ஞாயிறு, 30 ஜனவரி, 2011

நீந்துதல் மீன்களின் குற்றமா? #tnfisherman

உடன்பிறந் தவர்களைப் போலே- இவ் 
வுலகினில்  மனிதரெல் லாரும்;
திடங்கொண் டவர்மெலிந் தோரை - இங்குத்
தின்று பிழைத்திட லாமோ?
என்ற  பாரதியின் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. வெறும் வலையோடு வயிற்றுப் பிழைப்புக்காய் கடலுக்குள் சென்றவனை ஆயுதம் எய்துக் கொல்வது நியாயமா? நீந்துதல் என்பது மீன் செய்யும் குற்றமா? மீன்பிடிக்கச் செல்வது மீனவன் செய்யும் குற்றமா?

"இந்திய மீனவர்களை மனிதர்களாக நடத்த ஆவன செய்வோம். தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடலோர ரோந்து, பன்னாட்டுக் கடல் எல்லைகளில் ரோந்து, வான் வழி மற்றும் ரேடார் கண்காணிப்புகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன" - இது நாமெல்லாம் குரல் கொடுத்ததால் எடுக்கப்பட்ட நடவடிக்கை இல்லைங்க. 2007 ஆம் வருஷம் மே மாதம் ஒன்பதாம் தேதி அந்நாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில், 1991 முதல் 2007  ஏப்ரல் வரை 77 இந்திய மீனவர்களை இலங்கை ராணுவன் சுட்டுக் கொன்றுள்ளதேன்னு கேட்டதற்குப் பதிலாய்ச் சொன்னது.

இன்றைய நிலவரப்படி 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை ராணுவத்தால் கொலை  செய்யப்பட்டபின்னும் ராஜபக்சே சொல்கிறார், "இலங்கை ராணுவத்தினர் ஒன்றுமரியாதவர்கள் என்று!". கடந்த இரு தினங்களாக இணையத்தில் எழுப்பப்படும் குரல்கள் நிச்சயம் பயனளிக்கும். ஒன்றுகூடிக் குரல் கொடுப்போம்.

இணைய தள முகவரி- savetnfisherman.org
ட்விட்டர் முகவரி- twitter.com/savetnfisherman 
பேஸ்புக் முகவரி - http://www.facebook.com/savetnfisherman
உங்களுடைய ஆதரவரை இந்திய அரசுக்கு அனுப்ப -Fill This Form


என்னுடைய (@kalanesan) ட்விட்டர் தளத்தில் பதிந்ததில் சில...

 1
தந்தி மட்டும் அனுப்பினால் போதுமா?
தந்திடுவானா எமன், தான் எடுத்த உயிர்களை...
 2
தமிழன் வயிற்றுப் பிழைப்புக்காய் வீசினான் வலை -அதுவே
சிங்கள நரிகள் அவனுக்கு விரிக்கும் சிலந்தியின் வலை.
 3
சிங்கள கடற்படையின் துப்பாக்கிப் பயிற்சிக்கு
தமிழக மீனவன் உயிருள்ள பொம்மையா?
4
கடலில் சிந்திய ரத்தமெல்லாம் -மீனவர்
உடலின் இந்திய ரத்தம்.
5
படகும் கப்பலும் மிதந்த கடல்
இன்று மிதப்பதோ மீனவர் உடல்.
6
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வே நம்மில்
ஒற்றுமை நீங்கினால் அனைவர்க்கும் தாழ்வே!
7
"பொறுத்தது போதும்! பொங்கி எழு!" இது யார் எழுதிய வசனம் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்?
8
இலங்கைத் தமிழனை இன்னலில் தவிக்கவிட்டோம் காரணம் இறையாண்மை. இந்தியத் தமிழனை காக்க மறந்தால் அது நம் இயலாமை. 

