலிருந்த காகிதங்களைப் பார்த்தார்.

"Sir, எஸ்.பி.கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்.  கவலை வேண்டாம் - விஷ்ணு" என்று ஒன்றிலும் "Mr  . கோகுல்- S W H2 6F  இதுதான் குறியீடு. கவனம் - விஷ்ணு" என்று மற்றொன்றிலும் இருந்தது. இது என்ன குறியீடு என்று யோசித்துக் கொண்டிருக்கையில் கோகுலின் கைப்பேசி சிணுங்கியது. சார் நான் விஷ்ணு பேசறேன் ஞாபகம் இருக்குங்களா? உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பேசணும் என்றான். போனை கட் பண்ணிட்டு உன் வீட்டுக்கு வா பேசலாம் என்றார் கோகுல்.

விஷ்ணு வந்ததும், சமூக நலத்துறை (Social Welfare) அலுவலகத்தின் ஆறாவது மாடியில் இருக்கும் H2 பிளாக்கில் என்ன நடக்கப்போகிறது எனக்கேட்டார் கோகுல். எவ்வளவு எளிதாய் தன் குறியீட்டைப் புரிந்து கொண்டார் என வியந்த விஷ்ணு எல்லாவற்றையும் விளக்கமாகச் சொன்னான். கவனமாய் விஷ்ணு சொல்வதை முழுவதும் கேட்ட கோகுல்நாத், நாளை ராஜமாணிக்கத்தை நிச்சயம் கைது செய்யப் போவதில்லை என்றார். அதைக்கேட்டு அதிர்ந்த விஷ்ணுவின் முகபாவத்தை ரசித்தபடி தொடர்ந்தார். நாளை கைது செய்தால் ராஜமாணிக்கத்தைத் தவிர அமைச்சர் உட்பட அத்தனை பேரும்  தப்பி விடுவார்கள். அவர்கள் திட்டமிட்டபடி அப்படியே தொடரட்டும். நீ ராஜமாணிக்கத்திற்கு டைப் செய்துள்ள வாசகத்தில் "தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்" என்பதை "தவறான தகவலைக் கொடுத்துவிட்டேன்" என்று மாற்றி நாளை காலை அவருக்கு அனுப்பிவிடு. ராஜமாணிக்கத்தின் கைக்குப் பணம் வந்தபின் எனக்கு ஒரு மிஸ்டு கால் கொடு. நீ தவறாகக் கொடுத்தத் தகவலை உறுதிசெய்ய நான்காவது மாடிக்கு நாலு போலீசை அனுப்புகிறேன். பிறகு என்னவெல்லாம்  செய்யவேண்டும் என்பதை விளக்கிச் சொல்லிவிட்டுக் கிளம்பினார் கோகுல்.

அடுத்த வாரத்தில் ஒருநாள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்த தாதர் எக்ஸ்பிரஸில், மும்பையில் இருந்து கடத்தி வரப்பட்ட இருபது பெண்கள் போலீசாரால் மீட்கப்பட்டனர். இன்னும் சில வாரங்கள் கழித்து அமைச்சரின் தொடர்பு அறியப்பட்டதும் இவ்வழக்கு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது. ராஜமாணிக்கம், உத்தமன் இன்னும் பல முக்கியப் புள்ளிகள் ஒருநாள் அதிகாலையில் கைது செய்யப்பட்டனர். நாடெங்கும் நீதியின் நம்பிக்கைக் கீற்றுகளை விதைத்தபடி அடிவானில் உதித்தான் ஆரஞ்சுச் சூரியன்.

குறிப்பு: இது பரிசல் + ஆதியுடன் 'யுடான்ஸ்' இணைந்து வழங்கும் சவால் சிறுகதைப் போட்டிக்கான சிறுகதை. யுடான்சில் நீங்கள் அளிக்கும் வாக்குகளுக்கு முடிவைத் தேர்வதில் 10  % பங்குண்டு. எனவே இந்தக் கதை உங்களுக்குப் பிடித்திருந்தால் கீழே உள்ள யு டான்ஸ் பட்டனில் உள்ள லைக்கைக் க்ளிக்கி தவறாமல் வாக்களிக்கவும். நன்றி.



ஞாயிறு, 2 அக்டோபர், 2011

உயிரின் விலை 27 ரூபாய்


ரிஷி என்ற மனநிலை சரியில்லாத அண்ணனுக்கும் கணேஷ் என்ற உடல் ஊனமுற்ற அண்ணனுக்கும் ஒரே தம்பியான 22 வயது உமேஷ் குமார் பாண்டே மானேசர் - குர்கான் நெடுஞ்சாலையில் உள்ள ஓர் சுங்கச்சாவடியில் நான்கு மாதத்திற்கு முன்னர் பணியில் சேர்ந்தான். செப்டெம்பர் 22 நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் வழக்கம் போல டோல் பூத்தில் பணம் வசூலித்துக் கொண்டிருந்தான். டோல் பூத் விதிகளின் படி அருகில் இருபது கிலோமீட்டர் சுற்றுவட்டத்தில் உள்ள கிராமங்களின் வாகனகளுக்கு சுங்கவரி கிடையாது.

