நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிகழ்வுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 2 அக்டோபர், 2011

உயிரின் விலை 27 ரூபாய்


ரிஷி என்ற மனநிலை சரியில்லாத அண்ணனுக்கும் கணேஷ் என்ற உடல் ஊனமுற்ற அண்ணனுக்கும் ஒரே தம்பியான 22 வயது உமேஷ் குமார் பாண்டே மானேசர் - குர்கான் நெடுஞ்சாலையில் உள்ள ஓர் சுங்கச்சாவடியில் நான்கு மாதத்திற்கு முன்னர் பணியில் சேர்ந்தான். செப்டெம்பர் 22 நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் வழக்கம் போல டோல் பூத்தில் பணம் வசூலித்துக் கொண்டிருந்தான். டோல் பூத் விதிகளின் படி அருகில் இருபது கிலோமீட்டர் சுற்றுவட்டத்தில் உள்ள கிராமங்களின் வாகனகளுக்கு சுங்கவரி கிடையாது.

வெள்ளை நிற போலீரோவில் விஜய்வீர் யாதவ் (28) டோல் பூத்திற்கு வந்த போது  உமேஷ் 27  ரூபாய்க் கட்டணம் கேட்டான். அதை மறுத்த விஜய் தான் அருகில் உள்ள ஓர் கிராமத்திலிருந்து வருவதாகச் சொன்னான். விதிப்படி வண்டியின் ஒரிஜினல் RC காண்பித்தால் சுங்கவரி கட்டத் தேவையில்லை. விஜயிடம் RC எதுவும் இல்லை வெறும் ஓட்டுனர் உரிமம் மட்டுமே வைத்திருந்தான். இருந்த போதும் விஜய் மிரட்டியதால் உமேஷ் கேட்டைத் திறந்துவிட்டு போகும்படிச் சொன்னான். அதன் பின்னரும் சும்மா போகாமல் உமேஷை சுட்டுவிட்டுச் சென்றான் அப்பாவி. கழுத்தில் குண்டு பாய்ந்து சுருண்டு விழுந்தான் உமேஷ். இந்த வீடியோவைப் பாருங்கள்.
 
கேட் திறந்தே இருந்ததால் பின்னிருந்த ஐந்தாறு வாகனங்களும் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி டோல் செலுத்தாமல் வேகமாய் வெளியேறின... உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த உமேஷை விட்டுவிட்டு. பின்னொரு ட்ரக்காரர் கவனித்து தகவல் சொல்லி மருத்துவமனை கொண்டுசெல்லும் முன் உயிர்விட்டான் உமேஷ். நியாயமாய் 27 ரூபாய்க் கட்டணம் செலுத்தச் சொன்னதற்காக கொலைசெய்யப்பட்ட கொடுமையை என்னவென்று சொல்வது. உமேஷின் மறைவால் மூன்றே மாதத்திற்கு முன் உமேஷை மணந்தவளும் உமேஷின் சம்பளத்தை மட்டுமே நம்பி உயிர்வாழ்ந்த நால்வரும் (வயதான பெற்றோர்கள் மற்றும் இரு அண்ணன்கள்) மீளாத்துயரில் வாடுகின்றனர். அவர்களுக்கு ஆறுதல் சொல்ல நம்மிடம் வார்த்தைகளில்லை. இந்தக் குடும்பத்திற்கு உதவ முன்வருவோர் கீழ்காணும் முகவரிக்கு காசோலை அனுப்பலாம். (நன்றி: NDTV)

Ramrati Pandey
Account Number: 30496591243
State Bank of India
Birha, Bijhauli, Hanumana,
Rewa, Madhya Pradesh
India
Pin Code: 486335

மேலும் விவரங்களுக்கு NDTV ன் இந்த லிங்கைப் பார்க்கவும்.

ஞாயிறு, 31 ஜூலை, 2011

பறந்துகொண்டேயிருப்பேன்-அப்துல் கலாம்

கடந்த வெள்ளி அன்று தில்லி தமிழ்ச் சங்கத்தில் வடக்கு வாசல் நடத்திய "சுப்புடு நினைவில் ஒரு இசைப் பயணம் மற்றும் வடக்கு வாசல் பதிப்பக நூல்கள் வெளியீட்டு விழா"வுக்குச் சென்றிருந்தேன். அந்நிகழ்வில் தில்லிவாழ் தமிழ்ப்பதிவர், மொழிபெயர்ப்பாளர், ஓய்வுபெற்ற தமிழ்ப் பேராசிரியை சுசீலா அம்மாவின் தேவந்தி என்னும் சிறுகதைத் தொகுப்பு வெளியிடப் பட்டது. நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை ஆற்றியவர் திரு.அப்துல் கலாம் அவர்கள். தேன்தமிழ் கலந்து அவர் ஆற்றிய உரையிலிருந்து சில தித்திக்கும் துளிகள்....

