வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010

பின்னூட்டம்

பிறக்கின்ற குழந்தைக்கு 
பெண்ஊட்டும்  தாய்ப்பால்போல் 
பதிவுலகில் இடுகைக்கு 
பின்னூட்டம் அவசியம்.

தட்டத் தட்டத்தான் 
தங்கம் நகையாகும் - நீங்கள் 
சுட்டச் சுட்டத்தான் 
சொற்குவியல் கவியாகும்.


எந்தவொரு இடுகையிலும் 
நிறையோ குறையோ 
ஏதேனும் ஒன்றிருக்கும்.
வந்ததற்கு அடையாளமாய் - அதை 
வழங்கிவிட்டுச் செல்லுங்கள்.


படிக்கின்றப் பதிவுகளில் 
கருத்துப் பிழையிருப்பின் 
திட்டிச் சொல்லுங்கள் 
கரும்பாய் இனித்திருப்பின் - முதுகில் 
தட்டிச் செல்லுங்கள். 


"பெயரில்லாப்" பெரியவர்களே 
முகமூடி அணிந்துகொண்டு 
முதுகில் குத்தாதீர்.
பெயரைக்கூடச் சொல்லாமல் 
பெரிதாய் வேறென்ன 
சொல்லிவிடப் போகிறீர்கள்.
நேருக்கு நேர்வந்து 
நிறைய பேசுங்கள்.

தொடர்ந்து எழுத 
தெம்பு கொடுங்கள்  - ஆனால் 
தனிமனித தாக்குதலுக்கு 
கொம்பு சீவாதீர்.

பிறக்கின்ற குழந்தைக்கு 
பெண்ஊட்டும்  தாய்ப்பால்போல் 
பதிவுலகில் இடுகைக்கு 
பின்னூட்டம் அவசியம்.

டிஸ்கி: நான் ஒரு தடவை போஸ்ட் பண்ணிட்டா அப்புறம் நான் எழுதனத நானே படிக்க மாட்டேன். நீங்களாவது படிச்சு பின்னூட்டம் போடுங்க...











செவ்வாய், 24 ஆகஸ்ட், 2010

சகோதரத் திருவிழா

இன்று ரக் ஷா பந்தன். வட இந்தியப் பண்டிகைகளில் என்னைக் கவர்ந்தது. அதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்தால் காப்பு-கட்டு அதாவது உறவுகளின் பாதுகாப்பு முடிச்சு.

இந்நாளில் பெண்கள் குங்குமம், அரிசி, ராக்கி கயிறு மற்றும் இனிப்புகளை கடவுள் முன் வைத்து வழிபடுவர். பின்னர் அரிசியையும் குங்குமத்தையும் தன் சகோதரன் தலையில் தூவி, ராக்கியை மணிக்கட்டில் கட்டி ஆசி வழங்குவர்/வாங்குவர். இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்கள் சொல்வர். அதை ஏற்றுக்கொண்ட சகோதரன் அவளுக்கு பதில் பரிசு கொடுத்து, உன் எல்லா சுக துக்கங்களிலும் உனக்கு உறுதுணையாய் இருப்பேன், உன்பக்கம் நிற்பேன் என உறுதியளிப்பான்.


பொதுவாக எல்லாப் பண்டிகைகளுமே குடும்ப உறவுகளை வலுப்படுத்தவே திட்டமிடப்படுள்ளது. ஒன்றாயிருப்பதின் சுகத்தை உணரச் செய்யவே பண்டிகைகள்.
சுமார் ஆறாயிரம் (?) வருடங்களாய் அதாவது சிந்து சமவெளியில் ஆரியர்கள் தோன்றியதில் இருந்து இப்பண்டிகை கொண்டாடப்படுவதாகச் சொல்கிறார்கள். ரக்சா பந்தன் பற்றிய சில சுவாரஸ்ய நிகழ்வுகளை/செய்திகளைப் பார்ப்போம்.