சுமார் இரண்டு மணி நேரத்தில்  600 க்கும் அதிகமான ட்விட்டுகள் பதிவாகியுள்ளன. உங்கள் எல்லாக் கருத்துக்கள் கண்டனங்களோடும்  #tnfisherman என்று இணைக்கவும். ஒன்றுபட்டுக் குரல் கொடுப்போம். நிச்சயம் நல்லது நடக்குமென நம்புவோம்.
உடன்பிறந் தார்களைப் போலே- இவ்
வுலகில் மனிதரெல் லாரும்;
இடம்பெரி துண்டுவை யத்தில் -இதில்
ஏதுக்குச் சண்டைகள் செய்வீர்.
                                                     பாரதி.




வியாழன், 27 ஜனவரி, 2011

பாரதியை பார்க்கப் போயிருந்தேன்-1

பாரதி!

தமிழ் இலக்கியத்தின் உயிர் எழுத்துக்களில் ஒருவன். தாளக்கட்டுகளுக்கு மட்டும்  தலையாட்டிக் கொண்டிருதவர்களின் காதைத்திருகி புதுக் கவிதை காட்டியவன். அவன் இறந்து 50 வருடங்கள் ஆனபின்னும், ஏன் இன்றும் கூட "ஏன் மரபை மீறுகிறீர்கள்?" என்ற கேள்விக்கு பாரதி மீறினான் என்பதே பதிலாய் இருக்கிறது. அவன் பெண்ணியப் பெருங்கவி, விடுதலை வீரன், புதுமைக்காதலன், புரட்சியாளன், எட்டயபுரத்தில் கொட்டிய முரசு.

"நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ
அறம் பாடவந்த அறிஞன் - புதிய
மறம் பாட வந்த மறவன் " என்ற பாரதிதாசனின் வரிகளைச் சொல்லி என் பள்ளி நாளொன்றில் சேலம் தமிழ்ச்சங்கத்தில் பேசிய நாளிலிருந்தே பாரதி பிறந்த வீட்டைப் பார்க்க வேண்டுமென்பதென் ஆசை. அது அண்மையில் நிறைவேறியது. 11 .01 .11 அன்று இரவு சேலத்தில் இருந்து திருநெல்வேலி கிளம்பினேன்.

திருநெல்வேலியில் இருந்து கோவில்பட்டி போனேன். கோவில்பட்டியில் இறங்கிய பின்தான் நினைவுக்கு வந்தது என் கேமராவின் பேட்டரி வீட்டிலேயே (சேலத்தில்) விட்டு வந்தது. ஒருமணி நேரம் கோவில்பட்டியின் கடைவீதிகளில் அந்த எட்டாத கனிக்காய் கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தேன். பின் என் கைப்பேசிக் கேமராவே நல்ல படமெடுக்கும் என்ற ஞானம் வந்தவனாய் தூத்துக்குடி பேருந்தில் ஏறினேன்.

கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி செல்லும் வழியில் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது எட்டயபுரமென்னும் கிராமம். முத்து சோளப்பயிர்களையும் முட்புதர்களையுமே வழியெங்கும் காண முடிந்தது. எட்டயபுரத்தில் இறங்கியதும் பாரதி வீட்டை ஓர் ஆட்டோ ஓட்டுனரிடம் விசாரித்தேன். அவர் நடந்து போகும் தொலைவிலுள்ள வீட்டில் இருபது ரூபாய் வாங்கிக்கொண்டு இறக்கிவிட்டார்.வழியில் உள்ள பெயர்ப் பலகைகளில் எட்டயபுரம், எட்டயாபுரம், எட்டய்யபுரம் என்று வித விதமாய் எழுதி என்னை யோசிக்க வைத்தார்கள். கோவிலுக்கு அருகில் எட்டு அய்யர்களின் குடும்பங்கள் வாழ்ந்த கிராமம் தான் எட்டயபுரமோ (எட்டு + அய்யர் + புரம்) என்ற எண்ணம் எழுந்தது. வரலாறு படித்த வல்லுனர்களும் நன்னூல் படித்த நல்லவர்களும் இதை சரி பார்க்கலாம்.