சுப்புடு தர்பார் என்னும் தலைப்பில் சுப்புடு சார் எழுதிய புத்தகங்களை சில ஆண்டுகளுக்கு முன் படித்தேன். பர்மாவில் இருந்து அகதியாய் நடந்தே இந்தியா  வந்தது பற்றியும் சுதந்திர போராட்டத்தின் உச்ச கட்டத்தில் தில்லியில் நாடகங்கள் நடத்தியது பற்றியும் அதில் எழுதியிருந்தார். அதைப் படித்ததும் சுப்புடு சாரை ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்தேன். அங்குள்ள மொகல் கார்டன் நந்தவனத்தில் நெடுநேரம் செலவிட்டார். இயற்கை அழகுகளை ரசித்தார். ரோஜா மலர்களை வெகுநேரம், சுமார் ஒருமணி நேரம் வருடிக் கொண்டிருந்தார். அப்போது அதன் அர்த்தம் எனக்குத் தெரியவில்லை. பல நாட்கள், பல மாதங்கள், பல ஆண்டுகள் கடந்த பின்னர் 18 -01 - 2005 ல் எனக்கு சுப்புடு சாரிடம் இருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், நான் தொண்ணூரை  நெருங்கி விட்டேன் நெற்றியில் திருநீறு பூசி தென்திசைப் பயணம் செல்ல நேரம் வந்துவிட்டது. ஒருவேளை நான் மரணம் எய்தினால் எனக்கு மொகல் கார்டனில் இருந்து ஒற்றை ரோஜா தருவீர்களா? என்று எழுதியிருந்தார். பின்னொருநாள் நள்ளிரவில் துக்க செய்தி கேட்டதும் உடனே சென்று ரோஜாமலர்களைப் பறித்து வந்து சுப்புடு சாருக்கு அஞ்சலி செலுத்தினேன்.

நீ நீயாக இரு...
இளைய நண்பர்களே... இளைய மனம் கொண்டோரே...வீட்டிலே மின்சார பல்பைக் கண்டதும் தாமஸ் ஆல்வா எடிசன் நம் நினைவுக்கு வருகிறார். வானில் சாத்தமிட்டு சீறிப் பாயும் ஆகாய விமானங்களைப் பார்க்கையில் ரைட் சகோதரர்கள் மனதில் வருகிறார்கள். தொலைபேசி / கைப்பேசிப் பார்க்கையில் கிரகாம்பெல் மனதிற்கு அருகாமையில் வருகிறார். கடல் நிறம் ஏன் நீலமாக இருக்கிறது என்ற கேள்வி வருகையில் லண்டனில் இருந்து கல்கத்தாவுக்கு கப்பல்வழிப் பயணம் செய்தபோது இந்திய விஞ்ஞானி நிறப்பிரிகை பற்றி கண்டறிந்த ராமன் விளைவு நினைவுக்கு வருகிறது. அகிம்சா தர்மம் என்ற கத்தியில்லா ரத்தமில்லா ஆயுதத்தைக் கொண்டு உலகுக்கே புதுப் படம் நடத்தினார் காந்தி. இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் தனித்தன்மை பெற்றவர்கள். இந்த உலகில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்தப் பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.

நல்ல  புத்தகங்கள்
நல்ல கற்பனை சக்தியை வளர்க்கும்.
நல்ல கற்பனைச் சக்தி 
நல்ல சிந்திக்கும் திறனை வளர்க்கும் 
நல்ல சிந்தனை 
சிறந்த அறிவைக் கொடுக்கும் 
சிறந்த அறிவு 
நம்மை மேம்பட வைக்கும்.

இன்று வடக்கு வாசல் பதிப்பகத்தார் ஐந்து அருமையான புத்தகங்களை வெளியிடுகின்றனர். 

சிந்தனைச் சிதறல்கள் - ய.சு.ராஜன் 
விருட்சங்களாகும் சிருவிதைகள் - சி.டி.சனத்குமார் 
சனிமூலை - ராகவன்  தம்பி 
வடக்குவாசல் நேர்காணல்கள் - ராகவன் தம்பி 
தேவந்தி - எம்.ஏ.சுசீலா 

(தேவந்தி சிறுகதைத் தொகுப்பை திரு. அப்துல் கலாம் அய்யா வெளியிட சுசீலா அம்மாவின் மகள் மீனு பிரமோதும், நண்பர் பதிவர் விட்டலனும் பெற்றுக்கொள்கிறார்கள்)