 ரோக்சனா (கி.மு.326)
அலெக்சாண்டர் (அவரே தாங்க தி கிரேட்) கி.மு.326 ல் இந்தியாவை ஆக்கிரமித்தார். அவரின் இந்திய மனைவி ரோக்சனா. பஞ்சாபை ஆண்ட போரு மன்னன் அலெக்சாண்டரை தோற்கடிக்கும் தருவாயில் ரோக்சனா கட்டிய ராக்கியை பார்த்து விட்டுவிட்டதாக சொல்கிறார்கள். ஆனால் கிரேக்கத்தில் இருந்து இந்தியா மிக தூரம் என்பதாலும், நம்பிக்கையான ஒரு ஆள் இந்தியாவில் தேவை என்றும், போருவின் போர்த்திறம் கண்டு வியந்தும் அலெக்சாண்டர் போருவை நண்பனாக்கிக் கொண்டார் என்று வரலாறு சொல்கிறது.
ராணி கர்ணாவதி (கி.பி.1527)
பாபருக்கு எதிரான போரில் தன் கணவர் ராணா சங்கரம் சிங் (ராஜஸ்தானத்தில் ஒரு மாகாணத்தின் ராஜா) மாண்டதை அடுத்து தன் மகன் விக்ரம்ஜீத்தை அரசனாக்கினார். அவன் சரிவர ஆட்சி செய்யாததால் தானே ஆட்சிப் பொறுப்பேற்றார். அச்சமயம் குஜராத்தின் சுல்தான் பகதூர் ஷா படையெடுத்து வந்ததால் அவர்களைச் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே முகாலயப் பேரரசர் ஹுமாயுனுக்கு உதவி வேண்டி ராக்கி ஒன்றை கர்ணாவதி அனுப்பினார். ராக்கியை ஏற்றுக்கொண்டு தன் தங்கைக்காக படைகளை அனுப்பினார் ஹுமாயுன்.

ரக்சா பந்தனுடன் தொடர்புடைய சில புராண/இதிகாச கதைகளும்  உண்டு.
லட்சுமி க/பெ மகாவிஷ்ணு 
மகாபலி என்னும் மன்னன் தன் மீது தீவிர பக்தியில் இருந்ததால் அவனைக்காக்க திருமால் பூலோகம் வந்தார். திரும்பவும் வைகுண்டம் அழைத்துச் செல்ல லட்சுமி ஏழை பிராமணப் பெண்ணாய் வேடமிட்டு வந்து மகாபலிக்கு ராக்கி கட்டியதாக ஒரு கதை உண்டு.
திரௌபதி
சிசுபாலனை வதைக்கும் போரில் கிருஷ்ணர் விரலில் காயம் ஏற்பட்டதாம். அப்போது திரௌபதி தன் சேலையைக் கிழித்து கிருஷ்ணரின்  விரலில் கட்டினார். அதைத்தான் கௌரவர் அவையில் துகிலுரிக்கும் போது சேலையாய் கொடுத்தார் கிருஷ்ணர்.

பாசமலர்களுக்கென் நேசமிகு வாழ்த்துக்கள்.

வியாழன், 19 ஆகஸ்ட், 2010

பதிவுலகில் நான்....சுயபுராணம்.

முதல் தொடர்பதிவு எழுத என்னை அழைத்த தம்பி செல்வா மற்றும் மனோவுக்கு என் நன்றிகள்.

1 .) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர் ..?
 கலாநேசன் (ஆமா இந்த கேள்வி எதுக்கு?)

2 .) அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா..? இல்லையெனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்கக் காரணம் என்ன ..?
என் உண்மையான பெயர் சரவணன் (கலாநேசன் என்பதும் உண்மையே!). சின்ன வயசுல இருந்தே (அதாவது நான் ச.ஆ.பெரமனூரில் உள்ள ஊ.ஒ.துவக்கப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்ந்த நாளில் இருந்தே) நான் போகும் இடத்திலெல்லாம் என்னைத்தவிர யாரேனும் சரவணன் நிச்சயம் இருப்பார்கள். அப்புறம் வேறுபடுத்திக் காட்ட அடைமொழியோ/பட்டப்பெயரோ வைக்க வேண்டி இருக்கும். அட அதிவுலகில் கூட பாருங்க.... சரவணக்குமார், ஆர்.வி.சரவணன், மதுரை சரவணன் என நிறைய சரவணன்கள். அதனால் தான் நான் கலாநேசன்.

