செவ்வாய், 7 ஜூன், 2011

யானையும் நானும்-1


அம்புலியைத் துடைத்தெறியும் தும்பிக்கை படித்துவிட்டு என் மனைவி, 'கவிதைக்குப் பொய் அழகுதான் அதுக்காக இப்படியெல்லாம் சொல்லக்கூடாது' என்றாள். யானை எவ்வளவு புத்திசாலி தெரியுமா... ஒற்றுமையையும் பாச உணர்ச்சியும் அதனிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும். எப்போதும் கூட்டமாய் வாழும் யானைகள், ஒரு யானை இறக்கும் தருவாயில் இருந்தால் அதைச் சுற்றி நின்று கண்ணீர் விடும். இறந்தபின் அதைப் புதைத்த பின்னரே அந்த இடத்திலிருந்து நகருமென்றாள்.

அன்று முழுவதும் எனக்கு யானை நினைவாகவே இருந்தது. சிறுவயது முதலே எனக்கு யானை என்றால் மிகப்பிடிக்கும். யாரவது என்னிடம் மிகப்பிடித்த விலங்கு எதுவென்று கேட்டால் யானை என்றே சொல்லியிருக்கிறேன். என் பள்ளி நாட்களில் எந்த வனவிலங்கு சரணாலயத்திற்கும் சென்றதில்லை. திருவிழாவிலும் சர்கசிலும் யானை பார்க்கையில் என்னை மறந்திருக்கிறேன். நெற்றியில் பெரிய நாமத்துடன் தெருக்களை சுற்றிவரும் பெருமாள் கோவில் யானையிடம் சில்லறை கொடுத்தால் துதிக்கையை தலையில் வைத்து ஆசீர்வதிக்கும். அதுவே தலையில் துதிக்கையை வைத்து அழுத்துவது போலிருக்கும். அதனிடம் ஆசீர்வாதம் வாங்குவதை அடுத்த நாள் பள்ளியில் பெருமை பேசிக்கொள்வோம். ஆசீர்வத்திப்பதே தலையில் அடிப்பது போலிருக்கிறதே...அடித்தால் என்ன ஆகுமென்று சொல்லிச் சிரித்த நாட்கள் இன்னும் நினைவில் உள்ளது.

காடுகளில் சுதந்திரமாய் வாழவேண்டிய யானைகளை  இப்படி கட்டிப்போட்டு வீடுகளில் பிச்சை எடுக்க வைக்கிறார்களே என்று தோன்றினாலும் சர்கஸ் யானைகளைப் பார்க்கையில் கோவில் யானைகள் நிலையே தேவலாம் என்று தோன்றும். சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் போஸ் மைதானத்தில் ஒவ்வொரு வருடமும் "பாம்பே சர்கஸ்" போடுவார்கள். பலமுறை கேட்டபின் எங்களை ஒருமுறை அழைத்துச்சென்றார் அப்பா. அங்கு யானை பந்து விளையாடியதையும் சைக்கிள் ஓட்டியதையும் பார்த்துவந்து நண்பர்களிடம் ஒரு வாரம் பெருமை பேசியதுண்டு.

ஆனாலும் யானை பார்த்தல் என்னும் என் "யானைப்பசிக்கு" சோளப்பொரியே கிடைத்தது. கோவில் யானைகளைப் பார்க்கையில் நாமும் அதன் கூடவே சென்றிடலாம் என்று கூடத் தோன்றியதுண்டு. இப்படி நான் நேரில் பார்த்த யானைகளே மனதோடு நெருக்கமாய் இருந்தன. சினிமாவில் பார்த்த யானைகளுடன் சிநேகம் கொள்ளவில்லை என் மனது. பழைய தேவர் பிலிம்ஸ் படங்கள் கூடப் பரவாயில்லை. நம்கால ராமநாராயணன் படங்கள் யானைகளை அசிங்கப் படுத்துவதாகவே உணர்கிறேன்.

அம்புலிமாமாவில் இருந்து ஆனந்த விகடன் வரை யானை பற்றிய எந்த செய்தியையும் கதையையும் என் பள்ளி நாட்களில் தவறவிட்டதில்லை. எந்த ஒரு விசயத்தையும் முழுதாய்ப் புரிந்து கொள்ளாதவர்களிடம் கண்ணிலாதவர் யானையைத் தடவிப் பார்த்து உணர்ந்த கதையே இன்றும் சொல்லப்படுகிறது. என்றோ படித்த குட்டிக்கவிதை. மதத்தைப் பற்றி பேசும் யாரும் இந்த வரிகளை மேற்கோள் காட்டாமல் பேசுவதில்லை.

