ஞாயிறு, 19 பிப்ரவரி, 2017

சிங்கமில்லாக் காடு


செங்கோல் வாங்கிய சிங்கமொன்று
ஜெயமாய்க் காட்டை ஆண்டது
மறுமுறை ஆட்சியைப் பிடித்தபின்னும்
மர்மமாய் அதுவும் மாண்டது
உடனிருந்த கள்ள நரியொன்றின்
உள்ளத்தில் ஆசையோ மூண்டது
புசிக்கலாம் இந்தக் காட்டையென்றே
புதிய வேடம் பூண்டது!
வேரில் ஊற்றிய வெந்நீராய்
வெடுக்கெனப் பதவியைப் பறித்ததனால்
திடுக்கிட்டுத் திருந்திய ஓநாயோ
தியான நாடகம் போட்டது!
ஊரில் உள்ள உத்தமர்கள்
ஒன்றாய்ச் சேர்ந்திட வேண்டுமென
தேரில் தன்னை ஏற்றிடவே
திருடர்கள் துணையைக் கேட்டது!
அத்தை மறைந்த நல்வாய்ப்பில்
தத்தை ஒன்றும் கிளையமர்ந்து
விழியில் தீபம் ஏற்றியே
வித்தைக் காட்டத் தொடங்கியது!
நத்தை வேகத்தில் நகர்ந்தவொரு
சொத்தை வாங்கிய வழக்கினது
திருத்தி எழுதிய தீர்ப்பாலே
நரியின் கனவோ முடங்கியது!
காட்டைக் காக்கத் தேர்ந்தெடுத்த
அடிமை விலங்குகள் ஓரிடத்தில்
அவரவர் வேலையை மறந்துவிட்டு
அடைபட்டுக் கிடந்து வியர்த்தனவே!
காசை வாங்கி வாக்களித்த
கானகத்து உயிர்களெல்லாம்
ஆசை வெறுத்த மனத்துடனே
அடுத்தடுத்த நாடகம் பார்த்தனவே!
#கலாநேசன் சரவணன்
14-Feb-2017

வெள்ளி, 13 ஜனவரி, 2017

உடையாத நீர்க்குமிழி

உள்ளத்தில் ஒரு 
உடையாத நீர்க்குமிழி
உருண்டு கிடந்தென்னை 
உயிர்ப்பித்து வைக்கிறது.

பத்தாவது முடிச்சபின்னும் 
படிக்கத்தான் வேணுமின்னு
விடுதிச்செலவுக்கு எங்கப்பன்
விதை நெல்லை விக்கையிலும்

பொட்டல் காட்டில் என்கூடப் 
பொழைக்க முடியாதுன்னு
பார்த்துவச்சப் பொண்ணு ஒண்ணு 
பட்டணம் போகையிலும்

சேத்துவச்சச் சிறுவாடு 
செல்லாமப் போனதுன்னு
மாத்திவர நான்போயி
வரிசையில நிக்கையிலும்

உடையப் பார்த்தந்த 
உயிர்க்குமிழி - ஆனாலும்
நட்டப்பயிர் காஞ்சதனால் 
நாண்டுகிட்ட எங்கப்பன்
பட்டக் கடனடைக்கப் 
பாதுகாத்து வச்சிருக்கன்
வட்டக்குமிழி அது என்னை 
வாழச் சபிக்கிறது!



குறிப்பு: இந்தக் கவிதை "படைப்பு" குழுமம்  நடத்திய  கங்கா புத்திரன் நினைவு பரிசுப் போட்டிக்கென எழுதப்பட்டு  பாடலாசிரியர் சினேகன் அவர்களால் மூன்றாம் பரிசுக்கென  தேர்வு செய்யப்பட்டது . 

ஞாயிறு, 8 ஜனவரி, 2017

நதிக்கரை ஞாபகங்கள்


மணல்மெத்தை ஆடிய
செருப்பில்லாக் கால்கள்
வெருந்தரை தொடுதலே
அரிதாகிப் போனது.

பச்சைப் புல்வெளி
பருகிய கண்கள்
சாலைகளின் சந்திப்பில்
பச்சைக் கலைகிறது.

குவித்தமணலில் குச்சியொளித்து
கிச்சுக்கிச்சுத் தாம்பூலம்
ஆடிய விரல்களின்று
மிட்டாய்க் கரடிகளை தேடுகிறது.

அட்டைப் பூச்சிகளை
ரயிலென ரசித்தவன்
ரயில்களைப்  பூச்சிகளாக்கி
அடிக்கடிப் பறக்கிறேன்.

ஆனாலும்
இக்கட்டடக்காட்டில்
என் கையிலாடும்
தொடுதிரை நாணல்வழி
எட்டிப் பார்க்கிறது
நதிக்ரை ஞாபகங்கள்!

செவ்வாய், 3 ஜனவரி, 2017

வணக்கம் நண்பர்களே,

இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்

மூன்றாண்டுகளுக்குப் பிறகு வலைத்தளத்தில் எழுத முயற்சிக்கிறேன்.

தமிழ்மணம், இன்ட்லி இன்னும் பிற சொந்தங்களுக்கெல்லாம் சொல்லுங்க..