ஒவொரு நூலில் இருந்தும் மேற்கோள் காட்டி வாழ்த்திக் கொண்டே வந்தவர். இறுதியாய் தேவந்தி என்னும் அருமையான சிறுகதைத் தொகுப்பு... தேவந்தி சிலபதிகாரக் கண்ணகியின் தோழி (சரி தானேம்மா என்கிறார் சுசீலா அம்மாவைப் பார்த்து). சாத்திரம் அன்று...சதி! என்னும் கதையில் இருந்து, "சரயு நீரைக் கண்களில் ஒற்றித் தலையில் தெளித்தபடி... ஆற்றில் இறங்கி, அதன் ஆழத்தில் அமிழ்ந்தபடி போய்க்கொண்டே இருக்கிறான் ராமன். எங்கோ தொடுவானத்தில் சமநீதி என்னும் உதயத்தின் விடியல் மெல்லியதொரு கீற்றாய் தெரிகிறது" என்ற வரிகளைப் பாராட்டினார். 

முத்தாய்ப்பாய் ஒரு கவிதை சொல்லி அகிருந்த அனைவரையும் கூடவே சொல்லச் சொன்னார். 

நான் பிறந்தேன் 
அரும்பெரும் சக்தியுடன்...
நான் பிறந்தேன் 
நற்பண்புகளுடன்...
நான் பிறந்தேன் 
கனவுடன்...
வளர்ந்தேன் 
நல்ல எண்ணங்களுடன்... 
நான் பிறந்தேன்
உயர் எண்ணங்களை
செயல்படுத்த... 
நான் பிறந்தேன் 
ஆராய்ச்சி உள்ளத்துடன்...
நான் பிறந்தேன் 
ஆகாய உச்சியில் பறக்க...
நான் பூமியில் 
ஒருபோதும் தவழ மாட்டேன்.
தவழவே மாட்டேன்.
ஆகாய உச்சிதான் 
என் லட்சியம் 
பறப்பேன் வானில் 
பறந்துகொண்டேயிருப்பேன்....


ஞாயிறு, 26 ஜூன், 2011

தீமைக்கு எதிராக தீபம் ஏற்றுங்கள்

பிஞ்சுக் குழந்தைகளை 
நெஞ்சோடு இறுக்கி 
பதுங்குக் குழிக்குள் 
தாய்கள் 
பரிதவித்த போதும்...

உரிமை கேட்டவர்களின் 
உயிர்கள் பறித்த போதும் 
பள்ளி செல்லும் மலர்கள் 
முள்வேலியில் வாடியபோதும்...

நம்மினப் பெண்களின் 
கர்ப்பப் பைக்குள் 
சிங்கள நாய்கள் 
விஷம் கலந்தபோதும்...

கண்களை மூடிக்கொண்ட 
கயவர்கள் நாம்.

ஊரையே எரிக்கையில் 
ஊமையாய் இருந்துவிட்டோம் 
இன்றேனும் 
தீபங்கள் ஏற்றி 
தீமையை எதிர்ப்போம்.


இன்று மாலை 5 மணியளவில் மெரினா கடற்கரை கண்ணகி சிலையருகே தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் ஓர் இடத்தில் கூடி தங்களது அஞ்சலியையும் கோபத்தையும் பதிவு செய்ய இருக்கிறார்கள்.




சனி, 5 மார்ச், 2011

வரி விளையாட்டு


இந்தப் படத்தில் இருப்பது யார்?
மகேஷ் பூபதியும் அவரின் முதல் மனைவி ஸ்வேதா ஜெய்சங்கரும்னு சரியாச் சொன்னவங்களுக்கு வாழ்த்துக்கள்.
மகேஷ் பூபதி- பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் வென்ற முதல் இந்தியன். இன்னும் ஏராளமான டென்னிஸ் போட்டிகளில் பெரும்பாலும் இரட்டையர் பிரிவில் கலக்கியவர். 2001 ம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ வாங்கியவர். முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு போனமாதம் (16 .02 .2011 ) லாரா தாத்தாவை மணந்தார். அப்புறம் முதல் மனைவியும் அடுத்த சில நாட்களிலேயே (20 .02 .2011 ) சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர்  ரகு கைலாசை மணந்தார்.  (அட நான் சொல்ல வந்ததை விட்டு பதிவு வேறு எங்கேயோ போகுதே!)


திங்கட்கிழமை திரு பிரணாப் முகர்ஜி வாசித்த பட்ஜெட்டில் நமக்கு ஏதேனும் சலுகை இருக்கிறதா என் சல்லடை போட்டுத் தேடிக்கொண்டிருப்பவரா  நீங்கள்? அப்போ உங்களுக்குத் தான் இந்தப் பதிவு. 

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை 
என்நோற்றான் கொல் எனும் சொல்.