3 .)நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்ததைப் பற்றி ?
என் நண்பன் முரளி மூலமாகத் தான் எனக்கு வலைப்பூ அறிமுகம் கிடைத்தது. (யாரும் கொலைவெறியோடு அவரைத் தேட வேண்டாமெனக் கேட்டுக்கொல்கிறேன் சாரி கொள்கிறேன்). பெரும்பாலும் பதிவுலகம் பற்றிய பட்டய படிப்பு படித்துவிட்டுத்தான் (அதாவது ஒரு ஆறு மாசம் மற்ற பதிவுகளை படித்துவிட்டு அப்புறம் ஒரு ஆறு மாசம் பின்னூட்டம் மட்டும் எழுதிவிட்டு) வலைப்பூ துவங்குவார்கள். நானோ வலைப்பூ துவங்கி விட்டு சுமார் ஆறு மாதம் ஆளில்லாக் கடையில் டீ ஆத்திக்கொண்டிருந்தேன். அப்புறம் தமிழ் வலைப்பதிவர் குழுமம், தமிளிஷ்(இப்போ இன்ட்லி), தமிழ் மணம் மூலம் நண்பர்கள் கிடைத்தனர். 

4 .) உங்கள் வலைப்பதிவைப் பிரபலமடைய என்ன என்னவெல்லாம் செய்தீர்கள் ..?
 பிரபலம் என்பதே வெறும்பேச்சு. தமிழ் கூறும் நல்லுலகக்கடலில் பதிவுலகம் என்பதோர் சிறுகுளம். ஆனாலும் பதிவெழுத துவங்கிய காலத்தில் பின்னூட்டதிற்காய் ஏங்கும் மனம் (அட இப்பவும்தாங்க ஆனா கொஞ்சம் தெளிவாயிட்டேன்). புகழ் வெளிச்சதிற்கு ஆசைப்பட்டு இலவசமாய் கிடைப்பதையே ஒன்பது டாலர் காசு கொடுத்து வாங்கிய காமெடியெல்லாம் நடந்தது(மின்மினி). ஆனாலும் இன்ட்லியில் இருந்து உங்கள் பதிவு பிரபலமாகிவிட்டது என்று கடந்த மூன்று மாதத்தில் நான் எழுதிய எல்லா பதிவுகளுக்கும் மின்னஞ்சல் வரும்போது மகிழ்வாய் இருக்கிறது. அது இன்னும் எழுத நம்பிக்கையையும் ஊக்கத்தையும் தருகிறது.

5 .) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விசயங்களைப் பகிர்ந்ததுண்டா ..? அதன் விளைவு ..?
சில சமயம் பகிர்ந்ததுண்டு. ஆனால் அவை எனக்குத்தான் சொந்த விஷயங்கள். வாசிப்பவர்களுக்கு அதுவும் ஒரு கவிதை அவ்வளவே!

6 .) நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்கா ..?
 பணம் சம்பாதிப்பேனா என்று தெரியாது. ஆனால் இன்னும் நிறைய நண்பர்களை சம்பாதிப்பேன். என் படைப்புகளை பதிவு செய்யும் தளமாகவே கருதுகிறேன். நிச்சயம் இது பொழுதுபோக்குமல்ல. மண் பயனுற கடுகளவு காரியமேனும் செய்யவேண்டும் இந்த வலைப்பூவைக்கொண்டு.

7 .) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்..? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன ..?
  ஒன்றே நன்று.