அந்தப் பெருங்கவி பிறந்த வீடு ஒரு அருங்காட்சியகமாய் இருக்கும் என்று போன எனக்கு ஆச்சர்யமே கிடைத்தது. அந்தக் கவிராஜனை காணப் போன என்னை வெறும் மேசை, நாற்காலியே வரவேற்றது. அதன் மீது ஒரு வருகைப்பதிவேடு. அதில் நாளொன்றுக்கு சுமார் 20 - 25 கையெழுத்துகள் பதிவாகியிருந்தன. வெளிச்சுவற்றில் பாரதியின் படம் அதனருகில் "திராவிடர் இயக்கம் ஒருகாலத்தில் பாரதியை ஏற்றுக்கொள்ளவில்லை ஆனால் திராவிடர் இயக்கம் இன்று பாரதியை ஏற்றுக்கொள்வது பாரதி பெற்ற பெருமை" என்ற கலைஞரின் வசனம். கீழே பாரதி பிறந்த வீட்டை அரசுடைமையாக்கியதற்கான கல்வெட்டு.

இன்னொரு புறம் இன்னுமோர் கல்வெட்டு அதில் பாரதியின் சிறப்பாய் பதிந்திருக்கிறார்கள் பாருங்கள்...

முதல் உள்ளறையில் பாரதி பிறந்த இடத்தில் ஒரு சிலை வைத்திருக்கிறார்கள்.

இரண்டாம் உள்ளறையில் சுவரெங்கும் புகைப்படங்கள். அதில் பாரதியின் குடும்ப வரைபடம், துணைவியார் செல்லம்மாவுடன் பாரதி, மூத்த மகள் தங்கம்மாள், இளைய மகள் சகுந்தலா, இந்தியா இதழின் முகப்பு அட்டை, தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாத அய்யர், பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்ட கனகலிங்கம், அரசியல் குரு திலகர், ஆன்மீக குரு நிவேதிதா, குவளைக்கண்ணன், சோமசுந்தர பாரதியார், பாரதிதாசன், நெல்லையப்பர், நெல்லையில் கல்வி பயன்ற இந்துக்கல்லூரி பள்ளி இன்னும் சில புகைப்படங்கள் மாட்டப்பட்டுள்ளன. அவற்றுள் சில உங்களுக்காக...

இந்தியா இதழின் அட்டைப்படம் 

பாரதியால் பூணூல் அணிவிக்கப்பட்ட கனகலிங்கம்

புதுச்சேரி நாட்களில் இருந்து கடைசிவரை கூடவே இருந்த குவளைக்கண்ணன்

பாடல்களை பதிப்பித்த நெல்லையப்பர் 

காலக்கடிகாரமும் பாரதியின் காதல் கடிகாரமும்

காரைக்குடியில் பாரதியார்

நெல்லையப்பருக்கு பாரதியின் கடிதம்  

இந்த வண்ணம் உதிர்ந்த சுவற்றில் மாட்டப்பட்டுள்ள உள்ளம் உருக்கும் பாரதியின் கடிதம் அடுத்த பதிவில்...



வெள்ளி, 21 ஜனவரி, 2011

சாளர இருக்கை

சாளர இருக்கை கிட்டின் 
சாதித்த உணர்வு தோன்றும் 
துண்டு மேகம் பார்க்க
துடைத்துவைத்த வானம் பார்க்க 
வண்டுகள் பறக்கப் பார்க்க 
வட்ட நிலவு பார்க்க 
நகர்கின்ற மரங்கள் பார்க்க 
நட்சத்திரக் கூட்டம் பார்க்க 
தகதகவென மாலையில் மின்னும் 
தங்கச் சூரியன் பார்க்க 
நடைமேடைக் கடைகள் பார்க்க 
நகைத்திடும் குழந்தைகள் பார்க்க 
தடையில்லாப் பறவைகள் பார்க்க 
தலைகோதும் தென்றல் பார்க்க 
சாளர இருக்கை கிட்டின் 
சாதித்த கர்வம் தோன்றும்.