இப்படி ஒரு பையன் மகனாகப் பிறப்பதற்கு அவன்தந்தை என்ன புண்ணியம் செய்தானோ என ஏங்கும் படியான ஒரு ஒப்பந்தத்தில் தந்தையும் மகனும் 10.06.1994 ல் கையெழுத்து போட்டனர். அந்த ஒப்பந்தத்தின்படி உணவு, உடை, உறைவிடம், டென்னிஸ் பயிற்சி மற்றும் டிப்ஸ் என தந்தை செலவழித்த 28.5 லட்சத்தை தான் சுயமாக சம்பாதிக்க ஆரம்பித்த நாளிலிருந்து பத்து வருடங்களுக்குள் திருப்பித் தருவதாக எழுதினர். இது தந்தைக்குத் தான் அளிக்கும் குருதட்சணை என்றும் அதற்கு வரிவிலக்கு அளிக்குமாறும் முறையிட்டார் பூபதி. வருமான வரித்துறையும், கர்னாடக உயர்நீதி மன்றமும் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. பின்னர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனுவை  25.10.2010 அன்று விசாரித்த தலைமை நீதிபதி SH கபாடியா, நீதிபதிகள் KS ராதாக்ருஷ்ணன் மற்றும் ச்வத்தந்த குமார் அடங்கிய பென்ச் ஐந்தே நிமிடங்களில் தள்ளுபடி செய்தது. அதை தள்ளுபடி செய்ததற்கான காரணங்கள்....

மகனுக்கு நல்ல புத்தி சொல்லி அவன் சுயமாய் சம்பாதிக்கும் வரை அவனைக் காப்பது தந்தையின் கடமை. இந்த நீதிமன்றம் இதுபோல் ஒரு வழக்கை இதற்குமுன் பார்த்ததில்லை.

1989 ல் இருந்து 1994 வரையான காலத்தில் டென்னிஸ் விளையாட்டில் சிறந்து விளங்கிய போதும், இந்த ஒப்பந்தம் 1994 ல் செய்தது வரி விலக்கை மட்டுமே நோக்கமாகக் கொண்டது என்பதை தெளிவாக்குகிறது.

(பய புள்ள டென்னிஸ் கோர்ட்ல மட்டுமல்ல சுப்ரீம் கோர்ட்லயும் நல்லாத்தான் விளையாண்டிருக்கு)






வெள்ளி, 7 ஜனவரி, 2011

தற்கொலைகளின் தலைநகரம்

கொசுவர்த்திச் சுருளை
பொடியாக்கிக் குடித்து
உயிர்விட்டாள் ஒருத்தி.


கணவன் திட்டியதால்
கயிற்றில் தொங்கினாள்
ஒருத்தி.

மனைவியுடன் ஏற்பட்ட
மனக்கசப்பில் தன்னுயிரை
மாய்த்துக்கொண்டான் ஒருவன்.

பதினெட்டு மாதக்குழந்தையை
பரிதவிக்க விட்டுவிட்டு
உள்ளத் தகராறில்
உயிர்விட்டனர் இருவர்.

இப்படி
நாலிரண்டு மாதத்தில்
நானூற்று ஐந்துபேர்
உள்ளத் துணிவின்றி
உயிர்மாய்த்துக் கொண்டனரே...
திருப்பூர் என்ன
ஆடை தொழில்நுட்பத்தின்
அழகு நகரா - இல்லை
தற்கொலைகளின் தலைநகரா?

உங்கள் தாய்
ரத்தத்தை பாலாக்கி
ஊட்டி வளர்ப்பதுவும்
உங்கள் தந்தை
சொத்தைவிற்று கடன்வாங்கி
சுபமுகூர்த்தம் குறிப்பதுவும்
பாதிவழியில் நீங்கள்
பயணத்தை முடிப்பதற்கா?

"பாசக்கயிர்" பிடிக்கும்
பாசப் பறவைகளே..
துயரத் தனிமையை
துடைத்தெரியுங்கள்.
உயரப் பறப்பதற்கு
உறுதி கொள்ளுங்கள்.

குறிப்பு: இரண்டாயிரத்துப்பத்தின் முதலெட்டு மாதங்களில் மட்டும் திருப்பூரில் 405 பேர் தற்கொலை செய்துகொண்டனர். பெரும்பாலான தற்கொலைகள் மூடத்துணிச்சலில் எடுக்கும் அவசர முடிவுகளே. உங்களுக்குத் தெரிந்தவர் யாரேனும் திடீர்த்தனிமையை விரும்பினால், அவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள். உங்களின் ஒரு நிமிடப் பேச்சு ஒரு உயிரைக் காக்கலாம். வாழ்க்கை வாழ்வதற்கே...

Quote

Followers