8 .) மற்ற பதிவர்கள் மீது உங்களுக்கு எப்போதாவது பொறாமை அல்லது கோபம் வந்ததுண்டா ..?
ஆம்.
'பிறர்க்கின்னா பின்னூட்டம் செய்யின் - தமக்கின்னா
புனைவாய்த் தானே வரும்'
என்ற புதுக்குறள் மறந்து தனிமனித தாக்குதல் செய்வோர் மீதும், சாதீயம் மற்றும்  இன்னும் பிற ஈயங்கள் காய்ச்சி நம் கண்ணில் ஊற்றுவோர் மீதும் கோபம் வருகிறது.

9 .) உங்கள் வலைபதிவு பற்றி உங்களை முதல் முதலில் தொடர்பு கொண்டு பாராட்டிய மனிதர் யார் ..?
இதுவரை யாருடனும் நேரிலோ/தொலைபேசியிலோ உரையாடியதில்லை. முதலில் பாராட்டியது அண்ணன் கே.ஆர்.பி.செந்தில். 'பதிவுலகம் உங்களை அன்போடு வரவேற்கிறது' என்று சொல்லி முதல் follower ஆனார். அவர்தான் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தினார்.

10 .) கடைசியாக விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்திற்குத் தெரியவேண்டிய அனைத்தையும் கூறுங்கள் ..?
நான்  முதுநிலை மருந்தாக்கியல் படித்துவிட்டு தலைநகரில் உள்ள ஒரு மருந்துக் கம்பெனியில் ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பணிபுரிகிறேன். சொந்த ஊர் சேலம். அலுவலகப் பணிச்சுமை என்னை அழுத்தி எடுத்தபோதும் தீராத் தமிழ்க்காதல் என்னை திரும்பவும் எழுத வைக்கிறது. நிறைய படிக்கும் ஆர்வமுள்ளது. வேறென்ன சொல்ல....




இப்பதிவை தொடர நான் அழைப்பது இருவரை 
1 . விக்னேஸ்வரி
2 . விந்தைமனிதன் 

ஞாயிறு, 15 ஆகஸ்ட், 2010

கூட்டாஞ்சோறு 15.08.2010

 போலியோ......போலியோ?
அண்மையில் நண்பர் பனித்துளி சங்கர் ஒரு பதிவில் 'எப்பொழுதெல்லாம் நாம் போலியோ சொட்டு மருந்து கொடுக்க செல்கிறோமோ அப்பொழுது குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு முன்பும் , பின்பும் தாய் பால் என்றால் இரண்டு மணிநேரத்திற்கும் , புட்டிப்பால் என்றால் ஒருமணிநேரத்திற்கும் கொடுத்தல் கூடாது' என்று எழுதி இருந்தார். இது சம்பந்தமான ஆராய்ச்சி கட்டுரைகளின் முடிவில் தாய்பால் மற்றும் புட்டிப்பாலுக்கும் போலியோ சொட்டு மருந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றே சொல்லப்பட்டுள்ளது. இந்த விவாதத்திற்கு தன் பதிவின் மூலம் திரி கிள்ளிய சங்கருக்கும், மருத்துவ ஆதாரங்களுடன் அப்பதிவில் பின்னூட்டமிட்ட புருனோவிற்கும்  மற்றும் தேடி வந்து தகவல் சொன்ன நண்பார் SUREஷ் (பழனியிலிருந்து) க்கும் நன்றிகள்.

செடிகள் நடுவோம்  
 அண்மையில் அலுவலக வி(ஜ)சயமாய்  நானும் மூன்று ஜப்பான் நண்பர்களும் சண்டிகர் சென்றிருந்தோம். அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் எங்கள் பனி முடிந்ததும் ஒரு வித்தியாசமான நிகழ்வு நடந்தது. ஒரு மரக்கன்றை அந்த வெளிநாட்டு நண்பர்கள் மூலம் தொழிற்சாலையினுள் நட்டார்கள். இவ்வாறு அங்கு பார்வையாளராக வருபவர்களைக் கொண்டு ஏராளமான மருத்துவ மூலிகைகளும் மரக்கன்றுகளும் நட்டு வளர்க்கிறார்கள்.