யானைக்கு வெறியினால்
பிடிப்பது மதம்
மனிதனுக்கு மதத்தால்
பிடிப்பது வெறி.

வைரமுத்துவின் விலங்கு கவிதையிலிருந்து சில வரிகள்...
விலங்குகள் நம்மினும் 
மானமுள்ளவை

யானையின் காலில் 
யானை விழுந்ததாய்
தகவல் இல்லை 

பூனைக்கு எலிகள் 
பல்லக்கு சுமந்ததில்லை 

கரடிக்கு மான்கள் 
கால்பிடித்து விட்டதில்லை

ஒன்று 
சுதந்திரத்தின் வானம் 
இல்லை 
மரணத்தின் பள்ளம் 
இடைப்பட்ட வாழ்க்கை 
விலங்குக்கில்லை.

யானையைப் பற்றிய பதிவு சிறியதாய் இருக்கக் கூடாதல்லவா....அதனால் அடுத்த பதிவிலும் தும்பிக்கை நினைவுகள் தொடரும். 







9 comments:

பெயரில்லா சொன்னது…

பதிவு தொடரான போதே யானையின் பால் உங்கள் ஈர்ப்பு தெரிகிறது நேசன்... சிறந்த பகிர்வு..

வெங்கட் நாகராஜ் சொன்னது…

யானை மிக அறிவுள்ள பிராணியும் கூட..... எனக்கும் மிகவும் பிடித்த விலங்கு யானை... எத்தனை நேரம் வேண்டுமானாலும் பார்த்துக் கொண்டிருக்கத் தோன்றும் சரவணன்....

தினேஷ்குமார் சொன்னது…

அருமையான பதிவு அண்ணே .. கவிதைகளும் சூப்பர் நான் இப்பதான் படிக்கிறேன்

சமுத்ரா சொன்னது…

good one..thank u

வை.கோபாலகிருஷ்ணன் சொன்னது…

யானை போலவே அழகான பதிவும் தகவல்களும். விலங்குகள் பற்றிய சிந்தனையுடன் கூடிய சிறிய பாடல்கள் ரசிக்கத்தக்கவை. யானை அழகானதும், அறிவானதும், அன்பானதும் தான். அதற்கு கோபமூட்டினால், மதம் பிடித்தால் மட்டுமே அனைத்தையும் அழித்துவிடும். நல்ல பதிவு.

நல்ல நேரம் என்ற எம்.ஜி.ஆர். படத்தில் வரும் ராமு என்ற யானையை மறக்க முடியுமா?

G.M Balasubramaniam சொன்னது…

யானையும் கடல் அலைகளும் பார்க்கப் பார்க்கத் திகட்டாதவை.குருவாயூர் கோவிலில் தினமும் ஒரே நெரத்தில் ஐந்தாறு யானைகளுடன் சீவேலி என்ற சடங்கு பார்ப்பது கண்கொள்ளாக் காட்சி. திருச்சூர் பூரமன்று ஒரே நேரத்தில் முப்பதுக்கும்மேற்பட்ட யானைகள் பங்கு கொள்ளும் காட்சியும் அருமை

G.M Balasubramaniam சொன்னது…

பின்னூட்டம் எழுதிய சிறிது நேரத்தில் , கன்னட சுவர்ணா சானலில் , மைசூரில் ஒரு யானை ஒருவரைக் குத்தி குதறி கொன்ற நிகழ்ச்சி ஒளி பரப் பாகியது மிகவும் கோரம்.!யானை தன் பலமறியாதவரைஅடங்கி இருக்கிறது. அதன் சக்தியை உணரும்போது, அதனை காயப் படுத்தியோ, மயக்கமளித்தோ, இல்லை கொன்றோதான் அடக்க முடிகிறது. மைசூர் யானை மயக்க மருந்தால் கொல்லப் பட்டதா விளங்க வில்லை. இது ஒரு சேதிக்காக.

ஹேமா சொன்னது…

யானைக் கதை தொடருதா.எனக்கும் பிடிக்கும்.இலங்கையில் நிறையத்தரம் யானையாரைப் மிகஅருகில் பார்த்திருக்கிறேன்.மிகவும் சாதுபோலத்தான் இருப்பார் !

ADHI VENKAT சொன்னது…

யானையைப் பற்றிய நினைவுகள், கவிதைகளுடன் நல்ல பகிர்வு. தொடருங்கள்.

Quote

Blog Archive

Followers