வெள்ளி, 8 ஏப்ரல், 2011

பெயர்


பெயர் ஒவ்வொரு மனிதனையும் தனித்துவமாக்கும் தனி அடையாளம். அத்தனை மனிதர்களுக்கும் மிகப்பிடித்த ஒற்றை வார்த்தை அவரவர் பெயராகத்தான் இருக்கும். ஆதி காலத்தில் எலேய் என்று கூப்பிட்டால் எல்லோரும் திரும்பி இருக்கக் கூடும். அதைத் தொடர்ந்த சிந்தனையின் செயல் வடிவமே பெயர் இடுதல். சுய அடையாளம் சுட்டுவதற்காய் சுடர்விட்ட பெயர் பின்னாளில் சாதி, தொழில், குடும்பம் போன்ற கூடா நட்பால் 'பேர்' கெட்டுப்போனது. தமிழ் நாட்டில் பகுத்தறிவு முழக்கங்களும் திராவிட இயக்கமும் பெயர் சீரமைப்பில் பெரும்பங்கு ஆற்றியுள்ளன. என் தாத்தாவின் பெயருடன் இருந்த சாதியை என் பெயரில் இருந்து நீக்கிய பெரியாருக்கு நன்றி!
மனிதர்கள் மட்டுமல்ல டால்பின்களும் பெயர்சொல்லி அழைத்துக் கொள்வதாக  ஆய்வுகள் நிருபித்துள்ளன. ஒவ்வொரு டால்பினையும் விளிக்க  தனித்தனி விசிலை பயன்படுத்துகிறதாம் டால்பின்கள்.

சரவணன்.
பங்குனி உத்திரத்தன்று பிறந்ததால் அம்மா எனக்கு சரவணன் என பெயர் வைத்தார்கள். நான் முன்னொரு பதிவில் சொன்னதுபோல ச.ஆ.பெரமனூரில் உள்ள ஊ.ஒ.து.பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்த நாளில் இருந்தே என்னுடன் சில சரவணன்கள் எப்போதும் இருப்பார்கள். எங்களை வேறுபடுத்துவதற்காக பட்டப்பெயர்கள் வைக்கப்படும். உதாரணத்திற்கு முதுநிலை மருந்தாக்கியல் படிக்கையில் என் வகுப்பில் என்னைவிட கருப்பாய் ஒரு சரவணன் இருந்ததால் அவர் 'கருப்பு' சரவணன். சாலமன் பாப்பையாவை  சந்திக்கும்  போது வைரமுத்துவுக்கு இரண்டு விஷயங்கள் மகிழ்ச்சி தருமாம். ஒன்று சிரிக்க வைக்கும் பேச்சு. இரண்டாவது அவருடன் இருக்கும் போது தான் தான் கருப்பில்லை என்ற எண்ணம் தோன்றுமாம்.

நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது நடந்த ஓர் சம்பவம். அப்போது பள்ளிக்கு நேரெதிரே எங்கள் மளிகைக் கடை இருந்தது. பக்கத்துக் கடை ஜெயராம் அண்ணனின் டீக்கடை. மாலையில் ஒவ்வொரு ஆசிரியரும் அவர் வகுப்பில் இருந்து யாரையாவது அனுப்பி டீ வாங்கி வரச் சொல்வார்கள். அதற்கு எங்களிடையே போட்டி நடக்கும். அப்படித் தான் அன்றும் பிரேமா டீச்சர், சரவணா டீ வாங்கி வா என்று சொல்லி முடிப்பதற்குள் வகுப்பிலிரிந்து நான் எழுந்து ஓடினேன். ஏனென்றால் எங்கள் வகுப்பில் மூன்று சரவணன்கள் இருந்தோம். வேகமாய் ஓடினேன். சாலையைக் கடந்து எதிர்புறம் உள்ள டீக்கடை மட்டுமே என் குறியாய் இருந்ததால் சாலையில் வந்த டிராக்டரை கவனிக்கவில்லை. நேரே டிராக்டரின் பெரிய பின் சக்கரத்தில் மோதி தேங்கியிருந்த மழை நீரில் விழுந்தேன். அப்பா கடையில் மடித்துக் கொண்டிருந்த பொட்டலத்தை அப்படியே போட்டுவிட்டு ஓடி வந்தார். திராக்கரை ஓட்டி வந்த்தவரும் தெரிந்தவர். 'அண்ணா நான் பிரேக் மேல ஏறி நின்னேன் அப்பாவும் என்னால ஒன்னும் பண்ண முடியல' என்று சொல்லி என் அப்பாவின் கைப்பிடித்து அழுதார் அவர். இவன்தான் கண்முன் தெரியாம ஓடி வந்தான் உன்மேல் ஒரு தவறும் இல்லை என்று அவரை சமாதானப்படுத்தி அனுப்பினர் என் அப்பா. மாலை மொத்த வகுப்பும் என்னைப் பார்க்க வந்தது. அதன் பிறகு இனிசியலோடு சேர்த்து தான் பெயர் சொல்வார் எங்கள்  ஆசிரியை. இப்படி சின்ன வயசில் இருந்தே நான்  தான் பள்ளிக்கூடத்தில் முதல் மாணவன். ஸ்கூல் விட்டதும் வீட்டுக்கு வருவதில்....