நான் வந்துட்டேன்னு...

திரும்ப வந்துட்டேன்னு....

Yes...I am back


உங்கள்
கலாநேசன்

ஞாயிறு, 7 ஜூலை, 2013

செவ்வாய், 1 ஜனவரி, 2013

அசைபோடுவோம்


 
இந்தியா செவ்வாய் கிரகத்திற்கு (மங்கல்யான்)  செயற்கைக்கோள்  அனுப்பப்போகும்  இருபத்தொன்றாம் நூற்றாண்டின் பதிமூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாம் 2012-ல் இந்தியாவில் நடந்த சில முக்கிய நிகழ்வுகளை அசைபோடுவோமா...
  • இந்தியா பாகிஸ்தான் இடையேயான அணு ஆயுத விபரப்பகிர்வு 
  • 42 சதவீத இந்தியக் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்தில்லை HUNGaMa அறிக்கை 
  • காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் நடத்தியது தொடர்பான ஊழல் வழக்கில் சுரேஷ் கல்மாடிக்கு ஜாமீன் 
  • ராஜாவால் வழங்கப்பட்ட 122 2G  அலைகற்றை உரிமங்கள் உச்சநீதி மன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
  • கர்நாடக சட்டமன்றத்தில் சூடான விவாதங்கள் நடந்துகொண்டிருக்கும் போது கைப்பேசியில் ஆபாசப்படம் பார்த்துக்கொண்டிருந்த மூன்று பிஜேபி அமைச்சர்கள் பிடிபட்டனர்.
  • இந்திய ரயில்வே பட்ஜெட்டை வழங்கிய ரயில்வே அமைச்சர் தினேஷ்  திரிவேதி நான்கே நாட்களில் ராஜினாமா செய்தார் 
  • ஈழத்தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவத்தின் போர்விதி மீறல்கள் தொடர்பாக இந்தியா இலங்கைக்கு எதிராக வாக்களித்தது  
  • சென்னை மற்றும் கல்கத்தாவில் நிலநடுக்கம் 
  • சச்சின் டெண்டுல்கர், நடிகை ரேகா , சமூக சேவகியும் தொழிலதிபருமான அணு அகா ஆகிய மூவரும் ராஜ்யசபா உறுப்பினர்களாக ஜனாதிபதி பிரதிபா பாட்டிலால் பரிந்துரைக்கப்பட்டனர். 
  • சட்டீஸ்கரில் மாவோயிஸ்ட்களால் கடத்தப்பட்ட சுக்மா மாவட்ட கலெக்டர் அலெக்ஸ்  பால் மேனன் 12 நாட்களுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார்.  
  • முப்பது வருடங்களாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுர்ஜீத் சிங் இந்திய திரும்பினார் 
  • பிரணாப் முகர்ஜி இந்தியாவின் 13வது ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • வடகிழக்கு மாநில மக்கள் பெங்களூருவில் தாக்கப்படப் போவதாக கிளம்பிய குருஞ்செய்திப் புரளியால் ஆயிரக்கணக்கானோர் பெங்களூருவில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்குப் பயணித்தனர் 
  • 2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலின் போது உயிருடன் பிடிக்கப்பட்ட ஒரே தீவிரவாதியான அஜ்மல் கசாப்  தூக்கிலிடப்பட்டான்.
  • தில்லி பேருந்தில் கூட்டான பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிய 23 வயது மருத்துவ மாணவி 13 நாட்கள் உயிருக்காக போராடி சிங்கப்பூர் மருத்துவமனையில் இறந்தாள்.
வாடும் பயிரைக் கண்டு வாடிச் சாகும் விவசாயி, விக்கிரம்மதித்தன் கதையாய்த் தொடரும் மீனவ படுகொலை, அணு உலைக்கு எதிராகப் போராடும் மக்கள், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு கூடாது என்ற எதிர்ப்புக் குரல்களுக்கிடையே வந்துநிற்கும் வால்மார்ட், மக்களைப் பின்னோக்கி இழுத்துச் செல்லும் சாதிக் கலவரங்கள், நாட்கள் செல்லச் செல்ல நகைச்சுவையாகிப் போன தொடர் மின்வெட்டு .....இன்னும் இன்னும் நல்லது கெட்டதுகள் நடந்துகொண்டேயிருக்க 21.12.2012 அன்று அழிந்து   போகாமல் புதிய நம்பிக்கையோடு பூத்துக் குலுங்கும் பூமியைப் போற்றி புத்தாண்டைத் துவங்குவோம்.

அனைவருக்கும் எனதினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


 

ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

நட்பு


வானத்துத் தாரகையொன்று
வந்திறங்கி என்னிடம்
ஆயிரம்கோடி ரூபாய்
ஆருயிர் நட்பு
எது வேண்டும் கேள் என்றது!
நான்
ஆயிரம் கோடி என்றேன்....
ஆருயிர் நட்பாய் தான்
நீயிருக்கிறாயே!



அனைவருக்கும் நண்பர்கள்தின நல்வாழ்த்துக்கள்

Quote

Followers