வெள்ளி, 13 ஜனவரி, 2017

உடையாத நீர்க்குமிழி

உள்ளத்தில் ஒரு 
உடையாத நீர்க்குமிழி
உருண்டு கிடந்தென்னை 
உயிர்ப்பித்து வைக்கிறது.

பத்தாவது முடிச்சபின்னும் 
படிக்கத்தான் வேணுமின்னு
விடுதிச்செலவுக்கு எங்கப்பன்
விதை நெல்லை விக்கையிலும்

பொட்டல் காட்டில் என்கூடப் 
பொழைக்க முடியாதுன்னு
பார்த்துவச்சப் பொண்ணு ஒண்ணு 
பட்டணம் போகையிலும்

சேத்துவச்சச் சிறுவாடு 
செல்லாமப் போனதுன்னு
மாத்திவர நான்போயி
வரிசையில நிக்கையிலும்

உடையப் பார்த்தந்த 
உயிர்க்குமிழி - ஆனாலும்
நட்டப்பயிர் காஞ்சதனால் 
நாண்டுகிட்ட எங்கப்பன்
பட்டக் கடனடைக்கப் 
பாதுகாத்து வச்சிருக்கன்
வட்டக்குமிழி அது என்னை 
வாழச் சபிக்கிறது!



குறிப்பு: இந்தக் கவிதை "படைப்பு" குழுமம்  நடத்திய  கங்கா புத்திரன் நினைவு பரிசுப் போட்டிக்கென எழுதப்பட்டு  பாடலாசிரியர் சினேகன் அவர்களால் மூன்றாம் பரிசுக்கென  தேர்வு செய்யப்பட்டது . 

1 comments:

G.M Balasubramaniam சொன்னது…

காலம் மாறும் நீர்க்குமிழியும் உடையத்தானே வேண்டும்

Quote

Followers