ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

தப்புத் தப்பாய் ஒரு தப்பு

மனதின் ஆசையை நான் 
மறைத்து வைத்தது தப்பா?
உன்னலம் கருதி எனை 
ஒளித்து வைத்தது தப்பா?
மனதைத் தந்தவுடன் நான் 
மறுத்துப் பேசியது தப்பா?
மனதிற்கு நல்லது நம் 
மாறாத நட்பென்றது தப்பா?
உன்னுடன் நான் பேசியதில் 
ஒரு வார்த்தை ஏதேனும் தப்பா?

நெஞ்சைக் கீறிவிட்டு நீயே 
பஞ்சால் துடைத்து மருந்திட்டாய்.
ஒருகையால்  வில் கொடுத்து 
மறுகையால் நாண் அறுத்தாய்.
மலர்கின்ற பூக்களை நீ 
கிள்ளிவிட்டுக் கட்டுகின்றாய்.
நட்பென்ற கண்ணாடிக் கிண்ணமதை
நழுவவிட்டு ஒட்டுகின்றாய்.

மனதில் குழப்பத்துடன் - நான்
மதிலேறத் தயாரில்லை.
காதல் கசாயம் குடிக்கக்
காய்ச்சல் இல்லை நமக்கு.
நமக்கிடையில் உள்ளது 
நட்பு மட்டுமென்று 
நம்பினால் - நீ
கரத்தைக் கொடு -அன்றில் 
மறந்து விடு.

02.08.1999
11.45 am.

11 comments:

Yaathoramani.blogspot.com சொன்னது…

இடையில் மதிலிருக்க
உறவைத் தொடர நினைப்பது போலவும் தெரிகிறது
ஆயினும் மதிலேரத் தயாராவது
கொஞ்சம் குழப்பித்தான் போகிறது
காதலுக்கும் நட்புக்கும் இடையில்
ஊசலாடும் ஒரு உள்ளத்தின் குழப்பத்தின் வெளிப்பாடாக
இக்கவிதையைக் கொள்ளலாம்
அதனால் குழப்பம் இருத்தல் சரிதான்
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

G.M Balasubramaniam சொன்னது…

தப்புகள் செய்யும்போது தெரிவதில்லை. விளைவுகள் எதிர்பாராத வகையில் அமையும்போது, காரணம்தேடி எடுக்கும் முடிவும் சரியாக இருக்குமா தெரியவில்லை. எடுக்கும் முடிவில் நிலை கொண்டால் சரிதான். வாழ்த்துக்கள்.

vidivelli சொன்னது…

நட்பாய் பழகி காதலாய் மாறும்
கொடுமையினால் வந்த கவிதை..
நல்ல கவிதை..
பதிவுக்கு அன்புடன் வாழ்த்துக்கள்..

Unknown சொன்னது…

@ Ramani : காதலுக்கும் நட்புக்கும் இடையில் ஊசலாடிய ஒரு உள்ளத்தின் குழப்பத்தின் வெளிப்பாடாக பதிவு செய்ததுதான் இக்கவிதை. முடிவெடுத்த பின்னர் மதிலென்ன மலைகளையே தாண்டியாயிற்று. முதல் வருகைக்கும் சரியான புரிதலுடன் கூடிய பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.

thendralsaravanan சொன்னது…

உறவுகளைத் தெளிவு படுத்துதல் எவ்வளவு அவசியமானது!
அதுவும் ஆண்-பெண் நட்புறவு ...அழகானது...அதை மீறுதல்...ஆபத்தானது.
புரிதல் அவசியமாகிறது.
அழகாய்,கவிதையில், நட்பின் சிறப்பை உணர்த்தி விட்டீர்கள்... நல்லது தொடரட்டும் கவிதை மழை!

r.v.saravanan சொன்னது…

நட்புக்கும் காதலுக்கும் இடையில் அல்லாடும் கவிதை

வாழ்த்துக்கள் கலாநேசன்

பெயரில்லா சொன்னது…

நட்பு காதல் இடைப்பட்ட உணர்வின் வரிகளாய் கவி...

நட்பு காதலாய் மாறுவதில் தப்பில்லை -இருவர் விருப்புடனும்

மாலதி சொன்னது…

மனதில் குழப்பத்துடன் - நான்
மதிலேரத் தயாரில்லை.
காதல் கசாயம் குடிக்க
காய்ச்சல் இல்லை நமக்கு.
நமக்கிடையில் உள்ளது
நட்பு மட்டுமென்று
நம்பினால் - நீ
கரத்தைக் கொடு -அன்றில்
மறந்து விடு.நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

Unknown சொன்னது…

கையில் குழந்தை யுடன்
காதலிக்கப் போனிரோ
ஐயம் கொண்டாரோ நீர்
அகற்றிவிட முயலு மய்யா

புலவர் சாஇராமாநுசம்

Unknown சொன்னது…

@ புலவர் சா இராமாநுசம்

//கையில் குழந்தை யுடன்
காதலிக்கப் போனிரோ
ஐயம் கொண்டாரோ நீர்
அகற்றிவிட முயலு மய்யா//

பாதியைப் படித்துவிட்டு
பாசத்தில் பதருவோரே - கீழிருக்கும்
தேதியைப் பாருங்கள்
தெளிவாகும் என்மனது.

அய்யா இது நான் கல்லூரிக் காலத்தில் எழுதிய கவிதை.உங்கள் சுவையான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.

மனோ சாமிநாதன் சொன்னது…

ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே தூய நட்பு இருப்பது அபூர்வம்! அந்த நட்பிற்கும் காதலுக்கும் இடையே இருப்பதும் ஒரு சிறு கோடு தான். அந்த கோட்டை மிக அழகாகத் தொட்டு காட்டியுள்ளீர்கள் ஒரு அருமையான கவிதை மூலம்! வாழ்த்துக்கள்!!

Quote

Followers