அப்புறம் கல்லூரி நாட்களில் சத்யப்ரியன் என்ற பெயரில் கவிதைகள் எழுதினேன். ஆனந்த விகடனில் என் முதல் கவிதை என் மனைவியின் பெயரில் வந்தது. அதன் பிறகு வலைப்பூ துவங்கிய நாளில் இருந்து  கலாநேசனானேன். ஆனந்த விகடனில் பிரசுரமான கவிதை:

கால்களுக்குக் கீழே
நகர்கின்ற பூமி
பேருந்தில் ஓட்டை.


குறிப்பு: இந்த தொடர்பதிவை எழுத அழைத்த நண்பர் கோபிக்கு நன்றி. இவ்வளவு "சீக்கிரமாய்" எழுதியதற்கு மன்னிக்கவும்.


13 comments:

பெயரில்லா சொன்னது…

ஒவ்வொருவரின் சுயபுராணமும் சுவார்ஸ்யமானவை அல்லே !!!

கவிதை அருமை .............. அனுபவமா? எனக்கும் இந்த அனுபவம் ஏற்பட்டதுண்டு

Unknown சொன்னது…

அந்த நேர பதட்டதிலும் அப்பாவின் நிதானமும், பெருந்தண்மையும் வியக்க வைத்த விசயம்..

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

விகடன் கவிதையை வாசித்துள்ளேன்.. பாராட்டுக்கள் சார்..

Yaathoramani.blogspot.com சொன்னது…

பள்ளிக்கூடத்தில் முதல் மாணவன்...
அடுத்த வரிகளைப் படித்தவுடன்
பொங்கிவந்த குபீர் சிரிப்பை அடக்க
கொஞ்ச நேரம் ஆனது
தொடர்ந்து வருகிறேன்
தொடர வாழ்த்துக்கள்

Chitra சொன்னது…

கால்களுக்குக் கீழே
நகர்கின்ற பூமி
பேருந்தில் ஓட்டை.


.....nice

Chitra சொன்னது…

பள்ளி கால நினைவுகளில் மூழ்கி, உற்சாகமாக எழுதி இருப்பது தெரிகிறது.

வெங்கட் நாகராஜ் சொன்னது…

பெயர் பற்றிய தொடரில் அடுத்தது உங்களுடையதா! படித்தேன் - ரசித்தேன். கவிதையும் நன்று!

இராஜராஜேஸ்வரி சொன்னது…

பெயரும், கவிதையும் அருமை.

G.M Balasubramaniam சொன்னது…

பெயரிலிருந்து தாத்தாவின் சாதிப்பெயரை நீக்கியது நன்று,சரவண்ன்,சாரி ,கலாநெசன்.எல்லோர் மனதிலிருந்தும் சாதிபற்றிய எண்ணம் இன்னும் மறையலையே நண்பா.!உங்களைப் பற்றிய கூடுதல் தகவல்கள் நன்கு புரிதலுக்கு வழிவகுக்கும். வாழ்த்துக்கள்.

thendralsaravanan சொன்னது…

நல்ல பெயர் சொல்லும் பதிவு!

R. Gopi சொன்னது…

பெயர்க்காரணம் சிறப்பு. கவிதை அருமை. நான் இந்தக் கவிதையை முன்னரே படித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன்

ADHI VENKAT சொன்னது…

பெயர்க்காரணமும் ,கவிதையும் நன்று.

raji சொன்னது…

பின்னோக்கும் நினைவுகளும் அனுபவங்களும் என்றும் சுகமானவைதான்

//சுய அடையாளம் சுட்டுவதற்காய் சுடர்விட்ட பெயர் பின்னாளில் சாதி, தொழில், குடும்பம் போன்ற கூடா நட்பால் 'பேர்' கெட்டுப்போனது.//

இந்த வரிகள் அருமை

Quote

Followers