வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்த்து லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 1 ஜனவரி, 2013

அசைபோடுவோம்


 
இந்தியா செவ்வாய் கிரகத்திற்கு (மங்கல்யான்)  செயற்கைக்கோள்  அனுப்பப்போகும்  இருபத்தொன்றாம் நூற்றாண்டின் பதிமூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாம் 2012-ல் இந்தியாவில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை அசைபோடுவோமா...
  • இந்தியா பாகிஸ்தான் இடையேயான அணு ஆயுத விபரப்பகிர்வு 
  • 42 சதவீத இந்தியக் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்தில்லை HUNGaMa அறிக்கை 
  • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடத்தியது தொடர்பான ஊழல் வழக்கில் சுரேஷ் கல்மாடிக்கு ஜாமீன் 
  • ராஜாவால் வழங்கப்பட்ட 122 2G  அலைகற்றை உரிமங்கள் உச்சநீதி மன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
  • கர்நாடக சட்டமன்றத்தில் சூடான விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் போது கைப்பேசியில் ஆபாசப்படம் பார்த்துக்கொண்டிருந்த மூன்று பிஜேபி அமைச்சர்கள் பிடிபட்டனர்.
  • இந்திய ரயில்வே பட்ஜெட்டை வழங்கிய ரயில்வே அமைச்சர் தினேஷ்  திரிவேதி நான்கே நாட்களில் ராஜினாமா செய்தார் 
  • ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவத்தின் போர்விதி மீறல்கள் தொடர்பாக இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது  
  • சென்னை மற்றும் கல்கத்தாவில் நிலநடுக்கம் 
  • சச்சின் டெண்டுல்கர், நடிகை ரேகா , சமூக சேவகியும் தொழிலதிபருமான அணு அகா ஆகிய மூவரும் ராஜ்யசபா உறுப்பினர்களாக ஜனாதிபதி பிரதிபா பாட்டிலால் பரிந்துரைக்கப்பட்டனர். 
  • சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ்  பால் மேனன் 12 நாட்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.  
  • முப்பது வருடங்களாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுர்ஜீத் சிங் இந்திய திரும்பினார் 
  • பிரணாப் முகர்ஜி இந்தியாவின் 13வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • வடகிழக்கு மாநில மக்கள் பெங்களூருவில் தாக்கப்படப் போவதாக கிளம்பிய குருஞ்செய்திப் புரளியால் ஆயிரக்கணக்கானோர் பெங்களூருவில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்குப் பயணித்தனர் 
  • 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின் போது உயிருடன் பிடிக்கப்பட்ட ஒரே தீவிரவாதியான அஜ்மல் கசாப்  தூக்கிலிடப்பட்டான்.
  • தில்லி பேருந்தில் கூட்டான பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிய 23 வயது மருத்துவ மாணவி 13 நாட்கள் உயிருக்காக போராடி சிங்கப்பூர் மருத்துவமனையில் இறந்தாள்.
வாடும் பயிரைக் கண்டு வாடிச் சாகும் விவசாயி, விக்கிரம்மதித்தன் கதையாய்த் தொடரும் மீனவ படுகொலை, அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்கள், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு கூடாது என்ற எதிர்ப்புக் குரல்களுக்கிடையே வந்துநிற்கும் வால்மார்ட், மக்களைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் சாதிக் கலவரங்கள், நாட்கள் செல்லச் செல்ல நகைச்சுவையாகிப் போன தொடர் மின்வெட்டு .....இன்னும் இன்னும் நல்லது கெட்டதுகள் நடந்துகொண்டேயிருக்க 21.12.2012 அன்று அழிந்து   போகாமல் புதிய நம்பிக்கையோடு பூத்துக் குலுங்கும் பூமியைப் போற்றி புத்தாண்டைத் துவங்குவோம்.

அனைவருக்கும் எனதினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


 

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

நட்பு


வானத்துத் தாரகையொன்று
வந்திறங்கி என்னிடம்
ஆயிரம்கோடி ரூபாய்
ஆருயிர் நட்பு
எது வேண்டும் கேள் என்றது!
நான்
ஆயிரம் கோடி என்றேன்....
ஆருயிர் நட்பாய் தான்
நீயிருக்கிறாயே!



