திங்கள், 1 மார்ச், 2010

துக்கப்பிரசவம்

March 01,2008

அக்காவின் திருவயிற்றில்
அவதரித்த பாலகனே
எக்காலம் ஆனாலும்-உனை
எவ்வாறு நான் மறப்பேன்.

எல்லாக் குழந்தையுமே
பிறந்ததும் அழுமாமே
நீ மட்டும் பிறந்தவுடன்
எங்களை ஏன் அழவைத்தாய்?

உதித்ததும் மறைந்துபோன
பிஞ்சுச் சூரியனே- எங்களுடன்
சிலமணி நேரம்கூட
செலவிட மனமில்லையா?

முகமூடி அணிந்துவாழும்
முட்டாள்கள் உலகினிலே 
வாழ பிடிக்கலையோ 
வானுலாம் சென்றுவிட்டாய்.

மனக்கரை கொண்ட 
மனிதர்கள் மத்தியிலே 
மகிழ்ச்சி கிட்டாதென்றா
மறைந்து நீ போய்விட்டாய்.

தாய்மாமன் நானுனக்கு 
தங்கத்தில் சங்கிலியும் 
வண்ணவண்ண ஆடைகளும்
வாங்கித்தர நினைத்திருந்தேன் 

கனவுகள் பலவைத்து 
காத்திருந்த மாமனைவிட
காலனா உன்மனதை
கவர்ந்தவன் ஆகிவிட்டான்.

மீளாத் துயராற்றில்
மிதக்கவிட்டு போன உன்னை
எண்ணித் தவிக்கின்றேன்
கண்ணீர் வடிக்கின்றேன்.

மாமா என்றென்னை
மார்தழுவ வந்தமகன்
ஏமாற்றி போனாயே உன்னை
எவ்வாறு நான் மறப்பேன்?


காயாத கண்ணீர் துளிகளுடன்
கலாநேசன்.

5 comments:

Priya சொன்னது…

என்னை உலுக்கி பார்க்கும் கவிதை. என்ன சொல்றதுன்னே தெரியல. கலங்கிய கண்களுடனே இதை எழுதுகிறேன். அக்காவிற்கு எனது ஆறுதலை தெரிவியுங்கள்.

பத்மா சொன்னது…

ப்ளீஸ் அந்த படத்தை எடுத்து விடுங்கள் ..தாங்க முடியவில்லை

பெயரில்லா சொன்னது…

ரொம்ப வருத்தமாக இருக்கிறது. அக்காவுக்கு ஆறுதல்கள் சொல்லவும்.

பெயரில்லா சொன்னது…

"எல்லாக் குழந்தையுமே
பிறந்ததும் அழுமாமே
நீ மட்டும் பிறந்தவுடன்
எங்களை ஏன் அழவைத்தாய்?"

Akkavirkkum, ungalukkum enadhu aruthalgal. (Ethey valiyai nanum anupavithu kondu irukiren inralavum en kulanthaial.). Please antha photo vai eduthu vidungal. Athai parkum pothu kanneer varukirathu.

Unknown சொன்னது…

ஆறுதல் வார்த்தை சொன்ன அனைவருக்கும் நன்றி.

புகைப்படத்தை எடுத்துவிட்டேன்.

உங்கள் மனதை வருத்தியதற்க்கு வருந்துகிறேன்.

Quote

Followers