வெள்ளை நிற போலீரோவில் விஜய்வீர் யாதவ் (28) டோல் பூத்திற்கு வந்த போது  உமேஷ் 27  ரூபாய்க் கட்டணம் கேட்டான். அதை மறுத்த விஜய் தான் அருகில் உள்ள ஓர் கிராமத்திலிருந்து வருவதாகச் சொன்னான். விதிப்படி வண்டியின் ஒரிஜினல் RC காண்பித்தால் சுங்கவரி கட்டத் தேவையில்லை. விஜயிடம் RC எதுவும் இல்லை வெறும் ஓட்டுனர் உரிமம் மட்டுமே வைத்திருந்தான். இருந்த போதும் விஜய் மிரட்டியதால் உமேஷ் கேட்டைத் திறந்துவிட்டு போகும்படிச் சொன்னான். அதன் பின்னரும் சும்மா போகாமல் உமேஷை சுட்டுவிட்டுச் சென்றான் அப்பாவி. கழுத்தில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தான் உமேஷ். இந்த வீடியோவைப் பாருங்கள்.
 
கேட் திறந்தே இருந்ததால் பின்னிருந்த ஐந்தாறு வாகனங்களும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி டோல் செலுத்தாமல் வேகமாய் வெளியேறின... உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த உமேஷை விட்டுவிட்டு. பின்னொரு ட்ரக்காரர் கவனித்து தகவல் சொல்லி மருத்துவமனை கொண்டுசெல்லும் முன் உயிர்விட்டான் உமேஷ். நியாயமாய் 27 ரூபாய்க் கட்டணம் செலுத்தச் சொன்னதற்காக கொலைசெய்யப்பட்ட கொடுமையை என்னவென்று சொல்வது. உமேஷின் மறைவால் மூன்றே மாதத்திற்கு முன் உமேஷை மணந்தவளும் உமேஷின் சம்பளத்தை மட்டுமே நம்பி உயிர்வாழ்ந்த நால்வரும் (வயதான பெற்றோர்கள் மற்றும் இரு அண்ணன்கள்) மீளாத்துயரில் வாடுகின்றனர். அவர்களுக்கு ஆறுதல் சொல்ல நம்மிடம் வார்த்தைகளில்லை. இந்தக் குடும்பத்திற்கு உதவ முன்வருவோர் கீழ்காணும் முகவரிக்கு காசோலை அனுப்பலாம். (நன்றி: NDTV)

Ramrati Pandey
Account Number: 30496591243
State Bank of India
Birha, Bijhauli, Hanumana,
Rewa, Madhya Pradesh
India
Pin Code: 486335

மேலும் விவரங்களுக்கு NDTV ன் இந்த லிங்கைப் பார்க்கவும்.

புதன், 28 செப்டம்பர், 2011

நாய்க்கடி நாள் வாழ்த்துக்கள்

இன்று உலக ராபிஸ்(Rabies) தினம். நண்பர்கள் தினம், மகளிர் தினம், அப்பாக்கள் தினம், அன்னையர் தினம், நாத்தனார் தினம், கொழுந்தியா தினமெல்லாம் கொண்டாட ஆரம்பித்துவிட்ட நாம் நாய்க்கடி தினம் பற்றியும் ஒரு சில தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுவதில் தவறில்லை தானே!

ராபிஸ் என்பது வைரஸ் தாக்குதலுக்கு உண்டான நாயிடாமிருந்து மனிதனுக்குப் பரவும் கொடுமையான நோய். கடிபட்ட இடத்திலிருந்து வைரஸ் நரம்பு மண்டலம் வழியாக மூளையைத் தாக்கும். இதற்கு ஒரு சில வாரங்கள் கூட ஆகலாம். ராபிஸ் வைரஸ் மூளையை அடையும் முன் தடுக்காவிட்டால் நிச்சயம் மரணம் தான். எனவே நாய்க்கடித்த உடன் செய்யவேண்டியவை என்னவென்று பார்க்கலாம்.

  1. கடிபட்ட இடத்தை நிறைய தண்ணீர் விட்டு குறைந்தது பத்து நிமிடமேனும் நன்றாகக் கழுவ வேண்டும்.
  2. டெட்டால் அல்லது சோப்புத் தண்ணீரைத் தெளிக்கலாம். ஆனால் கடிபட்ட இடத்தை மூடக் கூடாது.
  3. அருகில் உள்ள மருத்துவரிடம் சென்று ராபிஸ் நோய்க்கான தடுப்பூசி கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும்.

Quote

Followers