அனைவருக்கும் நண்பர்கள்தின நல்வாழ்த்துக்கள்

ஞாயிறு, 1 ஜனவரி, 2012

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்


 
அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

ஞாயிறு, 25 டிசம்பர், 2011

கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள்




அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்

 

வியாழன், 16 ஜூன், 2011

கொஞ்சும் நிலவு

கொஞ்சுமொழிக் காரியே
பிஞ்சு நிலவே
பிரியமான மகளே - உனகென்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

வேண்டாம் என்பதை 
உடனே செய்கிறாய் 
வேண்டிக் கேட்பதை 
தீண்டிட மறுக்கிறாய்.

பல்துலக்கித் துப்பென்றால் 
படக்கென்று விழுங்கிடுவாய்
முகங்கழுவச் சென்றுவந்தால் 
முழுவுடம்பும் நனைத்திடுவாய்.

எண்ணெழுதும் புத்தகத்தில் 
வண்ணங்கள் தீட்டிடுவாய்.
வண்ணங்கள் தீட்டச்சொன்னால் 
எண்ணெழுத வேண்டுமென்பாய்.

முதுகில் கடித்தாலும் - நீயென்
முகத்தில் அடித்தாலும் 
வலிப்பதில்லை எனக்கது 
இனிக்கவேச் செய்கிறது.

அதிகமாய் சிலநாள் 
அடம்பிடிக்கும் உன்னை 
அடித்துவிட்டுப்  பின்னர் 
அழுதிருக்கிறேன் நான்.

தலையாட்டிப் பேசுவதே - முத் 
தமிழாக இனிக்கிறது - நீ
விளையாட்டாய் சமைப்பதுவும் 
விருந்தெனவே ருசிக்கிறது.

கொஞ்சுமொழிக் காரியே
பிஞ்சு நிலவே
பிரியமான மகளே - உனகென்
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.


ஞாயிறு, 22 மே, 2011

சிக்ஸர் அடித்தார் வைரமுத்து


கவிஞர் வைரமுத்து திரைப்பாடலாசிரியராக ஆறாவது முறை தேசிய விருது பெறுகிறார். முதல் மரியாதை, ரோஜா, கருத்தம்மா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால் படங்களைத் தொடர்ந்து தென்மேற்குப்  பருவக்காற்று படத்திற்காக இவ்விருதைப் பெறுகிறார். அவரை வாழ்த்தி மகிழும் இந்த இனிய தருணத்தில் எனக்கு மிகப் பிடித்த அவர் கவிதைகளில் ஒன்று உங்களுக்காக...

உன்னைப் பார்த்து உலகம் குறைக்கும் 
தன்னம்பிக்கை தளர விடாதே 
இரட்டைப் பேச்சுப் பேசும் உலகம் 
மிரட்டும் தம்பி மிரண்டு விடாதே

ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு 
உலகின் வாயில் இரட்டை நாக்கு 
எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லாம் 
உனக்குச் சொல்கிறேன் உள்ளத்தில் எழுது

இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன் 
இலக்கியம் இல்லை லேகியம் என்றது 
திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தேன் 
பரிமே லழகரை வரச்சொல் என்றது 

குறுந்தொகை கம்பன் கொட்டி  முழக்கினேன் 
குண்டுச் சட்டியில் குதிரை என்றது 
எலியட் நெருடா எல்லாம் சொன்னேன் 
திறமை எல்லாம் திருடிய தென்றது 

எளிய தோற்றமே இயல்பென இருந்தேன் 
வடுக பட்டி வழியுது என்றது 
அழகாய் நானும் ஆடைகள் கொண்டேன் 
கழுதைக்  கெதற்குக் கண்மை என்றது 

மேடையில் கால்மேல் காலிட் டமர்ந்தேன் 
படித்த திமிர்தான் பணிவில்லை என்றது 
மூத்தவர் வந்ததும் முதலில் எழுந்தேன் 
கவிஞன் நல்ல "காக்கா" என்றது 

உயர்ந்தோர் பெருமை உவந்து புகழ்ந்தேன் 
காதில் பூ வைக்கிறான் கவனம் என்றது 
விரல்நகத் தளவு விமர்சனம் செய்தேன் 
அரிவாள் எடுக்கிறான் ஆபத்து என்றது 

மற்றவர் சூழ்ச்சியால் மண்ணில் விழுந்தேன் 
புத்தி கொழுத்தவன் புதைந்தான் என்றது 
 மூச்சுப் பிடித்து முட்டி முளைத்தேன் 
தந்திரக் காரன் தள்ளிநில் என்றது 

பகையைக் கண்டு பைய நகர்ந்தேன் 
பயந்துவிட்டான் பாவம் என்றது 
மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன் 
விளங்கி விட்டதா மிருகம் என்றது 