புதன், 12 ஜனவரி, 2011

லோஹ்ரி திருவிழா


நம்ம ஊர் பொங்கல் போல பஞ்சாப் இன்னும் சில வட மாநிலங்களில் அறுவடைத் திருநாள் லோஹ்ரி (Lohri) பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. பொங்கலும் லோஹ்ரியும் மிக நெருங்கிய தொடர்புடையன. இங்கு கோதுமை விளைச்சலைக் கொண்டாடவும் விவசாயிகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விளைச்சலுக்கு நன்றி தெரிவிப்பதோடு மக்கள் பாங்க்ரா நடனமாடுவார்கள். குழந்தைகள் ஆடிப் பாடியபடி அருகில் உள்ள வீடுகளில் இனிப்பைப் பகிர்வார்கள்.
பின்பு பாரம்பரிய வாத்தியமான டோல் வாசித்தபடி நெருப்பைச் சுற்றி நடனமாடுவார்கள். ஆடலும் பாடலும் முடிந்ததும் மக்காச்சோள ரொட்டியும் கரும்புச் சாரும் விருந்து படைப்பார்கள். நம்ம ஊரில் புதிதாய் திருமணமானவர்களுக்கு எப்படி தலைப் பொங்கல் விசேஷமோ அப்படியே பஞ்சாபிலும் மணமான பின் முதல் லோஹ்ரி மிக விசேஷம்.
இதே பண்டிகை பிகு(Pihu) என்று அசாமிலும் மகா சங்கராந்தி என்று இன்னும் பல மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது.



பதிவுல நட்புகளுக்கு என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

வெள்ளி, 7 ஜனவரி, 2011

தற்கொலைகளின் தலைநகரம்

கொசுவர்த்திச் சுருளை
பொடியாக்கிக் குடித்து
உயிர்விட்டாள் ஒருத்தி.


கணவன் திட்டியதால்
கயிற்றில் தொங்கினாள்
ஒருத்தி.

மனைவியுடன் ஏற்பட்ட
மனக்கசப்பில் தன்னுயிரை
மாய்த்துக்கொண்டான் ஒருவன்.

பதினெட்டு மாதக்குழந்தையை
பரிதவிக்க விட்டுவிட்டு
உள்ளத் தகராறில்
உயிர்விட்டனர் இருவர்.

இப்படி
நாலிரண்டு மாதத்தில்
நானூற்று ஐந்துபேர்
உள்ளத் துணிவின்றி
உயிர்மாய்த்துக் கொண்டனரே...
திருப்பூர் என்ன
ஆடை தொழில்நுட்பத்தின்
அழகு நகரா - இல்லை
தற்கொலைகளின் தலைநகரா?

உங்கள் தாய்
ரத்தத்தை பாலாக்கி
ஊட்டி வளர்ப்பதுவும்
உங்கள் தந்தை
சொத்தைவிற்று கடன்வாங்கி
சுபமுகூர்த்தம் குறிப்பதுவும்
பாதிவழியில் நீங்கள்
பயணத்தை முடிப்பதற்கா?

"பாசக்கயிர்" பிடிக்கும்
பாசப் பறவைகளே..
துயரத் தனிமையை
துடைத்தெரியுங்கள்.
உயரப் பறப்பதற்கு
உறுதி கொள்ளுங்கள்.

குறிப்பு: இரண்டாயிரத்துப்பத்தின் முதலெட்டு மாதங்களில் மட்டும் திருப்பூரில் 405 பேர் தற்கொலை செய்துகொண்டனர். பெரும்பாலான தற்கொலைகள் மூடத்துணிச்சலில் எடுக்கும் அவசர முடிவுகளே. உங்களுக்குத் தெரிந்தவர் யாரேனும் திடீர்த்தனிமையை விரும்பினால், அவர்களுடன் மனம் விட்டுப் பேசுங்கள். உங்களின் ஒரு நிமிடப் பேச்சு ஒரு உயிரைக் காக்கலாம். வாழ்க்கை வாழ்வதற்கே...