 

மரங்களால் நமக்கு நன்மைகள் ஏராளம். உண்ணக் கனி தரும். உயிர் வாழ ஆக்சிஜன் தரும். மண்சரிவை தடுக்கும். மழை தரும். மருந்து தரும். நிழல் தரும். கதவு தரும். ஜன்னல் தரும். எழுதக் காகிதம் தரும். இறந்தால் விறகு தரும். மரித்தால் நிலக்கரி தரும். இப்படி ஏராளமாய்த் தருவதால் தான் மரத்தைத் தரு என்றானோ தமிழன். சரி இதெல்லாம் விடுங்க இத விட மிக்கியமான ஒரு பிரச்சனை வராம தடுக்கனும்னா நீங்க கண்டிப்பா மரம் வளர்க்கனும். (அதுக்கு செடி நடனும்). அந்த பிரச்சனை இதோ.....


 சுதந்திரம்  
விளையாட்டுப் பள்ளி (play school)  செல்லும் என் இருவயது மகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு உடையலங்காரப் போட்டி அதாங்க fancy dress. சரி என்னடா செய்யறதுன்னு யோசிச்சுகிட்டே உடைகள் வாடகைக்குத் தரும் கடைக்கு சென்றால் அங்கு தீபாவளி வார ரங்கநாதன் தெருவெனக் கூட்டம் அலை மோதியது. அப்பதான் தெரிந்தது சுதந்திர தினத்துக்கு இந்த ஊரில் உள்ள எல்லா பள்ளிகளிலும் இதே தீமில் அதாவது விடுதலைப் போராட்ட வீரர்கள் போல உடை அணித்து வரச் சொல்லி இருக்கிறார்கள். எல்லோரும் நாலு வயசு காந்தி, எழு வயசு நேரு, ஆறு வயசு போஸ் என உடைகள்  வாங்கிச் சென்றனர். எந்தக் கடையிலும் என்மகளுக்கென உடை கிடைக்கவில்லை.(மொத்தமே மூணு கடைதான் அதிலும் முன்னூறு பேர் கூட்டம்). 
அப்புறம் புதிதாய் ஒரு வெள்ளை பைஜாமாவும் தனியே தொப்பியும் வாங்கினோம். சிவப்பு ரோஜா (ஹேர் கிளிப்) ஒன்றும் வாங்கினோம். (எல்லோரும் தீபாவளி பொங்கல்னா தான் புதுத் துணி எடுப்பார்கள், நம்ம வீட்ல தான் இண்டிபெண்டன்ஸ் டேக்கு என்றாள் மனைவி). அப்புறமென்ன நேற்று என் மகள் நேருவானாள்.


 தத்துவம்  
சொற்கள் தேனீக்கள் போன்றவை அதில் தேனுமுண்டு கொடுக்குமுண்டு!

அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.



வியாழன், 12 ஆகஸ்ட், 2010

முரண்

முரண் என்றுமே அழகுதான். விதிவிலக்குகள் போல அவை தனித்து நின்று ரசிக்க வைக்கும். முதலில் பொன்மொழிகளில் சில முரண்களைப் பார்ப்போம்.
  • தயங்கினால் தோற்றுப்போவாய்!
  • ஆழம் தெரியாமல் காலை விடாதே!
  • கற்பதற்கு வயதில்லை!
  • கிழட்டு நாய்க்கு புதிய உத்திகள் பிடிபடாது.
  • வாழ்க்கை சுவையாய் இருக்க வெரைட்டி வேண்டும்.
  • பாதி வழியில் குதிரையை மாற்றாதே!
  • வாளை விட வலிமையானது பேனா.
  • வார்த்தையை விட வலிமையானது காரியம்.
  • ஆடைதான் மனிதனை அடையாளம் காட்டுகிறது.
  • அட்டையைக் கொண்டு புத்தகத்தை மதிப்பிடாதே!
இப்படி சொல்லிக்கொண்டே  போகலாம். (அதாவது இது போல உங்களுக்கு ஏதாவது தோன்றினால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்). இதை டைப்பிக் கொண்டிருக்கையில் முரண் என்ற தலைப்பில் என் நினைவுக்கு வரும் சில கவிதைகள் இதோ......

