கவிஞர் வைரமுத்து திரைப்பாடலாசிரியராக ஆறாவது முறை தேசிய விருது பெறுகிறார். முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால் படங்களைத் தொடர்ந்து தென்மேற்குப் பருவக்காற்று படத்திற்காக இவ்விருதைப் பெறுகிறார். அவரை வாழ்த்தி மகிழும் இந்த இனிய தருணத்தில் எனக்கு மிகப் பிடித்த அவர் கவிதைகளில் ஒன்று உங்களுக்காக...
உன்னைப் பார்த்து உலகம் குறைக்கும்
தன்னம்பிக்கை தளர விடாதே
இரட்டைப் பேச்சுப் பேசும் உலகம்
மிரட்டும் தம்பி மிரண்டு விடாதே
ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு
உலகின் வாயில் இரட்டை நாக்கு
எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லாம்
உனக்குச் சொல்கிறேன் உள்ளத்தில் எழுது
இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன்
இலக்கியம் இல்லை லேகியம் என்றது
திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தேன்
பரிமே லழகரை வரச்சொல் என்றது
குறுந்தொகை கம்பன் கொட்டி முழக்கினேன்
குண்டுச் சட்டியில் குதிரை என்றது
எலியட் நெருடா எல்லாம் சொன்னேன்
திறமை எல்லாம் திருடிய தென்றது
எளிய தோற்றமே இயல்பென இருந்தேன்
வடுக பட்டி வழியுது என்றது
அழகாய் நானும் ஆடைகள் கொண்டேன்
கழுதைக் கெதற்குக் கண்மை என்றது
மேடையில் கால்மேல் காலிட் டமர்ந்தேன்
படித்த திமிர்தான் பணிவில்லை என்றது
மூத்தவர் வந்ததும் முதலில் எழுந்தேன்
கவிஞன் நல்ல "காக்கா" என்றது
உயர்ந்தோர் பெருமை உவந்து புகழ்ந்தேன்
காதில் பூ வைக்கிறான் கவனம் என்றது
விரல்நகத் தளவு விமர்சனம் செய்தேன்
அரிவாள் எடுக்கிறான் ஆபத்து என்றது
மற்றவர் சூழ்ச்சியால் மண்ணில் விழுந்தேன்
புத்தி கொழுத்தவன் புதைந்தான் என்றது
மூச்சுப் பிடித்து முட்டி முளைத்தேன்
தந்திரக் காரன் தள்ளிநில் என்றது
பகையைக் கண்டு பைய நகர்ந்தேன்
பயந்துவிட்டான் பாவம் என்றது
மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன்
விளங்கி விட்டதா மிருகம் என்றது
பணத்தில் பொருளில் பற்றற் றிருந்தேன்
வறுமையின் விந்தில் பிறந்தவன் என்றது
என்னைத் தேய்த்து மண்டபம் கட்டினேன்
புலவன் இல்லை பூர்ஷ்வா என்றது
சொந்த ஊரில் துளிநிலம் இல்லை
இவனா மண்ணின் மைந்தன் என்றது
தென்னை மரங்கள் தேடி வாங்கினேன்
பண்ணையார் ஆனான் பாவலன் என்றது
கயவர் கேட்டால் காசு மறுத்தேன்
கறக்க முடியாக் கஞ்சன் என்றது
உண்மை இருந்தால் உறுபொருள் கொடுத்தேன்
உதறித் திரியும் ஊதாரி என்றது
மங்கைய ரிடையே மௌனம் காத்தேன்
கவிஞன் என்ற கர்வம் என்றது
பெண்கள் சிலருடன் பேசத் தொடங்கினேன்
கண்களைக் கவனி காமம் என்றது
விருதுகள் கழுத்தில் வீழக் கண்டேன்
குருட்டு அதிஷ்டம் கூடிய தென்றது
மீண்டும் மீண்டும் விருதுகள் கொண்டேன்
டெல்லியில் யாரையோ தெரியும் என்றது
திசைகள் தோறும் தேதி கொடுத்தேன்
அய்யோ புகழுக் கலைகிறான் என்றது
நேரக் குறைவு நிறுத்திக் கொண்டேன்
கணக்குப் பார்க்கிறான் கவிஞன் என்றது
அப்படி இருந்தால் அதுவும் தப்பு
இப்படி இருந்தால் இதுவும் தப்பு
கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம்
தன்நிழல் பார்த்துத் தானே குறைக்கும்
உலகின் வாயைத் தைத்திடு; அல்லது
இரண்டு செவிகளை இருக்க மூடிடு
உலகின் வாயைத் தைப்பது கடினம்
உந்தன் செவிகளை மூடுதல் சுலபம்
10 comments:
நன்றி தேவா...சரிசெய்துவிட்டேன்.
வாழ்த்துக்கள்
இந்தப்பாடல் மிகவும் நன்றாக உள்ளது.
படித்தவுடன் எனக்கும் பிடித்து விட்டது.
வைரமுத்துவின் வைர வரிகள் தான்
ஆறுமுறையென்ன மேலும் மேலும்
பலமுறை தேசிய விருதுகள்
வெல்லக்கூடிய திறமை வாய்ந்தவரே !
வாழ்த்துக்கள் வைரமுத்துவுக்கு.
பாராட்டுக்கள் பதிவு செய்த உங்களுக்கு.
அப்படி இவர் இருக்க மற்றவர் சொல் கேட்டு இப்படி இவர் மாறினாரா.?அப்படி இப்படி மாறக் காரணம் தெரியவில்லையே. அவருடைய திறமையில் எந்தக் குறையும் காணவில்லை. அவரது கள்ளிக்காட்டு இதிகாசமே அதற்கு சான்று. பதிவுக்குப் பாராட்டுகள்
G.M Balasubramaniam சொன்னது…
//அவருடைய திறமையில் எந்தக் குறையும் காணவில்லை. அவரது கள்ளிக்காட்டு இதிகாசமே அதற்கு சான்று.//
மிகச்சரியாகச் சொன்னீர்கள்.
அந்தக்கள்ளிக்காட்டு இதிகாசத்திற்கே அவருக்கு மிகப்பெரிய விருது கொடுக்கப்படவேண்டும் என்பது என் ஆவல்.
பாராட்டுக்கள். நல்லதோர் கவிதையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றிங்க.
வைரமுத்துவின் வைர வரிகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சரவணன். விருது பெற்ற வைரமுத்து அவர்களுக்கும் எனது பாராட்டுகள்.
வாழ்த்துகள் கவிஞருக்கு.அவர் கவி தந்த உங்களுக்கு நன்றி !
அருமையான இடுகை.வைரமுத்துவின் கவிதைக்கடலில் விளைந்த முத்துக்கள் ஏராளம்.நிதர்சனமான உண்மைகள் அவரின் நேர்த்தியான வைரவரிகளில்.அந்த வைரத்தைக் கொண்டே அவருக்குக் கிரீடம் சூட்டிய கலாநேசனுக்கும் வாழ்த்துக்கள்.
கருத்துரையிடுக