செவ்வாய், 4 ஜனவரி, 2011

100

  1. நான் மாதக்கணக்கில் ஏன் சில வருடங்களாய் கூட ஒரு விஷயத்தை யோசிக்கிறேன். 99 முறை என் முடிவுகள் தவறானவை. ஆனால் 100 வது முறை நான் எடுக்கும் முடிவு சரியானது - ஐன்ஸ்டீன்.
  2. மிக அரிதாய் பூமியில் கிடைக்கும் கதிரியக்கக் கனிமம் பெர்ரியத்தின் அணு எண் 100 
  3. நீரின் கொதிநிலை 100°C
  4. அமெரிக்க மக்களவை (ஒவ்வொரு ஸ்டேட்டுக்கும் தலா இரண்டு என)100 செனேட்டர்கள் கொண்டது. 
  5. கிரீஸ், இஸ்ரேல் மற்றும் இந்தியாவில் அவசர போலிஸ் எண் 100
  6. அமெரிக்க கால்பந்தாட்ட மைதானத்தின் நீளம் 100 யார்ட்.
  7. 100 மீட்டர் உயரத்திலிருந்து விழுந்தாலும் அணிலுக்கு அடி படாது.
  8. பூனைகள் 100 விதமாய் ஒலியெழுப்பும்.
  9. மின்னல் சுமார் 100 கிலோமீட்டர் தூரத்துக்குத் தெரியும்.
  10. உலகிலேயே நீளமான மகிழுந்து 100 அடி நீளமுள்ளது. இதில் நீச்சல் குளமும் நீர்ப்படுக்கையும் உண்டு.
  11. இந்தியாவில் நில மதிப்பீட்டுமுறை கி.மு.100 ல் இருந்தே உள்ளதாம்.
  12. எஸ்கிமோக்கள் மொழியில் பனிக்கட்டிக்கு 100 க்கும் அதிகமான வார்த்தைகள் உள்ளதாம்.
  13. வரலாற்றில் 100 வருடப்போர் என குறிப்பிடப்படும் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையேயான போர் துவங்கிய வருடம் 1336 
  14.  100 குவாட்டர் = 25 Full
  15. 13+23+33+43=100 
     
    நான் என்ன சொல்ல வரேன்னு உங்க எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆமாங்க எனக்குக்கூட 100 பின்தொடரும் நண்பர்கள் கிடைச்சிருக்காங்க. தொடர்ந்து எழுதாமல் சராசரியாக வாரம் ஒரு பதிவென சுமார் 50 பதிவுகளே எழுதியுள்ள எனக்கு இது கூடுதல் மகிழ்வைத் தருகிறது. உங்கள் ஒவ்வொருவரின் ஆதரவிற்கும் மிக்க நன்றி.


சனி, 1 ஜனவரி, 2011

பு(ன்ன)கைப்படம்

கொஞ்சமாய்த் தெரியும்
மஞ்சள் சூரியன்
பிஞ்சுக் குழந்தையின்
பஞ்சுநிகர்ப் பாதங்கள்.

நினைத்ததைக் காட்டும்
நீலவானக் கண்ணாடி.
விமானப் பயணத்தில்
வெளியேத் தெரியும் வெளி.

திரையிட்டு மறைத்தாலும்
தெரிகின்ற கண்கள்.
நுரையிட்டு நம்காலை
நுகர்கின்ற அலை.
கால்தடப் பொட்டுவைத்து
கரையிடும் கோலம்.

திருமண தினத்தின்
தித்திக்கும் நிமிடங்கள்.
இருவயது மகளின்
அறுசுவைக் குறும்புகள்.

உள்ளங்கையில் தாஜ்மகால்
உச்சந்தலையில் குதுப்மினார்
பச்சைவயற் பயிர்கள்
பறக்கின்ற உயிர்கள்
மொட்டை மாடியில்
முளைத்த மரம்.

இப்படி எனக்குப்
பிடித்த படங்களும்- நான்
பிடித்த படங்களும்
ஏராளம் இருந்தாலும்...

கரும்பு தினமொன்றில்
விரும்புவதைச்சொல்லிவிட்டு - நீ
புன்னகையில் வெட்கம்கலந்தோர்
புதுப்பார்வை பார்த்தாயே
அந்நொடியை படம்பிடித்து
உள்ளத்தில் மாட்டியுள்ளேன்
உயிராணி துணைகொண்டு...

இன்னல் வரும்போது
இருவிழி மூடியுன்
புன்னகையைப் பார்த்தாலே
புதுத்தெம்பு கிடைக்குதடி.
போகுதடித் துன்பமெல்லாம்
போனதிசை தெரியாமல்...

Quote

Followers