1
உரசின
தீபெட்டியும் தீக்குச்சியும்
எரிந்தது
தீக்குச்சி மட்டும்.

 2
வெட்டிய மரங்களை
ஏற்றிச்செல்லும்
லாரியில் வாசகம்
'மரங்களை  வளர்ப்போம்'.

3
வங்கியில் கடன்வாங்கி
டீக்கடை வைத்தவன்
தன்கடையில் எழுதினான்
'கடன் நட்பை முறிக்கும்'

 4
கண்ணும் கண்ணும்
கலந்து உருவாகும்
காதலுக்கு
கண் இல்லையாம்.

5
ஒரே தட்டில்
சாப்பிட்டு
ஒரே கட்டிலில்
உறங்கி
ஒரே டிசைனில்
உடையணிந்த
இருவரிடையே சண்டையாம்
காரணம்
ஒரே பெண்ணை
காதலிக்கிறார்கள்.

6
மருமகளை
கொடுமைப்படுத்தும்
மாமியார்
தன் மகளுக்கு
மாப்பிள்ளை பார்க்கிறார்
அம்மா இல்லாத
பையனாய்ப் பார்த்து.

7
சினிமா இடைவேளை
ரசிகர்கள் விட்ட
புகையில்
மங்கலாய்த் தெரிந்தது
'புகைப் பிடிக்காதீர்கள்'

8
விதைகளில் கலப்பினம்
வீரியம் வாய்ந்தது
வாங்கத் தயார்.
கால்நடைக் கலப்பினம்
ஆற்றல் வாய்ந்தது
ஏற்கத் தயார்
மனிதசாதியில் கலப்பினம்
மகத்தானது
அரிவாள்கள் தயார்.

புதன், 4 ஆகஸ்ட், 2010

பதிவுப்பேய்

பதிவுப்பேய் பிடித்து - எனைப்
படுத்தி எடுக்குதடி
ஓட்ட இயலாமனம்
ஒட்டிக் கிடக்குதடி.

அலுவலகப் பணிச்சுமையோ
அழுத்தி எடுத்தாலும்
எழுதியே தீர்வேனென்று
என்மனம் துடிக்குதடி.

முப்பதை நெருங்கியும்
மூவிரண்டு வயதுபோல்
கணிப்பொறியில் விளையாண்ட
களிப்புகள் மறந்ததடி.

அதிகாலை என்மனதில்
அலாரம் அடிக்கிறது
புதிதாக எதையெதையோ
புத்திக்குள் தேடுகின்றேன்
எட்டுமணி வேலைசெல்ல
எழுவரை தூங்கியவன்.

பன்னிரண்டு மணிக்கு
பணிமுடிந்து வந்தாலும்
கண்ணிரண்டும் ஓடிப்போய்
பதிவதனைப் பார்க்குதடி.

வெளியூர் போகையிலும்
விமான நிலையத்தில்
கைப்பேசிப் பின்னூட்டம்
கவனமாய் இடுகின்றேன்.

முப்பது இடுகைகூட
முழுதாய் எழுதுமுன்னர்
இப்படி எனக்கிது
இம்சையாய் இருக்கிறதே
எப்படித்தான் எழுதினரோ
முன்னூறு நானூறு.

பதிவுப்பேய் பிடித்து - எனைப்
படுத்தி எடுக்குதடி
இப்படியேத் தொடர்வதற்கே
இச்சையாய் இருக்குதடி.....

ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

நட்பு


வானத்துத் தாரகையொன்று
வந்திறங்கி என்னிடம்
ஆயிரம்கோடி ரூபாய்
ஆருயிர் நட்பு
எது வேண்டும் கேள் என்றது!
நான்
ஆயிரம் கோடி என்றேன்....
ஆருயிர் நட்பாய் தான்
நீயிருக்கிறாயே!



அனைவருக்கும் நண்பர்கள்தின நல்வாழ்த்துக்கள்.

 

Quote

Followers