பணத்தில் பொருளில் பற்றற் றிருந்தேன் 
வறுமையின் விந்தில் பிறந்தவன் என்றது 
என்னைத் தேய்த்து மண்டபம் கட்டினேன் 
புலவன் இல்லை பூர்ஷ்வா என்றது 

சொந்த ஊரில் துளிநிலம் இல்லை 
இவனா மண்ணின் மைந்தன் என்றது 
தென்னை மரங்கள் தேடி வாங்கினேன் 
பண்ணையார் ஆனான் பாவலன் என்றது 

கயவர் கேட்டால் காசு  மறுத்தேன் 
கறக்க முடியாக் கஞ்சன் என்றது 
உண்மை இருந்தால் உறுபொருள் கொடுத்தேன் 
உதறித் திரியும் ஊதாரி என்றது 

மங்கைய ரிடையே மௌனம் காத்தேன் 
கவிஞன் என்ற கர்வம் என்றது 
பெண்கள் சிலருடன் பேசத் தொடங்கினேன் 
கண்களைக் கவனி காமம் என்றது 

விருதுகள் கழுத்தில் வீழக் கண்டேன் 
குருட்டு அதிஷ்டம் கூடிய தென்றது 
மீண்டும் மீண்டும் விருதுகள் கொண்டேன் 
டெல்லியில் யாரையோ தெரியும் என்றது 

திசைகள் தோறும் தேதி கொடுத்தேன் 
அய்யோ புகழுக் கலைகிறான் என்றது 
நேரக் குறைவு நிறுத்திக் கொண்டேன் 
கணக்குப் பார்க்கிறான் கவிஞன் என்றது 

அப்படி இருந்தால் அதுவும் தப்பு 
இப்படி இருந்தால் இதுவும் தப்பு 
கத்தும் நாய்க்கு காரணம் வேண்டாம் 
தன்நிழல் பார்த்துத் தானே குறைக்கும் 

உலகின் வாயைத் தைத்திடு; அல்லது 
இரண்டு செவிகளை இருக்க மூடிடு 
உலகின் வாயைத் தைப்பது கடினம் 
உந்தன் செவிகளை மூடுதல் சுலபம்
















வெள்ளி, 31 டிசம்பர், 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்

1-1-11  எனத்துவங்கும் இவ்வருடம் அனைவருக்கும் முதல் தரமாய் அமைய வாழ்த்துக்கள். வெறுங்கையில் வாழ்த்து சொன்னா எப்படி? இந்தாங்க... பிடிங்க பூங்கொத்து.

ஒரு சாமியார் செத்து சொர்கத்துக்குப் போனாராம். சொர்க்க வாசல் வரிசையில் (அங்கயுமா?) அவருக்கு முன்னாடி நம்ம ஆட்டோ ஓட்டுனர் மாணிக்கம் நின்று இருந்தாராம். நம்ம மாணிக்கத்தை பட்டு வேட்டி, வைரமாலை தந்து சொர்கத்தில் வரவேற்றார்கள். ஆனால் சாமியாரை நூல் வேட்டி மட்டும் கொடுத்து உள்ளே போகச் சொன்னாங்களாம். கடுப்பான சாமியார், "சாதாரண ஆட்டோ ஓட்டுனருக்கு ராஜமரியாதை. அனுதினமும் கடவுளையே நினைத்துப் பாடிக்கொண்டிருந்த எனக்கு இது தானா?" என்று  சித்திரகுப்தன்கிட்ட கோவமாக் கேட்டாராம்.
நீ பாட்டுப் பாடி மக்களை தூங்க வச்ச, ஆனா இவர் வேகமா ஆட்டோ ஓட்டி கடவுளை அடிக்கடி நினைக்க வச்சார்னு சொன்னாங்களாம். இதன் மூலம் நாம தெரிஞ்சிக்க வேண்டியது என்னன்னா, யார் என்ன நிலையில் (Position) இருகிறாங்க அப்படிங்கறது முக்கியம் இல்லை என்ன பண்றாங்க (Performance) தான் முக்கியம்.

உங்கள் இலக்கைத்  தெளிவாக்கிக் கொள்ளுங்கள். அதை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாய் முன்னேறுங்கள். வெற்றி நிச்சயம்.

21 வருடங்களுக்கு முன்னர் பாட்டி வீட்ல இப்படி உட்கார்ந்து இருந்தவர்தான்....
இன்று உலகின் அதிகாரம் மிக்க நாற்காலியில் உட்கார்ந்து இருக்கார்.


இனிய நினைவுகளை
இதயத்தில் விதைத்து
இனிதே விடைபெறுகிறது
இரண்டாயிரத்துப் பத்து.

பதிவுல நட்புகளுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

செவ்வாய், 13 ஜூலை, 2010

என்ன வேண்டும் நீ எனக்கு?

என்ன வேண்டும்
நீ எனக்கு?

ஐயிரண்டு மாதங்கள்
அவள் கருவின்
பையிருந்து வந்ததனால்
அம்மா.

பசியின்றி வளரவைத்து
படிக்கவைத்து ஆளாக்கி
பார்த்துப் பார்த்து வளர்த்ததினால்
அப்பா.

ஓராண்டு கழித்துவந்து
ஒன்றாக உண்டுறங்கி
சண்டையிட்டு மகிழ்ந்ததினால்
சகோதரன்.

ஆனால்
என்ன வேண்டும் நீ எனக்கு?



பள்ளிசெல்லும் வயதில்
என் மனக்குளத்தில்
நீ எறிந்த கல்
இன்னும் குமிழிகளை
விட்டுக் கொண்டேயிருக்கிறது
கவிதைகளாய்....

உன்னிடம் தான்
கருப்பு வைரமாய்
கனலும் எண்ணங்களை
வெண்முத்துக் கவிதைகளாய்
வெளியிடக் கற்றேன்.

நீதான்
வகுப்புக்குள் எனக்கோர்
வாசகர் பேரவை
வாங்கித் தந்தாய்.

நான்
கவிதை எழுதக்
காரணமாயிருக்கும்
முக்கிய மூவரில்
நீங்களும் ஒருவர்.

என்னதான் நான்
சுயமாய் எழுதினாலும்
ஏதோ ஓர்வரியில்
நீவந்து சிரிக்கிறாய்.

அதனால்தான் - இன்று
வாழ்த்துச் சொல்வதற்கு
வாசகனைத் தாண்டியதொரு
நெருக்கமிருக்கிறது எனக்கு.

கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

இப்படிக்கு
குரு துரோணர்
கிராமத்தில் வாழும்
உங்கள் ஏகலைவன்
கலாநேசன்.













சனி, 12 ஜூன், 2010

பாப்பா பாட்டு

உலக வலைப்பூ வரலாற்றில் முதல் முறையாக என் செல்ல மகள் தியானாவுடன்  ஒரு தித்திக்கும் உரையாடல்.


நான்: உங்க பேர் என்ன?
அவள் : தியானா (நீ தான பேர் வச்ச. அதயேன் திரும்பத் திரும்ப நீயே கேக்குற. யாராவது தெரியாதவங்க கேட்டா பரவால...)


நான்: அப்பா பேர் என்ன?
அவள் : ணன்
நான்: அம்மா பேர் என்ன?
அவள் : டோமா

நான்: என்ன பாட்டு பிடிக்கும் ?
அவள் : குவா குவா வாத்து
              அம்மா இங்கே வா வா
              வர்றான் வர்றான் பூச்சாண்டி
              clap your hands
              chubby cheeks
              டாடி மம்மி
              old mc donald
              துஷ்யந்தா
              கியாம் கியாம் குருவி 
            ............................
நான்: போதும் போதும். பாட்டு லிஸ்ட் சொல்லி சோர்ந்து போயிருப்பீங்க. என்ன குடிகிறீங்க. வெறும் பாலா? சாக்லேட் பாலா(Horlicks)?
அவள் : வெறும் சாக்லேட்!!!

நான் : சரி ஒரு கதை சொல்லுங்க.
அவள் : மம் மம் பாட்டி (அவளோட அம்மாவோட அம்மா ) வடைஐ சுட்டாங்களா, அப்ப காக்கா வந்து ஒரு வடைய தூக்கிட்டு போயி ட்ரீ மேல உக்காந்துகிச்சாம். அப்போ ஒரு fox  வந்து காக்கா காக்கா நீ ரொம்ப அழகா இருக்க, ஒரு பாட்டு பாடுன்னு சொன்னுச்சாம். காக்கா கா கான்னு பாடும் போது வடை டம்முன்னு கீழ விழுந்துச்சாம். அத FOX மம் மம்னு சாப்டுசாம். அப்போ அந்த காக்கா சொன்னுச்சாம் வட போச்சே!

தியானாவுக்கு வரும் புதன் கிழமை இரண்டாவது பிறந்த நாள்.

(அவளுக்கு பிடித்த பாடல்களின் லிங்க் கொடுத்துள்ளேன். நேரமிருப்பின் உங்கள் குழந்தைக்கு காட்டுங்கள்)

Quote

Followers